Aran Sei

மதவாதத்தால் தகர்க்கப்பட்ட அயோத்தியின் நல்லிணக்க பாரம்பரியம்

யோத்தியின் அடையாளமாக விளங்கிய நூற்றாண்டுகள் பழமையான ஒரு ராமர் கோவில் ராம் மந்திர் அறக்கட்டளையால் ஆகஸ்ட் 20, 2020 அன்று இடிக்கப்பட்டுள்ளது. இராமன் பிறந்த இடமாக சங் பரிவார் சொல்லும் இடத்தில் புதிய கோவிலை கட்டுவதற்காக 319 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜென்மஸ்தான் கோவிலை இடிப்பதை விட வேடிக்கையானது வேறெதுவும் இருக்க முடியாது

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் 67 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இந்த ஜென்மஸ்தான் கோயில் ராமன் பிறந்த இடமாக வழிபடப்பட்டு வந்தது. இராமன் பிறந்ததாக வழிபடப்பட்டு வந்த கோவிலை இடித்து விட்டு புதிய இராமர் கோவிலை கட்டும் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையின் செயல் இப்பிரச்சினை குறித்து விரிவான பார்வையை செலுத்த வழி வகுத்துள்ளது.

கூடர் ராமச்சந்திரா துறவு மரபின் இந்த முக்கியமான’ கோவில் 319 வருடங்களுக்கு முன் ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் வழங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது. இது அயோத்தியின் நிலவிய சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கியது..

அயோத்தியில் பூசாரியாக ஆகும் எந்த ஒருவரும் இந்தக் கோயிலில் தன் பெயரை பதிவு செய்து அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசீதே அவரது புதிய அந்தஸ்துக்கான அங்கீகாரம்.. ஒரு பூசாரி அவரது சக பூசாரிகளால் அங்கீகரிக்கப்படுவதற்கு இந்தக் கோவிலில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை முக்கியமானதாக இருந்தது.

இந்த ‘ஜென்மஸ்தான்’ கோவில் பாபர் மசூதிக்கு அருகில் இருந்தது. இரண்டிற்கும் இடையே அனுமன்கர்ஹி-தோராஹி கிணறு ஆகியவற்றை இணைக்கும் சாலை இருந்தது.. 319 ஆண்டுகளுக்கு முன்பு ஜென்மஸ்தான் கோவில் கட்டப்பட்ட போது பாபர் மசூதியில் இராமர் சிலை இருக்கவில்லை. ஏனெனில் 1949-ம் ஆண்டு டிசம்பர் 22-க்கும் 23-க்கும் இடைப்பட்ட இரவில்தான் இராமர் சிலை பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டது என்பது ஊரறிந்த உண்மை.

பாபர் மசூதி, ஜென்மஸ்தான் வரைபடம்
பாபர் மசூதி, ஜென்மஸ்தான் வரைபடம்

1984 வரை ‘ஜென்மஸ்தானின்’ முக்கியத்துவம் உணரப்படவில்லை. ஏனெனில் பக்தர்கள் அதை இராமர் பிறந்த இடமாக பார்த்தனர். அவர்கள் அனுமன் கர்ஹியிலிருந்து துவங்கி வழியில் உள்ள அனைத்து கோயில்களையும் வழிபட்டுக் கொண்டே வருவார்கள். கனக் பவன், தசரத மகால், ராம் கஜானா, ரத்தன் சங்காசன் மற்றும் ரங் மகால் வரை வந்து இறுதியில் ‘ ஜென்மஸ்தான்’ கோவிலையும், ஜென்ம பூமி என்று அறியப்பட்ட ராம் சபுத்ரா (RamChabuthra) வையும் அடைவர். இந்த அனைத்து கோவில்களும் கோட் ராமசந்திரா பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதி அயோத்தியின் வளம் கொழிக்கும் பகுதியாக அறியப்படுகிறது.

இந்துத்துவா எழுச்சியுடன் கூட ‘ஜென்மஸ்தான்’ மற்றும் பிற கோவில்களின் வீழ்ச்சி

1984-ல் அயோத்தி விவகாரம் இந்துத்துவா கதையாடலின் கீழ் சூடுபிடிக்க ஆரம்பித்ததிலிருந்து கோட் ராமசந்திரா பகுதி அரசியல் சச்சரவுக்கு உட்பட்ட பகுதியாக மாறியது; உள்ளூர் விவகாரமாக இருந்தது நாடு தழுவிய விஷயமாக ஊதிப் பெருக்கப்பட்டது. அதிகார கெடுபிடி, காவல் ஆகியவை காரணமாக காலங்காலமாக மக்கள் வழிபட்டு வந்த முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களுக்கு சாதாரண மக்கள் வருவது சிரமமானது.

ஜென்மஸ்தான் கோவில் வளாகத்தின் தரைத் தளத்தின் ஒரு பகுதியில் ஒரு அஞ்சலகம் செயல்படத் துவங்கியது. 1991 முதல் அதன் மேல் தளம், பாபர் மசூதியில் நடப்பனவற்றைக் கண்காணிப்பதற்கான காவல் கட்டுப்பாட்டு அறையாக மாறியது. 1992 டிசம்பர் 6 அன்று இந்த அறையிலிருந்துதான் காவல்துறை உயர் அதிகாரிகளும், நிர்வாகத்துறை உயர் அதிகாரிகளும் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடிப்பதை கண்டு களித்தனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்

எனினும் நரசிம்மராவ் அரசு 67.703 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய பின்னும் 1993 வரை, இந்த ‘ ஜென்மஸ்தான்’ பக்தர்களும் மதத் தலைவர்களும் அடிக்கடி வந்து செல்லும் சாதாரண இடமாக இருந்தது. அவர்கள் சாதாரணமாக வந்து, தங்கி, பூசைகள் செயது, தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இருந்தாலும் இந்த நிலத்தை கையகப்படுத்தியது அந்தப் பகுதியில் இருந்த 12-க்கும் மேற்பட்ட பிற கோவில்களுக்கு இடையூறாக இருந்தது.

இஸ்லாமிய ஜமீன்தாரால் தரப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட, ‘ஜென்மஸ்தான்’ கோவில் தனது சொந்த நிலத்தை பயன்படுத்துவதை தடுக்கப்பட்டதுடன் , அன்றாட பூசை செலவுகளுக்கும் கூட வழியின்றி தவிக்க வேண்டியதாயிற்று.

மேலும் இந்தக் கோவில்களுக்கு வரும் தெருக்கள் தடுக்கப்பட்டன. இதனால் மக்கள் மூலம் அவற்றிற்கு கிடைத்த வருவாய் நின்று போனது‌. அன்றாட பூசை செலவுகளுக்கே சிரமப்படுவது மட்டுமல்ல அவற்றின் இருப்பே கேள்விக்குறியானது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் வளைந்து நெளிந்து செல்லும், குறுகலான பாதையில், துப்பாக்கி முனையின் கண்களில் படாமல் மறைந்து பக்தர்கள் செல்ல முடிகிற ஒரே இடம், தற்காலிகமாக அமைக்கப்பட்ட ‘ராம் லாலா’ கோவில் மட்டும்தான். மற்ற அனைத்து கோவில்களும் பக்தர்கள் வருகை இன்றி, வருமானமின்றி சிறப்பிழந்து, கேட்பாரற்று போயின.

அயோத்தி விவகாரம் வெறும்’ ஜென்மஸ்தானை ‘ தரைமட்டமாக்கியதோடு நின்று விடவில்லை. 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்த அதே ‘புனித‘ கரங்களுடன் ராம் பக்த கர சேவகர்கள் அதன் வெளிப்புற வளாகத்தில் இருந்த ராம் சபுத்ரா, சீதா ரசோய் போன்ற புனிதத் தலங்களையும் இடித்துத் தள்ளியது எங்கும் வெளிவராத செய்திகள் ஆகும்.

ராம் சபுத்ரா 20-ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ராம் ஜென்ம பூமி என அறியப்படுகிறது. 19-ம் நூற்றாண்டின் இறுதிவரையில் அது ஜென்மஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது. இங்கு நிர்மோகி அகாரா 1885-க்கு முன்பே கூட பூசைகள் நடத்தி வந்தது.

1885-ல் மறைந்த ரகுபர்தாஸ், ராம் சபுத்ராவில் ராமனுக்கு ஒரு கோவில் கட்ட அனுமதி கேட்டார். அந்த வழக்கு ஃபைசாபாத் துணை நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் மேல் முறையீடும் மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ராம் சபுத்ராவும், சீதா ரசோயியும் செங்கோணத்தில் L வடிவத்தில் இருந்தன. அவை இரண்டும் பாபர் மசூதியின் இரண்டு பிரதான வாயில்களுக்கு அருகே அமைந்திருந்தன. 1859-ல் காலனிய அரசு மசூதிக்கும் இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே இரும்பு தடுப்புகள் அமைத்து இரு மதத்தையும் சேர்ந்தவர்கள் தத்தமது பகுதியில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தனர்.

பாபர் மசூதி வழக்கில் மசூதியும் அதன் வளாகமும் உட்புற வளாகம் என்றும், ராம் சபுத்ரா, சீதா ரசோய் ஆகியவை இருந்த பகுதிகள் வெளிப்புற வளாகம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2010-ல் அலகாபாத் நீதிமன்ற உத்தரவுப்படி மொத்த நிலத்தையும் மூன்று சமமான பங்காகப் பிரித்து ஒரு பகுதி நிர்மோகி அகாராவுக்குத் தரப்பட்டது. அதில் இந்த ராம் சபுத்ரா, சீதா ரசோய் கோவில்களும் அடங்கும். மற்ற இரண்டு பகுதிகளில் ஒன்று மத்திய சன்னி வக்ஃப் வாரியத்திற்கும், மற்றொன்று ராம் லாலா விராஜ்மான் என்ற அமைப்புக்கும் தரப்பட்டது.

நவம்பர் 9, 2019 உச்சநீநிமன்ற தீர்ப்புப்படி புதிய ராமர் கோவிலை கட்ட மோடி அரசு ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையை நிறுவியுள்ளது.. 1993-ல் அரசு கையகப்படுத்திய 67.703 ஏக்கர் நிலம் இதன் பெயருக்கு மாற்றப்பட்டு கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தையும் பெற்று உள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் தயாரித்த பழைய ராமர் கோவில் வரைபடம் திருத்தி அமைக்கப்பட்டு 360அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்ட புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை தலைவர் நிருத்யதாஸ் (அயோத்தி மணிராம் சாவ்னி கோவில் பூசாரி) மற்றும் பொதுச் செயலாளர் சம்பத் ராய் (விஸ்வ ஹிந்து பரிஷத்) இருவரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்த வழக்கை சி.பி.ஐ. நீண்டகாலம் கிடப்பில் போட்டிருந்தது. சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-க்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 27 அன்று ‘ஜென்மஸ்தான்’ கோவில் இடிக்கப்பட்ட பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த இராமனின் பிறப்புடன் தொடர்புடைய பெரும்பாலான கோவில்களும் தற்போது சிதிலமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டு விட்டன.

இதற்கெல்லாம் முன்பாக 1991-ல் அன்றைய கல்யாண் சிங் தலைமையிலான உத்தர பிரதேச அரசு பொது வசதிகளை மேம்படுத்துவதற்கு என 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. அந்த நிலத்தை சமப்படுத்துவது என்ற பெயரில் பெரிய , சிறிய கோவில்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. இவ்வாறு இடித்துத் தள்ளப்பட்ட கோவில்களில் சுமித்ரா பவன், சங்கட் மோட்சன், ராம் ஜானகி கோவில் போன்றவை முக்கியமானவை. (சாக்ஷி கோவன் கோவிலின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டுள்ளது.)

இதுவரை அது திறந்தவெளிக் காடாகவே உள்ளது.

1991-ல் பல கோவில்களை இடித்ததாகட்டும், 1992-ல் ராம் சபுத்ரா , சீதா ரசோயியை இடித்துத் தள்ளியதாகட்டும், ஆகஸ்ட் 27-ல் ஜென்மஸ்தான்’ இடிக்கப்பட்டதாகட்டும் இவை யாவும் பண்டைய அயோத்தியின் நம்பிக்கை, சமூக நல்லிணக்கம் ஆகியவை தொடர்ச்சியாக வரிசையாக துடைத்தெறியப்பட்ட சம்பவங்களாகும்.

அயோத்தி, கங்கை-யமுனை பண்பாட்டின், ஒத்திசைவான நெறிமுறை கலாச்சாரத்தின் அடையாளம். முந்தைய இஸ்லாமிய ஆட்சியாளர்களும், ஜமீன்தார்களும்’ ஜென்மஸ்தான்’ கோவிலுக்கு மட்டுமல்ல அதைச் சுற்றிலும் அயோத்தியில் இருந்த பெரும்பாலான கோவில்களை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் ஏராளமான நிலங்களை வழங்கி உள்ளனர் என்பது தக்க ஆவணங்களுடன் கூடிய உண்மை ஆகும். அவற்றில் முக்கியமானவை அனுமன்கார்ஹி, அச்சாரி, ரானோபாலி நானாக் சாஹி மற்றும் காகி அகாரா ஆகிய கோவில்கள் ஆகும்.

1870-ம் ஆண்டில் ‘ஃபைசாபாத் வட்டத்தின் வரலாற்றுக் குறிப்பு’ என்ற தலைப்பிலான ஆவணத்தை அன்றைய அவுத் (Oudh) அரசு வெளியிட்டுள்ளது. (காலனிய அரசு இதனை Kot Ramachandra area என குறிப்பிடுகிறது.) மேலே சொன்ன உண்மைகள் யாவும் கார்னகி அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. (1870). அந்த அறிக்கை எந்தெந்த கோவில், அகாராக்களின் பூசாரிகள் எந்தெந்த இஸ்லாமிய ஆர்வலர்கள் மூலம் நிலங்கள் போன்றவை வழங்கப்பட்டு ஆதரிக்கப்பட்டனர் என பட்டியலிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 1767-ல் அதாவது இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட (1867) ஆண்டிற்கு நூறு ஆண்டுகளுக்கு முன் நவாப் மன்சூர் அலி கான் தன் கருவூலத்திலிருந்து அனுமன்கார்ஹி கோவிலைப் புதுப்பிக்க பணம் கொடுத்துள்ளதை அறிக்கை பதிவு செய்துள்ளது‌

காலப்போக்கில் பழைய பெயர்கள் மாற்றம் அடைந்து விட்டன. ஒரு காலத்தில் பாபர் மசூதியின் வெளிப்புற வளாகத்தில் இருந்த சீதா ரசோய் என்ற பெயர் ‘சாத்தி பூசை தலம்’ (Chaththi poojan sthal) என மாறி உள்ளது. மிக முக்கியமாக 1901-ல் நிறுவப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு , 1984க்குப் பின் ‘ ஜென்மஸ்தான் ‘ என்ற பெயரே மாற்றம் அடைந்திருந்ததைக் காட்டுகிறது‌. ராம் ஜென்ம பூமி விவகாரம் சூடு பிடித்த பிறகு சீதா ரசோய் என்றை அழைக்கப்படும் இடம் அந்தக் கல்வெட்டில் ‘ஜென்மஸ்தான் சீதா ரசோய் ‘ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை எல்லாம் இயல்பாக நடந்தவை அல்ல . ஒரு காரணத்தோடு தான் நடந்துள்ளன. அயோத்திக்கு வரும் பக்தர்களை குழப்பத்தில் ஆழ்த்தவே இவை நடந்துள்ளன. பாபர் மசூதிக்குகு அருகில் ஏற்கனவே ‘ராமன் பிறந்த இடத்தைக் குறிக்கும் ஒரு’ ஜென்மஸ்தான்’ கோவில் உள்ளது. இப்போது ராம் சபுத்ரா கோவிலும் (ராமன் பிறந்த பூமி) வந்துள்ளது. ராமன் இரண்டு இடத்தில் பிறந்தானா என மக்கள் கேள்வி எழுப்பினர். அவர்களிடம், ஒன்று ராமன் பிறந்த இடம் (ஜென்மஸ்தான்) என்றும் மற்றொன்று ராமன் பிறந்த பூமி (ஜென்ம பூமி) என்றும் கூறி குழப்பத்தில் ஆழ்த்தி விட்டனர்.

இந்த ஜென்ம பூமி என்ற சொல்லே 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் வந்தது. 1898-ல் இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் எட்வர்டின் பிறந்த நாள் விழாவில் ‘எட்வர்ட் தீர்த் ரக்ஷனி விலோச்சனி சபா’ என்ற ஒன்றை அயோத்தியில் உள்ள பாதஸ்தான் எனப்படும் தசரத மகால் கோவில் பூசாரி, மனோகர் பிரசாத் என்பவர் உருவாக்கினார்.

இந்த சபா பொதுமக்களிடமிருந்து ஆயிரம் ரூபாய் நன்கொடை திரட்டி அயோத்திவில் உள்ள கோவில்கள், குளங்கள், குட்டைகளை அடையாளம் கண்டு பெயர்ப்பலகை வைக்கும் பணியை துவக்கியது. இளம் ரோஜா நிற கல் பலகைகளில் (மைல்கற்கள் போன்ற) தாம் கண்டுபிடித்த கோவில்கள் குளங்கள் போன்வற்றிற்கு பெயரை பொறித்து வைத்தனர். இவ்வாறு 103 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘1. ஜென்ம பூமி’ என்ற பெயர்ப்பலகை ராம் சபுத்ரா கோவில் முன்பு பாபர் மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டது. இதனை முஸ்லீம்கள் எதிர்த்ததால் வழக்குத் தொடரப்பட்டது..

1903-ல் நீதிமன்றம், ராம் சபுத்ரா முன்புதான் பெயர் பலகை உள்ளது. மசூதியின் வாயில் அருகில் அல்ல என்றும், அந்தப் பலகையை அகற்றுபவர்களுக்கு ரூபாய் 3000 அபராதமும், மூன்று வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டது.

உண்மையில் பாபர் மசூதி வளாகத்திற்குள் இருந்த கோவிலின் பிரதான கோபுரத்தின் கீழ் எந்த வித சிலையும் இருக்கவில்லை என்பதையும், அங்கு எந்த பூசையும் நடைபெற்றதில்லை என்பதையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம். 1949, டிசம்பர் 22, 23 இரவு நிகழ்ச்சிக்குப் பிறகும் கூட சீதா ரசோய், ராம் சபுத்ராவிலும் கூட வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்நிலை 1992, டிசம்பர் 6-ல் கர சேவகர்கள் பாபர் மசூதியுடன் அனைத்து கோவில்களையும் இடித்துத் தள்ளும் வரை நீடித்தது.

நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்த ராம் சபுத்ராவின் நினைவும் மங்கிப் போனது. ஒரு சிலருக்கே அந்த டிசம்பர் 6-ல் இவை அனைத்தும் இடிக்கப்பட்டது நினைவில் உள்ளது. அதிலும் மிகக் குறைவானவர்களுக்கே , இஸ்லாமிய ஆட்சியாளர்களும் ஜமீன்தார்களும் கொடுத்த நிலத்திலும், பணத்திலும்தான் 300 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலத்தில்’ ஜென்மஸ்தான்’ உட்பட பல கோவில்கள் கட்டப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தன என்பது நினைவில் உள்ளது‌.

தற்போது பிரம்மாண்டமான. புதிய ராமர் கோவிலுக்குத் தயாராகிவரும் அயோத்தியை, அதன் அடையாள சின்னமாகத் திகழ்ந்த கங்கை- யமுனை பண்பாட்டிலிருந்து வேரோடு பிடுங்கி விட்டு இந்துத்துவா அரசியலின் அடிப்படையில் ராமனின் பெயரால் நாடு முழுவதையும் பிளவுபடுத்தும் பிரிவினைவாத மதவாத அரசியலின் புயல் மையமாக மாற்றி விட்டதையே இவையாவும் தெளிவாக காட்டுகின்றன.

(www.thewire.in இணையதளத்தில், மூத்த பத்திரிகையாளர் சுமன் குப்தா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்