Aran Sei

அறிவின் “எஞ்சாயி எஞ்சாமி” – வேர்களை கண்டுபிடிப்பதற்கும் சமத்துவத்தைக் கொண்டாடுவதற்குமான ஒரு பயணம்

image credit : thewire.in

“குக்கூ குக்கூ”-வின் மனதை மயக்கும் இசை இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது, யூடியூபில் 11 கோடிக்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது. இதற்கு முன் எப்போதும், ஒரு தமிழ் நாட்டுப் புற இசை உலக அளவில் பரபரப்பானதில்லை, பொதுமக்களின் பாராட்டுக்களையும் விமர்சகர்களின் போற்றுதல்களையும் குவித்ததில்லை. அறிவு, தீ ஆகியோரால் பாடப்பட்ட, சந்தோஷ் நாராயணனால் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடல் ஏ ஆர் ரகுமானின் புத்தம் புதிய லேபல் மாஜ்ஜாவின் முதல் பாடல்.

‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் வரிகளில் உள்ள அரசியல் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள, நாம் பாடலை எழுதிய அறிவின் வாழ்வின் ஊடாகவும் கலையின் ஊடாகவும் பயணிக்க வேண்டும்.

இந்தப் பாடலின் கவிதை இழைகள் அறிவின் அனுபவங்களால், குறிப்பாக வள்ளியம்மாவின் பேரனாக இருக்கும் அவரது அனுபவங்களால், வேயப்பட்டுள்ளது. அறிவின் பாட்டி ஒரு நிலமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளராக வேலை செய்தவர். அவரது மூதாதையர்கள் இலங்கைக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய வைக்கப்பட்டவர்கள். பின்னர், அந்த புலம் பெயர்ந்தவர்களில் சிலர் கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அத்தகைய புலம் பெயர்ந்தவர்களில் ஒருவர் வள்ளியம்மா.

தனது தாய்வழி பாரம்பரியத்தைப் பற்றி விளக்கும் அறிவு, “எங்களது குடும்பம் 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு தேயிலைத் தோட்டங்களில் நிலமற்ற தொழிலாளர்களாக உழைக்கச் சென்றது. சிறீமாவோ – சாஸ்திரி ஒப்பந்ததைத் தொடர்ந்து, 60 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். எனது பாட்டி தனது சகோதரிகளிடம் விடை பெறக் கூட முடியவில்லை. இன்றும் கூட, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று கூட எங்களுக்குத் தெரியாது” என்கிறார்.

நல்வாய்ப்பின் பலனாகவோ அல்லது விதியின் திட்டத்தினாலோ இலங்கைக்குப் போவதற்கு வாய்ப்பை அளிக்கும் ஒரு தொழில்முறை பணி அறிவுக்குக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் போது அவர் தனது வேர்களை, அவரது பிரிக்கப்பட்ட தாய்வழி பாரம்பரியத்தைத் தேடிச் சென்றார். அது ஆன்ம மயமானதும் உணர்ச்சிமயமானதுமான கண்டுபிடிப்பாக இருந்தது. அந்தப் பயணத்தின் போது “எஞ்சாயி எஞ்சாமி”-க்கான படைப்பு கரு வடிவம் பெற்றது.

‘எஞ்சாயி எஞ்சாமி’ நமது பொது மூதாதையர்களின் வாழ்வுகளைக் கொண்டாடுகிறது. அடக்கி ஒடுக்கும் சமூக பொருளாதார நிறுவனங்களான மூலதனம், சாதி, இனம், பாலினம், தேசம், தனிச்சொத்து போன்றவை தோன்றுவதற்கு முந்தைய, மனித குலம் தனது சிறந்த ஒத்திசைவான வாழ்வை நடத்திய அந்த காலகட்டத்திற்கு இந்தப் பாடல் நம்மை இட்டுச் செல்கிறது. இன்றைய உலகத்தில் நாம் பார்க்கும் அடக்கி ஒடுக்கும் படிநிலை அடுக்குகளால் குழப்பப்படாத ஒரு உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது.

அறிவின் கலையை சற்று ஆய்வு செய்யும் போது, பாடல் வரிகளின் கருவில் சுயமரியாதையுடன் கூடிய மனித வாழ்வையும், சமத்துவத்தையும் கொண்ட ஒரு நீண்டகாலப் பார்வையை பார்க்கலாம். இந்த நோக்கத்துக்காக , 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவஞானியும், சமூக உரிமைகள் செயல்பாட்டாளரும், அரசியல் தலைவருமான முனைவர் பி ஆர் அம்பேத்கரின் வாழ்வும் பணியும் அறிவுக்கு வழிகாட்டுகிறது.

‘ஜெய் பீம் கீதம்’, ‘ஜெய் பீம் தலைமுறை’, ‘ஒன்று சேர்” போன்ற ராப் பாடல்களை அறிவு எழுதியுள்ளார். அவை சாதிய படிநிலை ஒழுங்குக்கு எதிரான அம்பேத்கரின் போராட்டங்களையும் வெற்றிகளையும் பாடுகின்றன. வணிகரீதியாக வெற்றி பெற்ற அவரது பாடல்களான விஜய் நடித்த மாஸ்டர் படத்துக்கான “வாத்தி ரெய்டு” போன்றவற்றில் கூட ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் விடுதலைக்கான அம்பேத்கரின் அறைகூவலான “கற்பி, ஒன்று சேர்” போன்ற வரிகளை அறிவு பொருத்தமாக பிணைத்துள்ளார்.

அதே போன்று, ‘எஞ்சாயி எஞ்சாமி’யிலும் 1927 மகத் சத்யாகிரகத்துக்கு அறிவு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஏரியில் இருந்து நீர் அருந்துவதற்கு மகர் சமுதாய மக்களின் உரிமைகளை பெறுவதற்கு அம்பேத்கர் நடத்திய இயக்கம் அது. “பறவைகளும் தேனீக்களும்“ ஏரியில் இருந்து தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படும் போது “தீண்டத்தகாதவர்கள்” என்று அழைக்கப்படுபவர்கள் ஏரியை பயன்படுத்த ஏன் மறுக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். “ஏரிகளும் குளங்களும் நாய்களுக்கும் நரிகளுக்கும் பூனைகளுக்கும் கூட சொந்தம்” என்ற அறிவின் பாடல் வரிகள் அம்பேத்கரின் சமத்துவ பார்வையை எதிரொலிக்கின்றன.

பண்டைய மனித நாகரீகத்தின் பரிணாமத்தின் பயணத்தில் நம்மை இட்டுச் செல்லும், ‘எஞ்சாயி எஞ்சாமி’, ஒரு சிறு கணத்துக்காவது, கால வெளியில் உலகத்தின் பெரிய திட்டத்தில் நமது பாத்திரத்தை மறுமதிப்பீடு செய்ய வைக்கிறது. நமது முன்னோர்களின் காலத்தில் மனித குலத்தின் பொது பாரம்பரியத்துடன் பொருத்தி, நமக்கு நாமே நாம் வரித்துக் கொண்ட அடையாளங்களையும் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் சுய முக்கியத்துவத்தையும் இந்தப் பாடல் கேள்விக்குள்ளாக்குகிறது.

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம்தானே
காடா மாறிச்சு
நம்ம நாடா மாறிச்சு
இந்த வீடா மாறிச்சு

பல்வேறு வகையான பாடும் உத்திகள், பாடலின் ஆழங்களை வெளிக் கொண்டு வருகின்றன. தீயின் குரல் அற்புதமாக இருக்கும் அதே நேரத்தில், அறிவின் குரல் பல்வேறு உணர்ச்சிகளின் உண்மையான ஆற்றல் பந்தாக உள்ளது. மேலும், அறிவு ஒரு பன்முக கலைஞர். அவர் ராப், நாட்டுப் பாடல், கானா பாடல், ஒப்பாரி என்று இன்னும் பல்வேறு வகை பாடல்களை எழுதி பாட முடியும்.

ஒப்பாரி அறிவின் மனதில் ஒரு சிறப்பிடத்தை பிடித்துள்ளது. அது இந்தியாவின் ஹிப்ஹாப் வடிவம் என்று அவர் கருதுகிறார்.

மறைந்த பாவலர் முகில் இயற்றிய வரிகள் மூலம் அறிவு, தேயிலை தோட்டங்களையும் வானுயர கட்டிடங்களையும் கட்டி எழுப்பிய, ஆனால் தமக்கென்று நிலம் இல்லாத, நிலமற்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளை அறிவு வெளிப்படுத்துகிறார். ஒரு தொழிலாளி கஷ்டப்பட்டு உழைக்கிறார் ஆனால் தனது உழைப்பின் பலன்களை அனுபவிக்க முடியவில்லை என்பதைக் காட்ட, பொதுவாக துக்க கலையாக கருதப்படும் ஒப்பாரி, இந்தப் பாடலில் எதிர்ப்பின் ஒலியாக பயன்படுத்தப்படுகிறது.

“கடமையைச் செய், பலன்களை எதிர்பாராதே” என்ற பகவத் கீதையில் கிருஷ்ணனின் பிரபலமான உத்தரவுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்காமல் நம்மால் இருக்க முடியவில்லை. அறிவு ஒப்பாரியை பயன்படுத்தியிருப்பதை இதற்கான எதிர்க் கதையாடலாக பார்க்கலாம். மேட்டுக் குடியினரால் பரப்பப்படும் ஆதிக்க கதையாடலுக்கு பதிலாக ஒதுக்கப்பட்ட மக்கள் திரளின் விருப்பங்களையும் அமைதியின்மையையும் அது வெளிப்படுத்துகிறது.

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே

பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, கவிதை எழுதவும், பலகுரல் நடத்தவும், பாடல்கள் எழுதவும், பாடல்கள் பாடவும், தனது கலையை வெளிப்படுத்துவதற்கான எல்லா வாய்ப்புகளையும் அறிவு பயன்படுத்திக் கொண்டார். அந்த காலத்திலேயே ஒரு புத்தம் புதிய கலைக்குழுவை உருவாக்கும் அளவுக்கு அவருக்கு செயல் துடிப்பு இருந்தது. அவரது நண்பர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அந்தக் குழு பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்தது. இந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவருக்கு பெரிய அளவில் பணம் எதுவும் கிடைத்து விடவில்லை. ஆனால், என்ன சம்பாதிக்க முடிந்ததோ அதை பாடல்களை ஸ்டூடியோக்களில் தொழில்முறையில் பதிவு செய்ய பயன்படுத்தினார் அறிவு. யூடியூபின் தொடக்க நாட்களில், அறிவு தனது பாடல்களை நண்பர்கள் மத்தியிலும் தெரிந்தவர்களின் சிறு வட்டத்துக்குளும் மின்னஞ்சல் மூலம் சுற்றுக்கு விட்டார்.

இயக்குநர் பா ரஞ்சித்தின் உரைகளை கேட்டது ஒரு கலைஞரான அறிவின் முன் உரிமைகள் மீது பெருமளவு தாக்கம் செலுத்தியது. 2012-ல் அட்டக்கத்தி திரைப்படம் வெளியான பிறகு, பா ரஞ்சித் பொது மேடைகளில் எழுப்பிய புரட்சிகரமான அறிவுசார் மற்றும் அரசியல் கேள்விகளை நோக்கி அறிவு மேலும் மேலும் ஈர்க்கப்பட்டார். இயக்குநர் ரஞ்சித் முன் வைத்த சமத்துவ சமூக-அரசியல் தொலைநோக்குப் பார்வை, கலையை ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு குரல் கொடுப்பதற்காக பயன்படுத்துவதற்கான வழிகாட்டும் ஒளியாக அறிவுக்கு இருந்தது.

“காஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவில் தேர்வு பெறுவதற்காக கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது அறிவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல் ஆக இருந்தது. சக இசைக் கலைஞர்களின் தோழமை கிடைத்தது மட்டுமின்றி, தனது பாடும் திறனையும் பாடும் திறமையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பெரும் மேடை அவருக்குக் கிடைத்தது. இந்த வாய்ப்பு தனது படைப்பு ஆற்றலை அதன் எல்லை வரை தள்ளுவதற்கு கட்டாயப்படுத்தியதாக அவர் கூறுகிறார். தனது வாசிப்பையும், நாம் வாழும் சமூகத்தின் கூட்டுத்துவ அனுபவத்தையும் பயன்படுத்தி பல்வேறு காஸ்ட்லெஸ் கலெக்டிவ் பாடல்களில் நாம் கேட்கும் வரிகளை அவர் எழுதினார் : ஜெய் பீம் கீதம் (பாடியவர் அறிவு), கோட்டா (பாடியவர் முத்து), பீஃப் பாடல் (பாடியவர் இசைவாணி).

image credit : thewire.in
image credit : thewire.in

‘ஜெய் பீம் கீதம்’ அம்பேத்கரின் ஒரு வாழ்க்கைக் கதை. அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளின் சுயமரியாதையை மீட்பதற்காக போராடினார். அது சமூக ஒடுக்குமுறையின் இருண்ட வரலாற்றையும் சாதிய படிநிலைகளை கேள்விக்குள்ளாக்குவதில் அம்பேத்கர் ஆற்றிய தீர்மானகரமான பாத்திரத்தையும் விவரிக்கிறது.

“கோட்டா பாடல்” இட ஒதுக்கீடுகள் ஏன் உள்ளன என்பதற்கான வரலாற்று காரணங்களையும் அறிவுசார் காரணங்களையும் பற்றிய தெளிவான, எதிர்த்து நிற்கும் ஒரு கதையாடலாக உள்ளது. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து தனது வலிமையை எடுத்துக் கொள்ளும் “கோட்டா பாடல்” கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டின் நியாயத்தையும் நீதியையும் எதிர்த்த ஆதிக்க சாதியினரின் வெறுப்பு பிரச்சாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. நூறு ஆண்டு கால திராவிட இயக்க பாரம்பரியம் கூட நிலைநாட்ட முடியாத ஒரு பாடமான, “இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களின் உரிமை, அரசின் தருமம் இல்லை” என்பதை அது அழுத்தமாகச் சொல்கிறது.

காஸ்ட்லெஸ் கலெக்டிவ் உடன் இணைந்து பணியாற்றி, அறிவு ஏராளமான சுயாதீன பாடல்களை வெளியிட்டுள்ளார். அவரது பாடல் ‘ஆன்டி இந்தியன்’ குடிமக்களின் நலன் பற்றி அரசின் பொறுப்பு குறித்த எதிர்க் கேள்விகளை எழுப்புவதன் மூலம் நாடு முழுவதும் பரவி வரும் குறுகலான தேசியவாதத்தை தனது ராப் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்துத்துவ சக்திகளால் வழிநடத்தப்பட்ட தேசியவாதத்தின் கவர்ச்சியான சொல்லாட்சிக் கலையின் ஓட்டாண்டித்தனத்தை அம்பலப்படுத்திய பாடல் வரிகளுக்காக அது மிகவும் பாராட்டப்பட்டது.

தேர்ந்தெடுத்த சீற்றங்களுக்கும், கணக்கிட்ட மவுனங்களுக்கும் பேர் போன சலுகை பெற்ற இழிவான தாராளவாதிகளை ‘கள்ளமவுனி’ குறைகூறுகிறது. அனைத்து வகையான அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடுவதற்குப் பதிலாக, அரசியல் சீற்றத்தை தங்கள் சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் அரசியல் கூலிப்படையினரையும் சாய்வு நாற்காலி தத்துவவாதிகளையும் கொண்ட பிரிவை இது தாக்குகிறது.

‘சண்டை செய்வோம்’ குடியுரிமை (திருத்தம்) சட்ட எதிர்ப்பு இயக்கத்தின் எதிர்ப்பு கீதமாக மாறியுள்ளது, அது அரசின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ் பிரபாகரன் இயக்கிய சோறு என்ற குறும்படத்திற்காக எழுதப்பட்ட அவரது சமீபத்திய பாடல்களில் ஒன்றான ‘எங்க நிலம் எங்கே’ விவசாயிகளின் வேதனையையும் விவசாயிகளின் உழைப்பை கையகப்படுத்துவதில் உள்ள அரசியலையும் விளக்குகிறது. இந்தப் பாடல் நாட்டின் நாட்டின் தலைநகரை தொடர்ந்து உலுக்கும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களின் கவலைகளையும் எடுத்துக்காட்டுகிறது. சார்பட்டா பரம்பரை, கடைசி விவசாயி, ஜகமே தந்திரம், டாக்டர் போன்ற திரைப்படங்களுக்காக மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் போது கூட, அறிவு தனது சுயாதீன இசை முயற்சிகள் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மையை உறைக்கும் படி தொடர்ந்து சொல்கிறார்.

அறிவின் பாடல், அதன் மையத்தில் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட வாழ்வுகளை தொட்டுச் செல்கிறது. சில நேரங்களில் அது அவற்றை கொண்டாடவும் ஆறுதலளிக்கவும் செய்கிறது; மற்ற நேரங்களில் அது அநீதிக்கு எதிரான அவர்களது குரலாக முழங்குகிறது.

‘எஞ்சாயி எஞ்சாமி’க்கு தூண்டுதலாக இருந்தது என்ன என்று கேட்ட போது, அது தன்னுடைய தனிப்பட்ட மேதைமையின் விளைவு மட்டுமில்லை என்று அறிவு உறுதியாகச் சொல்கிறார். தனக்கு முன் வந்த மூதாதையரின் நீட்சியாக தன்னைப் பார்க்கும் ஒரு கலை முயற்சி அது. ‘எஞ்சாயி எஞ்சாமி’யின் உண்மையான வேர்களை ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் வாழ்ந்த பதிவு செய்யப்படாத எண்ணற்ற கடந்த காலங்களில் காணலாம். நமது கூட்டுத்துவ மனிதத்தன்மையின் அழகையும் அநீதிகளையும் என இரண்டையும் கொண்டாட மேலும் பல அறிவுகள் நமக்குத் தேவைப்படுகின்றனர்.

தி வயர் தளத்தில் வெளியான கார்த்திக் ராஜா கருப்புசாமி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்