Aran Sei

மயக்க மருந்தே இல்லாத ஆயுர்வேத முறையில் அறுவை சிகிச்சை சாத்தியமா?

கோவிட்-19 பெருந்தொற்றின்போது, ஆயுஷ் அமைச்சகம் மிகப் பெரிய தொல்லையாக இருந்தது. ஆயுஷ் அமைச்சகம் எப்போதுமே பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது என்றாலும், பெருந்தொற்றின் போது அமைச்சகங்கள் பாதுகாப்பாக நடவடிக்கைகள் எடுத்து, பதற்றத்தை தவிர்த்து, ஆரோக்கியமில்லாதவர்களை , குழப்பத்தில் இருப்பவர்களை வழிநடத்த முயற்சிக்க வேண்டிய பொழுதில், ஆயுஷ் அமைச்சகம் அதற்கு நேர் எதிராகவே செயல்பட்டது. சொல்லப்போனால், மருத்துவ சேவையின் அடிப்படை தார்மீகத்தில் இருந்து மிகத் தொலைவில் பயணித்த ஆயுஷ் அமைச்சகம், அதனுடைய ஒரே கொள்கை, தவறு செய்வது தானோ என்று யோசிக்க வைக்கிறது.

முதலில்,நவம்பர் 2020 ல் கூட நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஒரு நோயைப் பற்றி முன்னோர்களுக்கு எல்லாம் தெரியும் என யூகித்துக் கொண்டு ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என அமைச்சகம் மோசமான அறிவுரையை வழங்கியது. பிறகு, இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டதால் அவருக்கு இருந்த கோவிட்-19 தொற்று குணமானது என சந்தேகத்திற்குரிய விஷயங்களை சொன்னது; ஆயுஷ் அமைச்சருக்கு கோவிட் தொற்று ஏற்பட்ட போது அவர் அலோபதி மருத்துவமுறையை தேர்ந்தெடுத்தது; மூலிகை மருந்துகள் எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என அமைச்சகம் பரிந்துரைத்தது என ஏகப்பட்ட குழப்படிகள் நடந்தன.

இண்டியாஸ்பெண்ட் எனும் தளத்திற்காக எழுதிய அனு புயன், இதைப் போன்ற நடவடிக்கைகள் வீட்டு வைத்தியத்தை ஊக்குவித்து, கோவிட்-19ஐ குழப்பமானதாக்கியது, சுகாதார துறையில் இருக்கும் முன்னணி ஊழியர்களின் வேலையை கடினமாக்கியது என்கிறார்.

இந்த பிற்போக்குத்தனத்தின் சமீபத்திய வெளிப்பாடு நவம்பர் 20 அன்று வந்த செய்தி. ஆயுஷ் அமைச்சகத்தின் நிர்வகிப்பில் இருக்கும், மத்திய இந்திய மருத்துவ கவுன்சிலின் (சி.சி.ஐ.எம்) ஒரு அறிவிப்பு, ஆயுர்வேதத்தில் சில பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் 58 அறுவை சிகிச்சை முறைகளை செய்ய முறையாக அங்கீகாரம் அளித்துள்ளது.

மத்திய இந்திய மருத்துவ மையத்தின் முதுநிலை ஆயுர்வேத பட்டம் தொடர்பான 2016 விதிமுறைகளில் இது திருத்தத்தை கொண்டு வருகிறது. இந்த திருத்தம், “ஆய்வு காலத்தில், ஷல்யா மற்றும் ஷலக்யா அறிஞர்கள் (குறிக்கப்பட்ட) அறுவை சிகிச்சை முறைகளுக்கு உதவவும், அவற்றை தனியே நடத்தவும் பயிற்சியளிக்கப்படுவார்கள், இதன்வழி, அவர்கள் முதுநிலை முடித்ததும் சுயாதீனமாக இவற்றை செய்யமுடியும்” என்கிறது.

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் இணையதளத்தில், அதன் “ஷல்யா தந்திரா துறை” “அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாத அறுவை சிகிச்சைகளை கையாள்வதாக சொல்கிறது”. மேலும், ஷலக்யா தந்திரா எனும் துறை, கழுத்து எலும்புப் பட்டைக்கு மேல் இருக்கும் நோய்களை – அதாவது காது, மூக்கு, தொண்டை, கண், பற்கள், தலை மற்றும் கழுத்து நோய்களை எல்லாம் கையாள்வதாக சொல்கிறது. இந்த அமைப்பு, போதுமான உபகரணங்களோடு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கமருந்து நிபுணர்கள், அறுவை சிகிச்சை மாதிரிகள், பாடங்கள், ப்ரொஜெக்டர்கள், ஏறத்தாழ “1000” புத்தகங்கள் இருக்கும் ஒரு நூலகம் ஆகியவற்றோடு, சிறப்பாக இயங்குவதகாவே தெரிகிறது.

ஆனால், இங்கே பிரச்சினையாக இருப்பது தொழில்நுட்பம் அல்ல, ஒழுங்குமுறை தான். இந்த இடத்தில் ஒழுங்குமுறை என்பது, உடல்நலம் இல்லாத ஒருவருக்கு தரமான மருத்துவ சிகிச்சை, நேர்மையாக வழங்கப்படும் என்பதற்கான பொறுப்பு இல்லாமல் இருப்பது. நாம் கண்ட உதாரணங்கள் எல்லாம் ஆயுஷ் அமைச்சகம் முன் வைக்கும் இந்த ஆயுர்வேதம் எனும் ‘வகையில்’ அது இல்லை என்பதையே சொல்கின்றன.

நரேந்திர மோடியின் ஆட்சியில், ஆயுர்வேதம் போலி அறிவியலாகவே இருந்திருக்கிறது. பல வரலாற்று கட்டுரைகளில் இருக்கும் விளக்கங்கள், குறிப்புகளை எல்லாம் ஆயுர்வேதத்தை பின்பற்றுபவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்; ஆனால், ஆயுர்வேதத்திற்கென ஒரு பொதுவான ஆவணம் இல்லாததால், அவற்றின் உண்மைத்தன்மையை சோதிக்கமுடிவதில்லை. தங்களுடைய ஆய்வுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என பலரும் சொல்வது அர்த்தமில்லாதது. என்னால் சொந்தமாக ஒரு பத்திரிக்கையை வெளியிட முடியும், என்னுடைய நண்பர்களை வைத்து மதிப்பீடுகளை எழுதி வாங்க முடியும் என்றால், என்னாலும் ஆய்வை வெளியிட முடியும் தான். ஆய்வுகள் எங்கே வெளியிடப்படுகின்றன, எந்த விதிமுறைகளுக்கு கீழே வெளியிடப்படுகின்றன என்பது முக்கியம்.

ஆயுர்வேத கல்வியில் இருக்கும் கருத்துக்களில் பெரும்பாலானவை போலி என நிரூபிக்கப்படுவது ஆயுர்வேதத்திற்கு மேலுமொரு அடியாக இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஜி.எல்.கிருஷ்ணா, தி வயர் அறிவியல் தளத்திற்கு எழுதியது போல, இங்கிருக்கும் உபதேச சூழல் “மூடநம்பிக்கைகளை உண்மைகளாக்கி, அறிவியல் மந்தத்தை ஊக்குவிக்கிறது. தற்போத ஆயுர்வேத பட்டப்படிப்பின் பெரும்பங்கு காலம் போன நோய்க்குறியியல் யோசனைகளாகவே இருக்கின்றன. ரத்தம் வயிற்றில் இருந்து தான் சிவப்பு நிறத்தை பெறுகிறது, விந்தணு எலும்பு மஜ்ஜையில் இருந்து வருகிறது போன்ற பழங்கால மருத்துவ அனுமானங்கள் இன்னமும் பல்கலைகழக அளவில் பயிற்றுவிக்கப்படுகின்றன. சமீபத்தில் நடந்த முதுநிலை நுழைவுத் தேர்வுகளில் கூட இந்த ‘தகவல்கள்’(!) குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆயுர்வேத பத்திரிக்கைகளும் இது போன்ற புனைவை மையமாக வைத்து எழுதப்படும் கட்டுரைகளை வெளியிடுகின்றன”.

இந்த மாதிரியான ஆயுர்வேதம் சந்தேகத்தை உண்டாக்குவதற்கு முக்கிய காரணம் – ஆயுர்வேதத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுகோல் : நவீன அறிவியல். நவீன அறிவியல் ஆயுர்வேதத்தை பரிசோதிக்க வடிவமைக்கப்பட்டது அல்ல. பல ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போலி மருத்துவர்கள், தங்கள் முறைகள் “அறிவியல்” சார்ந்தவை என சொல்வதுண்டு. ஆனால், ஆயுர்வேதமும் அறிவியலும் அறிவை பெறும் விதமும், அதை ஒழுங்குபடுத்தி மதிப்பீடு செய்யும் விதமும் முற்றிலுமாக வேறுபட்டது.

உதாரணமாக, அசிடைல்சேலிசைக்ளிக் ஆசிட் (ஆஸ்பிரின்) எடுத்துக் கொண்டால் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் தலைவலி தாங்கிக் கொள்ளுபடியாக மாறும் என்பது மருத்துவம். ஆனால், ஆயுர்வேதமும், ஹோமியோபதியும், மருத்துவம் என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட தேவைகள், வாழ்க்கைமுறை சார்ந்து மாற்றப்பட வேண்டியது என்கிறது. அசிடைல்சேலிசைக்ளிக் ஆசிட்டின் தாக்கத்தை குறித்து ஒரு பெரிய அளவிலான மருத்துவ ஆய்வை உடனே செய்ய முடியும் என்றாலும், ஆயுர்வேதத்திற்கும், ஹோமியோபதிக்கும் இது தேவையில்லாத ஒன்று. ஏனென்றால், வாழ்க்கைமுறை மாற்றங்களிலும், பிற ஏற்பாடுகளிலும் தான் அவை வேலை செய்ய முனைகின்றன.

ஆயுர்வேதமும் அலோபதியும் எந்தளவு ஒப்பிட்டு அளவிடமுடியாதது என்றால், நியூஸ் லாண்ட்ரி – யில் மருத்துவர் நாகராஜ் சொல்வது போல, “ஒரு மூலிகை அல்லது தாவரத்தில் இருக்கும் மூலப்பொருளைப் பிரித்தெடுக்கும் செயல்முறை, பிறகு அதன் பண்புகளை முதலில் செல் மாதிரிகளில் பதிவு செய்தல், பின்னர் விலங்கு மாதிரிகளில் சோதித்து பார்த்தல், இறுதியாக மனித உடல்களை வைத்து சோதித்து பார்த்தல் … ஒரு ஆராய்ச்சியில் இந்த முறை பின்பற்றப்பட்டது என்றால், முடிவில் நமக்கு கிடைப்பது ஆயுர்வேத மருந்தாக இருக்காது, புதிய இரசாயனமாகவே இருக்கும். அந்த புள்ளியில், இது பாரம்பரியத்திலிருந்து பிரதான மருத்துவ முறையாக மாறியிருக்கும்”.

இதன் காரணமாகவே, வேறு மதிப்பீட்டு முறைகளை வடிவமைக்காமல், ‘அறிவியல்’ எனும் முத்திரையை வாங்க நினைப்பது, நம்பகத்தன்மையை உருவாக்க குறுக்குவழியாக இருக்கிறது. வேறு எப்படியும் இத்துறைக்கு நம்பிக்கை கிடைப்பதில்லை. இதை இந்திய மருத்துவ சங்கம் கண்டறிந்திருக்கிறது. இது தொடர்பாக பிடிஐ வெளியிட்ட செய்தியில், “உங்களுடைய சொந்த பழங்கால எழுத்துக்களில் இருந்து சொந்த அறுவை சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்ளுங்கள், நவீன மருத்துவ துறையின் அறுவை சிகிச்சைகளை உங்களுடையது என்று சொல்லாதீர்கள்” என இந்திய மருத்துவ சங்கம், மத்திய இந்திய மருத்துவ மையத்தை வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அறுவை சிகிச்சை முறைகளை வெவ்வேறு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கூடேயும் இணைத்து என்ன மாதிரியான முடிவுகள் வரும் என சோதித்து பார்ப்பதும் நடந்திருக்கிறது. ஆயுர்வேத யோசனைகளை அலோபதியோடு இணைப்பது ஆபத்தில் முடியும். மேற்கு வங்காள மருத்துவர் குழுவின் உறுப்பினரான டாக்டர் கௌசிக் சாக்கி, “அறுவை சிகிச்சைக்கு மயக்கமருந்தும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் (antibiotics) தேவை. ஆயுர்வேதத்திடம் அது இருக்கிறதா? ஆயுர்வேதம் சுயமாக மயக்கமருந்தையும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் தயாரித்ததால் சரி. ஒரு ஆயுர்வேத மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மக்கள் தேர்ந்தெடுத்தால், அதுவும் சரி தான். ஆனால், நாங்கள் கிராஸோபதி, மிக்ஸோபதி என அழைக்கும் இந்த நடைமுறைக்கு நீங்கள் சட்ட அங்கீகார வாங்க முடியாது” என்கிறார்.

நவம்பர் 5 ஆம் தேதி வெளியான ஒரு அறிக்கையில், நிதி ஆயோக், பல மருத்துவ முறைகளை இந்தியாவில் கொண்டு வர முயற்சிப்பதை இந்திய மருத்துவ சங்கம் விமர்சித்திருந்தது. ஒரு “கிச்சடி மருத்துவ முறையை” இந்தியாவில் கொண்டுவர முனைவது, போலித்தனத்தை அங்கீகரிக்கும், எங்கும் இல்லாத ஹைப்ரிட் மருத்துவர்களை உண்டாக்கும், மேலும், மக்களை சில தருணங்களில் அலோபதி முறையை தேர்ந்தெடுக்க விடாது, சில தருணங்களில் ஆயுர்வேத முறையை தேர்ந்தெடுக்க விடாது என அறிக்கையில் சொல்லியிருக்கிறது.

சுகாதாரத் துறை ஊழியர்களுக்கான தேவை!

மருத்துவ பயிற்சி குறித்துப் பேசும் போதும், ஒழுங்குமுறையை குறித்து பேசவேண்டியதாக இருக்கிறது. இந்தியாவில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பற்றாக்குறை இருப்பது தெரிந்தது தான். ப்ரியாங்கா புல்லா எழுதிய ஒரு செய்தி தொகுப்பில், பல அரசு சாரா அமைப்புகள், கிராமங்களில் எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் தங்களுடைய சொந்த பாணியில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு எல்லாம் மீண்டும் பயிற்சி அளித்து, அவர்களை அடிப்படை மருத்துவ சேவைகளான ஆண்டிபயாடிக்குகளை கொடுப்பது, சாதாரண நோய்களுக்கு சிகிச்சையளிப்பது போன்றவற்றை செய்ய தயார்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய மருத்துவ சங்கம் கிராம மருத்துவர்களுக்கு போதுமான பயிற்சியில்லை என இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால், பிற மருத்துவர்களோ, இந்தியாவின் கிராமங்களில், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாத பகுதிகளில் இவர்கள் இருப்பதனால் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த மறுபயிற்சி திட்டம் ஒன்று, பட்டதாரிகள் தங்கள் பெயருக்கு முன் இருக்கும் டாக்டர் எனும் பட்டத்தை நீக்க வேண்டும் எனவும், ஷெட்யூஸ் ஹெச் மற்றும் எக்ஸ் மருந்துகளை பரிந்துரைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. இதற்கு பதிலாக, அரசின் கண்ணில் இவர்கள் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் ஆவார்கள் , மேலும் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு வழங்கப்படும் எனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய இந்திய மருத்துவ மையத்தின் நோக்கமோ இந்த காரணத்தையும் கூட தவிர்ப்பதாக இருக்கிறது. இந்தியாவில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை இருப்பது, அறுவை சிகிச்சை நிபுணர்கள் உட்பட பல நிபுணர்களுக்கான குறை இருப்பதை விட அதிகம் பேசப்படுகிறது. ஆனால், ஆயுஷ் அமைச்சகமும், சி.சி.ஐ.எம்-ம் ஆயுர்வேதத்தையும் பிற மருத்துவ முறைகளையும் பிரதானமாக்க முயற்சிக்கின்றனவே தவிர, மருத்துவ தரத்தை குறைத்துக் கொள்ளாமல் மருத்துவர் நோயாளி விகிதத்தை மேம்படுத்த வேண்டும் எனும் குறிக்கோளுக்கு உதவுவதில்லை.

மறுபயிற்சி திட்டம், அங்கீகாரத்தை ஊக்கத்தொகையாக கொடுத்து, கிராமங்களில் இருக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்வதன் அபாயத்தை குறைக்க முயற்சிக்கிறது. மிகத் தொலைவில் இருப்பது போன்ற தோன்றினாலும், அதுவே நம்முடைய குறிக்கோள், மக்களுக்கு பழக்கமான ஒரு அமைப்பிற்குள் மக்களை ஒருங்கிணைப்பது. ஆனால், சி.சி.ஐ.எம்-ன் திட்டமோ, பணியமர்த்த நிறைய பேர் இருக்கும் அலோபதி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டுகளை அளித்து, ஆயுர்வேத மருத்துவர்களை (அங்கீகாரம் பெற்றவர்களோ பெறாதவர்களோ) பழக்கமில்லாத அறுவை சிகிச்சை முறைகளை செய்ய சட்ட அனுமதியோடு ஆயத்தமாகியிருக்கிறது

இந்த புதிய திருத்தம், அலோபதி அறுவை சிகிச்சைகளுக்கு இருக்கும் அதே சட்ட, ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ஆயுர்வேத அறுவை சிகிச்சைகளுக்கும் கொண்டு வந்தால் மட்டுமே எந்த சிக்கலும் இல்லாமல் இது நடைபெறுவது சாத்தியம். அதாவது நெறிமுறை சோதனைகள், வேறுபட்ட நோய்களுக்கு பொதுவான சிகிச்சைகள், தரம் மற்றும் பாதுகாப்பிற்கான உறுதி, சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பு, குறைகேட்பு – போன்றவை இருக்க வேண்டியது அவசியம். இது நடைமுறையானால் சரியான முதல் அடிகளை எடுத்துவைக்க வேண்டியதாக இருக்கும் – முறையான சோதனை முறைகளை வடிவமைக்க வேண்டியதாக இருக்கும், பொதுவான இலக்கியத்தை உருவாக்க வேண்டியதாக இருக்கும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் கட்டுப்பாடுகளை நடைமுறையாக்க வேண்டும், மிக்ஸோபதி யோசனையை விட்டுவிட வேண்டும்.

‘பாரத்’ எனும் நாட்டிற்கு உலகிற்கு முன்னரே நிறைய விஷயங்கள் தெரியும், ஆயுர்வேதத்தை தேர்ந்தெடுக்காதவர்கள் ‘தேச துரோகிகள்’ என விளம்பரப்படுத்துவது தான் குறிக்கோளாக இருந்தால், இந்த விதிமுறைகளை எல்லாம் ஆயுஷ் அமைச்சகத்திற்கு கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும். விதிமுறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக, இந்தியாவிற்கு இப்போது தேவையே இல்லாத ஒன்றை செய்யவே ஆயுஷ் அமைச்சகம் விரும்பும்.

(www.thewire.in இணையதளத்தில் வாசுதேவன் முகுந்த் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்