Aran Sei

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

மிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளை மேற்பார்வை செய்து நிர்வகிக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மத்திய அரசு வழங்கும் ‘சீர்மிகு கல்வி நிறுவனம் (IoE)’ என்கிற உயர் சிறப்பு அந்தஸ்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் பெறுவது அவசியம்.

உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில், பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக நிதி தேவைப்படும்; இந்த நிதியில் 50 சதவீதம் மாநில அரசால் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதனை வழங்குவதில் தமிழக அரசிற்கு நிதிச் சிக்கல் இருப்பதாகவும், மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படக்கூடும் என்கிற சந்தேகத்தாலும் தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இந்த ஒப்புதல் வழங்காமல் இருந்து வந்தது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, ஜுன் மாதத்தில் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தில், “5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடிக்கு மேல் (ஆண்டிற்கு ரூ.314 கோடி) கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, எம்.ஐ.டி., எஸ்.ஏ.பி., ஆகிய 4 கல்லூரிகள் மட்டும் இணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தால் திரட்ட முடியும் என்றும், மாநில அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்க முடியும் என்றும், எனவே ‘சீர்மிகு கல்வி நிறுவனம்’ என்கிற அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இது குறித்த செய்தி சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தவே, செய்தியாளர்களைச் சந்தித்த சூரப்பா, “தான் தனிப்பட்ட முறையில் மத்திய அரசிற்கு எந்த கடிதமும் எழுதவில்லை என்றும், தமிழக அரசுக்கு சமர்ப்பித்த விவரங்களைத்தான் மத்திய அரசிற்கு 4 மாதங்களுக்கு முன்பு அனுப்பியதாகவும்” விளக்கமளித்தார். இதற்கிடையில் தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் இரண்டாக பிரிப்பதாக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக சென்னையிலுள்ள 4 கல்லூரி வளாகங்களை மட்டும் தனியாக பிரித்து ‘அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்’ என்றும், மற்ற உறுப்பு மற்றும் இணைக் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் நிர்வாக மற்றும் இணைப்பு வசதிகளுக்காக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2018-ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவனம் என்கிற அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. 2 ஆண்டுகள் கடந்த பின்னரும், இவ்விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படாமல், பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவந்த நிலையில், இன்று (அக். 16) செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘சீர்மிகு கல்வி நிறுவனம்’ என்கிற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கினால், மாநில அரசால் கடைப்பிடிக்கப்படும் 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என்பதாலும், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டிய சூழலும், மாணவர்களுக்கு கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்க நேரிடும் என்பதாலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இச்சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக” திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், ”நிதி திரட்டல் சம்மந்தமாக துணைவேந்தர் சூரப்பாவினுடைய கருத்துக்கள் குறுகிய எண்ணம் கொண்டவையாக உள்ளது, இது தொடர்பாக அவரிடம் முறையான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தமிழக அரசின் இம்முடிவிற்கு மத்திய அரசு மற்றும் துணைவேந்தரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது வருங்காலங்களில் தெரியவரும். இந்நிலையில் மத்திய அரசு வழங்கவிருந்த ‘சீர்மிகு கல்வி நிறுவனம்’ என்கிற அந்தஸ்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு குரல்கள் எழுகின்றன என்பது குறித்து பார்ப்போம்.

சீர்மிகு கல்வி நிறுவனம் என்கின்ற தகுதியைப் பெறும் கல்வி நிறுவனங்கள், அதனுடைய பாடத்திட்டம், நிர்வாகம், சுயாட்சி, மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண நிர்ணயம் என்று பலவற்றிலும் முழுமையான தன்னாட்சியும் சுதந்திரமும் அளிக்கப்படும். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையிலான குழு, இதற்கு தகுதியான கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்தது. அதன்படி முதல் கட்டமாக 3 அரசு கல்வி நிறுவனங்களும், இதுவரை கட்டிடம் கூட கட்டி முடிக்கப்படாத ‘ஜியோ தொழில்நுட்ப நிறுவனம்’ உட்பட 3 தனியார் கல்லூரிகளும் இப்பட்டியலில் இடம்பெற்றன.

பிறகு இரண்டாம் கட்ட அறிவிப்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 7 அரசு கல்வி நிறுவனங்களும் 7 தனியார் கல்வி நிறுவனங்களும், ஆகமொத்தம் 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவனம் என்கிற அந்தஸ்து வழங்கப்படுவதால், என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை, உயர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக 2019-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த செய்திக் குறிப்பில் இருந்தும், 2017-ம் ஆண்டு இதுதொடர்பாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட தகவல்களில் இருந்தும் விரிவாக பார்க்கலாம்.

1. மாணவர் சேர்க்கை – நுழைவுத்தேர்வுக்கான வாய்ப்பும் முயற்சியும்:

இச்சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் உள்ளுர் மாணவர் சேர்க்கை என்பது, “வெளிப்படையான தகுதி அடிப்படையிலான முறையில் நடைபெறும் என்றும், அதனை அச்சீர்மிகு கல்வி நிறுவனமே வடிவமைத்துக் கொள்ளும்  (Domestic students shall have to be selected through a Transparent Merit based system, which can be designed by the Institution of Eminence Deemed to be University itself)” என்கிறது.

அப்படியென்றால் மாணவர் சேர்க்கை ப்ளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்குமா அல்லது தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா என்கிற தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் நுழைவுத்தேர்வு குறித்தான ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் தனித்தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது, இந்த ஐயத்திற்கு இன்னும் வலுசேர்க்கிறது.

2. 69% மாநில இடஒதுக்கீடு பறிபோகும் அபாயம்:

அடுத்ததாக, “சீர்மிகு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனம் நாடாளுமன்றத்தின் சட்டங்களுக்கு உட்பட்டே இருக்கவேண்டும் (The Public Institutions of Eminence shall implement the Reservation policy in Admissions and Recruitment in accordance with any act of Parliament for the time being in force)” என்கிறது மத்திய அரசின் அறிக்கை.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில், 69% இடஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுதி செய்யவேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டது. பல மாத இழுபறிக்கு பின்னர், மத்திய அரசு 69% இடஒதுக்கீடு தொடரலாம் என்று வாய்மொழியாக உறுதியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இன்னும் மேற்குறிப்பிட்ட அரசிதழ் அறிக்கை திருத்தப்படவில்லை.

அதுமட்டுமின்றி கல்வி ரீதியாக மாநில அரசின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் உரிமை, சீர்மிகு கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மாணவர் சேர்க்கையிலும் ஆசிரியர் நியமனத்திலும் இப்படி தன்னிச்சையாக செயல்பட கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் மூலக் கொள்கையான போராடிப் பெற்ற 69% இடஒதுக்கீடு பின்நாட்களில் பறிபோகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனத்தில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குரிய ஒதுக்கீட்டு இடங்களில் நியமிக்கப்படாமல் சொற்பமான அளவில் நியமிக்கப்பட்டு வஞ்சிக்கப்படுவதையும், மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பு மாணவர் சேர்க்கை இடங்களில் 50% ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவதையும் பார்த்து வருகிறோம்.

3. நிதி உருவாக்கம் – கல்விக் கட்டண உயர்வும், மாணவர் தலையில் விழும் அபாயமும்:

சீர்மிகு கல்வி நிறுவனத்திற்கு ஆராய்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கு, 5 ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கப்படும். இதில் 50 சதவீத நிதியை மாநில அரசு வழங்கவேண்டும் என்கிறது அறிவிக்கை. இதற்கிடையில்தான் பல்கலைக்கழகத்தாலேயே இந்நிதியைத் திரட்ட இயலும் என்று மத்திய அரசிற்கு கடிதம் எழுதுகிறார் துணைவேந்தர் சூரப்பா. இங்கேதான் மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் எழுகிறது. ஏனெனில் சீர்மிகு கல்வி நிறுவனம் எவ்வளவு வேண்டுமானாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலித்துக் கொள்ளலாம். அதற்கென்று நிதி சுயாட்சியும் முழு சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் படித்து பட்டம் பெற்ற பொறியாளர் ஒருவர் கூறுகையில்,

“உயர்தனி சிறப்பு அந்தஸ்து (IoE) வழங்கப்பட்டால், பல்கலைக்கழகமே மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. நான் 2015 – 2019-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக முதன்மை கல்லூரி வளாகமான கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன். முதல் தலைமுறை பட்டதாரி என்பதால் ஒரு செமஸ்டர் கல்வி கட்டணமாக 4000-5000 ரூபாய் தான் வசூலிக்கப்பட்டது.

பிற மாணவர்களுக்கும் 8000-9000 ரூபாய்க்குள் தான் கட்டணம் இருக்கும். முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கட்டண சலுகை அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் அமல்படுத்தப்பட்டது இன்றுவரை அது தொடர்ந்து வருகிறது. இது தவிர விடுதி மற்றும் மெஸ் கட்டணமாக ஒரு செமெஸ்டருக்கு 25,000 ரூபாய் வசூலிக்கப்படும். புத்தகம் மற்றும் இதர செலவுகள் என எப்படி பார்த்தாலும் 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.4-5 லட்சத்திற்குள்தான் வரும். ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அது 10,000 முதல் 25,000 வரை கிடைக்கும். நான் உட்பட பல மாணவர்கள் இந்தக் குறைந்த கட்டணத்தையும்கூட வங்கிக் கடன் மூலம் தான் செலுத்தினோம்.

கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரி மற்றும் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். எனினும் இதர கல்லூரிகளை ஒப்பிட்டால் இது மிகவும் குறைந்த தொகைதான். மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி-யில் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்கும் தொகை மிக மிக சொற்பமே.

முதலாமாண்டு கல்லூரிக்கு வரும் ஏழை மாணவன் இறுதி ஆண்டு ஒரு நல்ல வேலையுடன் அல்லது அடுத்து என்ன உயர்கல்வி பயில்வது என்கிற அடிப்படை புரிதலுடன்தான் கல்லூரியை விட்டு வெளியே செல்வான். இதுதான் அண்ணா பல்கலைக்கழத்தில் நான் பெற்ற அனுபவம்.

ஆனால் இந்த உயர் சிறப்பு அந்தஸ்து என்ற மாயப் பட்டம் வழங்கப்பட்டால், கல்விக்கட்டண நிர்ணயம் தனித்து விடப்படும் அல்லது பல்கலைகழகம் தன்னாட்சியாக முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். சமீபத்தில் துணை வேந்தர் மாநில அரசு அளிக்க வேண்டிய நிதியை நாங்களே வசூலித்துக் கொள்கிறோம் என்கிறார். ஆணடுக்கு 300-க்கும் அதிகமான கோடிகளை யாரிடம் வசூலிப்பார்? மாணவர் உதவித்தொகை தொடருமா? முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டண சலுகை என்னவாகும்? இடஒதுக்கீடு என்னவாகும்? ஏழைக்கு எட்டுமா தரமான பொறியியல் படிப்பு?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடினால் இவர்களின் நோக்கம் புரியும். உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம், கல்விக் கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டு இந்த நிதித் திரட்டல் முழுக்க முழுக்க மாணவர்களின் தலையில்தான் வந்து விழும்; இதனை வெளிப்படையாக துணைவேந்தரால் சொல்லமுடியாது” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் மற்றும் விடுதி கட்டணமும் பல்வேறு ஐ.ஐ.டி.களின் கல்விக் கட்டண விவரங்களும்

மேலும் இக்கல்வி நிறுவனங்களுக்கான வருவாயை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் ஈட்டிக்கொள்ளலாம், எந்த அளவில் வேண்டுமானாலும் வசூலித்துக்கொள்ளலாம் என்று பொத்தாம் பொதுவாக, நிதி தன்னாட்சிக்கான முழு சுதந்திர உரிமை வழங்கப்படுவதால், நிதி வழங்குபவர்கள் அதை தொண்டு நோக்குடன் வழங்குவார்களா? அல்லது கல்வி நிறுவனம் அவர்களுக்கு அதை எந்த முறையில் திருப்பி அளிக்கும் என்பது பற்றிய தெளிவு இல்லாததால், ஊழல் பெருகாது என்பதற்கும் எவ்வித உத்திரவாதமும் இல்லை.

4. வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனம்:

சீர்மிகு கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு மாணவர்களை 30% அளவிற்கு கூடுதலாக சேர்த்துக்கொள்ளவும், வெளிநாட்டு ஆசிரியர்களை 25% அளவிற்கு நியமித்துக்கொள்ளவும், இது வழிசெய்கிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் கட்டுப்பாடின்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நிர்ணயித்து வசூலித்துக்கொள்ள முழுசுதந்திரம் வழங்கப்படுகிறது (Freedom to fix and charge Fees from Foreign Students without restriction).

ஆகவே, குறிப்பிட்ட பொறியியல் பிரிவில் 100 இடங்கள் இருக்குமேயானால், அதில் 30 இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு போய்விடும்; மீதமிருக்கும் 70 இடங்களுக்குதான் தமிழ்நாட்டு மாணவர்கள் போட்டி போடுவார்கள், அதிலும் அகில இந்திய ஒதுக்கீடு என்று அமல்படுத்தினால் மிகவும் சொற்பமான இடங்களே நம் மாணவர்களுக்கு கிடைக்கும். அதில் 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது மிகவும் சந்தேகமே.

இதன் மூலம் சொந்த மாநிலத்து மாணவர்களின் கல்வி உரிமையும் உள்ளூர் ஆசிரியர்களின் வேலைவாய்ப்பும் என்னவாகும், என்பதற்கு மத்திய அரசின் அறிவிப்பில் எவ்வித பதிலும் இல்லை. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் (NRI Quota) பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக பரவலாக கூறப்பட்டுவரும் நிலையில், இதுவும் முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவே அமையும்.

உயர்கல்வி தகுதியும் நிபுணத்துவமும் இல்லாது, தொழிற்துறை பணியாளர்களை ஆசிரியர்களாக பணியமர்த்துவதற்கான சுதந்திரமும் இக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது (Freedom to hire personnel from industry, etc, as faculty who are experts in their areas but may not have the requisite higher academic qualifications). இதன்மூலம் அதிக நிதியுதவி அளிக்கும் தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்களைச் சார்ந்தவர்களையும், திறமையற்றவர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது..

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட சில பொறியியல் பிரிவுகள் தமிழ்வழியில் படிக்க மாநில அரசு வழி செய்திருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் வந்து படிக்கும் சூழல் ஏற்படும்போது, உள்ளூர் மாணவர்களின் நலன் கருதியும் அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்ட இவ்வகை சலுகை வசதிகள் நீடிக்குமா என்பதற்கும் பதிலில்லை.

இந்திய அளவில் 26% மட்டுமே இருக்கும் உயர்கல்வி சேர்வோர் விகிதத்தை (GER) உயர்த்தும் விதமாக, உள்நாட்டு மாணவர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்குவதாகக் கூறி, NRI கோட்டா மூலமாகவும் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மூலமாகவும், இந்திய உயர்கல்வியை உலகமயமாக்கலுக்கும் தனியார் முதலாளித்துவ மயமாக்கலுக்கும் திறந்துவிடுவதற்கான ஏற்பாடாகவே இவை உள்ளன.

5. யு.ஜி.சி.யின் எந்த விதிகளும் இதற்கு செல்லாது:

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) எந்த கட்டாய பாடத்திட்ட அமைப்பு முறைக்குள்ளும் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் வராது. அவர்களுக்கென்றே தனித்த பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும், யு.ஜி.சி.யின் எவ்வித விதிகளுக்கும் ஆய்வுகளுக்கும் கட்டுப்படாத நிறுவனமாக செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது (Flexibility in fixing of curriculum and syllabus, with no UGC mandated curriculum structure. UGC Inspection shall not apply to Institutions of Eminence)”.

ஒருபுறம் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதே சீர்மிகு கல்வி நிறுவனங்களுக்கான இலக்கு என்று சொல்லப்பட்டாலும், மேற்பார்வை செய்யவும் பாடத்திட்டங்களை செழுமைப்படுத்தவும் எந்த உயர் அமைப்பும் இல்லாத காரணத்தால், தரம் குறைந்த கல்வி நிறுவனங்களாகவும் உள்ளூர் மாணவர்களின் நலனிற்கு எதிராகவும், இவை மாறக்கூடிய அபாயமும் இருக்கவே செய்கிறது.

இந்திய பல்கலைக்கழகங்களில் அமெரிக்காவிற்கான H1B விசா பெறும் மாணவர்களில் அண்ணா பல்கலைக்கழக இளநிலை மாணவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது;

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்து +2 மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்திய பிறகுதான், பல ஏழை அடித்தட்டு கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்து முதல்தலைமுறை பட்டதாரிகள் உருவாகினர். உயர்கல்விக்கான சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்து 2035-யில் இந்திய அளவில் எட்டவிருக்கும் 50 சதவிகித இலக்கை தற்போதே எட்டமுடிந்திருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் அண்ணா பல்கலைக்கழகமும் அதன்கீழ் இயங்கும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளாலும், இன்று தமிழகத்தில் வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு பொறியாளர் இருக்கும் நிலையை நாம் அடைந்திருக்கிறோம். 1000 பேரை 10 அடி முன்னேற்றுவதற்கும் லட்சம் பேரை ஒரு அடி முன்னேற்றுவதற்குமான வேறுபாட்டையே இது குறிக்கிறது.

மருத்துவத்தில் எவ்வாறு நீட் தேர்வுமூலம் தமிழக சுகாதார கட்டமைப்பை சிதைக்கிற முயற்சிகள் நடக்கின்றனவோ, அதுபோல்தான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதன் மூலமாக, நுழைவுத்தேர்வை முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் திணித்து, பின் அனைத்து கல்லூரிகளுக்கும் அதை விரிவுபடுத்தி, அறிவியல் தொழில்நுட்ப கட்டமைப்பை சிதைக்கும் மறைமுக ஏற்பாடாகவே இதை பார்க்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தின் அறிவுசார் களஞ்சியமான அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சமூகநீதி உரிமைகள், மாநில உரிமைகள் போன்றவற்றைப் பறித்துவிட்டு, சாமான்ய குடும்பத்து மாணவர்கள் எவ்வாறு ஐ.ஐ‌டி. ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களுக்கு செல்லமுடியாமல் இரும்பு கதவடைத்து தடுத்து நிறுத்தப்படுகிறார்களோ, அதேபோல்தான் இந்த சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்தும் என்று சொன்னால் அது மிகையாகாது. சுருக்கமாக மத்திய அரசு மீண்டும் இம்முயற்சியை துணைவேந்தர் அல்லது ஆளுநர் உதவியுடன் மேற்கொள்ளுமேயானால், அது அண்ணா பல்கலைக்கழகத்தை ‘தனியார் மயமாக்குவதற்கு’ சமமானதே.

இவ்விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னால் மாணவரும், பிரபல கல்வியாளருமான நெடுஞ்செழியனிடம் பேசியபோது, “தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவனம் என்கிற அந்தஸ்து வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். எனினும் இது மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு.” என்று கூறினார். மேலும், இந்த கொரோனா நோய்ப் பரவல் காலகட்டத்தில் மிக முக்கியமான வேலைகள் இருக்கும் நேரத்தில், உதாரணமாக, பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஒற்றைச் சாளர முறையில் இந்தாண்டு பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகவும், விதிமுறைகளை ஒழுங்காக மாணவர்களிடத்தில் தெரிவிக்காமல் இணையவழியாக சேர்க்கை நடைபெறுவதால், பல ஏழை, சாமான்ய, கிராமப்புற மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக எந்த ஆக்கப்பூர்வமான வேலைகளையும் செய்யாமல் தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் தேவையில்லாத இவ்விசயத்தில் மாணவர்களை வைத்து அரசியல் செய்வதாக குறைபட்டார்.

மேலும் துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் ஊழல் மலிந்துள்ளதாக குறிப்பிடுகிறார், ஆனால் அதை களைவதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருவகிறார் என்று அவர்  குற்றம் சாட்டினார். ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் நிதி திரட்டு முடியும் என்பது கல்விக் கட்டணம், மாணவர்களின் தேர்வுக் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியம், ஆக இவர்கள் தோல்வியுற்ற, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை தேற்ற எந்த வழிவகையும் செய்யாமல், மாணவர்களின் மீதே அந்த சுமையை இறக்கி வைக்க பார்க்கிறார்கள் என்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது, அதுவும் தேவையற்ற ஒன்றுதான்; ஏனெனில் வெளிநாடுகளில் அண்ணா பல்கலைக்கழகம் என்றால் உலகலாவிய மதிப்பீடு இருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட நேரிடும் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய சர்ச்சைகளை பொருத்தமட்டில் “அண்ணாவையும் மறந்துவிட்டார்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் நலன்களையும் மறந்துவிட்டார்கள், அதில் படிக்க ஆசைப்படும் வருங்கால மாணவர்களையும் இவர்கள் மறந்துவிட்டார்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

– நவநீத கண்ணன்

(கட்டுரையாளர் மருத்துவ இளங்கலை மாணவர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்