Aran Sei

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

ருந்ததி ராய் 1997 இல் புக்கர் பரிசை வென்ற “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” மற்றும் 2017 இல் மேன் புக்கர் பரிசுக்காக நீண்ட காலமாகப் பட்டியலிடப்பட்ட “தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்” ஆகியவற்றின் ஆசிரியர் ஆவார். “மை செடிஷியஸ் ஹார்ட்” (2018) மற்றும் “ஆசாதி” (2020) என அவரது சேகரிக்கப்பட்ட அரசியல் எழுத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர் புது டெல்லியில் வசிக்கிறார். இந்த நேர்காணலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள்.

இந்தியாவின் ஆளும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் இருவர் கடந்த மாதம் முகமது நபியைப் பற்றி கூறிய இழிவான கருத்துக்களை புது தில்லி சிஎன்என் வெளியிட்டது. அது பன்னாட்டு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள சிறுபான்மை இஸ்லாமியர்களிடையே எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. சில இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் தங்கள் இந்திய தூதர்களை வரவழைத்துப் பேசின. இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்துக்களை எதிரொலிக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் — அவர்களில் ஒருவர் பின்னர் தனது கருத்துக்களை திரும்பப் பெற்றார் — ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டனர்.

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து:மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் – பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்

ஆனால் இந்தியாவின் 20 கோடி இஸ்லாமியர்களுக்கு இந்தக் கருத்துக்கள் ஒரு தனி நிகழ்வு அல்ல.

“மாறாக, அவை பாஜகவின் பொது எதிரியின் பொறியியல் வெறுப்பின் உச்சக்கட்டமாக இருந்தன,” என்கிறார் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்.

“இந்தியாவின் சோகம் அது உலகின் மிக மோசமான இடம் என்பதல்ல — நாம் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான். நமது வீட்டை நாமே எரிக்கிறோம். இந்தியா ஒரு ஆபத்தான தோல்விக்கான சோதனைக் களமாக இருக்கிறது,” என்று அவர் சிஎன்என்னிடம் கூறினார்.

“எனது அன்பான நண்பர்கள் பலர் – கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் – சிறையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற பயங்கரமான சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் வனவாசிகள் இடம்பெயர்வு மற்றும் அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்கிறார்கள்.

“அவர்களில் இந்தியாவின் மிக முக்கியமான மனிதர்கள் உள்ளனர் என்று நான் கருதுகிறேன். பாசிச காலத்தில் சுதந்திரமான மனிதனாக வாழ்வதன் அர்த்தம் என்ன என்று ஆச்சரியப்பட வைக்கிறது. உலகம் உடைந்து கொண்டிருக்கும் போது நான் புகழ்பெற்ற எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பொருள் இருக்கிறது?” என ராய் கேட்கிறார்.

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

சிஎன்என் கருத்துக்கான இந்த மின்னஞ்சல் நேர்காணலில், ராய், இந்திய அரசியலுக்கும் அமெரிக்க தலைநகர் கலவரத்திற்கும் பொதுவான ஒற்றுமை இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பைத் தூண்டுவதாகவும், இந்தியாவின் உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதைப் பற்றி தான் பேசுவதாகவும் அவர் கூறுகிறார்.

சிஎன்என்: முகமது நபியைப் பற்றி பாஜக அதிகாரிகளின் கருத்துக்கள் அடங்கிய இந்த நிகழ்வு இன்றைய இந்திய அரசியல் குறித்து எதை வெளிப்படுத்துகிறது?

ராய்: இந்தியாவில் இந்து தேசியவாதத்தால் முன்வைக்கப்படும் தெளிவான மற்றும் தற்போதைய இருத்தலியல் அச்சுறுத்தல் இந்த அரசு வெளி உலகிற்கு முன்வைக்கும் முகத்தால் எவ்வளவு வெற்றிகரமாக மறைக்கப்பட்டுள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. புதுமையான ஆடைகள் அணிந்த மனிதர்கள், உரோம கோட்டுகளை அணிந்து, கொம்புகள் வைத்துக் கொண்டு அமெரிக்கத் தலைநகரைத் தாக்கியவர்களை நீங்கள் அறிவீர்களா? அவர்களுக்கு இணையானவர்களால் நாம் இங்கு ஆளப்படுகிறோம். வேறுபாடு என்னவென்றால், இவர்கள் அவர்களைப் போல ஒழுங்கற்ற பித்தர்களின் தொகுப்பு அல்ல. இவர்கள் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸில் உறுப்பினர்களாக உள்ளனர். அதன் நிறுவன சித்தாந்தவாதிகள் இட்லரை வெளிப்படையாகப் போற்றினர். அத்துடன் இந்திய இஸ்லாமியர்களை ஜெர்மனியின் யூதர்களுக்கு ஒப்பிட்டனர். நடப்பில் இந்தியாவின் உண்மையான அதிகாரம் ஆர்எஸ்எஸ்ஸிடம்தான் உள்ளது

சிஎன்என்: பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் என்ன தொடர்பு?

ராய்: உலகின் பணக்கார அரசியல் கட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆளும் கட்சியான பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் முகப்பு அலுவலகம் மட்டுமே. 1925 இல் நிறுவப்பட்ட, பாரம்பரியமாக ஒரு சில பிராமணர்களால் கட்டுப்படுத்தப்படும் ஆர்எஸ்எஸ், சிறு வயது முதலே அதன் உறுப்பினராக இருக்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெரும்பாலான ஒன்றிய அமைச்சர்கள் உட்பட கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

டெல்லி: வங்கதேச சுற்றுலாப் பயணிகளை ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் என்று குற்றம் சாட்டும் காணொளிகளை பகிர்ந்த பாஜக தலைவர்கள்

இது மிகப் பெரிய போராட்டக்காரர்களின் கூட்டம், பள்ளிகள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளைச் சொந்தமாக கொண்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல. நிலமைக்கேற்ப தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் இயல்புடையது. இரட்டை நாக்குக் கொண்டது. அதன் நிதி ஆதாரங்கள் நிழலானது. மற்றும் எந்த சட்டப் பின்புலத்தையும் அது விட்டு வைக்காது. இது பல துணை நிறுவனங்களின் மூலம் செயல்படுகிறது. ஆனால் அது நாட்டிற்குள் ஒரு நாடு.

பாகிஸ்தான், ஈரான் மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள பல நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக இருப்பதைப் போல, இஸ்ரேல் சட்டப்பூர்வமாக “யூத மக்களின் தேசமாக” இருப்பதைப் போல, இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் விரும்புகிறது.

உண்மையில், ஒருவிதமான எதிர்கால மற்றும் புராதனமான “அகண்ட் பாரதம்” என்று அழைப்பதை ஆர்எஸ்எஸ் நம்புகிறது. இந்த எதிர்கால பண்டைய இந்தியாவில் பாகிஸ்தானும், வங்காளதேசமும் அடங்கும், இது அவற்றையும் வெற்றிக் கொண்டு இந்து நாடாக அறிவிக்க வேண்டுமென விரும்புகிறது. இந்தியாவின் மனதைக் கவரும் மத, சமூக மற்றும் துணைத் தேசிய அடையாளங்களை, ஐரோப்பா முழுவதையும் விட வேறுபட்ட, ஒரு நலிந்த, சாதியக் கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு கடுமையான இந்து தேசம் என்ற படிநிலைக்குள் அடைப்பது என்பது கற்பனை செய்ய முடியாத வன்முறைச் செயலாகும். அரசியல் சட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியா என்ற எண்ணத்தையே ரத்து செய்வதாகும்.

இந்த நெருப்புக் குழியில் தள்ளப்படுபவர்களின் வரிசையில் முதலில் இருப்பது இஸ்லாமிய சமூகம். அவர்களுக்குப் பின்னால், மிருகத்தனமாகத் தாக்கப்படும் மிகச் சிறிய சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் கிறிஸ்தவர்கள் மீது 400க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிரியார்களும், கன்னித்துறவு குழுவினரும் தாக்கப்பட்டனர். அவர்களின் சபைகள் அச்சுறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளன.

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: கோயிலில் இஸ்லாமியர்கள் கடை போட்டால் இந்துக்கள் எவ்வாறு உணர்வார்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கேள்வி

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு தேசிய தேர்தல்களில், இந்தியாவின் 20 கோடி வலிமையான இஸ்லாமிய சமூகத்தின் வாக்குகள் இல்லாமலேயே தேசிய நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை வெல்ல முடியும் என்பதை பாஜக நிரூபித்துள்ளது. இது இஸ்லாமியர்களின் வாக்குரிமையின்மை மற்றும் அரசியல் தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தது, இது மிகவும் ஆபத்தானது.

ஒரு புதிய இஸ்லாமிய – விரோத குடியுரிமைச் சட்டமும் உள்ளது. இது ஒரு வகையான அகதிகள்-உற்பத்திக் கொள்கையாகும். இதில் ஒரு சிலரிடம் உள்ள கட்டாயமான “மரபு ஆவணங்களை” தயாரிக்க முடியாதவர்கள், குடியுரிமையை இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள். அசாம் மாநிலத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் ஏற்கனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை பறிக்கப்பட்டவர்களுக்கான பாரிய தடுப்பு முகாம்கள் நாடு முழுவதும் கட்டப்பட்டு வருகின்றன.

ஆனால் பாஜக ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால், இஸ்லாமியர்களை தனிமைப்படுத்துவது மட்டும் போதாது. அதற்கு சமமாக, ஆயிரக்கணக்கான சாதிகள் மற்றும் இனங்களைக் கொண்ட பல்வேறு இந்து சமூகத்தில் செயற்கைப் பெரும்பான்மையை உருவாக்குவதும் முக்கியமானது. இந்த இரண்டையும் இணைப்பதற்கு ஒரு பொது எதிரியின் மீதான வெறுப்பைக் கட்டமைக்க வேண்டும். அதற்கு பெருகிய முறையில் மதவெறியைத் தூண்டுவது அவசியம்.

சமீப ஆண்டுகளில் இந்து மத வெறியாளர்களின் இஸ்லாமியர்களின் படுகொலைகள் தவிர, ஏறக்குறைய 400 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் எண்ணற்ற செய்தித்தாள்கள் மூலம் மக்களின் வீடுகளில் வெறுப்பு மற்றும் இயற்கைக்கு மீறிய தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்களின் இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்புகளும், அவை எப்படி செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் காணொளிகளும் நிரம்பி வழிகின்றன.

இஸ்லாமியர் கடைகளில் மட்டுதான் இஸ்லாமியர்கள் பொருள் வாங்க வேண்டும் என்கிற பொய் பிரச்சாரம் – வகுப்புவாத செயல்திட்டத்தை முறியடிக்க ஜமியத் உலமா-ஐ-ஹிந் கோரிக்கை

இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாள் ஏந்திய இந்து ஆண்கள் ஊர்வலம் செல்வதையும், அவர்களின் ஆத்திரமூட்டும் ஆர்ப்பாட்டங்களையும் நாம் தொடர்ந்து பார்க்கிறோம். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் துணிந்த இஸ்லாமியர்களின் வீடுகளை நகராட்சி அதிகாரிகள் மனசாட்சியின்றி புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது போலவே, இந்த மே மாதம் தேசிய தொலைக்காட்சியில் பாஜக செய்தித் தொடர்பாளர் முகமது நபியைப் பற்றி ஆழமான அவமரியாதைக் கருத்துக்கள் பாஜக ஆதரவு தொகுதிகளைக் கட்டமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

“இந்தியாவின் மனதைக் கவரும் மத, சமூக, மற்றும் துணைத் தேசிய அடையாளங்களைத் தரைமட்டமாக்கி விட்டு. நலிந்த, சாதியக் கட்டுப்பாடுமிக்க இந்து தேசத்தின் கடுமையான படிநிலைக்குள் அடக்குவது என்பது கற்பனை செய்ய முடியாத வன்முறைச் செயலாகும்.” – அருந்ததி ராய்

போராட்டக்காரர்களில் சிலர் தலையை துண்டிக்கவும், தூக்கிலிடவும், பாஜக மிகவும் மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற விரும்பும் புனித சின்னங்களை அவமதிப்பதற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றவும் பொதுவெளியில் அழைப்பு விடுத்தனர். அதன் மூலம் தனது விமர்சகர்களை விரைவாகவும் இன்னும் கொடூர வழியிலும் அமைதி படுத்தவும் முடியும். இந்து வலதுசாரி தீவிரவாதிகள் அவர்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, இந்த தனி நபர்கள் முஸ்லிம்கள் பற்றி ஆழமாக இருந்த ஒவ்வொரு தப்பெண்ணத்தையும் உறுதிப்படுத்த மிகவும் கடினமாக உழைத்தனர்.

பன்னாட்டு சீற்றத்தைத் தணிக்க பாஜக அதன் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் பாஜக ஆட்கள் அவரை வெளிப்படையாக ஆதரித்தனர். இந்த துருவ முனைப்பு பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.

கர்நாடகா: திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கடைவைக்க தடை விதிக்கும் இந்துத்துவவாதிகளைக் கண்டித்த பாஜக எம்.எல்.ஏ

சிஎன்என்: பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

ராய்: செய்தித் தொடர்பாளர் அல்லது எதிர்ப்புகள் பற்றி மோடி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது அவருடைய ஒரு நிலையான தந்திரம். இதுபோன்ற சூழ்நிலைகளில், அவரைப் பின்பற்றுபவர்கள், அவரது அமைதியை ஆதரவாக நினைக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் பெருகிய முறையில் தன்னை ஒரு தேவ தூதனாக நிலைநிறுத்திக் கொண்டாலும், அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மேலும் அந்த அமைப்பு தனது சிறகுகளின் அடியில் காத்திருக்கும் மற்ற தலைவர்களை வளர்த்து வருகிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் இப்போதைக்கு அவர் போட்டியின்றி தலைமறைவாக உள்ளார்.

2001 அக்டோபரில் மோடி தனது அரசியலில் அறிமுகமானார். அவர் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார், தேர்ந்தெடுக்கப்படவில்லை. அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு. இஸ்லாமோஃபோபியாவால் உலகமே அதிர்ந்தது. ஆர்.எஸ்.எஸ்-க்கு இது சரியான அரசியல் சூழலாக அமைந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2002 இல், புனித பயணம் மேற்கொண்டிருந்த இந்துக்களை ஏற்றிச் சென்ற ரயில் வண்டி எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத்தின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு கொடூரமான படுகொலை நடந்தது. இது வாரக்கணக்கில் நீடித்தது. காவல்துறை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டனர், பெண்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். இதையடுத்து, கொலையாளிகள் தங்களது செயல்களை பெருமையாக பேசியது கேமராவில் சிக்கியது. மோடியால் தாங்கள் எப்படி ஈர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டோம் என்று பலர் பேசினர்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: பண்டிட்களை விட பன்மடங்கு பாதிக்கப்பட்டது இஸ்லாமியர்கள்தான் – காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் கருத்து

மோடி மன்னிப்பு கேட்காமல் இருந்தது மட்டுமல்ல “இந்து இதயங்களின் பேரரசன் (இந்து ஹிருதய் சாம்ராட்)” என்று அழைக்கப்பட்டார். 2002 படுகொலைக்குப் பிறகு, அவர் மாநிலத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். அதில் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றியும் பெற்றார். குஜராத்தின் முதல்வராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 2014-ல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவருக்கு பின்னடைவே ஏற்படவில்லை. இந்தியாவில் படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை நாம் தேர்தல் பிரச்சாரங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக பார்க்க ஆரம்பித்துள்ளோம். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, குஜராத் மாநிலப் பள்ளிப் பாடப்புத்தக வாரியத்தால் வெளியிடப்பட்ட பள்ளிப் பாடப்புத்தகத்தில் ஊக்கம் தரும் தலைவனாக ஹிட்லர் காட்டப்பட்டார்.

சிஎன்என்: பல ஆண்டுகளாக, மோடியின் புகழ் மற்றும் அவரது வகை அரசியல் குறையவில்லையே. அது ஏன்?

ராய்: பேஸ்புக் மற்றும் வாட்சப் நிரல் நெறி முறைகளின் ஆய்வுகள் கண்ணியத்தை விட வெறுப்பு அதிகம் ஈர்ப்புடையது என்று நினைப்பதுதான் இதற்கு காரணம். அவல நிலையில் வாழும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வேலையில்லாதவர்கள், நசுக்கப்பட்டு வறுமையில் வாடும் மக்கள், ஆகியோர் மேலும் நரகத்திற்குள் தள்ளிக் கொள்ள தங்களுக்குத் தாங்களே வாக்களித்துக் கொள்கிறார்கள். அவர்களின் குழிவான கண்கள் அவர்கள் வெறுக்கும் பொருள் மீதே பதிந்துள்ளன.

தொற்றுநோய்களின் போது – முதல் அலையின் திடீர் ஊரடங்கு கோடிக் கணக்கான தொழிலாளர்கள் சிக்கித் தவிக்க வழிவகுத்தது. அவர்களில் பலர் ஆயிரக்கணக்கான மைல்கள் தங்கள் கிராமங்களுக்கு நடக்க வேண்டியிருந்தது. இரண்டாவது அலையில் பல லட்சக்கணக்கான இறப்புகள் போன்ற மோடியின் கொடூரமான திறமையின்மையின் அதிர்ச்சியூட்டும் செயல்பாட்டிற்குப் பிறகு — இன்னும் சிலர் சோகமான பிரமிப்புடன் தலையை ஆட்டிக் கொண்டு, “மோடி இல்லாவிட்டால் இன்னும் மோசமாக இருந்திருக்கும்” என்று கூறுகிறார்கள்.

அவர்கள் தங்களைப் பற்றி, தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஊட்டப்பட்ட கதையை விழுங்கிவிட்டார்கள். இதற்கிடையில் மோடி இவற்றில் எதற்கும் பொறுப்பு ஏற்கவில்லை. அவர் பிரதமராக இருந்த இத்தனை ஆண்டுகளில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூட பேசியதில்லை. நமக்குக் கிடைப்பதெல்லாம் அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படக் காட்சிகள் மட்டுமே.

‘அரசு எந்திரத்தில் அதிகரிக்கும் இஸ்லாமியர்கள்’ – ஆர்எஸ்எஸின் ஆண்டறிக்கை உண்மையா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

சிஎன்என்: மோடி அரசு எந்தவொரு பன்னாட்டு எதிர்வினை அல்லது நடவடிக்கையாலும் பாதிக்கப்படாமல் தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலைக்கு காரணம் எது?

ராய்: இது எதிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் திறனுடையது என்று நான் நினைக்கவில்லை. மாறாக, உலகம் சுற்றும், அரசுத் தலைமைப் பதவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் நமது பிரதமர் பன்னாட்டுக் கருத்தைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டவர். அவர் சக இந்தியனைக் கட்டிப்பிடிப்பதை நாம் யாரும் பார்த்ததில்லை. அவரது வெளிநாட்டுப் பயணங்களின் கண்ணாடி கவனமாகக் கையாளப்படுகிறது. அவரைப் பின்பற்றும் கோடிக் கணக்கானவர்கள் அவரை “விஷ்வ-குரு”, அதாவது ஒட்டுமொத்த உலகத்தின் குரு என்று குறிப்பிடுகின்றனர்.

பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப், ஏஞ்சலா மெர்க்கல், இம்மானுவேல் மேக்ரான், போரிஸ் ஜான்சன் என அனைவரும் அவரால் ஈர்க்கப்படுகின்றனர். பன்னாட்டு நடவடிக்கை மற்றும் எதிர்வினை என்பது நடைமுறைவாதம் மற்றும் தேவையின் ஒரு விளையாட்டு மட்டுமே. இது வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல், மதம் மற்றும் இனம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. விழுமியங்களுக்கும் ஒழுக்கத்திற்கும் இங்கே இடமில்லை.

இந்தியா பிரான்ஸிடம் இருந்து போர் விமானங்களை வாங்குகிறது என்றால், உள்நாட்டில் நடக்கும் கொலைகளும் மற்றும் ஒரு சிறிய வெகுமக்கள் படுகொலைகளும், அதிகபட்சம், ஒரு மெல்லிய விரல் அசைவை மட்டுமே ஏற்படுத்தும் என்பதை அது அறிந்திருக்கிறது. ஒரு பெரிய சந்தை தார்மீக தணிக்கைக்கு எதிரான சிறந்த காப்பீடு ஆகும்.

தற்போது, உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பதால் வெளிநாட்டு உறவுகள் இந்தியாவுக்கு சிறிது தந்திரமானவை. எனவே, காஷ்மீரில் இந்தியாவின் குற்றங்கள் மற்றும் இந்து தேசியவாதத்தின் இந்த வன்முறை வடிவம் கொஞ்சம் ஆய்வுக்கு உட்பட்டது. ஆனால் இவை அனைத்தும் மிகப் பெரிய வணிக விளையாட்டில் பேரம் பேச பயன்படும் சில்லுகள்தான். இதை இவ்வளவு மிகவும் இழிந்ததாகக் காட்டுவதற்கு மன்னிக்கவும். ஆனால் நான் வேண்டுமென்றேதான் இப்படிக் கூறுகிறேன்.

‘இந்துப் பெண்களை இஸ்லாமியர்கள் பார்த்தால் வெட்டுவேன்’ – பாஜக எம்.எல்.ஏ., ராகவேந்திரா சிங்

சிஎன்என்: இதில் இந்தியாவின் பன்னாட்டு இஸ்லாமிய வர்த்தக நாடுகள் எவ்வாறு எதிர்வினை ஆற்ற வேண்டும்? (இது குறித்து முழு உலகமும் கூட?)

ராய்: இந்தியாவின் “இஸ்லாமிய வர்த்தக பங்காளிகள்” என்று நீங்கள் குறிப்பிடும் பெரும்பாலான நாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே ஜனநாயகம் அல்லது பன்முகத்தன்மையின் பாசாங்குகளை விட்டுவிட்டன. மோடியும், பாஜகவும் இந்தியாவை இழுக்க முயற்சிக்கும் இலக்கில் அவர்கள் ஏற்கனவே உள்ளனர். நாம் அடைய பயப்படும் இலக்கு, ஒரு மதம் சார்ந்த நாடு.

இந்தியாவின் சோகம், அது உலகின் மிக மோசமான இடம் என்பதல்ல — நாம் அதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதுதான். நாம் நமது சொந்த வீட்டிற்கு தீ வைத்துக் கொண்டிருக்கிறோம். மோசமான வீழ்ச்சிக்கு இந்தியா ஒரு பரிசோதனைக்கு கூடமாக உள்ளது. நமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கண்மூடித்தனமாக வெறுப்பு அரசியலில் இருப்பதே இந்தத் தோல்விக்குக் காரணம். அத்துடன் கடுமையான நுண்ணறிவு பற்றாக்குறை இந்தியாவை மேலும் முடமாக்கிவிட்டது. இது மிகவும் ஆபத்தானது. இதன் விளைவுகள் கற்பனை செய்ய முடியாததாக இருக்கும்.

உலகின் பிற பகுதி மக்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பொறுத்தவரை, மக்கள் கவனம் செலுத்தி, தகவலறிந்த கருத்தை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே இருக்கும் ஒரே நம்பிக்கை. இந்த மகத்தான “சந்தையில்” இருந்து அவர்களின் லாபம் சந்தை இல்லாமல் போனால் வறண்டு போகும் என்பதை உணருங்கள். பணக்காரர்கள், பெரிய மற்றும் சிறிய வணிகங்கள், வெளியேறத் தொடங்கியுள்ளனர். இது இந்தியப் பொருளாதாரம் மிகவும் சிக்கலில் உள்ளது என்பதற்கான துல்லியமான வானிலை முன்னறிவிப்பாகும்

சிஎன்என்: இந்தியா உண்மையிலேயே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுதானா?

ராய்: ஜனநாயகம் என்பது வழக்கமான தேர்தல்களை நடத்துவது மட்டும் அல்ல. மத சிறுபான்மையினராக உள்ள 20 கோடி மக்கள் உரிமைகள் இல்லாமல் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் போது, நீங்கள் அவர்களை அடித்துக்கொலை செய்யும்போது, அவர்களைக் கொல்லலாம், சிறையில் அடைக்கலாம், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர்களைப் புறக்கணிக்கலாம், முழுமையான சட்டப்பாதுகாப்புடன் அவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளலாம், குடியுரிமையைப் பறிக்கப்படும் என அச்சுறுத்தலாம் என்கிற சூழலில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் அரசியல் ஏணியில் விரைவாக முன்னேற முடியும் என்ற நிலை இருக்கும்போது இந்தியா ஜனநாயகமாக இருக்க முடியாது.

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பேச்சு – உச்ச நீதிமன்றம் தலையிட வழக்கறிஞர்கள் கடிதம்

சிஎன்என்: இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சேதம் மீட்டெடுக்கக் கூடியதா?

ராய்: இந்த மக்கள் மீது பல பத்தாண்டுகளாக முறையாக நடத்தப்பட்டு வரும் போதனையிலிருந்து அவர்களை மாற்றுவது கடினம். கட்டுப்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளினால் உருவாக வேண்டிய ஒவ்வொரு நிறுவனமும், மக்களுக்கு எதிரான இந்து தேசியவாதம் என்ற ஆயுதத்தால் மாற்று நோக்கம் கொண்ட, வெற்று நிறுவனங்களாக ஆக்கப்பட்டுவிட்டன. அரசியல் எதிர்ப்பைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, வங்காளம், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜகவை வெற்றிகரமாக எதிர்த்த அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் தேசிய அளவில் எதிர்ப்பு கிட்டத்தட்ட இல்லை.

தேர்தல் முறை முழுவதும் ஆட்டம் கண்டுவிட்டது. உண்மையான வாக்குகளின் பெரும்பான்மைக்கு அருகில் எதுவும் இல்லாமலும் கூட நீங்கள் பெரும்பான்மை இடங்களை வெல்ல முடியும். இந்தியாவில், முதன்முதலில், பல கட்சி ஜனநாயகம் உள்ளது. அதாவது, ஒரு தொகுதியில் 20% வாக்குகள் மட்டுமே பெற்றாலும், அது உங்கள் நெருங்கிய போட்டியாளரை விட அதிகமாக இருக்கும் வரை, நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஒரு பணக்காரக் கட்சி வாக்குகளைப் பிரிப்பதற்காக போலி வேட்பாளர்களை நிறுத்தலாம். ஆனால் இது கூடையில் உள்ள ஒட்டு மொத்த தந்திரங்களில் ஒரு தந்திரம் மட்டுமே.

எப்படியிருந்தாலும், கற்பிக்கப்பட்ட மக்களை நீங்கள் எவ்வாறு கவர்வீர்கள்? நீங்கள் அவர்களைவிட ஒரு சிறந்த, பெருமைமிக்க இந்து என்பதை நிரூபிப்பதன் மூலம் மட்டுமே அது முடியும். அந்த ஆட்டத்தில் பாஜகவை யாராலும் வெல்ல முடியாது. இப்போது, முக்கிய தேசிய நீரோட்டம் இதே பாதையில் செல்லும் வரை இதுவே ஊரில் விளையாடப்படும் ஒரே விளையாட்டாக இருக்கும்.

எனவே, இல்லை, சேதத்திலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை. நாம் உடைந்து மீண்டும் பிறப்போம் என்று நான் நம்புகிறேன். ஏற்றுக்கொள்ளும், ஏமாறும், கொடிய மக்கள் தங்களுக்கு என்ன செய்யப்படுகிறது என்பதை உணர்ந்தால் மட்டுமே மாற்றம் வரும். பின்னர் அது திடீரென்று தெருவிலிருந்து வரும். இந்த அமைப்பிலிருந்து அல்ல. அதுவரை… கடவுள் நமக்கு உதவி செய்வாராக

இஸ்லாமியர் பகுதிக்குள் இந்துத்துவா பேரணி; இருதரப்பும் கல்வீச்சு – இஸ்லாமியர்கள் மட்டும் கைது

சிஎன்என்: இந்தியாவில் பெரிய அளவில் நடக்கும் மாற்றங்களை எதிரொலிக்கும் வகையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன மாற்றங்களை அனுபவித்தீர்கள்?

ராய்: எனது அன்பான நண்பர்கள் பலர் – கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் – சிறையில் உள்ளனர். அவர்களில் இந்தியாவின் மிக முக்கியமான மனிதர்கள் உள்ளனர் என்று நான் கருதுகிறேன். பாசிச காலத்தில் சுதந்திரமான மனிதனாக வாழ்வதன் அர்த்தம் என்ன என்று ஆச்சரியப்பட வைக்கிறது. உலகம் உடைந்து கொண்டிருக்கும் போது நான் புகழ்பெற்ற எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பொருள் இருக்கிறது? உலகம் தோல்வியடைந்து, நீங்கள் விரும்பும் அனைத்தும் அழிக்கப்படும்போது ‘வெற்றி’ என்று கருதப்படுவதன் அர்த்தம் என்ன? தார்மீக வழி என்னவாக இருக்க முடியும்? செய்ய வேண்டிய தார்மீகப் பணி என்னவாக இருக்கும்?

பத்தாண்டுகளுக்கு முன்பே இதனை எதிர்பார்த்த கெடு வாய்ப்புள்ளவர்களில் நானும் ஒருவள். அதனால் நான் அப்படிச் சொன்னேன். அப்படி எழுதினேன். விருந்து நன்றாக நடக்கும் போது, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அபாய மணியை அடிப்பவர்களில் ஒருவளான என்னை அந்த நேரத்தில் ஒரு பைத்தியக்காரியாக்கியது. சில வழிகளில், அது என்னை அனைத்து விதமான வழிகளிலும் – உண்மையாகவும், கற்பனையாகவும் – வீடற்றவளாக (வீடிழந்தவளாக அல்ல) ஆக்கிவிட்டது. இது உண்மையில் ஒரு எழுத்தாளருக்கு மோசமானது அல்ல.

தேசபக்தி என்ற கருத்து இந்து தேசியம் என்ற கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே என்னைப் போன்றவர்கள் “தேச விரோதிகளின்” முதன்மைப் பட்டியலில் உள்ளனர். நிச்சயமாக நான் இந்து இல்லை என்பது அவர்களின் நோக்கத்திற்கு உதவுகிறது. என்னை வளர்த்த என் தாய் கிறிஸ்தவர். எனக்கு உண்மையாகவே தெரியாத, என் பிரிந்த அப்பா, ஒரு இந்து குடும்பத்திலிருந்து வந்தவர் மற்றும் அவரது தந்தை மற்றும் அவரது தந்தையின் தந்தையைப் போலவே கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். ஆனால் இது, நான் எழுதியவையும், பேசியவையும் போல் அவர்களை கோபப்படுத்தவில்லை. குறிப்பாக காஷ்மீர் பற்றி எடுத்துக் கொண்டால், பாலிவுட் நடிகரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர், காஷ்மீரில் என்னை ராணுவ ஜீப்பில் கட்டி வைத்து, இந்திய ராணுவம் மனிதக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவர்கள் உண்மையில் அதற்கு முயற்சி செய்யலாம்.

கெடுவாய்ப்பாக, பாஜகவின் பெரும் தீவிரமயமாக்கல், அதன் சிறும விளைவுகளில் முடிந்தது. இது அந்த கட்சியால் பாதிக்கப்பட்டவர்களை போலவே, அதன் கூட்டாளிகள், அதன் வாயிற்காவலர்கள், வரவேற்பாளர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரிடமும் இது எதிரொலிக்கிறது. ஒவ்வொருவரும் உள்நோக்கி, கசப்பானவர்களாக கோட்பாட்டாளர்களாக மாறி இருக்கும் போது, ஒற்றுமையின் ஒவ்வொரு வடிவமும் நொறுங்கும்போது, குப்பை மலைகள் வளர்ந்து ஆறுகள் சுருங்கும்போது, திடீர் பிரபல நடிகர்கள் தங்கள் குறுகிய சித்தாந்த குமிழிக்குள் உட்கார்ந்துக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒருவருக்கொருவர் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் போது, என் சொந்த தோல் இறுகுவதை உணர்கிறேன். என்னையும் கட்டுப்படுத்துவதை உணர்கிறேன். அதற்கு எதிராக நான் தினமும் போராடி வருகிறேன். இலக்கியமும் கவிதையும் மட்டுமே ஒருவருக்கு வீடு. அந்த வாக்கியம் உங்களை மூச்சிரைக்கச் செய்கிறது — அல்லது சத்தமாகச் சிரிக்க வைக்கிறது. இந்த பாடல் இதயத்தை நொறுங்கச் செய்யும் பாடல்.

மசூதியை இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் ஒப்படைக்க வேண்டும் – ஒன்றிய இணை அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா

சிஎன்என்: நீங்கள் எந்த மாதிரியான இந்தியாவைப் பார்க்க விரும்புகிறீர்கள் — நாங்கள் எப்படி அங்கு செல்வது?

ராய்: எனது கனவுகள் இந்தியாவின் வரைபடத்தின் வடிவத்தினாலோ அல்லது எந்த நாட்டின் வடிவத்தினாலோ வரையறுக்கப்பட்டவை அல்ல. அவ்வாறு ஒருபோதும் இருந்ததில்லை. அவை எப்போதும் மிகவும் சிறியதாகவோ அல்லது மிகவும் பெரியதாகவோ இருக்கும். நாம் தற்போது சென்று கொண்டிருக்கும் வேகத்தில், நீதியைப் பற்றிய பகிரப்பட்ட புரிதலிலிருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக, எவ்வளவு மெதுவாக இருந்தாலும், அதை நோக்கி நம் உலகம் நகர்வதைப் பார்ப்பதே காணத் தகுந்த கனவு.

சிஎன்என் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

மொழிபெயர்ப்பாளர் : நாராயணன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்