Aran Sei

பீகார் தேர்தல் – மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளுக்கு விடிவில்லை

தேர்தல் விழா வந்தால்தான் பீகார் அரசியல்வாதிகளுக்கு மூடப்பட்ட கரும்பாலைகள் நினைவிற்கு வரும்‌. ஒரு காலத்தில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தந்த சர்க்கரை ஆலைகள் கடந்த பல பத்தாண்டுகளாகப் புயலில் சிக்கிய கப்பலாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், வாக்குப் பதிவு முடிந்தவுடன் இவை கவனத்திலிருந்து மறைந்து விடுகின்றன.

இதுதான் நிதிஷ் குமாரின் கடந்த பதினைந்து கால ஆட்சியின் உண்மை நிலை. சர்க்கரை ஆலைகள் 1970 களுக்கும் 1990-களுக்கும் இடையே சரிவை நோக்கிச் செல்லத் தொடங்கியதிலிருந்து அவற்றை மீட்க மாநில அரசு இதுவரை எதையும் செய்யவில்லை. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மேலும் ஒரு சர்க்கரை ஆலை மூடப்பட்டது. நாட்டின் ஒட்டு மொத்தச் சர்க்கரை தேவையில் 30%-ஐ உற்பத்தி செய்த பீகாரின் சர்க்கரை உற்பத்தி மீண்டும் அந்த நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறிதான். 1980-ல் இயங்கி வந்த 28 ஆலைகளில் பத்து மட்டுமே தற்போது இயங்கும் நிலையில், நாட்டின் தேவையில் வெறும் 2%-ஐ மட்டுமே பீகார் உற்பத்தி செய்கிறது.

புலம் பெயர்ந்த ஆலைகள்

வட பீகாரில் உள்ள முசாபர்பூர் நகரின் மோத்திபூர் சர்க்கரை ஆலையில் எந்திரம் இயக்குபவராக இருந்த 63 வயது சியாராம் சிங், ஆலை மீண்டும் இயங்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார். 1996-97-ல் ஆலை மூடப்பட்ட போது 25,000 தொழிலாளர்கள் தங்கள் வேலையை மட்டுமல்ல பொருளாதார வாழ்வையும் இழந்தனர் என்கிறார் சியாராம். ஒவ்வொரு தேர்தலின் போதும் நிதிஷ்குமார் ஆலையைத் திறக்கப் போவதாக வாக்குக் கொடுப்பார். ஆனால், இன்று வரை அது நிறைவேறவே இல்லை.

இந்த மோத்திபூர் ஆலை பீகாரிலேயே மிகப் பெரியது. பீகார் மாநிலச் சர்க்கரைக் கழகம் (BSSC) 1977-ல் இந்த ஆலையை ஏற்று 20 ஆண்டுகள் நடத்தி வந்தது. ஆனால், தொடர் நட்டத்தால் 1997-ல் மூடி விட்டது. 2011-ல் அந்தக் கழகம் ஆலையைத் தனியார் நிறுவனமான இந்திய பொட்டாஷ் லிமிடெட் (IPL) நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விட்டது. இதை எதிர்த்து ஆலையின் முந்தைய உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார். 1985-ம் ஆண்டு சட்டப்படி ஆலையை அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விட முடியும்.

2012-ல் பாட்னா உயர்நீதிமன்றம் இந்தக் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆலையை கழகத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் அது அதற்கு முந்தைய உரிமையாளரிடமே ஒப்படைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. அதிலிருந்து பீகார் அரசும் அந்த முன்னாள் உரிமையாளரும் ஆலையின் உடைமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மோதிக் கொண்டுள்ளனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆலையின் மூத்த நிர்வாகி ஒருவர், “IPL-க்கு ஆலையின் உடைமையை மாற்றியது நடந்திருந்தால் ஆலையின் சொத்துகளை விற்றிருப்பார்கள். ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையோ பிற பணப் பயன்களோ கிடைக்காமலே போயிருக்கும். தனியாருக்குக் குத்தகைக்கு விட்டது நிதிஷ்குமார் அரசின் சட்டவிரோதச் செயலாகும்” என்கிறார் அவர்.

மோத்திபூர் ஆலையின் முன்னாள் எழுத்தர் இதயத்துல்லா கான் (59) இருபது ஆண்டுகளை விரக்தியிலும் ஏமாற்றத்திலும் கழித்து விட்டார். “நான் முதலில் 290 ரூபாய் மாத ஊதியத்திற்கு வேலையில் சேர்ந்தேன். இறுதியில் 3,000 ரூபாய் வாங்கினேன். ஆலை மூடப்படாமல் இருந்திருந்தால் இன்று 14,000 ரூபாய் மாத ஊதியம் வாங்கிக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் இப்போது ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வெறும் 6000 ரூபாய் சம்பாதிக்கிறேன். அது எனது குடும்பத்திற்குப் போதவில்லை” என்று தெரிவிக்கிறார்.

இதேபோல் 1977-ல் அரசு சர்க்கரைக் கழகம் சமஸ்டிபூர் சர்க்கரை ஆலையைக் கைவசப்படுத்தியது. அந்த ஆலையும் பணம் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக 1997-ல் மூடப்பட்டது. வைசாலி மாவட்டத்தில் உள்ள கோரவுல் ஆலை இருபது ஆண்டுகளாகத் தகராறில் உள்ளது. 1994-ல் அந்த ஆலை மூடப்பட்ட போது‌ 700 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

“இந்த வேலை இழப்பால் பிழைப்புக்காக வேறு வழி தேடி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இந்தப் பகுதியை விட்டே போய் விட்டனர். ஆலைக் குடியிருப்பில் தற்போது வெறும் 25 குடும்பங்களே உள்ளன.” என்கிறார் 62 வயதான ஆலையின் முன்னாள் ஊழியர் ராம் ஹரிதாஸ்.

கடந்த ஆண்டு கோரவுல் ஆலை ஊழியர் சங்கம் வைசாலி மாவட்ட நீதிமன்றத்தில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டும் எனவும், ஆலை ஆவணங்கள் படி இன்று வரை பணியில் உள்ள ஊழியர்களுக்கு உரிய ஊதியம் தர வேண்டும் எனவும் முறையிட்டனர். அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஏனெனில் 1997-ல் தான் ஆலையை சர்க்கரை கழகம் எடுத்துள்ளது. ஆனால் 1994,-ம் ஆண்டிலிருந்தே ஆலை இயங்கவில்லை.

ஒன்றன் பின் ஒன்றாக ஆலைகளுக்கு மூடுவிழா

மேற்கு சம்பாரன் மாவட்டத்தின் சன்பாத்தியா சர்க்கரை ஆலை 1985-ம் ஆண்டு கரும்பு பிழிவதை நிறுத்தியது. அதனால் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அதன் முன்னாள் ஊழியர் ஈஸ்வர் சிங் ‘தி வயர்’ நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”ஆலை உரிமையாளர்கள் ஆலையே நொடிந்து போகும் அளவு பணத்தைக் கையாடல் செய்தனர். நிதிஷ்குமார் 2010, தேர்தல் பரப்புரையில் ஆலையைத் திறப்பதாக வாக்களித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை ஆலை மூடியே கிடக்கிறது” என்று கூறினார்.

கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் ஹனுமான், சக்கியா எனும் இரண்டு சர்க்கரை ஆலைகள் மூடிக் கிடக்கின்றன. வேலை இழந்த ஊழியர்கள் 2003-லிருந்தே தங்களுக்குச் சேர வேண்டிய தொகைகளுக்காகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். 2017-ல் இரண்டு ஊழியர்கள் தமக்குத் தாமே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட போதும், இவர்களது கோரிக்கை ஆலை உரிமையாளர்களுக்கும் அரசுக்கும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றன.

தான் வேலை இழந்த போது வட்டிக்குக் கடன் வாங்கிக் காய்கறிக் கடையைத் தொடங்கிய ராம் பர்வேஷ் தாக்கூர் (55) போதுமான வருமானமின்றித் தவிக்கிறார். “நான் ஆலையில் பணியில் இருந்த போது பணிப்பாதுகாப்பும் பொருளாதாரச் சமநிலையும் இருந்தது. இப்போது இரண்டும் இல்லை. அரசு எங்களுக்கு நிலுவைத் தொகைகளைப் பெற்றுத்தர வேண்டும். அத்துடன் எங்கள் நிலங்களில் விளையும் காய்கறி, பழங்கள் போன்றவற்றை வாங்கி உதவ வேண்டும்“ என்று கோருகிறார்.

மதுபனி மாவட்டத்தில், அரசு சர்க்கரைக் கழகத்திற்குச் சொந்தமான லோகாட், சாக்ரி ஆகிய இரு ஆலைகள் 1997 வரை இயங்கி வந்தன. ஆனால், தொடர் நட்டம் அவற்றை மூட வைத்து விட்டது. இதற்கிடையில் தர்பங்காவின் ரய்யம் ஆலை, சர்க்கரைக் கழகத்தின் கீழ் வரும்வரை பத்தாண்டுகளாக ஏற்ற இறக்கத்துடன் தள்ளாடிக்கொண்டிருந்தது. இறுதியில் அதனை அரசு திர்ஹூத் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது. எனினும் அது மூடப்பட்டே உள்ளது.

சீத்தாமார்கியில் உள்ள ரிகா சர்க்கரை ஆலைதான் சமீபத்தில் மூடப்பட்ட ஆலை. அது நடுவண் அரசு அறிவித்த நாடு தழுவிய ஊரடங்கால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அந்த ஆலை 2020, மே 11-ம் தேதி மூடப்பட்ட போது ஆயிரக்கணக்கான விவசாயிகளும், 600 தொழிலாளர்களும் வாழ்விழந்தனர். ஆலையின் ஆவணங்கள் படி, ஆலையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரகாஷ் தனுகா நிதீஷ்குமாருக்கு ஆலையின் மோசமான நிலையை எடுத்துக்காட்டி அதனை உடனடியாகக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு ஆண்டு முன்பே ஏப்ரல் 1, 2019-ல் கடிதம் எழுதி உள்ளார். ஆனால், அந்தக் கடிதம் நிதிஷ் குமாரின் கருணைப் பார்வையில் இதுவரை பட்டதாகவே தெரியவில்லை.

ரிகா ஆலையின் பிரதான எந்திர ஓட்டுநரான பிஷ்னத் ராய் (60) தங்களைப் போன்ற குறிப்பிட்ட திறன் படைத்த ஊழியர்கள் வேறு நிறுவனங்களில் வேறு வேலை செய்வது கடினமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார். “ஆலை மூடப்பட்டது எங்களைப் போன்றவர்களைத் தேர்ச்சியற்றவர்களாக ஆக்கிவிட்டது. நிதீஷ்குமார் ஆலைகளை மீண்டும் தொடங்க உதவுவார் என நம்புகிறோம் ” என்று அவர் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.

‘பீகாரில் தொழில் நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.’

பீகாரின் மூத்த பத்திரிகையாளரான நளின் வர்மா ‘தி வயரிடம்’, “ சர்க்கரை ஆலைகளை மூடுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் அவற்றை மீண்டும் திறக்கவோ அல்லது மாற்று வழி காணவோ நிச்சயம் முடியும்.” என்று கூறுகிறார். மேலும் அவர், ”அரசு சர்க்கரை ஆலைகளை மூடுவது பற்றிப் பொறுப்பற்று இருப்பது, வேண்டும் என்றே வாய்ப்பைப் புறக்கணிப்பதாகவே தோன்றுகிறது.” என்கிறார்.

“2015 தேர்தலின் போது சரண் பகுதியில் மூடிக் கிடக்கும் மர்ஹவுரா சர்க்கரை ஆலை பற்றி மோடி பேசினார். 1995-ல் அது மூடப்பட்டதால் 1500 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு வேறு வேலையும் கிடைக்கவில்லை“ என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி சங்கர் பகவான் ஓஜா.

இதைவிட கொடுமை அந்த ஆலை விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் 20 கோடி ரூபாய் நிலுவைத் தொகைத் தர வேண்டி உள்ளது. இதைத் தருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நிலைமையை மேலும் சீரழிக்க அந்த ஆலை மூடப்பட்டதால் அதனோடு தொடர்புடைய, மார்ட்டன் கன்ஃபெக்சனரி, சரண் டிஸ்டிலரீஸ் ஆகிய துணை நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. இப்போது இந்தப் பகுதி வேலை வாய்ப்புகளற்ற வறண்ட பகுதியாக மாறிவிட்டது.

அரசு அதிகாரிகளைக் கேட்டால் அவர்கள் உற்பத்தி பற்றி மட்டுமே பேசுகிறார்கள். வேலை வாய்ப்பு பற்றி அக்கறையற்று உள்ளார்கள். ‘தி வயருடன்’ பேசிய பெயரை வெளியிட விரும்பாத ஒரு அரசு சர்க்கரை ஆலைத்துறை அதிகாரி, “தற்போது செயல்படும் பத்து ஆலைகள் மட்டுமே 30,000 டன் கரும்பைப் பிழிகின்றன. 1980-ல் 28 ஆலைகளும் சேர்ந்தே 34,540 டன் கரும்பைத்தான் பிழிந்தன. அரசு மூடிய ஆலைகளைத் திறக்கும். ஆனால், அதற்கு வெகு காலம் பிடிக்கும்.“ என்கிறார்.

ஏற்கனவே நீண்ட காலம் கடந்து விட்டது. இந்தச் சர்க்கரை ஆலைகளையும் அதன் துணை நிறுவனங்களையும் சரிவிலிருந்து மீட்கவே 1974-ல் அமைக்கப்பட்ட அரசு சர்க்கரை ஆலைக் கழகம் அதன் வாழ்நாளை குறுக்கிக்கொண்டு விட்டது.

பீகார் மாநில முன்னாள் தலைமைச் செயலாளரும், பீகார் நிர்வாகச் சீர்திருத்த குழுத் தலைவருமான விஜய் சங்கர் துபே, ”அரசு சர்க்கரை ஆலைக் கழகம் ஊழலின் ஊற்றாக, கழிவு நீர் சாக்கடையாக மாறிவிட்டதால் 2006-ல் அதை மூட வேண்டியதாயிற்று. அதன் கையாலாகாத தன்மையால் பீகாரின் சர்க்கரை ஆலைத் தொழிலின் எதிர்காலம் மிக மோசமாக்கி விட்டது.” என்கிறார்.

“லாலு பிரசாத் யாதவ் பதவிக் காலத்திலேயே (1990 களிலேயே) பீகாரின் சர்க்கரை ஆலைகள் ஒவ்வொன்றாக மூடும் சூழல் ஏற்பட்டது. கரும்பு உற்பத்தி குறைவும் சர்க்கரை விற்பனை விலை குறைவாகவும் உற்பத்திச் செலவு அதைவிட அதிகமாக இருந்ததும் அதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. ஆனால், மூன்று முறை ஆட்சிக்கு வந்தும் நிதீஷ்குமார் ஆட்சியில் மூடிய ஆலைகளைத் திறக்கவோ நலிவடைந்த ஆலைகளைச் சீரமைக்கவோ அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.“ என்கிறார் பாட்னாவின் பொருளாதார அறிஞர் நவல் கிஷோர் சவுத்ரி.

“ஒரு காலத்தில் பீகார் சர்க்கரை ஆலைகள் நாட்டின் சர்க்கரை உற்பத்தியை ஆண்டன. ஆனால் அது இப்போது பேசு பொருளாகக் கூட இல்லை. இந்த வீழ்ச்சி பீகாரின் தொழில் துறை இலக்குகளை மிகவும் பாதிக்கும். ஏனெனில் தொழில்துறை முதலமைச்சரின் பார்வையில் புறக்கணிக்கப்பட்ட பொருளாகவே உள்ளது” என்கிறார் சவுத்ரி.

‘தி வயர்’ மூலம் பீகாரின் சர்க்கரைத் தொழில் அமைச்சர் பீமா பாரதியைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் இதுவரை அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

– சவுரவ் குமார்

கட்டுரை & படங்கள் : நன்றி Thewire.in
மொழியாக்கம் செய்யப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்