Aran Sei

காஷ்மீர்: உரிமைகள் மறுக்கப்பட்டதன் நினைவு நாள் -ஆகஸ்ட் 5

ஸ்ரீநகரில் “ஊரடங்கு இல்லை” ஆனால் போக்குவரத்துக்கும் கூட்டங்களுக்கும் தடை

ஒரு சாலை சந்திப்பில், “வண்டியில் நோயாளி இருக்கிறார். நாங்கள் விரைவில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்” என்று ஒரு நடுத்தர வயது ஆண் அங்கிருந்த காவலரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.

“இன்று ஸ்ரீநகரில் ஊரடங்கு என்று உனக்குத் தெரியாதா?“ என்கிறார் கையில் தடியுடன் நிற்கும் அந்தக் காவலர். “வீட்டிற்குத் திரும்பிப் போ, எல்லாம் மூடிக்கிடக்கிறது” என்று கத்துகிறார் அவர்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எல்லாச் சாலைகளும் முட்கம்பி வேலியிட்டு மூடப்பட்டிருந்தன. ஒரு வாகனம் கூட அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களுடன் சில மருத்துவ ஊர்திகளும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களின் வேண்டுகோளைக் காவலர்கள் காது கொடுக்கவே இல்லை. ஏராளமானோர் தங்கள் வேலை இடத்திற்கு அல்லது மருத்துவமனைக்குச் செல்லும் அவசரத்தில் இருந்தனர்.

“அந்த நோயாளி இறந்தால் பரவாயில்லையா? அவரது நிலையை அவர்கள் பார்க்கவில்லையா?“ என்று வேதனைப்படுகிறார் அந்த மனிதர், அங்குக் கூடியிருந்த மற்றவர்கள் அது தொடர்பாகக் கூக்குரல் எழுப்புகிறார்கள். எனினும் காவலர்கள் அசையவில்லை. அவரது உயரதிகாரிகளும் வேறுசில காவலர்களும் சிறிது தூரத்திலிருந்து இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். “எங்களுக்கு உத்தரவு தரப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளது. இதைத் தாண்டி யாரையும் அனுமதிக்க முடியாது.“ என்றார் அந்தக் காவலர்.

ஊடகங்கள் அங்கே வந்து படம் பிடிக்க ஆரம்பித்த உடன்தான், ஒருபுறம் இருந்த தடுப்புகளை நீக்கி வாகனப் போக்குவரத்தை அனுமதித்தனர்.

ஊரடங்கு ‘விலக்கி’க் கொள்ளப்பட்டது. ஆனால் அதே கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

“எதிர்ப்புப் போராட்டங்களும் வன்முறையும்“ நடக்கும் என எதிர்பார்த்து ஆகஸ்ட் 3-ம் தேதி ஸ்ரீநகர் நகர நிர்வாகம் ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் ஊரடங்கு அறிவித்தது. ஆனால் 4-ம் தேதி இரவு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டதாகத் திடீரென அறிவித்தது. எனினும் 370 -வது சட்டப்பிரிவு நீர்த்துப்போகச் செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாளான 5-ம் தேதி, காலையில் பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையிலேதான் மக்கள் விழித்தெழுந்தனர்.

நகரின் பல பகுதிகளிலும் அதிகாலையிலிருந்தே காவல்துறை தங்கள் வாகனத்தில் ஒலி பெருக்கியை மாட்டிக்கொண்டு, “கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதாக” அலறிக்கொண்டே இருந்தன. நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என எச்சரிக்கை செய்தனர்.

காவல் துறை மற்றும் துணை இராணுவப் படை குவிப்பில் ஸ்ரீநகர் வெறிச்சோடி காட்சி அளித்தது. கடைகளும் பிற வணிக நிறுவனங்களும் மூடியே கிடந்தன.

“ஊர் பிசாசு நகரம்போல உள்ளது. நாங்கள் ஏற்கனவே இரட்டை ஊரடங்கை அனுபவித்துக்கொண்டுள்ளோம். ஆகஸ்ட் 4-லிருந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மூன்று ஊரடங்கைத் திணித்தது போல் உள்ளது.“ என்கிறார் மருந்துக்கடை நடத்திவரும் முசாமில்.

முழுப்பெயரையும் வெளியிட விரும்பாத அவர், போலீஸ் காரில் வர அனுமதிக்காததால், காலையில் தன் வீட்டிலிருந்து 5 கி.மீ நடந்தே வந்துள்ளார். “சில சமயம் கொரோனா முழு அடைப்பு என்கிறார்கள். சில நேரம் ஊரடங்கு என்கிறார்கள். ஆனால் உண்மையில் நாங்கள் ஒரு ஆண்டாகவே முற்றுகை இடப்பட்டுள்ளோம். இது மேலும் மேலும் மிருகத்தனமாகி வருகிறது” என்று கூறுகிறார் முசாமில்.

அவர் கடந்த ஆண்டு அதே நாளில் நடுவண் அரசு 370-வது பிரிவை நீக்கிக் காஷ்மீரை இரண்டு ஒன்றிய பகுதிகளாகப் பிரிப்பதற்குப் பல மணி நேரம் முன்பே காஷ்மீரில் தடைகள் விதிக்கப்பட்டுத் தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஊரடங்கு சிறிது விலக்கப்பட ஆரம்பித்தது போல் இருந்தபோது கொரோனா தொடர்பான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

ஏராளமானோர் சமூக வலைதளத்தில், சென்ற ஆண்டு இதே நாளில் நடுவண் அரசு தன்னிச்சையாக ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கியபோது இந்தப் பள்ளத்தாக்கின் எழுபது லட்சம் மக்களும் எவ்வாறு கொடூரமாக முற்றுகையின் கீழ் வைக்கப்பட்டனர் என்பதை நினைவுகூர்ந்தனர்.

“தொலைக்காட்சித் திரைகள் கருமையாயின. கைப்பேசிகள் ஊமையாயின. தொலைபேசிகள் இறந்து போயின. உறவினர்கள் பிரிக்கப்பட்டு விட்டனர். நண்பர்கள் பிரிக்கப்பட்டு விட்டனர். தெருக்கள் முட்கம்பிகளை அணிந்துகொண்டன. திகில் சூழ்ந்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று ஒரு குண்டு மனிதன் 1.30 கோடி மக்களின் தலைவிதியை அறிவிக்கிறான். நேற்று நடந்தது போல் உள்ளது. 365 நாட்கள் ஓடிவிட்டன.“ என எழுதினார் பத்திரிகையாளர் பீர்சாதா ஆசிக்.

பாஜக கொண்டாடுகிறது. மற்றவர்கள் சந்திக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கட்டுப்பாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாட பாஜக தலைவர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடினர்.

“சிறப்புத் தகுதியை நீக்கியதால், கடந்த ஓராண்டாக ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களைக்கொண்டாட வேண்டிய சமயம் இது“ எனக் கூறுகிறார் பாஜக செய்தி தொடர்பாளர் அல்தாப் தாக்கூர்.

“கற்களை எறிவது நின்று போனது. இப்போது யாரும் பிரிவினைவாதம் பேசுவதில்லை. வளர்ச்சியும் அமைதியுமே காஷ்மீரை செழிப்பாக்கும் என மக்கள் இறுதியாக உணர்ந்துள்ளனர்” என்றார் தாக்கூர்.

பாஜக தலைவர்கள் ஜவகர் நகர் அலுவலகத்தில் கூடிய அதே நேரம், எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீர் நிலைபற்றி விவாதிக்க பரூக் அப்துல்லா வீட்டில் கூடிப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சர் பருக் அப்துல்லா தனது டிவிட்டர் பதிவில் பாஜக-வின் கபட நாடகத்தை வெளிப்படுத்தி உள்ளார். “பாஜக தனது கபட நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. அவர்கள் கூடலாம் கொண்டாடலாம். ஆனால் நாங்களோ காஷ்மீர் நிலைபற்றிப் பேசக் கூட ஒன்று சேர முடியாது” என்று கூறியிருக்கிறார்.

“பாஜக ஆகஸ்ட் 5-ஐ நினைவுபடுத்த 15 நாட்கள் கொண்டாடுமாம். ஆனால் நாங்கள் என் தந்தை வீட்டில் கூடிப்பேசக் கூட அனுமதி கிடையாதாம். அரசியல் செயல்பாடுகளே இல்லையெனப் பாஜக தேசிய தலைவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதன் லட்சணம் இதுதான்” என்கிறார் உமர் அப்துல்லா.

உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளைக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார். ஓராண்டுக் கால சிறைவாசத்தால் அமைதியாக இருந்த பல தலைவர்கள், கடைசியில் காஷ்மீர் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர்.

“எங்கள் கட்சித் தலைவர் சஜ்ஜத் லோன் ஆகஸ்ட் 5 வரை எங்கும் நகரக் கூடாது எனச் சிறை வைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் எங்கள் பிரதிநிதியை அனுப்பினோம். ஆனால் கூட்டத்திற்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது.“ என்கிறார் மக்கள் மாநாட்டுக் கட்சி செய்தி தொடர்பாளர் அத்னான் அஷ்ரஃப்.

நடுவண் அரசின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 நடவடிக்கையைக் கண்டித்துப் பேசியதால் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

“ஆகஸ்ட் 5, காஷ்மீர் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்பு முத்திரை. அது அரசியல் அமைப்புச் சட்ட விரோதமாக வலுவந்தமாகத் திணிக்கப்பட்ட மக்கள் உரிமை மீறல். எடுக்கப்பட்ட முடிவுகள் ஜனநாயக விரோதமானவை. ஜம்மு காஷ்மீர் மக்களின் கௌரவத்தின் மீதும் உரிமைகள்மீதும் நடந்த கொடும் தாக்குதல்” என்கிறார் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த இம்ரான் நபி.

மக்கள் மாநாட்டுக் கட்சி இதனை “பின்னோக்கிய மைல்கல்” என்கிறது. “இந்த நாள் துக்க நாளாக நினைவுகூரப்படும். இந்த நாள் அதிகாரம் பறிக்கப்பட்ட நாள், நமது அடையாளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட நாள். இது ஒரு வெறுக்கத் தக்க நடவடிக்கை. இதன் மிகக் கெடுவாய்ப்பான அம்சம் என்னவென்றால், மூர்க்கத்தனத்தாலும், வெறுப்பை ஊட்டியும் நாடு முழுவதுமுள்ள மக்களை ஏமாற்றி காஷ்மீர் மக்கள்மீதான கொடூரமான தாக்குதலை அவர்கள் அங்கீகரிக்கும்படி செய்யப்பட்டது.“ என்கிறார் அஷ்ரஃப்.

– முடாசிர் அகமது

கட்டுரை & படங்கள் : நன்றி thewire.in
மொழியாக்கம் செய்யப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்