Aran Sei

சுயாட்சியின் நாயகன் பேரறிஞர் அண்ணா – பிரவீண்

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் பிணக்குகள் இல்லாத காலமே இந்தியாவில் இல்லை. இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட அரசு வேண்டுமா? அல்லது அதிகாரப்பகிர்வு கொண்ட மாநில அரசு வேண்டுமா? என்ற இருவகையான போக்குகள் விடுதலைக்கு பிறகு இந்திய அரசியலில் நிலவியது. அப்போது இந்தியாவில் கிராமப்புறப் பகுதிகளில் நிலவிய நிலப்பிரப்புகளின் ஆதிக்கம், இந்திய-பாகிஸ்தான் பிரிவினை போன்ற காரணங்களால் இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட அரசு வேண்டும் என்பது அதைக் கூறியவர்கள் முன்வைத்த வாதமாகும். இந்தியா போன்ற உள்ளூர் ஆதிக்க சக்திகள் வலுவாக இருக்கும் நாட்டில் மத்திய அரசினால்தான் ‘நடுநிலையுடன்’ செயல்பட முடியும் என்றும் கருதினர்.

இப்போக்குக்கு மாறாக, இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியை மையப்படுத்தப்பட்ட அரசு வழங்காது, எனவே இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு மாநில சுயாட்சியே வழிவகை செய்யும் என்ற மற்றொரு போக்கும் நிலவியது/நிலவியும் வருகிறது. இந்த இரண்டாவது போக்கை பிரதிநிதித்துவம் செய்தவர் அறிஞர் அண்ணா.

மாநில சுயாட்சியை அண்ணா  என்னவாக அர்த்தப்படுத்தினார் என்பதைச்  28.7.1968-ம் ஆண்டு சென்னையில் தமிழரசுக் கட்சி நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவின் மூலம் சுருக்கமாக விளக்கலாம்.

இந்தியாவில் வலுவான மைய அரசும் அது ஏற்படுத்துகிற பிரச்சினைகளையும் பற்றியும் அதில் அண்ணா பேசியுள்ளார். அதிகாரம் அதிகப்படியாக மையப்படுத்தப்படுவதினால் ஏற்படும் பிரச்சினையை உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக வைத்து விளக்குகிறார்.

“நான் அண்மையில் டில்லி உணவு அமைச்சகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்குத் தொலைபேசியில் பேசும் சக்தி அதிகம் இல்லையாதலால் என்னுடைய நண்பரை விட்டுப் பேசச் சொன்னேன். உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராம் ஊரில் இல்லாததால் துணை அமைச்சர் ஷிண்டே என்பவர் பேசினார். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரையை வெளிக்கொணரும் உத்தரவு டில்லியில் இருந்து வராததால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்ற விஷயத்தை அவருக்கு கூற முயன்றோம்.

கள்ளக்குறிச்சி என்ற பெயரைப் புரிந்துகொள்ள 15 நிமிடம் ஆயிற்று. பெயரைப் புரிந்துகொள்ள முடியாததற்காக அவர் மீது நான் குற்றம் சாட்டவில்லை. ’சர்க்கரை ஆலை இப்போது தமிழ்நாட்டில், அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் டில்லியில்’ என்று அதிகாரத்தைப் பிரித்துத் தந்தார்களே அவர்கள்தான் குற்றவாளிகள்”

இந்தியாவில் வரலாற்று ரீதியில் வலுவான மைய அரசைக் கொண்டிருந்த குப்த பேரரசு, மொகலாய பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு போன்றவை இன்று இருந்த இடம் தெரியாமல் போனதை அண்ணா சுட்டிக்காட்டுகிறார். மையப்படுத்தப்பட்ட அரசினால் நீண்டகாலத்துக்கு நிலைக்க முடியாது என்பதையும் கவனப்படுத்துகிறார்.

நடப்பில் உள்ள இந்திய அரசும் மாநில அதிகாரங்களை எல்லாம் தன்னிடம் குவித்து வைத்துக்கொள்வது, மத்திய அரசுக்கென்று புதிய வலிமையை வழங்காது மட்டுமல்ல மத்திய அரசுக்குப் பலம் எதற்கு என்றும், அந்த பலம் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இது போல் மத்திய அரசு அதிகாரங்களை குவித்துக்கொண்டே போவதினால் மத்திய அரசு உண்மையாக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய முடியாமல் போய்விடுகிறது என்று அண்ணா கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக “சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு வலிமை தேவை என்றால் நிச்சயம் அந்த வலிமையைத் தேடித்தரத் தயார். இப்படி கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் இருந்து காட்பாடி சிறு தொழிற்சாலை வரை எல்லாவற்றுக்குமான சிறு விசயங்களிலும் மத்திய அரசே அதிகாரத்தை அவைத்துக் கொண்டிருப்பதன் விளைவு பெரிய விசயங்களில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்….” என்று அண்ணா கூறினார்.

மத்திய அரசு, கவனம் செலுத்த வேண்டியதில் மட்டும் தனது கவனத்தை குவிப்பது உண்மையில் நாட்டு மக்களுக்கு நன்மையை பயக்கும் என்றும் அதிகாரங்கள் மையப்படுத்தப்படுவது இந்தியாவுக்கு தீங்கையே விளைவிக்கும் என்பதையும் இவ்வாறாக அண்ணா விளக்குகிறார்.

ஆகவே, வலிமையான மத்திய அரசு எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதை அண்ணா முற்றிலுமாக மறுத்துவிடுவது மட்டுமல்லாமல் பலமான மத்திய அரசு பிரச்சினைகளுக்கு ஊற்றாக இருப்பதையும் கோடிட்டு காண்பிக்கிறார்.

எனவே, உயர் அதிகாரம் அனைத்தும் டெல்லியில் குவிந்திருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்துள்ளது என்கிறார் அண்ணா.

இறுதியாக….

இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில், மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசுகள் அதிகப்படியாக செலவீனத்தைச் செய்கின்றன. குறிப்பாக உள்கட்டமைப்பு வசதியை உருவாக்கும் மூலதன செலவுகளை மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசுகள் அதிகமாக செலவிடுவதை சி.பி.சந்திரசேகர், ஜெயதி கோஷ் மற்றும் லேகா சக்கரபர்த்தி ஆகியோரின் Challenges to the Indian Fiscal Federalism என்ற நூலின் வாயிலாக அறிய முடிகிறது.

இந்த கொரோனா காலத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் ஜி.எஸ்.டி நிலுவை தொகை வழங்குவது தொடங்கி மாநிலங்கள் தங்களுடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு அளவுக்கு மேல் கடன் வாங்கக்கூடாது என்று மாநிலங்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் வரையில் மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளை வஞ்சிப்பதை நம்மால் காண முடிகிறது.

எனவே, மாநில சுயாட்சி கோட்பாடு ஏதோ காலாவதியான ஒன்றாக கருதுவதற்கு இடமில்லை. அண்ணாவின் பிறந்த நாளில் அவருடைய மாநில சுயாட்சி பற்றிய சிந்தனையை நினைவு கூர்வதும் அதைக் குறித்து சிந்திப்பதும் காலத்தின் கட்டாயம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்