Aran Sei

Bad Boy Billionaires – ஹீரோக்களின் பின்னணி : ஷியாம் சுந்தர்

Credot : https://indianexpress.com/

ல தடங்கல்களுக்குப் பிறகு Bad Boys Billionaires என்ற வெப்சீரிஸ் இன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் சதுரங்க வேட்டை என்னும் திரைப்படம் தமிழகத்தில் அப்பாவி மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

நிஜத்தில் சதுரங்க வேட்டை மன்னர்கள் என்று இந்திய அளவில் பிரபலமானவர்கள் பற்றிய கணக்கீட்டை எடுத்தால் நிச்சயம் முதல் 10 இடங்களில் வருபவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

1) சத்யம் நிறுவனத்தைச் சேர்ந்த ராமலிங்க ராஜு (Accounting Fraud)
2) Kingfisher நிறுவனத்தைச் சேர்ந்த விஜய் மல்லையா (Credit Fraud)
3) சகாரா குழுமத்தை உருவாக்கிய சுபத்திரா ராய் (Financial Fraud)
4) கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன முதலாளி நீரவ் மோடி (Operational Fraud)

இந்திய அளவில் அதிக பண மோசடி செய்தவர்கள் என்ற பெருமையைத் தட்டிச் சென்ற சதுரங்க வேட்டை மன்னர்களான இவர்களைப் பற்றிய தொடர்தான் இந்த பேட் பாய்ஸ் பில்லியனர்ஸ் தொடர்.

இந்தத் தொடரில் தன்னைப் பற்றிய பகுதி வரக்கூடாது என்று ராமலிங்க ராஜு ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ராமலிங்க ராஜு பற்றிய பகுதி மட்டும் இந்தத் தொடரில் இப்போதைக்கு இடம்பெறவில்லை.

அவரைத் தொடர்ந்து சகாரா நிறுவனத்தைச் சேர்ந்த சுபத்ரா ராய் பீகார் கீழமை நீதிமன்றத்தில் இந்தத் தொடரை நிறுத்துவதற்கு வழக்கு தொடுத்திருந்தார். இந்தத் தொடரை ஒளிபரப்பு செய்வதற்கு முதலில் பீகார் கீழமை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. பிறகு, இந்த வழக்கு பீகார் உயர்நீதிமன்றத்திலும் அடுத்து உச்சநீதி மன்றத்திலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றம் நெட்பிளிக்ஸ் தளத்தை மீண்டும் பீகார் கீழமை நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டுக்கொண்டது.

பீகார் கீழமை நீதிமன்றம் தடை உத்தரவை ரத்து செய்து தொடர் ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளது. ராமலிங்க ராஜு தவிர மற்றவர்களின் சகாப்தங்கள் இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

அப்படி என்ன சாதனை செய்தார்கள் இவர்கள் என்றா கேட்கிறீர்கள்?. அவர்கள் செய்த தில்லாலங்கடிகளைக் கேட்டால் தலை கிறுகிறுத்துப் போகும்.

இந்த நால்வரில் காலத்தால் முன்னோடி ராமலிங்க ராஜுதான். இவர் இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக சத்யம் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். எல்லாம் கொஞ்ச காலம்தான். நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு வளரவில்லை. லாப வீதத்தைத் தொடர்ந்து உயர்ந்த நிலையில் தக்கவைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று அவர் மூளையைக் கசக்கிப் போட்ட திட்டம் இப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமா என்று மற்றவர்களை மலைக்க வைக்கும் திட்டம்.

நிறுவனம் லாபம் ஈட்டாத போதும் அதிக லாபம் கிடைப்பதாகப் பொய்க் கணக்கு எழுதினார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டாம் என்ற சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து பொய் லாபத்திற்கு வரி செலுத்தாமல் தப்பித்துக்கொண்டார்.

நிறுவனம் அதிக லாபம் ஈட்டுகிறது என்ற பொய்யான தகவல் காரணமாக நிறுவனத்தின் பங்குகளின் விலை உச்சத்தைத் தொட்டது. மெதுவாக ராமலிங்க ராஜு தனது பங்குகளை ஓபன் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கத் தொடங்கினார். நிறுவனத்தில் தன் பங்குகளின் அளவை 6 சதவீதம் அளவிற்குக் குறைத்தார். இதன் மூலம் ரூ.7000 கோடி அளவிற்குப் பண மோசடி செய்தார். இந்த வகையான மோசடி கணக்கு வழக்குகளில் மோசடி செய்து ஏமாற்றுவது (Accounting Fraud) என்ற வரையறையில் வருகிறது.

நமது இரண்டாவது கதாநாயகரான விஜய் மல்லையாவும் முதலாமானவருக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல.

அழகிகளுடன் வருடாந்திர கேலண்டர் ரிலீஸ் செய்வது, உல்லாசத் தீவு வாங்குவது என்று விஜய் மல்லையாவின் லீலைகள் வேறு ரகம். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ற புதிய விமான சர்வீஸ் ஆரம்பித்ததுதான் விஜய் மல்லையாவைக் கீழே இறக்கியது.

விஜய் மல்லையாவின் பிராண்டை நம்பி விமான நிறுவனத்திற்கு அதிகமான கடன் தொகையை வங்கிகள் அளித்தன. இவ்வாறாக விஜய் மல்லையா வங்கியை ஏமாற்றிய தொகையாக ரூ.9000 கோடி இப்பொழுது நிலுவையில் உள்ளது.

இந்தக் கடனைக் கட்டாமலே ஒரு சுபயோக சுபதினத்தில் மல்லையா லண்டனுக்குப் பறந்து விட்டார். அதன்பிறகு கிரிக்கெட் மேட்ச் பார்க்க வருவது, ஷாப்பிங் செல்வது என்று லண்டனில் ஹாயாக வாழ்ந்து வருகிறார். லண்டன் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்ட மல்லையா இப்பொழுது பெயிலில் வெளியே இருக்கிறார். இவரை இந்தியா கொண்டு வருவதற்கு இந்திய அரசு பல ஆண்டுகளாகத் தண்ணி குடித்து வருகிறது. இதுபோன்று போலி ஆவணங்களைக் காட்டி வங்கிகளை ஏமாற்றுவது கிரெடிட் ரிஸ்க் (Credit Fraud) என்ற வரையறையில் வருகிறது.

மூன்றாமவரான சுப்ரதா ராய் பற்றியும் குறைத்து மதிப்பிட முடியாது. ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா பொதுமக்களிடம் நிதி திரட்டுவதற்காகக் கடன் பத்திரங்களை வெளியிட்டது. இதன் மூலம் 4 கோடி மக்களிடம் ரூ.87,000 கோடி வசூலித்தது. இந்தப் பணத்தை ஆட்டையைப் போட்டு நாலு கோடி மக்களைத் தெருவில் விட்ட பெருமை சுப்ரதா ராயைச் சேரும். இதுபோல பெருவாரியான முதலீட்டாளர்களிடம் பணத்தை ஏமாற்றுவது நிதி மோசடி (Financial Fraud) என்ற வரையறையில் வரும்.

இந்த நால்வருக்கும் அப்பாதான் நமது நீரவ் மோடி. வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்கத் தனது கைக்குள் போட்டுக்கொண்டார். வங்கிச் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த ஊழியர்களின் உதவியுடன் வங்கிப் பணத்தை கொள்ளை அடித்தார். வைகைப்புயல் வடிவேலு பாணியில் இல்லாத கிணறுக்கு அவர் எழுதிய கணக்கு ரூ.12,000 கோடி. இவ்வளவு பெரிய ஊழலைச் செய்து விட்டு அலட்டிக்கொள்ளாமல் பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் கூட்டத்தில் கலந்துகொள்ள லண்டனுக்குக் கூலாக சுற்றுலா சென்று விட்டார். இதுபோல வங்கி அதிகாரிகளை வைத்துக் கொள்ளையடிப்பது ஆபரேஷன் ரிஸ்க் (Operational Fraud) என்ற வரையறையில் வரும். இப்பொழுது லண்டன் சிறைச்சாலையில் பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இவரை எப்படியாவது இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல எப்படி எல்லாம் மோசடி செய்யலாம் என்பதை உலகிற்கு உரைத்த மாபெரும் புத்திசாலிகள் இவர்கள். களவும் கற்று மற என்பார்கள். இவர்களுடைய வாழ்க்கையைப் படிப்பது களவு செய்வதற்காக அல்ல; நம்மிடமிருந்து சதுரங்க வேட்டை நாயகர்கள் எப்படி எல்லாம் கொள்ளை அடிப்பார்கள். அதிலிருந்து நாம் எப்படி தற்காத்துக்கொள்ள முடியும் என்று அறிந்துகொள்வதற்காக. அதற்காகவாவது நிச்சயம் இந்தத் தொடரைப் பாருங்கள்.

(கட்டுரையாளர் ஷியாம் சுந்தர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்