Aran Sei

வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு போராட்டத்தின் நாயகன் டேவிட் கிரேபர் மரணம்

அமெரிக்க மானுடவியலாளரும், பொருளாதார-சமூக ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக விமர்சிப்பவரும், தன்னைத்தானே அரசுமறுப்பாளராக அறிவித்துக் கொண்டவருமான டேவிட் கிரேபர் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி உடல்நலக் குறைவுக் காரணமாக இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் மரணமடைந்தார். வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு போராட்டத்தில் ‘நாங்கள்தான் அந்த 99%‘ என்ற முழக்கத்தை உருவாக்கியவர் அவரே. அவருக்குவயது 59.

அவரது மரணத்தை, அவரது துணைவியும், கலைஞருமான நிகா டுபரோவ்ஸ்கி சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் கடந்த வாரமே தனது உடல்நலக் குறைபாட்டை யூட்யூபில் குறிப்பிட்டிருந்தார், டாக்டர் கிரேபர்.

நன்கறியப்பட்ட அறிவுஜீவியும், கல்லூரிப் பேராசிரியரும், அரசியல்செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான டாக்டர் கிரேபர் எழுதிய ஒவ்வொரு புத்தகமும் கடந்த பத்தாண்டு காலத்தில் அவருக்கான தொண்டர்படையை உலகம் முழுவதும் கவர்ந்திழுத்திருந்தன.

2011 வெளிவந்த ‘Debt: The First 5000 Years’ (கடன்; அதன் முதல் 5000 வருடங்களில்) என்ற புத்தகத்தில், கடன்வாங்குவதன் விளக்கங்கள் மாறிக் கொண்டேயிருப்பதையும், யாரெல்லாம் யாருக்கெல்லாம் எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் விவரித்திருந்தார். கடன் தள்ளுபடிக்கு என்றே ஒரு பண்டிகை நாள் கொண்டாட வேண்டுமெனக் கோரினார். இப்புத்தகம் பற்றி ‘நியு யார்க் டைம்ஸ்’ இதழிலில் விமர்சனம் எழுதிய தாமஸ் மேனிய், ‘சலிப்பூட்டும் புத்தகமல்ல’ என்றும் ‘வாசிப்பார்வத்தை தூண்டும், கருத்துவன்மை கொண்ட எழுத்துநடை’ என்றும் பாராட்டினார்.

கிரேபர் 2015 வெளியிட்ட‘The Utopia of Rules’ (கட்டுப்பாடுகள் பற்றிய கற்பனையுலகம்) என்ற புத்தகத்தில் அரசாங்கத்தின் அங்கமும், பெருநிறுவனங்கள் மற்றும் வணிகப்பரிவர்த்தனைகளில் ஊடும்பாவுமாக செயல்படும் அதிகாரவர்க்கத்தினரை கிண்டலடித்திருந்தார்.

வாரத்திற்கு 15 மணிநேர வேலைநேரம் என்பது 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் சாத்தியமே என 1930ல் கணித்தார் ஜான் மெய்னார்டு கீனிஸ். கீனிசின் இக்கணிப்புக்கு நேர்ந்த கதி என்னவென 2018ல் வெளியிட்ட ‘Bullshit Jobs: A Story’ என்ற புத்தகத்தில் கேள்வி எழுப்பினார் கிரேபர். ‘டைம்ஸ் ரிவ்யூ’ பத்திரிகையில் இப்புத்தகம் பற்றி எழுதிய அலன் செமுல்ஸ், ‘உழைப்பை முறைப்படுத்தி ஒருங்கிணைக்க வேறு சிறந்தவழி இருக்கக்கூடும் அல்லவா என வாசகர்களை பார்த்து இப்புத்தகம் கேட்கிறது’, ‘கேட்கத்தகுதியான கேள்விதான்’ என்றார்.

‘தொழில்நுட்பத் திறனடிப்படையில் நமக்கு இதுசாத்தியமானதே” (15 மணிநேர வேலை) என்று கிரேபர் எழுதினார். ‘’ஆயினும் அவ்வாறு நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, மேன்மேலும் அதிகமாக நம்மை உழைப்பில் ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கவே தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட்டுள்ளது. தமது வாழ்நாளின் மொத்த உழைப்பையும் அருகதையற்ற வேலை என தாம்நம்பும் வேலைகளில்தான் செலுத்தியுள்ளனர் பெரும் எண்ணிக்கையிலான மக்கள், குறிப்பாக ஐரோப்பா, வடஅமெரிக்காவினர்.’

‘இச்சூழல் உருவாக்கும் தார்மீக, ஆன்மீக பாதிப்புகள் பாராதூரமானவை’, ‘இது நமது கூட்டு ஆன்மாவில் பரவிய வடு’ என்கிறார் கிரேபர்.

தான் ஒரு அரசுமறுப்புவாதி என்ற போதும், ஒருமித்த சமூக மதிப்பீடுகளை நிலைநிறுத்துவது கடினமான பணி என்பதையும்,கங்காணி இல்லாத தோட்டத்தில் வேலை நடக்காது என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். இதை 2015ல் ‘தி கார்டியன்’ பத்திரிகையில் அவர் சொன்னதாக வெளியான மேற்கோளில் பார்க்கலாம். ‘தனியார் பங்குநிறுவன மேலாளர்கள், அரசியல்தரகர்கள், மக்கள்தொடர்பு ஆய்வாளர்கள், காப்பீட்டு மதிப்பீட்டாளார்கள், நீதித்துறை-சட்டமேலான்மையாளர்கள் – இவர்களெல்லாம் இல்லாது போனால்மனித சமூகம் என்ன பாதிப்புகளை சந்திக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை’

2005ஆம் ஆண்டு வரை யேல் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசியராக இருந்த கிரேபர், முதலாளித்துவம் பற்றியும் அரசியல் மற்றும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் தான் பேசிவந்த வரம்புமீறிய விமர்சனங்கள் அந்த வேலைக்கு உலை வைத்தன. அவரை வேலையை விட்டு நீக்கக் கூடாது என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் நடந்த கையெழுத்தியக்கம் பயன் தரவில்லை. பிறகு, பல பெருமைமிகு கல்லூரி உரைகள், ஆசிரியப் பணிகள் எனத் தொடர்ந்து, கடைசியில் தனது மறைவின் போது லண்டன் ஸ்கூல் ஆப் எக்கானாமிக்ஸில் பணியாற்றி வந்தார்.

அவர் இருந்தவரை ஒரு தலைவராக அல்லது சுற்றுச்சூழல், சமூக-பொருளாதார அநீதிகள், உலகமயம் போன்றவற்றிற்காக போராடுவோருக்கு ஒரு வழிகாட்டியாக கருதப்பட்டார். 2011ல் நடந்த வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்தார். ‘நாங்கள்தான் அந்த 99%’ என்ற முழக்கம் ஒரு கூட்டு கண்டுபிடிப்பு என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அவரே சொல்வது, ‘அந்த 99%’ என பெயர் சூட்டும் ஆலோசனை மட்டுமே அவரது பங்களிப்பு, ‘நாங்கள்தான் அந்த 99%’ என்ற முழக்கமாய் அதை மாற்றியது கூட்டுச் செயல்பாடு.

2017ல் டோனால்டு டிரம்பு அமெரிக்க குடியரசு தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதனை குறிப்பிட்டு பின்வருமாறு சொன்னார் கிரேபர் ‘மக்கள் தற்போதை ஊழல் புறையோடிப்போன அரசியல் அமைப்பை வெறுக்கின்றனர், முற்றிலும் வேறுபட்ட ஒரு அமைப்பை விரும்பி நிற்கின்றனர். இதைத்தான் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் மூலம் நாங்கள் எச்சரிக்க விரும்பினோம்’,

டேவிட் ரோல்ப் கிரேபர் பிப்ரவரி 12, 1961ல் மான்ஹாட்டன், நியூயார்க்கில் பிறந்தார். அவரது தந்தை கென்னத் ஒரு இடதுசாரி சிந்தனையாளார், ஸ்பெயின் நாட்டில் பாசிசத்திற்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தில் போரிட்டவர். அவரது தாயார், ரூபின்ஸ்டைன் நூற்பாலை தொழிலாளராக இருந்தார். சங்கம் வெளியிட்ட ஒலிப்பேழையில் பாடியிருந்தார். தொழிலாளர் சங்கம் ஆதரவளித்த கூட்டுறவு அடுக்குமாடி குடியிருப்பில்தான் வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் அவர் மொழிபெயர்த்த மாயன் சின்னங்கள் தொழில்முறை அகழ்வாராய்ச்சியாளர்களை கவர்ந்தன. இவருக்கு கல்விஉதவித் தொகையைப் பெற்றுத்தந்தது.

நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் 1984ல் மானுடவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டப் படிப்பின் போது, மடகாஸ்கர் பகுதியில் இனவரைவியல் களப்பணிகள் செய்வதற்கான நிதி ஆதரவை வென்றார். 1998ல், மந்திரம், அடிமைச் சேவகம், அரசியல் என்ற ஆய்வறிக்கையை சமர்பித்து பட்டம் வென்றார். இரண்டு ஆண்டுகளில் யேல் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டார்.

தனது 16 வயதில் மனதளவில் தன்னை ஒரு அரசுமறுப்பாளராக உணர்ந்த போதும், 1999 வரை அரசியல் செயல்பாடுகளை தவிர்த்து வந்துள்ளார். 1999ல் சியாட்டில் நகரில் நடந்த உலக வர்த்தக கழக எதிர்ப்பு போராட்டமே அவரது முதல் செயல்பாடு.

கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘வளர்ந்து வரும் தீவிர வலதுசாரி தேசியவாதத்திற்கும், இனவெறி வெறுப்பரசியலுக்கும் எதிரான போராட்டத்தில் இன்றைய ஜனநாயக சமூகத்தில் நமக்கிருக்கும் ஒரு நம்பிக்கை’ எனக் கூறி லேபர் கட்சியின் தலைவர் ஜெரமி கார்பைனை ஆதரித்தார்.

பல நேரங்களில் அவர் வெளிப்படுத்தும் உலகப்பேரழிவுக்கான எச்சரிக்கைகள், தனது குழந்தை பிராயத்தில் கற்பனை செய்திருந்த உலகிற்கு பொருத்தமில்லாத ஒன்றில் தற்போது வாழும் நிலை குறித்து அவர் அவ்வப்போது வெளிப்படுத்தும் அவநம்பிக்கை, இவற்றிற்கெல்லாம் மாறாக, ஆச்சர்யமூட்டும் வகையில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அவர் ஆழமாக வெளிப்படுத்தினார்.

ஒருமுறை இப்படிச் சொன்னார் டாக்டர் கிரேபர், ‘அப்பலோ நிலவு பயணம் நிகழ்ந்த போது 8வயது சிறுவனாயிருந்த நான், 2000ஆம் ஆண்டில் எனது 39 வயதில் இந்த உலகம் என்ன அற்புதங்களுக்கு ஆளாகியிருக்கும் என அன்று யோசித்தது நினைவிலாடுகிறது’

‘அப்படியான அற்புத உலகில் என்றாவது வாழ்ந்துவிட முடியுமெனஇன்னமும் நம்புகிறேனா எனக் கேட்டால், ஆம் நம்புகிறேன். இன்றைக்கு ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேனா எனக் கேட்டால், முழுமையாக அப்படித்தான் உணர்கிறேன்’ என்றார்.

அவரது வாழ்நாளில் அந்த அற்புத உலகை காணும் அவரது கனவு நிறைவேறாமலேயே போனது.

(அனார்கிஸ்டு என்பதற்கு தமிழில் அராஜகவாதிகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை அந்த அரசியல் கருத்தின் சரியான பொருளை உணர்த்துவதாக இல்லை. ஆகவே, அரசுமறுப்புவாதி என்ற வார்த்தை இச்செய்தி கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், அரசுமறுப்புவாதிகளுக்கும் உள்ள பகை, நெடிய வரலாறு கொண்டது என்பதும், மே1 தொழிலாளர் தினம் அரசுமறுப்புவாதிகளின் சிகாகோ போராட்டத்துடன் தொடர்புடையது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளத்தக்கன.)

(www.newyorktimes.com இணையதளத்தில் வெளியான, சாம் ராபர்ட் எழுதிய இரங்கல் கட்டுரையைத் தழுவிய மொழிபெயர்ப்பு)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்