Aran Sei

” சட்டப் பேரவையை நோக்கிய ரிக்‌ஷா பயணம் ” – வங்காளத்தின் ஆன்மாவை பாதுகாக்க களத்தில் இறங்கிய எழுத்தாளர்

image credit : thewire.in

2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், பல கட்சிகளும் பிரபல திரைப்பட நட்சத்திரங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளன. ஆனால் ஒரு வேட்பாளர் மற்ற அனைவரையும் விட அதிகமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

ஹூக்ளி மாவட்டத்தின் பாலாகர் தொகுதியின் வேட்பாளரான, கவர்ச்சி மற்றும் மோசடி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாத, 70 வயது மனோரஞ்சன் பியாபாரி தான் அவர். அவரிடம் ஆடம்பரமான கார் இல்லை. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அவர் அணிவதில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட அவருக்கு இல்லை. அவர் பள்ளி சென்றதில்லை. பல இரவுகளை அவர் சிறையில் கழித்திருக்கிறார். ரிக்‌ஷா இழுத்திருக்கிறார். ஒரு தேநீர் கடையில் வேலை செய்திருக்கிறார், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு தயாரித்திருக்கிறார், மின்மயானத்தில் கூட வேலை செய்திருக்கிறார். எல்லாம் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காக. எனினும் அவர்தான் இந்த தேர்தலில் மிகப்பெரிய நட்சத்திரம்.

மனோரஞ்சன் பியாபாரி, கிழக்கு வங்காள (தற்போதைய வங்காளதேசம்) அகதி. அவர் தெற்கு கொல்கத்தாவின் ஓரத்தில் குதிராபாத் என்ற புறநகர் பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஒரு செங்கல் வீட்டில் குடியிருக்கிறார். தேர்தல் காரணமாக, மார்ச் 8-ம் தேதியிலிருந்து ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள மோக்ரா நகரில் ஒரு பழைய வீட்டில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்து வருகிறார்கள்.

நான் அதிகாலை 6:35 மணிக்கு அவர் வீட்டுக்கதவைத் தட்டிய போது சன்னல் வழியாக எட்டிப் பார்த்துவிட்டு, ஒரு காக்கி நிற குர்தாவுடனும், தொளதொளப்பான வெள்ளைநிற பைஜாமாவுடனும், கழுத்தில் சுற்றிய “கம்ச்சா’ எனப்படும் பாரம்பரிய மேல் துண்டுடனும் ஓடோடி வந்து கதவைத் திறந்தார். “என் வாழ்நாள் முழுவதும் தான் நாடோடியாகவே இருந்தேன். அவரைத் தவிர எனக்கு வேறு எதுவும் சொந்தமாக இல்லை” என்று தன் மனைவியைக் காட்டிக் கூறினார்.

“நாம் எதிர்க்க வேண்டும்”

பிப்ரவரி 28-ம் தேதி, அதாவது திரிணாமுல் காங்கிரசு சட்டமன்ற தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடமிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. “மனோரஞ்சன் அண்ணா நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும்,” என்றார் அவரிடம், தீதி (அக்கா)

“முதலமைச்சர் போன்ற முக்கியமான ஒருவர், இந்த நாட்டிலேயே முக்கியமான அரசியல் தலைவராக நான் கருதும் ஒருவர் வேண்டுகோள் விடுத்தால் அதற்கு ஒரே ஒரு பதில்தான் இருக்க முடியும்,” என்று என்னிடம் கூறினார் பியாபாரி.

image credit : thewire.in
தேர்தல் பிரச்சாரத்தில் மனோரஞ்சன் பியாபாரி – image credit : thewire.in

சாதாரணமான சூழ்நிலையில் தான் ஒருபோதும் அரசியலில் சேர்ந்திருக்கப் போவதில்லை என்று அவர் கூறுகிறார். “அமைப்புமுறை அழுகிவிட்டது,” என்று விளக்கினார் அவர். ஆனால் இப்போது ஒரு வெளியாட்கள் படை வங்காள மொழியையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், மரபையும் அச்சுறுத்தும் போது அவருக்கு வேறு வழி இல்லை. “எனது மனசாட்சி இந்த பிளவு சக்திகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்று கூறியது,” என்கிறார் அவர். “சரியாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் இதை எதிர்த்து நிற்க வேண்டும். இது வழக்கம் போல நடைபெறும் தேர்தல் அல்ல. இந்தத் தேர்தல் மூலம் அவர்கள் மேற்கு வங்காளத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைக்கிறார்கள். ஆகவே நாம் எதிர்த்தாக வேண்டும்,” என்கிறார் மனோரஞ்சன் பியாபாரி

மேலோட்டமாக பார்த்தால் மனோரஞ்சன் பியாபாரியின் வாழ்க்கை ஒரு கவர்ச்சிகரமான கதை. அது ஒரு உழைக்கும் வர்க்க கதாநாயகனின் உண்மைக் கதை. ஆனால், ஆழமாக நோக்கினால், நீங்கள் அதில் இழப்பு, இரக்கமின்மை, புறக்கணிப்பு, நிராகரிப்பு, ஏழ்மை, விரக்தி, பசி மற்றும் ஏதுமின்மை ஆகியவற்றையே பார்க்க முடியும்.

கூலி வேலை செய்து வந்த அவரது தந்தை வயிற்றுப் புண் நோயினால் சிறு வயதிலேயே இறந்து விட்டார். மனோரஞ்சன் பியாபாரி பல ஆண்டுகள் ஜாதவ்பூர் தொடர்வண்டி நிலைய நடைமேடையில் உறங்கியிருக்கிறார். ஒரு தலித்தாக (வங்காளத்தில் அவர்கள் நாமசூத்திர்கள் அல்லது அகதிகள் என்று அழைக்கப்பட்டனர்) பன்முகத்தன்மை கொண்ட, அப்போது கல்கத்தா என்று அழைக்கப்பட்ட கொல்கத்தாவின் மக்கள் பெருங்கடலில் அவர் யாருமற்றவராக இருந்தார்.

மனோரஞ்சன் பியாபாரி பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். அது வாழ்க்கைக்கான பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாக இருந்தது. “சுல்லு என்றழைக்கப்படும் சாராய வியாபாரிகள் ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டி இருந்தது. ரயில்வே காவல்துறை தங்களுடைய மாதாந்திர கணக்கை சரிகட்ட தாங்கள் இன்ன தேதியில் இன்ன நேரத்தில் சோதனையிட வருவோம் என சாராய வியாபாரிகளிடம் முன்னரே தெரிவித்து விடுவார்கள். பிறகு அந்த வியாபாரிகள் எங்களைப் போன்றவர்களைப் பிடித்து ஐந்து ரூபாய் கொடுத்து ஐந்தாறு நாட்கள் சிறையில் இருக்கும்படி அனுப்புவார்கள்,” என்று கீழுதட்டின் உள்ளே ஒரு புகையிலைத் துண்டை வைத்துக் கொண்டே கூறுகிறார் பியாபாரி.

1970-களில், நக்சல்பாரி இயக்கம் வங்காளத்தில் உச்ச நிலையில் இருந்த போது, மனோரஞ்சன் பியாபாரி 26 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். அவர் இந்திய குற்றவியல் சட்டம் 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்), 149 (சட்டவிரோதமாக கூடுவது), மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலத்திற்கு சிறையில் தள்ளப்பட்டார். “இந்த சிறைவாசம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. சிறையில் தான் நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர்.

சிறையிலிருந்து விடுதலை ஆனதும் ரிக்‌ஷா இழுக்கத் துவங்கினார். கடும் வெயில் அடிக்கும் ஒரு மதிய வேளையில் ஜாதவ்பூரில் உள்ள ஜோதிஷ் ராய் கல்லூரி வாசலில் பயணிகளுக்காகக் காத்திருந்தார், அவர். ஒரு பேராசிரியை அவரது ரிக்‌ஷாவை வாடகைக்கு அமர்த்தினார். பல நாட்களாக மனோரஞ்சன் பியாபாரி ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு துல்லியமான பொருளைத் தேடிக் கொண்டிருந்தார். எனவே இப்போது அந்த பேராசிரியையிடம் “ஜிஜிபிஷா” என்ற அந்தச் சொல்லுக்கு பொருள் என்ன என்று கேட்டார்.

(ஆச்சரியமடைந்த பேராசிரியை இந்த சொல்லை எங்கே படித்தார் என்று கேட்டுவிட்டு, அதற்கு ‘வாழ்வதற்கான ஆசை’ என்று பொருள் கூறிவிட்டு, தன் பெயரையும் முகவரியையும் எழுதி, தேவையான பொழுது தன்னை பார்க்க வரலாம் எனக் கூறினார். அதில் இருந்த மகாஸ்வேதா தேவி என்ற பெயரைப் பார்த்த பியாபாரி வியப்படைந்து தன் ரிக்‌ஷா இருக்கையின் அடியில் வைத்திருந்த அவர் எழுதிய புத்தகத்தை எடுத்துக் காண்பித்தார்)

புகழ்பெற்ற எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான மகாஸ்வேதா தேவியின் தூண்டுதலால்தான் கதைகளை எழுத ஆரம்பித்தார் மனோரஞ்சன் பியாபாரி. அவர் எழுதிய முதல் படைப்பு மகா ஸ்வேதா தேவியின் இதழான “பார்திகா” வில் வெளிவந்தது.

“மகாஸ்வேதா தேவி உயிரோடு இருந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மிகவும் அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பார்,” என மேல் துண்டால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டே கூறுகிறார் மனோரஞ்சன் பியாபாரி. “எனது நல்வாய்ப்பு, மகாஸ்வேதா தேவி, மற்றும் சிறையில் எனக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவர் (சக கைதி) போன்ற மிகச் சிறந்த நல்ல மனிதர்கள் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்தார்கள்,” என்கிறார், அவர்.

சாதாரணமான தேர்தல் அல்ல இது

உள்ளூர் கட்சித் தலைவர்களின் கைபேசி அழைப்புகளால் அடிக்கடி ஏற்பட்ட தடங்கல்களுக்கு இடையே அவரும் நானும் கடவுளைப் பற்றி பேசினோம். “யாரையும் புண்படுத்த விரும்பவில்லை, ஆனால் கடவுள் எனக்கு ஒருபோதும் உதவவில்லை. மனிதர்கள் உதவினார்கள். இரத்தமும் சதையுமாக இருந்த மக்கள் எனக்கு உண்ண உணவு கொடுத்தார்கள். என்மீது அன்பைப் பொழிந்தார்கள். ஒவ்வொரு நாளும் நான் பெற்ற அன்பு கற்பனைக்கு எட்டாதது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், ஒரு சில பாஜக வினரும் கூட என்னை வந்து சந்தித்தார்கள். என்ன நடந்தாலும் எனக்கு ஆதரவாக இருப்போம் என்று அவர்களில் பலரும் கூறினார்கள்,” என்கிறார் அவர்.

எனினும், முதலில் மனோரஞ்சன் பியாபாரியின் வேட்பாளர் தேர்வு வரவேற்பைப் பெறவில்லை. சிலர் அவரை பாலாகருக்கு அன்னியராக சாயம் பூச முயன்றனர். ” நான் ஒரு அகதி. ஆகவே நான் இந்த நாட்டின் எந்தப் பகுதிக்குப் போனாலும் அன்னியன்தான். வேறு யாரும் இருக்க முடியாத அளவுக்கு நான் உங்களில் ஒருவன். நான் ஒரு கொடூரமான வாழ்க்கை வாழ்ந்தேன். எனக்கு தெருவில் குப்பை பொறுக்குபவரின், ரிக்‌ஷா இழுப்பவரின், தேநீர் விற்பவரின், தெருவில் படுத்து உறங்குபவரின் வேதனை எனக்குத் தெரியும். ஏனெனில் பல ஆண்டுகள் நான் அந்த வேலைகளை செய்திருக்கிறேன்,” என்று அவர்களிடம் மனோரஞ்சன் பியாபாரி கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் மனோரஞ்சன் பியாபாரி - image credit : thewire.in
பிரச்சாரத்தின் போது சமையல் செய்யும் மனோரஞ்சன் பியாபாரி – image credit : thewire.in

எப்படியானாலும், பாலாகரில் தனது முதல் வீட்டை கட்டி எஞ்சிய வாழ்நாளை அதில் கழிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பரப்புரை துவங்கிய போது தான் இந்தத் தொகுதியிலேயே தங்கி இருக்க வேண்டும் என விரும்புவதாக அவர் கூறியதும் பலர் அவருக்கு வீடு கட்டிக் கொள்ள நிலம் நன்கொடையாகத் தர முன் வந்தனர். “எனக்கு நிலம் தேவையில்லை என நான் கூறிவிட்டேன். ஆனால் பாலாகரில் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரை செங்கல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். தேர்தல் முடிந்ததும் செங்கல்களைச் சேகரித்து என் வீட்டைக் கட்டிக் கொள்வேன்,” என்கிறார் அவர்.

மோக்ராவிற்கு இடம் பெயர்ந்ததிலிருந்து இடைவிடாது பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார், அவர். காலை ஒன்பது மணிக்குத் துவங்குகிறார். இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்புகிறார். அவரது மதிய உணவும், மதிய வெயிலுக்கிடையில் ஒரு மணி நேர ஓய்வும் ஏதாவது ஒரு கட்சி உறுப்பினர் வீட்டில்தான் இருக்கும்.

21 ஆண்டுகளாக மனோரஞ்சன் பியாபாரி அன்றாடம் 150 பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் சமையலராக பணியாற்றி வருகிறார். இதை மனதில் கொண்டு உள்ளூர் கட்சித் தலைமை அவர் வேலை செய்து வரும் சோம்ரா கிராம பஞ்சாயத்தில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது.

தனது பரப்புரையில் பாஜகவைத் தாக்கிப் பேசும் மனோரஞ்சன் பியாபாரி, பாஜகவை வங்காளத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்படும் வலிமையான, வன்முறையான மக்கள் விரோதக் கட்சி என கூறுகிறார். “இந்தக் கட்சி அரசியலமைப்பு சட்டத்தை நீக்கி விட்டு அந்த இடத்தில் மனுநீதியை வைக்கத் தயாராகி வருகிறது. அதில் தலித்துகளும், முஸ்லீம்களும் அடிமைகளாக நடத்தப் படுவார்கள்,” என்று எனக்கு விளக்கினார். “பார்ப்பனிய கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தை அமைப்பது என்பதே அவர்களுடைய குறிக்கோள். அவர்கள் நமது சமூகத்தை சாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் ஒரு பிளவு சக்தி,” என்று கூறுகிறார் அவர்.

அன்றாடம் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையில் இருந்தும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றிலிருந்தும் கவனத்தை மாற்றி, தேர்தலை இந்து-முஸ்லீம் பிரிவினை பற்றியதாக மக்களை திசை திருப்புவது கிரிமினல் குற்றமாகும். “பாஜக பஞ்சாபிலும், அரியானாவிலும் ஒரு உதை வாங்கியுள்ளது. அதற்கு தகுந்தவர்கள்தான் அவர்கள். மே 2-ம் தேதி வங்காள மக்கள் அதற்கு இன்னொரு உதை தருவார்கள்,” என்று கூறுகிறார் மனோரஞ்சன் பியாபாரி.

பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலின பழங்குடியினர் ஆகியோர் பாஜகவுக்கு பேராதரவு தருவது குறித்து என்ன கருதுகிறீர்கள் என மனோரஞ்சன் பியாபாரியிடம் நான் கேட்டேன்.

“நாம சூத்திரர்கள் பெரும்பாலும் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு முஸ்லீம்கள் மீது ஒரு மறைமுகமான கோபம் உள்ளது. இந்த தலித்துகளின் கோபத்தை பாஜக மேலும் தூண்டி வருகிறது. அவர்கள் முஸ்லீம்களை இந்த நாட்டை விட்டே தூக்கி எறிந்து விடுவதாகவும், அவர்களுடைய நிலத்தை தலித்துகளுக்கும், பழங்குடி மக்களுக்கும் கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். இப்படித்தான் அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்,” என்கிறார் அவர்.

“ஏன் திரிணாமூலை தேர்ந்தெடுத்தீர்கள்? நீங்கள் நிறுவனங்களுக்கு எதிரானவர் இல்லையா?” என்று நான் அவரைக் கேட்டேன். “ஆமாம். நான் நிறுவனங்களுக்கு எதிரானவன் தான். நான் இனிமேலும் அப்படித்தான் இருப்பேன். 2011ல் திரிணாமுல் காங்கிரசு ஆட்சிக்கு வந்த போது எனக்கு அந்தக் கட்சியிடம் பெரிய அளவு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக வேலை செய்தார்கள். இந்த அரசின் நலத்திட்டங்கள் ஏராளமான மக்களைச் சென்றடைந்துள்ளது. ஏழைகளும், நலிந்த தலித்துகளும், இந்த அரசாங்கத்தால் பயனடைந்துள்ளனர். மேலும் நாம் அசாதாரணமான நேரத்தில் வாழ்கிறோம். இது சாதாரண தேர்தல் அல்ல. இந்தத் தேர்தல் வங்காளத்தை காப்பாற்றுவதற்கானது. வங்காளத்தின் ஆன்மாவைக் காப்பாற்றுவதற்கானது,” என்று கூறுகிறார்.

முதலமைச்சர் என்ற வகையில் மமதா பானர்ஜி ஊழல் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், உதிரி சக்திகளை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் மனோரஞ்சன் பியாபாரி உறுதியாகக் கருதுகிறார்.

மக்கள் எழுத்தாளர்

நாங்கள் அவரது வீட்டிற்கு திரும்பியதும், இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் அவர் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என விவாதித்தோம். தனது மருந்துகளை எடுத்துக் கொண்டே, உப்பு, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றுடன் நீர் ஊற்றிய பழைய சோற்றை காலை உணவாக சாப்பிட்டுக் கொண்டே, “நான் அவர்களைப் பற்றி (ஒடுக்கப்பட்டவர்களை) ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். இப்போது அவர்களுக்காக வேலை செய்ய விரும்புகிறேன். நான் எனது தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும் குடிமக்கள் குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். அந்தக் குழுவில் ரிக்‌ஷா இழுப்பவர்கள், மீன் விற்பவர்கள், காய்கறி விற்பவர்கள் மற்றும் டி பிரிவு ஊழியர்கள் ஆகியோர் இருப்பார்கள். அனைத்து சமூக பொருளாதார பின்னணி கொண்ட அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்வர்களும் அதில் பங்கு பெற்றிருப்பார்கள். நாங்கள் அவர்களது கோரிக்கைகளை கவனித்து அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம். அரசின் திட்டங்கள் யாவும் தடையின்றி மக்களை சென்றடைவதை நான் உறுதி செய்வேன்.” என்று கூறினார்.

பழைய சோறு சாப்பிடும் மனோரஞ்சன் பியாபாரி - image credit : thewire.in
பழைய சோறு சாப்பிடும் மனோரஞ்சன் பியாபாரி – image credit : thewire.in

மனோரஞ்சன் பியாபாரி 23 புத்தகங்களை எழுதி உள்ளார். மேற்கு வங்க வங்காள அகாடமி விருது ஒன்றும் பெற்றிருக்கிறார். “எனது சண்டாள வாழ்க்கையை விசாரித்தல்” என்ற அவரது சுய வரலாறு புத்தகம் 2018-ம் ஆண்டின் புனைவு அல்லாத பிரிவில் இந்து இலக்கிய பரிசை வென்றுள்ளது.

கடந்த செப்டம்பரில் மனோரஞ்சன் பியாபாரியை தலைவராகக் கொண்ட தலித் சாகித்ய அகாடமியை அமைத்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதனால் அவர் இப்போது கல்லூரிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் இலக்கிய விழாக்களுக்கு ஒன்றை அடுத்து இன்னொன்றுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இத்தனை ஆண்டு காலமும் எளிய வாடகை வீட்டில், மிக எளிய வாழ்க்கை முறையுடன், சிறிதும் மாறாமல் இருக்கிறார்.

நான் அவர் வீட்டை விட்டு வெளியே வரும் போது திரிணாமுல் கட்சிக்காரர்கள் ஏராளமாக கூடி, மனோரஞ்சன் பியாபாரிக்காகக் காத்திருப்பதைப் பார்த்தேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் கட்சிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ரிக்‌ஷாவில் குதித்து உட்கார்ந்தார். ரிக்‌ஷா ஓடத் துவங்கியதும் கட்சி ஆதரவாளர்கள்,” இந்த முறை ரிக்ஷா சட்டமன்றத்தை அடையும்,” என்று முழக்கமிட்டனர்.

www.thewire.in இணைய தளத்தில் ஹிமாத்ரி கோஷ் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்