Aran Sei

பீகாரில் முடிவுக்கு வரும் சமூக நீதி அரசியல் – அதன் புதிய குரல் என்னவாக இருக்கும்?

பொது முடக்கத்தின் போது நடந்து சென்ற புலம் பெயர் தொழிலாளர் குடும்பங்கள்

பீகாரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கியம்), பாஜகவுடன் கூட்டணி வைத்தும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரசுடன் கூட்டணி வைத்தும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி அவரது மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் தனியாகவும் போட்டியிட்டன. வாக்குப் பதிவுகள் முடிவுற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

பீகார் தேர்தல் : எதிர்க்கட்சி கூட்டணி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

1970-களில் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் உருவான மூன்று தலைவர்களில் 72 வயதான லாலு பிரசாத் யாதவ் இப்போது சிறையில் உள்ளார். ராம் விலாஸ் பாஸ்வான் தனது 74-வது வயதில் சென்ற மாதம் மரணமடைந்தார். 69 வயதான இப்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது அரசியல் செல்வாக்கின் வீழ்ச்சியை எதிர்த்து இந்தத் தேர்தலில் போராடி வருகிறார் என்று வர்கீஸ் கே ஜார்ஜ் தி ஹிந்து நாளிதழில் எழுதிய செய்திப் பகுப்பாய்வில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கம் 1974-ல் சமூக நீதியை முன் வைத்து பீகார் சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி போராட்டம் நடத்தியது. வி எம் தெர்குண்டேவுடன் இணைந்து 1974-ல் ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தையும், 1976-ல் சிவில் உரிமைகளுக்கான மக்கள் மையத்தையும் (Peoples Union for Civil Liberties) ஜெயபிரகாஷ் நாராயணன் உருவாக்கினார்.

1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையைத் தொடர்ந்து பிற எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜெயபிரகாஷ் நாராயணனும் கைது செய்யப்பட்டார். நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணனின் வழிகாட்டலின் கீழ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஜனதா கட்சி என்ற பெயரில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தன.

கடந்த 30 ஆண்டுகளில் ‘மண்டல், மந்திர், மார்க்கெட்’ என்று அழைக்கப்படும், சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கான இயக்கம், இந்துத்துவா அடிப்படையிலான அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கம், புதிய தாராளவாதக் கொள்கைகள் அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரம் ஆகியவை பீகார் அரசியல் மீதும் இந்திய அரசியல் மீதும் தாக்கம் செலுத்தின. அவ்வகையில், இந்திய அரசியலை பீகார் தொடர்ந்து செதுக்கி வருகிறது என்கிறார் ஜார்ஜ் வர்கீஸ்.

‘அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் அதே இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவோம்’ என்ற முழக்கத்தோடு குஜராத்தின் சோமநாத புரத்திலிருந்து ரத யாத்திரை ஒன்றை நடத்தினார் அப்போதைய பாஜக தலைவர் எல்.கே.அத்வானி. அந்த யாத்திரை பல்வேறு மாநிலங்களின் வழியாகப் பயணித்து மதவாதத்துக்கு ஆதரவை திரட்டிச் சென்றது.

அப்போது, மத்தியில் பாஜக ஆதரவுடன் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்தது. அத்வானியின் ரத யாத்திரை பீகாருக்குள் நுழைந்ததும், ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான அரசு அத்வானியைக் கைது செய்து ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து பாஜகவின் இந்துத்துவா அரசியலும், சமூக நீதிக்கான இலக்குகளும் வெளிப்படையாக மோத ஆரம்பித்தன.

காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஜனதா தளம் அரசுக்கு ஆதரவு கொடுத்திருந்த பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மத்தியில் வி.பி.சிங் ஆட்சி முடிவுக்கு வந்தது.

லாலு பிரசாத் யாதவ் ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. அவர் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள், தலித்துகள், முஸ்லிம்கள் அடங்கிய கூட்டணியை உருவாக்கி 2005 வரை 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார் என்கிறார் ஜார்ஜ் வர்கீஸ். அவர் தனது மதவாதத்துக்கு எதிரான அரசியலுடன் அவருக்கே உரிய கிண்டலையும் மனிதாபிமானத்தையும் இணைத்திருந்தார்.

லாலு பிரசாத், நிதீஷ் குமார் - Image credit : thehindu.com
லாலு பிரசாத், நிதீஷ் குமார் – Image credit : thehindu.com

மத நல்லிணக்கம் தொடங்கி, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, இந்தியாவின் அணுசக்திக் கொள்கை வரை சராசரி குடிமக்களும் புரிந்துகொள்ளும் மொழியில் அவர் பேசினார். சந்தை சார்ந்த வளர்ச்சிப் பாதையை விமர்சித்த அவர், சமத்துவம் பிரதிநிதித்துவம் ஆகிய கொள்கைகளை முன் வைத்தார். அவரது தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்த பிற்படுத்தப்பட்டோர் அரசியல் ஆதிக்கச் சாதியினரால் எதிர்க்கப்பட்டது. அவர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. அவர் இப்போது சிறையில் உள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வானைப் பொறுத்தவரையில் ஒரு குறுகலான சமூகநீதி அரசியலையே பின்பற்றினார் என்கிறார் ஜார்ஜ் வர்கீஸ். தன்னை ஒரு தலித் தலைவராக முன்நிறுத்திக் கொண்ட அவர், தான் அதிகாரத்தில் இருப்பதே தலித் முன்னேற்றத்துக்கான ஒரே அறிகுறி என்று நிறுவிக்கொண்டார். அவரது அரசியல் சமூக நீதி, மதச்சார்பின்மை இரண்டையும் நகல் மட்டுமே செய்தது.

நிதீஷ் குமார் லாலு பிரசாத் கட்சியிலிருந்து 1994-ல் வெளியேறி, சந்தைப் பொருளாதாரத்துக்கு ஆதரவான சமூகநீதி அரசியல் என்று தன்னுடைய அரசியலை முன் வைத்தார். ஆனால், 2005-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்த நிதீஷ் குமாரின் ஆட்சியிலும் பீகாரில் முதலீடுகளும் நகரமயமாதலும் அதிகரிக்கவில்லை. மாறாக, ஆயிரக்கணக்கான பீகார் தொழிலாளர்கள் மேற்கு இந்தியாவிலும் தெற்கு இந்தியாவிலும் உள்ள நகர மையங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர்.

லாலு பிரசாத்தின் அரசியல் கூட்டணியில் இடம் பெறாத சாதிகளை நிதீஷ் குமார் குறி வைத்தார். வேலை வாய்ப்புகளிலும், அரசியலிலும் அவர்களது பிரநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தார். அவர் தாராளவாதச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஆதரவான வளர்ச்சி மாதிரியையும் ஆதரித்தார். 2005-ல் லாலு பிரசாத்தின் மாதிரியை வீழ்த்திய அவர் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு 2015-ல் மீண்டும் லாலு பிரசாதுடன் இணைந்து போட்டியிட்டார். 2017-ல் மீண்டும் பாஜகவின் பிடிக்குள் திரும்பி வர நேரிட்டது என்கிறார் ஜார்ஜ் வர்கீஸ்.

கடந்த 15 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் நிதீஷ் குமாரின் ஆட்சியின் பிம்பம் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்திய நெருக்கடியின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. பொது முடக்கத்தின் போது 23 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தத்தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

இப்போது பீகாரில் வேலையில்லாப் பிரச்சனை மிகப்பெரிய சவாலாக உள்ளது.

மதச்சார்பின்மை, சமூகநீதி போன்ற பிரச்சனைகளில் எந்த சமரசமும் இல்லாமல் கடுமையாகப் போராடியவராக லாலு பிரசாத் யாதவின் வரலாறு முடிவுக்கு வருகிறது. ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் அரசியல் அற்ற அரசியலை நடத்தி வருகிறார். நிதீஷ் குமார், அவரது கூட்டணிக் கட்சியான பாஜக உட்பட எல்லோராலும் தாக்கப்படும் முதலமைச்சராகத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்கிறார் ஜார்ஜ் வர்கீஸ்.

கூட்டணிக் கட்சிகளின் பலத்தில் வளர்ந்து பின்னர் அவர்களை விழுங்கி தூக்கி எறிந்து விடுவது என்ற பாஜகவின் அரசியலுக்கு இப்போது நிதீஷ் குமாரும் பலியாகிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் சமூக நீதி அரசியல் என்பது முஸ்லிம்களை எதிரிகளாகச் சித்திரித்தபடி , பிற்படுத்தப்பட்ட சாதிகளின் விருப்பங்களையும் உள்ளடக்க முயற்சிப்பது என்ற சட்டகத்திற்குள்தான் இருக்கிறது.

பீகார் தேர்தல் : ட்ரெண்ட் ஆகும் gobackmodi ஹேஷ்டேக்

பீகாரில் பாஜக தனது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டு வளர்வது உறுதி. ஆனால், பீகாரின் அரசியல் களத்தில் எஞ்சிய பகுதிகளில் ஒரு வெற்றிடம் உள்ளது.

நாம் அறிந்த வகையிலான சமூக நீதி அரசியல் இந்தத் தேர்தலோடு ஒரு முடிவுக்கு வருகிறது. அது, தனது குரலை இழந்து விட்ட ஒரு விருப்பமாக மாறி விட்டது. அதன் புதிய குரல் என்னவாக இருக்கும் அதை யார் ஒலிக்கப் போகிறார்கள் என்பவை இன்னும் விடை காணப்படாத கேள்விகள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்