ஜம்மு காஷ்மீரில் மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளைக் (CAPF) குவித்திருப்பது அதன் கருவூலத்திற்கு பெருஞ்சுமையாக இருப்பதை நிரூபித்து வருகிறது. ஏனெனில் கடந்த 11 ஆண்டுகளாக அங்குப் படைகள் அனுப்பப்பட்டு வருவதால் காஷ்மீர் மாநிலம் மத்திய அரசுக்கு ரூ. 4,600 கோடிக்கு மேல் கடன் தர வேண்டியுள்ளது. 2008 ல் அமர்நாத் நிலப் போராட்டத்தால் மாநிலத்தில் மீண்டும் எழுந்த வீதிப் போராட்டங்களுக்கு ஓராண்டிற்குப் பின் 2009 லிருந்து மத்திய அரசு, மாநில அரசின் மீது படைச் செலவைச் சுமத்தி வருகிறது. பெருமளவிலான துணை ராணுவப் படைகள் மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய அளவில் இராணுவமும், உள்ளூர் காவல் படையினரும் பணியில் உள்ளனர்.
இந்த ஒன்றியப் பகுதியில் மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளை ஈடுபடுத்திய வகையில், 2020, ஜூலை ஒன்றாம் தேதிவரை ரூ. 4,648.48 கோடி ஜம்மு காஷ்மீர் மாநிலம் தர வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விண்ணப்பத்திற்குப் பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சகம், 2014 டிசம்பர் 31 ம் தேதிவரை ஜம்மு காஷ்மீர் அரசு 1,132.89 கோடி ரூபாய் நிலுவையில் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் பதிலில் தனது ஆயுத துணை ராணுவப் படைகளைக் நிறுத்தியதற்கான செலவாக 2015 ல் 480.36 கோடியும், 2016 ல் 511.70 கோடியும், 2017ல் 512.88 கோடியும், 2018 ல் 783.30 கோடியும், 2019 ல் 869.69 கோடியும், 2020 ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்திற்காக 357.66 கோடியும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திடமிருந்து பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தொகைகள் மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கும் விகிதப்படி மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பகுதிகளிலிருந்து வசூலிக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், சாதாரண பகுதியில் ஒரு படைப்பிரிவை நிறுத்த அமைச்சகம் ஆண்டுக்கு ரூ. 15.40 கோடியும், அதிக ஆபத்து மற்றும் மிதமான கடின பகுதிகளுக்கு ரூ.26.88 கோடியும், அதிக கடினமும், அதிக ஆபத்தும் உள்ள பகுதிகளுக்கு ரூ. 35.96 கோடியும் கட்டணமாக வசூலிக்கிறது. ஆனால் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி, இமாச்சலப் பிரதேசம், உத்தர்கண்ட் ஆகிய மாநிலங்களும், இடது சாரி தீவிரவாதம் பாதிப்புள்ள மாநிலங்களும் இந்தக் கட்டணத்தில் 10% மட்டும் செலுத்த வேண்டும்.
தொலைநோக்கு எண்ணம் கொண்ட துடிப்பான தலைவர் மோடி: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மோசமான நிதி நிலை, கிளர்ச்சி மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைபற்றி அந்த மாநிலத்தின் கோரிக்கைகளைக் கண்டு கொள்ள யாருமே இல்லை.
அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்தக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் வைத்த கோரிக்கைகள் கவனிக்கப்படவே இல்லை. 2013 ல் அப்போதைய முதல்வர் ஒமர் அப்துல்லா இந்தப் பிரச்சினயை அன்றைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டேவிடம் எடுத்துச் சென்றார். ஆனால் மத்திய அரசு தள்ளுபடி செய்ய இயலாது எனத் தெரிவித்துவிட்டது. 2015 லும் அப்போதைய முதலமைச்சர் முஃப்டி முகம்மது சயீத் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங்கிற்கு,” மாநிலத்தின் நிலையற்றத் தன்மையைக் கருத்தில் கொண்டு” இவற்றைத் தள்ளுபடி செய்யக் கோரி கடிதம் எழுதினார்.
ஆர்டிஐ க்கு உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ள பதிலில் மாநில அரசு இவற்றைத் தள்ளுபடி செய்ய மீண்டும் மீண்டும் வைத்த பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக ஏற்றுக் கொண்டுள்ளது. “…. ஆயுத துணை ராணுவப் படைகளை நிறுத்தியதற்கான செலவை ஏற்றுக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு பலமுறை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அடிக்கடி கோரியுள்ளது. அவை மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசு எடுத்துள்ள அறிவுபூர்வமான முடிவின்படி மொத்த செலவில் வெறும் 10% தான் ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 90% ற்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும்,” உள்துறை அமைச்சகம் தனது பதிலில் கூறியுள்ளது.
தனது 2019, செப்டம்பர் 6 ம் தேதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சகம் மேலும் தனது பதிலில், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம் உத்தர்கண்ட் மற்றும் இடது சாரி தீவிரவாத பாதிப்புள்ள மாநிலங்கள் படைச் செலவாக வெறும் 10% மட்டுமே செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளதாகப் பதிலளித்துள்ளது.
அதிக அளவிலான மத்தியப் படைகள் குவிப்பு
இராணுவத்தைச் குவித்திருப்பது போலவே துணைராணுவப் படைகளும் ஆயுத மோதல்களுக்குப் பிறகு அந்த முந்தைய மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்குச் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், கிளர்ச்சியை அடக்கும் பணியிலும் நிரந்தரமாக 60 லிருந்து 65 மத்திய ரிசர்வ் காவல்துறை படைப் பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் இது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு, அது கொடுத்துள்ள அறிக்கையில் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவும் மொத்தமுள்ள மத்திய ரிசர்வ் படையில் 26% பேர் ஜம்மு காஷ்மீரில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறி உள்ளது. 235 படைப்பிரிவுகளில் 61 படைப்பிரிவுகளை அங்கு நிறுத்தியுள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2008, 2010, 2016 மற்றும் 2019 ஆண்டுகளில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மேலும் கூடுதலாக ஆயிரக்கணக்கான மத்திய ஆயுதப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். 2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீரின் மாநிலத் தகுதியை மத்திய அரசு பறித்தபோது, துணை ராணுவப்படைகளான எல்லைப் பாதுகாப்புப் படை, சஷாத்ரா சீமா பால்(SSB), இந்தோ- திபெத்திய எல்லைப் படை மற்றும் மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை ஆகியவையும் காஷ்மீருக்குள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன.
விவசாய போரட்டத்தில் பேருந்தை தாக்கும் சீக்கியர்கள் – உண்மை சரிபார்ப்பு
நியாயமற்ற கட்டணங்கள்
1989 லிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் மிக அசாதாரண சூழ்நிலையை எதிர் கொண்டு வருவதால் இந்தக் கட்டணங்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் பாதுகாப்புப் படை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள்.
“பயங்கரவாதம் தேசியப் பிரச்சினை” என்பதால் இந்தக் கட்டணங்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் எஸ்.பி. வாயித் கூறுகிறார். ” இதுகுறித்த ஜம்மு காஷ்மீர் அரசின் கருத்தான பயங்கரவாதம் ஒரு தேசியப் பிரச்சினை. ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமே உரித்தான தனிப்பட்டப் பிரச்சினை அல்ல என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று கூறுகிறார். அனந்தநாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஹஸ்னைன் மசூடி, ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திடமிருந்து படைப் செலவைக் கேட்பது நியாயமற்றது என்று கூறுகிறார். ” மத்திய அரசால் தூண்டிவிடப்பட்ட ஒரு பிரச்சனைக்குத் தீர்வுகாண ஜம்மு காஷ்மீரை பணம் செலுத்துமாறு கோருவது முற்றிலும் நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது,” என்கிறார் அவர்.
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி திட்டங்களுக்காக அவ்வப்போது மத்திய அரசு ஒதுக்கும் நிதி பாதுகாப்புப் படைகளுக்குச் செலவு செய்யவே பயன்படுத்தப்படுகிறது.” அந்த நிதி அறிவிப்புகளில் பொதுவான காஷ்மீரிகளின் வளர்ச்சிக்கும், நலனுக்கும் எதுவும் இல்லை,” என்கிறார் அவர்.
www. thewire.in இணையதளத்தில் உமர் மக்பூல் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.