Aran Sei

’ராம்விலாஸ் பாஸ்வான் என்னும் தலித் ராமன்’ -ஆனந்த் டெல்டும்டே

த்திய நுகர்வோர் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரும் லோக் ஜன்சக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் தில்லியில் சென்ற வாரம் காலமானார். இதய அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராம்விலாஸ் பாஸ்வான் நாடறிந்த ஒரு தலித் செயற்பாட்டாளர். 1983-ம் ஆண்டு, தலித் மக்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் தலித் சேனா என்ற ஒரு இயக்கத்தை நிறுவினார். ராம்விலாஸ் பாஸ்வான் பல்வேறு அரசு பதவிகளை வகித்தவர். கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து போராடி வந்தவர்.

பல்வேறு தலைவர்களும் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், அவரின் அரசியல் நகர்வுகள் மீது கடுமையான விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தன் சொந்த நலனுக்காக பாஜக-வுடனும், காங்கிரஸுடனும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக்கொண்டதாகவும், இது தலித் இயக்க அரசியலை மட்டுப்படுத்தியதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில், சமூகச் செயற்பாட்டாளரும், அம்பேத்கரின் எழுத்துகளை ஆய்வு செய்து, அது குறித்து தொடர்ந்து சமூகத்தில் உரையாடி வருபவருமான ஆனந்த் டெல்டும்டே எழுதிய ‘பாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள்’ என்ற கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு பகிர்கிறோம்.

பாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள் – ஆனந்த் டெல்டும்டே

ம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் ராம் ராஜ் ( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றிக்கொண்டவர்), சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளைச் சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர்.

பாஸ்வானை பற்றிக் கேட்கவே தேவையில்லை. அவர் தம் அதிகார வர்க்க விசுவாசத்தை 1996-2000 வரை பல்வேறு பிரதமர்கள் (வாஜ்பாய், தேவ கௌடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங்) தலைமையிலான அமைச்சரவைகளில் மத்திய அமைச்சராக ( ரயில்வே, டெலிகாம், தொலைதொடர்பு துறை, சுரங்கம், ஸ்டீல், உரத்துறை) இருந்து நிறுவியவர். பிற இரண்டு ராம்களைப் பொறுத்தவரை பாஜகவின் மதவாதத்திற்கு எதிராக மிகச் சமீப காலம் வரை மிகவும் தீவிரமாக முழங்கி வந்தவர்கள்.

அதாவ்லேயைப் பொறுத்தமட்டில், 2009-ம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் தோற்று தனது மத்திய அமைச்சராகும் கனவு கலைந்ததில் இருந்தே அவரது முதுகெலும்பின்மையை அவரே அம்பலப்படுத்திக்கொள்ளத் தொடங்கி விட்டார். தன்னுடைய புதிய சந்தர்ப்பவாதத்தை மறைக்க, சந்தர்ப்பவாதத்தை கற்றுக்கொடுத்த, தன்னுடைய சித்தார்த் விகாரிலிருந்து ஏசி அறையில் சஹ்யாத்ரியில் மகாராஷ்டிராவின் கேபினேட் அமைச்சராக அமரச் செய்த, தனது காங்கிரஸ் வழிகாட்டிகளையே வசைபாடத் தொடங்கிவிட்டார்.

அடுத்து டாக்டர்.உதித் ராஜை ( ராஜஸ்தான் கோடாவில் உள்ள புகழ்மிக்க பைபிள் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவர்) எடுத்துக் கொண்டால், தனது பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து மாற்றுவதற்கு நியாயம் சொல்ல அவர் அடிக்கும் குட்டிக்கரணம் இருக்கிறதே, அது நகைப்புக்குரியது.

இந்தியாவில் ஜனநாயகம் என்பது எந்த அளவுக்குச் சீரழிந்து போயிருக்கின்றது என்பதை அறிந்தவர்களுக்குக் கண்டிப்பாக இந்தத் தலித் தலைவர்களின் வித்தைகளோ, குட்டிக்கரணங்களோ, பச்சை சந்தர்ப்பவாதங்களோ கண்டிப்பாக வியப்பாக இருக்காது. எல்லோரும்தானே சந்தர்ப்பவாதமாக இருக்கின்றார்கள், தலித் தலைவர்கள் செய்யும் போது மட்டும் அவர்கள் மீது பாய்வதேன்? எல்லோரும் முன்னர் காங்கிரஸில் இருந்தவர்கள்தானே, தற்போது பாஜகவுக்குச் சென்றால் என்ன குடிமுழுகிவிடப் போகின்றது? இந்தக் கேள்வி நியாயம் போல தோன்றும் கேள்விதான். ஆனால், அப்படியே கடந்து செல்லக் கூடிய கேள்வியல்ல.

பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் சிறிய அளவுதானே வேறுபாடு என்றாலும், பாஜக இதுவரையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்த விசயங்கள், மக்களுக்கு அவர்களை குறித்து இருக்கும் அபிப்ராயம் போன்றவற்றையும் கணக்கிலெடுத்துக்கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் மாதிரியல்லாமல் பாஜக என்பது தத்துவத்தின் வழி நடக்கும் கட்சி. அதன் தத்துவம் என்பது கடும்போக்கு இந்துத்துவம், அதைச் சுற்றிப் பகட்டான சொற்களால் அலங்கரிக்க முயன்றாலும், மெய்யாக அதன் சித்தாந்தம் என்பது ஒரு பாசிசம்தான். இந்த இந்துத்துவப் பாசிசத்திற்கு எதிராகத்தான் அண்ணல் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்கப் போராடினார்.

தற்போதைய சூழலில் இந்திய அரசியலமைப்பை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், தலித்/ஆதிவாசி/இஸ்லாமியர்களை இந்து பெரும்பான்மைவாதத்திற்குள் கவர்ந்திழுக்கும் முயற்சியில் இருப்பதாலும், அவர்கள் இந்திய அரசியலமைப்புக்கும், அந்த விளிம்புநிலை மக்களுக்கும் ஆதரவாக இருப்பது போல நடிக்கின்றார்கள். ஆனால், உண்மையில் அது அவர்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கின்றது. ஆகவே, அம்பேத்கரின் துதி பாடிக்கொண்டே சில தலித் தலைவர்கள் அம்பேத்கருக்குத் துரோகம் செய்யும் போது, அது கடுமையான வருத்தத்தையும், கடும் கண்டன உணர்வையும் ஏற்படுத்துகிறது.

அண்ணல் அம்பேத்கரின் (தத்துவார்த்த) வாரிசுரிமை

அண்ணலும் தன்னுடைய தொடக்க காலங்களில் இந்து மத சீர்திருத்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவருடைய தொடக்க கால ஆய்வில் உள்ளேயோ, வெளியேயோ யாரையும் அனுமதிக்காது தன்னைத் தானே மூடிக்கொள்ளும் வர்க்கம்தான் சாதி என்று கருதினார். அது தன்னைக் காத்துக்கொள்ள அகமணமுறையைப் பின்பற்றியது. புறமணமுறையை எதிர்த்தது. சாதி அமைப்பை ஒழிக்க வேண்டுமானால் சாதி மறுப்புத் திருமணங்களின் வழி ஒழித்துவிடலாம் என்று கருதினார்.

ஆகவே, அவரது தொடக்க காலச் செயல்பாடுகள் தலித் சமூகத்திற்கு இந்து சமூகம் இழைத்துக்கொண்டிருந்த தீமைகளை அம்பலப்படுத்துவதாக இருந்தது. அதன்வழி முற்போக்குச் சக்திகள் சீர்திருத்தத்தைக் கையிலெடுக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்த்தார். மகத் சத்யாகிரஹத்தில் இந்த வழிமுறையைப் பரிசோதித்துப் பார்த்தார். ஆனால், அவர் பெற்ற கசப்பான அனுபவம், இந்து சமூகத்தில் சீர்திருத்தம் என்பது சாத்தியமில்லை. ஏனென்றால் அதன் வேர் அதன் தர்மசாஸ்திரத்தில் இருக்கின்றது என்று புரிந்துகொண்டதோடு, அந்த தர்மசாஸ்திரங்களின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டாலொழிய சாதி ஒழிக்கப்பட முடியாது என்ற முடிவுக்கு வந்தார் (சாதி ஒழிக்கும் வழி நூல்). இறுதியாக, அவரது மரணத்திற்குச் சில காலத்திற்கு முன்பாக, சாதி ஒழிப்பதற்கான வழிமுறை என்று கருதித்தான் பௌத்தத்தைத் தழுவினார்.

நான் எனது பொதுவாழ்க்கையைத் தொடங்கிய போதும், அதற்குப் பலகாலம் பின்பும் நல்லதோ, கெட்டதோ நாம் இந்து சமூகத்தின் ஒரு அங்கம்தான் என்று எண்ணி வந்தேன். இந்து சமூகத்திலுள்ள தீங்குகளைக் களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே, மகத் சைதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரசே சத்தியாகிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம். வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம். ஆனால், அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழமுடியாது. இது சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று நான் முழுமையாக இன்று நம்புகிறேன். இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. – அண்ணல் அம்பேத்கர் தொகுதி 37, (பக்கம் 297-1942, ஏப்ரல் 26)

மிக இலகுவாக, சிலர் அவருடைய வழிமுறைகளில் பிழை இருப்பதாகக் கூறிக் கடந்துவிட முனையலாம். ஆனால், சாதி ஒழிப்பதுதான் என்பது அண்ணல் அம்பேத்கரின் மரபாக இருக்க முடியும். அந்தக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள்தான் அவரின் தத்துவார்த்த வாரிசுரிமையைக் கோர முடியும். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் தொலைநோக்கோடு, அவர் செய்ததெல்லாம் சாதி அமைப்பை ஒழிப்பதற்கும், தலித் மக்களை வலுப்படுத்துவதற்குமான பணிதான். மார்க்சிஸ்டுகளைப் போல அவர் வரலாற்றுக்குப் பின்னிருக்கும் காரண காரியங்களின் வழியாகத் தீர்வு என்ற வழிமுறையைப் பின்பற்றவில்லை. மாறாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பேராசிரியராக இருந்த ஜான் டேவியின் pragmatism தத்துவத்தைப் பின்பற்றினார்.

தத்துவம் அல்லது நம்பிக்கைகளின் வழியில் நில்லாமல் நடைமுறையில் சோதித்துப் பார்த்து தத்துவத்தைப் பற்றியோ நம்பிக்கையைப் பற்றியோ ஒரு முடிவுக்கு வருவதுதான் Pragmatism. அது கறாரான தத்துவ வழிபட்ட நடைமுறையைக் கோராமல், உண்மையையோ, மதிப்பையோ கண்டறிய நடைமுறை விளைவுகளை மட்டுமே கருத்தில் கொள்கிறது. ஆக, இந்த வழிமுறையைக் கைகொள்பவர்களின் நேர்மை, அறம், அர்ப்பணிப்புணர்வு போன்றவை அவர்களின் செயல்பாட்டுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். அப்படியான பண்புகளோடு வாழும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அம்பேத்கர். இந்தப் பண்புகளைப் பின்பற்றுவதில் ஒருவர் சமரசம் செய்துகொண்டு , Pragmatism என்ற வழிமுறையைப் பின்பற்றுவாரேயானால் எந்த வகை சந்தர்ப்பவாதத்தையும் நியாயப்படுத்திவிடலாம். அதுதான் அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களுக்கு நடந்திருக்கின்றது.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் தலைவர்கள் மிகவும் சிரத்தையோடு ‘அம்பேத்கரிசம்’ என்பதை தனிநபரின் நலன் என்றோ தலித் மக்களின் நலனுக்காக வழி என்றோ திரித்து வந்திருக்கின்றனர். இந்திய அரசியலைப் பொறுத்தவரை பணம் சேர்ந்துவிட்டால், கூட்டம் சேர்ப்பது என்பது எளிதாகிவிடும் சூழல்தான் எதார்த்தமாக இருக்கின்றது. இந்தச் செயல் சக்கரம் சுழலத் தொடங்கிவிட்டால், அதற்குப் பிறகு பின்னோக்கிப் பார்ப்பது என்பது அவர்களுக்குத் தேவையற்றதாகி விடும். இந்த வழிமுறைதான், அதாவ்லே போன்றவர்களைக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு அதிபதியாக்கி, தலித் மக்களின் விடுதலைக்காக மிகவும் அதிக சிரத்தையோடு உழைத்து, தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு அண்ணல் அம்பேத்கரின் மரபுக்கும் சொந்தம் கொண்டாடிக் கொள்ளச் செய்தது. இந்த வகைமாதிரியை ஒத்த வடிவமாகவே பிற ராம்களும், அரசியல் தரகர்களாக இருக்கின்றனர். அம்பேத்கர் பெயரை முதன்மையாகக் கொண்டு அவர்களுடைய பெரும்பாலான நிறுவனங்கள் தலித் மக்களின் நலன்களுக்காகச் செயல்படுவதாக அறிவித்துக்கொள்கின்றனர்.

தலித் நலன்கள் என்றால் என்ன?

அம்பேத்கரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பலருக்கும், தங்களது மேய்ச்சல் நிலங்களுக்கான தேடல்களுக்கு இடையில்தான் தலித் நலன்கள் குறித்த அக்கறையே வருகின்றது. இந்த வகை அணுகுமுறை அம்பேத்கரின் காலத்திலும் இருந்தது. அன்றைய சூழலில், காங்கிரஸ் முகாமை நோக்கி ஓடிய தலித் தலைவர்களை ‘அது எரியும் வீடு’ அங்கே செல்லாதீர்கள் என்று எச்சரித்தார்.

காங்கிரஸ் தன்னுடைய கூட்டுறவு வலையை யஷ்வந்த்ராவ் சௌஹானின் வழியாக மகாராஷ்டிராவில் விரித்த போது, அம்பேத்கரிய தலைவர்கள் தங்களுடைய சுயவிருப்பத்திற்குத் தலித் நலன் என்ற முகமூடியை அணிந்துகொண்டனர். தங்களுடைய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த அம்பேத்கர் கூட நேருவின் அமைச்சரவையில் இணைந்தாரே என்று சப்பைக்கட்டு கட்டினர்.

அம்பேத்கரியர்களுக்கு எவ்வகையிலும் ஒவ்வாததாக இருந்திருக்க வேண்டிய ஒரு இயக்கம், பாஜக. அது கலாச்சார தேசியம் என்னும் போர்வையில் மக்களைக் குழப்பி, பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்வ இயக்கத்தின் முன்னணி அமைப்பு என்பது ஊரறிந்தது. இதுகாறும் பெரும்பாலும் அம்பேத்கரியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் இயக்கமாகத்தான் அது இருந்து வந்தது. ஆனால், தற்போது அந்த நிலையில் பிறழ்வு நிகழத் தொடங்கியிருக்கின்றது.

தலித் அமைப்புகளுக்கும் காவி பரிவாரங்களுக்கும் இருக்கும் தத்துவார்த்த இடைவெளியைக் குறைத்து சமரஸ்தா (அதாவது சமத்துவத்திற்கு மாறாக சமூக நல்லிணக்கம்) என்னும் புழுவைத் தூண்டிலில் இணைத்து தலித் மீன்களைப் பிடிக்கக் கிளம்பியிருக்கின்றது ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே, ஆளும் வர்க்க ( உயர் சாதி) கட்சிகளை தங்களது வீடுகளைப் போல தழுவிக்கொண்ட தலித் தலைவர்கள், பல பிழைகளுக்குப் பிறகும் தலித் இயக்கங்களின் இயற்கையான நட்பு சக்திகளாக இருக்கக் கூடிய இடதுசாரி கட்சிகளைப் பொருட்படுத்தவேயில்லை. ஆளும் வர்க்கக் கட்சிகள் வழங்கும் சலுகைகள் எதையும் இடதுசாரிகளால் அவர்களுக்கு வழங்கமுடியாது என்பதைத்தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்.

எதற்காக இந்தத் தலித் தலைவர்கள் இப்படியான குட்டிக்கரணங்களை எல்லாம் அடிக்கின்றார்கள்? 90% தலித் மக்கள் கொடூரமான வாழ்வியலில் நிலமற்ற கூலிகளாக, சிறு-குறு விவசாயிகளாக, கைவினைஞர்களாக கிராமப்புறங்களில் உழல்வதும், நகர்ப்புறங்களில் குடிசைவாழ் மக்களாகவும், சாதாரண கூலிகளாகவும், சிறு வியாபாரிகளாவும், அன்றாடங்காய்ச்சிகளாகவும், அமைப்புசாரா தொழிலாளர்களாகவும் இருப்பது இவர்களுக்குத் தெரியாதா?

இந்த மக்களுக்காக எதையும் செய்ய முடியவில்லை என்பதை தன்னுடைய வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் கூட உணர்ந்திருந்தார். நிலச்சீர்திருத்தம் மற்றும் பசுமைப் புரட்சிகள் போன்ற கிராமப்புறங்களுக்கு முதலாளித்துவ உறவை ஏற்படுத்திக் கொடுத்த முதலாளித்துவச் சதிகள் கூட தலித் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இந்த வகை முடிவுகள் தலித் மக்களை நிலவுடமை கட்டமைப்பிலிருந்து விடுவித்து, பார்ப்பனியத்தின் மிக முக்கியமான கருவியாக இருந்த பண்ணையார்களின் இடத்தை இட்டு நிரப்பிய, கலாச்சார ரீதியாகப் பின்தங்கிய சூத்திர விவசாயிகளின் கொடுரமான ஒடுக்குமுறையைத்தான் சந்திக்க வைத்துள்ளது.

இதற்கு இடைப்பட்ட சில பத்தாண்டு காலத்தில், இட ஒதுக்கீடு தலித் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஊட்டத் தொடங்கிற்று. ஆனால், அந்த சிறு நம்பிக்கையும் காலப் போக்கில் வரண்டு போயிற்று. இட ஒதுக்கீடு என்பது நகர்ப்புற தலித்துகளால் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு தனியுரிமை கோரப்படுவதாக இருக்கின்றது என்பதை கிராமப்புறங்களில் வாழும் தலித் மக்கள் உணர்வதற்குள், நியோ-லிபரல் தலைமுறையின் சிந்தனைகளும், அணுகுமுறைகளும் இட ஒதுக்கீட்டின் பலனை முற்றுமுழுதாக அழிக்கும் எல்லைக்கு சென்றுவிட்டது.

இந்தக் கூற்றுகளை குறித்து அக்கறையற்றவர்களாகத்தான் நமது ராமன்கள் இருந்தார்கள். இந்த பிரச்சினைகளால் இட ஒதுக்கீடு அதன் சாரத்தில் ஒழிக்கப்பட்டுவிட்ட சூழலில்தான், உதித் ராஜ் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக இயக்கமெல்லாம் கட்டினார்கள். தங்கள் இயக்கங்களின் வழி, ஆளும் வர்க்கத்தின் தலையீடுகள் மற்றும் நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்கு மாறாக, ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதிலேயே இவர்கள் தங்கள் காலத்தை ஓட்டினர். உண்மையாக 90% தலித் மக்களுக்கு என்ன தேவை என்பதை இவர்களுக்கு தெரியுமா?

உழைக்க, அண்ட கொஞ்சம் நிலம், பொருத்தமான வேலை, இலவசமான சமத்துவ வாய்ப்பை வழங்கும் கல்வி, நல்ல சுகாதாரம், ஜனநாயகக் குரல்களை எதிரொலிக்கும் வெளிகள், சாதி எதிர்ப்புப் பண்பாட்டு மாதிரிகள் ஆகியவைதானே அவர்களின் தேவை.

பாஜகவின் ஹனுமான்கள்

தலித்துகளின் நலன்களை விற்றுப் பிழைப்பதையே இந்த ராமன்கள் நோக்கமாக கொண்டுள்ளனர் என்பதுதானே உண்மை. இந்த இராமன்களில் அதிகம் படித்த உதித் ராஜ் என்பவர், சங்க பரிவாரங்கள் மற்றும் பாஜகவிற்கு எதிராக நேற்று வரை எழுதியும், முழங்கியும் வந்தவர். சந்தேகம் இருப்பவர்கள் அவரது ‘தலித் மக்களும் அவர்களின் மதச் சுதந்திரமும்’ என்ற நூலை வாசிக்கலாம். மாயாவதியைக் களநீக்கம் செய்து, தன்னுடைய வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்று விரும்பி, அதற்காக முயற்சித்து, தன்னுடைய கருவிகளை எல்லாம் இழந்து, சில காலம் முன்புவரை தன்னாலேயே தலித் மக்களின் மிகப்பெரிய எதிரியாக அறிவிக்கப்பட்ட பாஜகவோடு இணைந்திருக்கின்றார். தற்போது மிகத் தீவிரமாக தனது வாலை நீட்டிக்கொண்டு தன்னை ஆதரிக்கும் தலித் மக்களை பாஜகவிற்குக் காட்டிக் கொடுக்கும் ஹனுமன் வேலையை மிகவும் சிரத்தையோடு செய்து வருகின்றார்.

இவரைப் போலல்லாமல் மற்ற இரண்டு ராமன்களான பாஸ்வான், அதாவ்லே போன்றவர்கள் தங்களுக்கிருக்கும் தலித் ஆதரவு தளத்தை முன்வைத்து சீட் பேரத்தை முடித்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கின்றனர். அதில் பாஸ்வானுக்கு 7 தொகுதிகளும், அதாவ்லே தனது ஒரு ராஜ்யசபா சீட்டோடு கூடுதலாக ஒரு சீட்டையும் பெற்றிருக்கின்றார். அம்பேத்கர் மீதும், அம்பேத்கரிய தலித்துகளின் மீது கடுமையான வெறுப்பை உமிழ்ந்த தாக்கரேயிடம் தஞ்சமடைந்த நாம்தேவ் தசாலை பின்பற்றியதுதான் அதாவ்லே என்னும் முன்னாள் காகிதப் புலியின் பங்களிப்பு. இந்தப் பிரமுகர்கள் பாஜகவோடு இணைவதற்கு அதிகபட்சமாக வேறெந்த நியாயமான காரணத்தையும் கண்டடைய முடியவில்லை மாறாக மக்களை ஏய்ப்பதற்காக, தங்களுடைய முன்னாள் சகாக்கள் தலித் மக்களை (இந்தத் தலைவர்களது அல்ல) இழிவுப்படுத்தியத்தாக ஒரு காரணத்தைச் சொல்லி தம் சந்தர்ப்பவாதத்தை கூச்சநாச்சமின்றித் தொடர்கிறார்கள்.

ஆனால், அதாவ்லே மக்களின் அவமானங்களுக்காகக் கவலைப்படவில்லை. மாறாக, தன்னுடைய அவமானத்தைத்தான் கணக்கில் எடுத்துக்கொண்டார். அதாவ்லே சந்தித்த அவமானம் என்ன தெரியுமா? அமைச்சர் பதவி தராததுதான். மராத்வாடா பல்கலைக்கழத்திற்கு அண்ணலின் பெயர் சூட்ட தலித் மக்கள் செய்த தியாகங்களையெல்லாம் கேவலப்படுத்தும் விதமாக, பல்கலைக்கழத்திற்குப் பெயரோடு துணைப்பெயராக அம்பேத்கரின் பெயரை இணைக்க ஒப்புக் கொண்டதோ, தலித் மக்கள் மீது நிகழ்த்த வன்கொடுமை வழக்குகளைப் பின்வாங்க ஒப்புக்கொண்டதோ இவருக்குக் கேவலமாகவோ வெட்கமாகவோ இருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள் மட்டும்தான், பாஸ்வான்-அதாவ்லே போன்றோரின் அரசியல்வாழ்க்கையைப் பார்த்தால் தலித் மக்களுக்கு இவர்கள் தம் வரலாறு நெடுகச் செய்த துரோகங்கள்தான் நிரம்பிக் கிடக்கின்றன. தற்போதைக்கு இவர்கள் பாஜகவிற்கு ஹனுமன் வேடமிட்டு ஆடத்தான் செய்வார்கள், செய்கின்றார்கள். ஆனால், தலித் மக்களைப் பொறுத்தவரை இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து, அவர்களின் உண்மை முகத்தைப் பார்க்கும் அவசியம் இருக்கின்றதா இல்லையா?

ஆனந்த் டெல்டும்டே

தமிழில் : மகிழ்நன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்