Aran Sei

அர்னாபுக்கு உடனடி ஜாமீன்; ஸ்டான் சாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் கூட தரமுடியாது – நீதியின் வினோதங்கள்

வம்பர் 6-ம் நாள் சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, ஒரு உறிஞ்சியும், நீர் உறிஞ்சி கோப்பையும் (straw, sipper) தேவை என கேட்டார். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் முதல் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அந்த 83 வயதான ஏசுசபை பாதிரியார், நடுக்குவாத நோயால் (Parkinson) பாதிக்கப்பட்டிருப்பதால் கோப்பை ஒன்றை கையில் பிடிக்க இயலாதவராக உள்ளார்.

அவர் ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் கைது செய்யப்பட்ட போது, ஒரு சிறிய பையில் தனது உடைமைகளுடன் இந்த உறிஞ்சியையும், உறிஞ்சிக் கோப்பையையும் எடுத்து வந்திருந்தார். எனினும் அந்தப் பை தற்போது அவரை கைது செய்துள்ள தேசிய புலனாய்வு முகமையிடம் உள்ளது. கைது செய்யப்படும் போது, உடைகளைத் தவிர இது போன்ற பிற சொந்த உடைமைகளை சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என்கிறார் அவரது வழக்கறிஞர் ஷேக்.

ஆனால் இந்த உறிஞ்சியும், உறிஞ்சி கோப்பையும் அவரது மருத்துவ தேவை..எதற்காக இந்த அடிப்படைத் தேவையைப் பெறுவதற்காக சுவாமி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும்?

தேசிய புலனாய்வு முகமையிடம் உள்ள அவற்றைப் பெற்றுத் தருவதற்கு நீதிமன்ற ஆணையை தரும்படி அவரிடம் கேட்டிருக்கிறார்கள் சிறை அதிகாரிகள். அவரது பையை அவரிடம் ஒப்படைக்கும்படி தேசிய புலனாய்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அவர் கோரியுள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை நவம்பர் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

எனக்குப் பிணை வழங்க வேண்டும் என்பதே எனது ஒரே வேண்டுகோள் – ஸ்டான் ஸ்வாமி

குளிர்கால உடைகள்

இந்த குளிர்காலத்தில் தலைநகர் டெல்லியில், ‘டெல்லி கலவர சதி திட்ட வழக்கில்’ கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களது உறவினர்களால் கொண்டு வரப்பட்ட குளிர்கால உடைகள், மருந்துகள், பிற தேவையான பொருட்களைக் கூட சிறை அதிகாரிகள் தர மறுத்து விட்டனர்.

“அடிப்படைத் தேவைகளுக்காகக் கூட ஒவ்வொரு முறையும் மனு போட வேண்டி உள்ளது” என்கிறார் ஒரு வழக்கறிஞர். அவர் டெல்லி மண்டோலி சிறையில் இப்போது வைக்கப்பட்டுள்ள சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சிறை அதிகாரிகளின் பழிவாங்கலுக்கு அஞ்சி அவர் தனது பெயரையும் தனது வழக்காடியின் பெயரையும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் மூக்குக் கண்ணாடி, யோகா பாய் (முதுகு தண்டுவட பிரச்சினை இருப்பதால்), செருப்புகள் ஆகியவற்றிற்காக மனு கொடுத்திருந்தோம். ஆனால் நீதிமன்றம் கண்ணாடியைத் தவிர மற்றவற்றிற்கு அனுமதி தரவில்லை. சிறை அதிகாரிகள் சிறையில் உள்ளவர்களுக்காக பொருட்களை (parcels) பெறுவது பற்றிய விதிகளைப் பற்றிக் கூட தெளிவாக இல்லை” என்கிறார் அவர்.

“அங்கே பல கட்டுப்பாடுகள் உள்ளன. அவை கொரோனாவினாலா அல்லது பொதுவான விதிகளா என்று தெரியவில்லை. உடைகள் தொடர்பாக எல்லா சிறைவாசிகளுக்கும் பிரச்சனை உள்ளது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்” என்று மேலும் அவர் கூறினார்.

ஸ்டான் ஸ்வாமி வழக்கில் நீதிமன்றத்தின் செயல்பாடு அநியாயமானது- மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு குற்றச்சாட்டு

சிறை நடைமுறைகள்

“சிறையில் உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை தருவது பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் சிறை அதிகாரிகளே” என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

திகார் சிறையின் முன்னாள் சட்ட அதிகாரியான சுனில் குப்தா, “சிறை கண்காணிப்பாளரே இது தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரம் பெற்றவர். சிறையில் இருப்பவர்களுக்குக் குடும்பத்தினரோ ஆதரவு தருபவர்களோ இல்லை எனில் அரசுதான் உடை மற்றும் பிற வசதிகளை செய்து தர வேண்டும்‌.” என்கிறார்.

“சிறை கண்காணிப்பாளரின் விசித்திரமான அணுகுமுறை காரணமாக சிறையிலிருப்பவர்களுக்கு இந்த வசதிகள் கிடைக்காமல் போவது கெடு வாய்ப்பானது” என்கிறார், அவர்.

மும்பை மற்றும் டெல்லியில் உள்ள சிறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டதற்கு அவர்களிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை.

நெரிசலில் சிறைகள்

இந்தக் கொரோனா தொற்று காலத்திலும் பெரும்பாலான இந்திய சிறைகளில் நெருக்கடி மிகுந்துள்ளது. சிறையிலிருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு இடைக்கால பிணை வழங்கியும் அதை நீட்டித்தும் நெருக்கடியை குறைக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

கொரோனா தொற்றுக்கு முன்பே கூட சிறைவாசிகள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெறுவது மிகக் கடினமாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் புத்தகங்கள், பாய்கள், மேற்கத்திய பாணி கழிவறைகள் மற்றும் பிற மருத்துவ வசதிகளுக்கு போராட வேண்டி உள்ளது.

பெரும்பாலான சிறைவாசிகள் அடிப்படைத் தேவைகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் அதே நேரம், முக்கிய வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.

“தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு மிக அதிகமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சிறை அதிகாரிகளும், நீதிமன்றமும் பிற சிறைவாசிகளுக்கு அனுமதித்திருக்கக் கூடிய வசதிகளைக் கூட தருவதில் மிக எச்சரிக்கையாக உள்ளனர்.” என்கிறார் சிறைத்துறை சீர்திருத்தங்கள் பற்றி ஆய்வு செய்யும் டாட்டா வின் குற்றவியல் மற்றும் நீதி பற்றிய ஆய்வு மைய பேராசிரியர் விஜய் ராகவன்.

பீமாகோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டான் ஸ்வாமிக்கு கொரோனா தொற்று – மருத்துவர்கள் தகவல்

“அவர்களிடம் தாங்கள் மென்மையாக நடந்து கொள்வதாகத் தெரியக் கூடாது என்பதற்காகவே, “குறைந்தபட்ச பொறுப்பு” என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சிறை அதிகாரிகள் செயல்படுகின்றனர்.” என்று அவர் விளக்குகிறார்.

எனினும், சிறையிலிருப்போர் அடிப்படை உரிமைகள் பெறுவதற்கு தகுதியானவர்களே என்கின்றனர், மற்றவர்கள்.

“சிறை அதிகாரிகள் ஒரு நபரை இரண்டாவது முறை தண்டிக்கக் கூடாது” என்கிறார் சிறை மற்றும் ஒழுங்கு படுத்துதல் நிர்வாக அகாடமியின் முன்னாள் இயக்குநரும், (2009-2016) ஆந்திர பிரதேச முன்னாள் சிறைத்துறைத் தலைவருமான (2005-2009) அகமது.

“சிறைவாசம் என்பதே நீதிமன்றம்மூலம் தரப்பட்ட முதல் தண்டனை. சிறை தண்டனை பெற்றதனாலேயே ஒருவர் மனிதராக இல்லாமல் ஆகி விடமாட்டார். அவருக்கு அடிப்படை உரிமைகள் அனைத்தும் உள்ளன. சரியான உடை, சரியான உணவு, பிற உடல்நல வசதிகளை மறுப்பது என்பது அரசியலமைப்பை மீறுவது மட்டுமல்ல அவரது உரிமைகளையும் மீறுவதாகும்.” என அவர் வலியுறுத்துகிறார்.

சிறை கையேடுகள் (manuals) கூறுவது என்ன?

சிறைத்துறை மாநிலப் பட்டியலுக்குரியது. ஒவ்வொரு மாநிலமும் அதற்குச் சொந்தமான சிறைகளில் அதிகாரிகளின் அதிகார எல்லைப் பற்றிய கையேடுகளையும் விதிகளையும் கொண்டுள்ளன.

மகாராஷ்டிரா சிறைத்துறையின் கையேடு, படுக்கை, உடை, பிற கருவிகள் குறித்த விதிகளின் படி தண்டனைக் கைதிகளுக்குக் குறிப்பிட்ட வகையான உடைகளும் பாத்திரங்களும் வழங்கப்பட வேண்டும். அதேசமயம் விசாரணைக் கைதிகள் மற்றும் குறைந்த தண்டனை பெற்ற கைதிகள் சொந்த உடைகளை அணிந்து கொள்ளலாம்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

சிறைத் துறையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகளே சிறைவாசிகளின் உடல்நலத்திற்கு நேரடி பொறுப்பு. சிறைவாசிகளுக்கு தடுப்பூசி போடுதல், உணவு, உடை, கருவிகள், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பற்றிய அறிவுரை கூறுதல், அவருக்குத் தேவையான சுத்தம் மற்றும் உடல்நலம் குறித்த கல்வி அளித்தல், நோய்க்கான சிகிச்சை அளித்தல், பல், கண் பார்வை, செயற்கை உடல் கருவிகளை தருதல், மூக்குக் கண்ணாடி மற்றும் தேவைப்பட்டால் உடற்சிகிச்சை (physiotherapy) தருதல் ஆகியவற்றை அதிகாரிகள், செய்ய வேண்டும் என்று கூறுகின்றன.

டெல்லி சிறைத்துறை கையேடு, சிவில் மற்றும் விசாரணைக் கைதிகள், தகுந்த பரிசோதனைக்குப்பின் வெளியிலிருந்து உணவு, உடை, படுக்கை போன்றவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்கிறது. ஒரு சிறைவாசியால் அவ்வாறு பெற முடியாவிட்டால் சிறை அதிகாரிகள் அவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டும் என அது கூறுகிறது.

மேலும் அது, “ஒவ்வொரு சிறைவாசிக்கும், நல்ல உடல் நலத்துடனும், போதுமான வசதியுடனும் இருப்பதற்கான உடைகள் மற்றும் படுக்கைகள் ஆகியவை எப்போதும் தரப்பட்டிருப்பதை உறுதி செய்ய, காவல்துறை தலைவர் அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.” என்றும் கூறுகிறது.

அடிப்படைத் தேவைகளை தீர்மானித்தல்

சிறை அதிகாரிகள் இவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தாலும், சிறையிலிருப்போர் அடிப்படை வசதிகளைப் பெறுவதில் பல தடைகள் உள்ளன.

“பெரும்பாலான சிறைக் கைதிகள் மிகவும் குறைந்த பொருளாதார பின்னணியை கொண்டவர்கள். ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, எந்தவித பாதுகாப்பும் இன்றி தான் வருகின்றனர். அவர்களுக்கு நல்ல சட்ட உதவி கிடைப்பதில்லை, அவர்களின் உரிமைகள் மற்றும் பெறத் தகுதியானவைப் பற்றி அறியாதவர்கள்‌” என்கிறார் ராகவன்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இதுதவிர, சிறை அதிகாரிகளுக்கு போதிய பயிற்சியின்மையும் ஒரு காரணி ஆகும் என்கிறார் அகமது. “சிறைத்துறை நிர்வாகம் காவல்துறை நிர்வாகம் அல்ல. சிறைத்துறை நிர்வாகம் சரிப்படுத்தும் நிர்வாகம் என அறியப்படுகிறது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு சமூகவியல், உடல்நலவியல், குற்றவியல், இன்னும் பல பாடங்கள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சேவை மற்றும் மனித நலம் பற்றி கவனம் உடையவர்களாக இருக்க வேண்டும். சிறைத்துறை அதிகாரிகள் காவல்துறை நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிர்மறை மனப்பான்மையே இருக்கும்.” என்கிறார் அகமது.

இத்துடன், “கொரோனா நெருக்கடியால் சிறையிலிருப்போர் தங்கள் குடும்பத்தையும், வழக்கறிஞரையும் சந்திப்பது கடினமாகி உள்ளது. நீதிமன்றங்கள் தற்போது முழுமையாக செயல்படாததால் போதுமான அலுவலர்களும் நீதிபதிகளும் இருப்பதில்லை. இதனால் விசாரணைகள் நடப்பதில்லை. இதன் விளைவாக அவர்களது பிணை மனுக்களும் விசாரணைக்கு வருவதில்லை.” என்கிறார் ராகவன்.

(www.scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்