Aran Sei

வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் கட்டடக்கலை – அருணிமா

ட்டடவியல் சார்ந்து மாற்றுப்பார்வையுடன் இயங்கி வருகிறார் அருணிமா. அகர்மா அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான இவர் கட்டடவியலில் ‘சிறியதே அழகு’ என்கிற கருத்தை முன் வைக்கிறார். கவர்ச்சியான வடிவமைப்புடன் பிரம்மாண்டமாக எழுப்பப்படும் கட்டடங்களை விட, சிறிய அளவில் மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு உகந்தாற்போல் வடிவமைக்கப்படும் கட்டடங்களே அத்தியாவசியம் என்கிறார்.

கட்டடவியலோடு வரலாறு சார்ந்த புரிதலையும் ஏற்படுத்தும் விதமாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் செயல்பட்டுவருகிறார்.

“நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது மும்பையில் ஒரு வீட்டை வாங்கினோம். அதற்கு முன்பு அங்கு ‘ராக்கிபஷின்’ என்கிற கட்டடக்கலை நிபுணர் குடியிருந்தார். அவரது கட்டட மாதிரிகள் மற்றும் கருவிகள்அந்த வீட்டில் இருந்தன. அதையெல்லாம் பார்த்த போது எனக்கும் கட்டடவியல் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. அன்றிலிருந்து நான் கட்டடங்களின் வடிவமைப்பை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஹைதரபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கட்டடவியல் படித்தேன். நான் படித்த கல்லூரிக்கு அருகே ஓர் குடிசைப்பகுதி இருந்தது. குறைந்த செலவில் அவர்களின் தேவைகளுக்கேற்றபடியான வீட்டை வடிவமைத்துக் கொடுத்தேன்.

வீடு என்பது வாழ்க்கைத் தரத்தோடு தொடர்புடையது. பெருநகரங்களில் வாழும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைக்  கொண்டிருக்கும் மக்களுக்கும் குடிசைப்பகுதிமக்களுக்குமான வேறுபாட்டை உணர்ந்திருந்தேன். பின் தங்கிய வாழ்க்கைத்தரத்தினைக் கொண்டிருக்கும்மக்களுக்காகச் செய்யும் சிறிய அளவிலான பணிகள் அவர்களுக்கு பெரிய நிறைவைக் கொடுக்கும்என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.” என்கிறார்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓராண்டு காலம் பணி புரிந்திருக்கிறார். அதன் பிறகு அகமதாபாத்தில் முதுகலை கட்டடவியல் படித்திருக்கிறார். அங்கு தனக்குக் கிடைத்தஅனுபவம் தன்னுடைய பயணத்தில் மிக முக்கியமானது எனக்கூறுகிறார்…

“அகமதாபாதில் படிக்கும்போது லடாக்கில் இயங்கி வரும் old town initiative என்கிற நிறுவனத்துடன் இணைந்து, அங்குள்ள புராதன கட்டடங்களை அதன் தன்மை மாறாமல் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்பணிக்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் கட்டடக்கலை நிபுணர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடன் பணிபுரிந்தபோது புராதன கட்டடங்களின் மீதான அவர்களின் பார்வையைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இரண்டுமாதங்கள் பணிபுரிந்த பிறகு அகமதாபாத்துக்கு வந்தேன். பூர்வகுடிகள் வசிக்கும் பழமையான வீடுகளில் ஒன்றை புனரமைத்தேன். அப்போது அம்மக்களிடம் பேசிய போது புனரமைப்பை அவர்கள் எவ்வாரு அணுகுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பழங்காலத்தைய வீடுகள் பாரம்பரிய அடையாளத்தோடு இருப்பவை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதுபோற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய சின்னமாக இருக்கலாம். ஆனால் அங்கு வசிப்பவர்களின் தேவைகளுக்கு ஏற்புடையதாக அது இல்லை.

கட்டடடக்கலை நிபுணர்கள் பார்வை என்னவென்றால் 200 ஆண்டுகள் பழமையான வீடுகள் அதன் பாரம்பரியத் தன்மையோடு அப்படியே இருக்க வேண்டும். அதை விரிவுபடுத்தக் கூடாது என்பதுதான். ஆனால் கால மாற்றத்தில் மக்களின் தேவைகளும் பெருகுகின்றன. குளியலறை, கழிவறை போன்றவை அங்கு வசிக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. பாரம்பரிய கட்டடக்கலை அதன் வரலாற்றுத் தன்மையை மட்டும் அணுகுகிறது என்றால் நவீன கட்டடக்கலை வணிக நோக்கோடு அணுகுகிறது. அகமதாபாத்தில் திண்ணையை ‘ஓட்லா’ என்று கூறுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் கூடிப்பேசும் இடம் அது. நவீன கட்டடக்கலையில் அதற்கான இடம் இல்லை. எனவே இரண்டுக்கும் இடைப்பட்டு பாரம்பரியத் தன்மையைக் காக்கும் அதே நேரம் மக்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் புனரமைப்பே சிறந்தது எனத் தீர்மானித்தேன்” என்கிறார்.

கல்லூரிப் படிப்புமுடிந்ததும் ஹைதரபாத் சென்று அந்நகரை ஆய்வு செய்திருக்கிறார். அந்நகர மக்கள் அங்குள்ள புராதன சின்னங்களோடு ஒன்றியிருக்கவில்லை என்பதை உணர்ந்ததும் Heritage works எனும் செயல்பாட்டைத் தொடங்கியிருக்கிறார்…

ஹைதராபாத் நகரில் வசிக்கும் மக்களைக் கொண்டு ‘பாரம்பரிய நடை’யை ஒருங்கிணைத்து வருகிறேன். ஹைதராபாதின் புராதன சின்னங்களுக்கு அழைத்துச் சென்று அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து விளக்குவது,ஹைதராபாத்தின் உணவுகளை சுவைப்பதோடு அதன் வரலாற்று மற்றும் செய்முறை குறித்தும் விளக்குவது மேலும் சூஃபிகள் வாழ்ந்த பகுதிகளுக்குச் சென்று சூஃபி இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைநிகழ்த்துவது என்பன போன்றவை அதனுள் அடக்கம். ‘பாரம்பர்ய நடை’ மட்டுமில்லாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு புராதனக் கட்டடங்களை வரையும் பயிற்சியை அளிக்கிறேன்.” என்கிறார் அருணிமா.

கௌசிக் என்பவருடன்இணைந்து ‘அகர்மா அறக்கட்டளையை நிறுவியிருக்கும் இவர் அதன் மூலம் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள்பற்றி விளக்கினார்…

”புராதன அடையாளங்கள் குறித்த அறிதலை ஏற்படுத்தும் விதமாக ‘அமேசிங் ரேஸ்’ ஐ ஒருங்கிணைக்கிறோம். ஒரு பகுதியில் உள்ள பத்து புராதன கட்டடங்களை எடுத்துக் கொள்வோம். போட்டியாளர்கள் சிறு குறிப்பின் உதவியுடன் அக்கட்டடங்களைக் கண்டறிய வேண்டும். முதலில் அடையும் கட்டடத்தில் ஒரு குறிப்பைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்டடத்தை கண்டுபிடிக்க வேண்டும். பொதுமக்களின் உதவியுடன்தான் இதனைக் கண்டறிய முடியும். இதன் மூலம் போட்டியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் புராதன கட்டடம் சார்ந்து உரையாடல் நிகழும். 2016ம் ஆண்டு திருவல்லிக்கேணியில்தான் முதன் முதலாகநடத்தினோம்” என்கிறார்.

தனியார் கல்லூரி ஒன்றில் கட்டடவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். கட்டடக்கலை வரலாற்றை மாணவர்களுக்கு தீவிரமாக கொண்டு சேர்க்கும் விதமாக தியரியாக மட்டும் கற்றுக் கொடுக்காமல் ப்ராக்டிக்கலாகவும் கற்பித்திருக்கிறார். வரலாற்றைக் கற்றுக் கொள்ளும்படியானவிளையாட்டுகளை வடிவமைத்திருக்கிறார். வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்காக ‘கட்டடக்கலையும் அது குறித்த உரையாடலும்’ என்கிற தலைப்பில் கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருக்கிறார். 9 பேர் கொண்ட குழுவினர் ஏதாவதொரு தலைப்பில் படித்தல், எழுதுதல் மற்றும் கலந்துரையாடுதலை மேற்கொள்கின்றனர். சென்னை, ஊரூர் ஆல்காட் குப்பத்தில், குப்பைக் கிடங்காக இருந்த இடத்தை சென்னையில் உள்ள கட்டடக்கலைபடிக்கும் மாணவர்களைக் கொண்டு மறுசீரமைப்பு செய்திருக்கின்றனர். அந்த இடம் இன்றைக்கு அங்குள்ள குழந்தைகளுக்கான கற்றல் வெளியாக மாறியிருக்கிறது. நாடக விழா, கதை சொல்லுதல்,குழந்தைகளுக்கான திரைப்படம் திரையிடல், காகித மடிப்புப் பயிற்சி ஆகியவை அகர்மா அறக்கட்டளைசார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

“லாரி பேக்கரின்கட்டடக்கலையை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கேற்றபடியானகட்டடத்தை வடிவமைத்துக் கொடுக்கிறோம். அரசுப்பள்ளிகள் தற்சார்பாக இயங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக காகித மறுசுழற்சி செய்வதற்கான பயிற்சியை பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறோம். தாங்கள் பயன்படுத்திய காகிதத்தை மாணவர்களே மறுசுழற்சிசெய்து அடுத்த ஆண்டுக்கான காகிதத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக அது இருக்கும்.

அன்றாடம் மிச்சமாகும் உணவுப் பொருட்களின் மூலம் உரம் தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கிறோம். அந்த உரத்தைக் கொண்டு செடி வளர்க்கிறார்கள். நீர்நிலைகளை புனரமைக்கும் பணியை மேற்கொள்கிறோம். கர்நாடகாவில், மேல்கோட்டை எனும் மலைக்கிராமத்தில்உள்ள 108 குளங்களை ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் கற்றுக் கொண்டதை குழந்தைகளுக்குஎடுத்துச் செல்வதன் மூலம் அவர்களுக்கு சமூகத்தைப் பற்றிய தெளிவான பார்வையும், விழிப்புணர்வும்ஏற்படும் என்று நம்புகிறோம். கட்டடக்கலை மூலம் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த முடியும்.” என்கிறார் அருணிமா.

  • கி.ச.திலீபன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்