Aran Sei

தியாகி புவனை பாலா – உயர்ந்து எரிந்த போராட்ட நெருப்பு

1998-ல் சாதி ஆதிக்கம் கொண்ட  சமூக விரோதிகளால் திண்டிவனத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதை எதிர்த்து புவனகிரி காவல் நிலையம் முன்பு தன்னுடைய 22 வது வயதில் தீக்குளித்துத் தன்னுயிரை ஈத்த போராளி பாலா. தமிழ்ச் சமூகத்தின் நினைவின் அடுக்குகளுக்குள் அவரைக் கண்டடைவது சாத்தியமற்றது.

தியாகி பாலா 1976 ஆம் ஆண்டு செப்டம்பர்-9 நாள் கடலூர் மாவட்டம் மணக்கொள்ளை கிராமத்தில் பிறந்தவர். குடும்பத்துடன் பணி நிமித்தமாக புவனகிரி நகரத்தில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தார். பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றி சாதி ஒழிப்புக் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு சிறந்த போராளி. பாலா பிறப்பால் பிறபடுத்தப்பட்ட சமுகமான வாணிய செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்.
பட்டியலின நண்பர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய சமூக விடுதலைக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றியவந்தவர்.

1995ஆம் ஆண்டு புவனகிரி பகுதியில் இன விடியல் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் எழுச்சி பாசறை என்ற அமைப்பை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி அதன் செயலாளராக பணியற்றி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளை இளைஞர்களுக்கு ஊட்டியவர், சாதிய ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிர்வினையாற்றியவர்.

ஓராண்டிற்கு பிறகு பாலா உள்ளிட்ட அவருடைய நண்பர்கள் விடுதலைக்கான செயல் களத்தை விரிவாக்க 1996 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.நாகப்பன் அவர்களின் தலைமையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அப்போது பாலா புவனகிரி நகர அமைப்பாளராக பொறுப்பேற்று செயலாற்றியிருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் ஏராளமான சாதிய ஆதிக்கத்தால் நடந்து வன்முறைக்கு எதிராக களம் கண்டவர். புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் சாதிய சிக்கல்களைக் கண்காணித்து தீர்வு காண 12 பேர் கொண்ட குழுவை நிறுவிப் பாதுகாப்பு அளித்ததில் பாலா முதன்மையான களப்போராளியாக திகழ்ந்துள்ளார்.

குறிப்பாக 1997ல் நடந்த சேத்தியாதோப்பு அருகில் கிளாங்காடு என்ற கிராமத்தில் நடந்த சாதிரீதியான கலவரம், புவனகிரி நகர் பகுதிகளில் பட்டியல் மக்கள் மீது நடந்த ஆதிக்கம் மற்றும் மங்களம் I.T.I யில் பட்டியலின மாணவர்களை சாதி வெறியர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது பாலா உள்ளிட்ட தோழர்கள் தலையிட்டுப் பாதுகாப்பு வழங்கினார்கள். 1997-ல் கடலூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளானபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வேண்டி பாலா தலைமையில் புவனகிரி சுற்றியுள்ள 7 கிராம பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வட்டாச்சியர், மாவட்ட தலைமை காவல் அதிகாரி உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு கொண்டுச் சென்று நிவாரணம் கிடைக்க வழிவகை செயதார். இதன் காரணமாக மக்களின் நேசமிக்கவராக மாறினார்.

1996 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணியின் ஜனதா தளம் கட்சி இரண்டான்டுகளில் கவிழ்ந்தது. பாலா உள்ளிட்ட தோழர்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் தீவிரமாக செயலாற்றி வந்த சூழலில் 1998 தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது .

இந்திய தேசிய காங்கிரசு ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஐ. கே. குஜரால் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது கவிழ்ந்தது. புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதி தமிழகத்துக்கு 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவிதத்து. இத்தேர்தலில் தமிழகத்தில் இருபெரும் கூட்டணிகள் போட்டியிட்டன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. மற்றொரு கூட்டணியான ஐக்கிய முன்னணியில் திமுக, தமாக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய தேசிய இந்திரா காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

சிதம்பரம் ( தனி ) நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொன்.நாகப்பன் வேட்பாளராக நிருத்தப்பட்டார். பாலா உள்ளிட்ட தோழர்கள் பொன்.நாகப்பன் அவர்களுக்குத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் பிப்ரவரி 20 ந்தேதி திண்டிவனத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்குத் தேர்தலை சீர் குறைத்து சாதி வன்முறை தூண்டும் விதத்தில் செருப்பு மாலை போட்டு சமூக விரோதிகள் அவமதிப்பு செய்தார்கள். அந்தச் செய்தி தமிழகம் முழுவதும் பட்டியலின தலித் இயக்கங்களிடம் மிகுந்த கொந்தளிப்பை எற்படுத்தியது. தேர்தல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பாலா உள்ளிட்ட தோழர்களுக்குத் தகவல் கிடைக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு உடனே எதிர்வினையாற்ற வேண்டும் என்று பாலா முற்படுகிறார். இது தேர்தல் நேரம் என்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தலைமை அறிவிக்கிறது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 21ஆம் தேதி காலை புவனகிரியில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடபட்டது.

புவனாகிரியில் சாலை மறியல் என்பதால் கடலூருக்கும் சிதம்பரத்திற்கு இடையே செல்லும் சாலையின் போக்குவரத்து முற்றிலூம் முடக்கப்படுகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய சிலையை அவமதித்த சாதி வெறி கொண்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்துச் சாலைமறியல் நடத்தப்படுகிறது. அரசு தரப்பில் போராட்டத்தை முடித்துகொள்ள அழுத்தம் கொடுக்கப் படுகிறது. பாலா உள்ளிட்ட தோழர்கள் தலைவர் பொன்.நாகப்பன் அவர்களின் அறிவிப்பு பேரில் தான் போராட்டம் நடக்கிறது அதனால் அவரின் கருத்தைக் கேட்காமல் நாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்பதை திட்டவட்டமாக கூற அரசு தரப்பிலிருந்து தலைவர் பொன். நாகப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள் விடுக்கின்றனர், நேரடியாக தலைவர் பொன்.நாகப்பன் அவர்கள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வருகை தந்து காவல் துறை சமூக விரோதிகளைக் கைது செய்கிறோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார்.

சமூக விரோதிகளை கைது செய்யாமல் போராட்டத்தைக் கைவிட்டதற்கு உடன்படாத பாலா போராட்டம் முடிந்தபிறகு பாபாசாகேப் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை ஏற்க முடியாமல் இந்தப் பிரச்சினையை தமிழகம் முழுவதும் கவனப்படுத்த வேண்டும் என்கின்ற தன்னிச்சையான முடிவால் பிப்ரவரி மாலை 7 மணி அளவில் புவனகிரி காவல் நிலையம் முன்பு தன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு அம்பேத்கர் வாழ்க! அம்போத்கர் வாழ்க!! அம்பேத்கர் ஆட்சி அமைப்போம்!!! என முழக்கமிட்டுக்கொண்டு  தன் உடலில் தீ வைத்துக் கொள்கிறார்.

தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனை மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி பல போராட்டங்கள் நிகழ வழிவகுத்தது. மறுநாள் 22 ஆம் தேதி தேர்தல் முடிகிறது . பாலா தீ குளிப்பு செய்தி பரவி பெரும் பதற்றமான சூழல் புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

பாலாவின் உடலில் அதிக தீ காயம் இருப்பதனால் மருத்துவர்கள் உயர் கிச்சைக்கு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்புகிறார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த பாலா சிகிச்சை பலனின்றி ஜிப்மர் மருத்துவமனையில் பிப்ரவரி 24-ஆம் தேதி 22 வயதில் மறைந்தார்

தியாகி பாலா அவர்கள் தன்னை இந்த மக்களின் விடுதலைக்கான சமூக களத்தில் தன்னை ஈடுபடுத்தாமல் இருந்திருந்தால். ஒரு நிறைவான சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். பொருளாதாரம் தன்னிறைவு அடைந்த குடும்ப வாழ்வில் நிலைத்திருக்கலாம். ஆனால் புட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொள்கையை ஏற்று சாதி ஒழிப்பு களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது இளமை வயதில் உயிர் தியாகம் செய்துள்ள தியாக போராளி பாலாவை காலத்தால் கரைத்து விடாமல் நினைவு கூர்வோம்.

கட்டுரையாளர் -மேக.பிரவீன்,  துணைப் பொதுச் செயலாளர், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம், கடலூர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்