Aran Sei

அமெரிக்காவிலிருந்து இந்தியா வரை – மக்களாட்சிக்கு வாசிக்கப்படும் மரண சாசனம்.

செப்டம்பர் 29ம் தேதி ட்ரம்ப்புக்கும் பிடேனுக்கும் இடையிலான முதல்  பொது மேடை விவாதம் , கடந்த ஆண்டுகளின் கொடூரங்களைக் கூட மிக சாதாரண மாக்கிவிட்டது.  “உலகின் மிக உயர்ந்த அதிகாரம் உடையதாகக்” காட்டப்படும் அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர்களின், மிரட்டல்கள், மோசமான உறவு முறைகள், அள்ளி வீசிய அவதூறுகள், கடித்து துப்பிய கடுமையான வார்த்தைகள், பொறுப்பற்று உதிர்த்த அருவெருப்பூட்டும், பழமையான வாசகங்கள் யாவும் அமெரிக்காவில் மக்களாட்சி நடைமுறை எந்த அளவு கீழ்த்தரமாக போய்விட்டது என்பதையும், அது உலக அளவில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்தின.

கோவாவில் எனது வீட்டிலிருந்து அந்த நிகழ்ச்சியை பார்த்த போது,  ஒருபுறம் ட்ரம்ப் வெறித்தனமாக பேசிக் கொண்டிருக்க, பிடேனும் , நிகழ்ச்சி நெறியாளர் கிறிஸ் வேலஸூம் ஏதோ ஒரு பழைமையான விழாவில் செயலிழந்து நிற்பவர்கள் போல நின்றிருந்தனர்.  யாரும் அவரை இடைமறித்து நிறுத்த முடியவில்லை. 2015 ல் மெக்சிகோ மக்களுக்கு எதிராக வெறுப்பை கக்கியது துவங்கி, தனது கலவரமான, அனைத்தையும் உடைத்து நொறுக்கும் தனது அரசியல் வழிமுறைகள் மூலம், தற்போது தான் காட்டியுள்ள முன்னுதாரணம், தனது தாக்குதலை எந்த வகையிலும், கட்டுப்படுத்தவோ தடுத்து நிறுத்தவோ முடியாத ஒன்று என்பதை மீண்டும் ஒரு முறை விளக்கி விட்டார்.

“அந்த அதிசய காட்சி என்னை அற்பமானவனாக, ஒழுக்கம் கெட்டவனாக உணரச் செய்து விட்டது. நாம் எல்லோரும் அந்த அருவியில் நனையலாம்.” என்கிறார் ,’ ஃபைனான்சியல்  டைம்ஸ்’  பத்திரிகையின் எட் லூயிஸ். “என் வாழ்க்கையில் நான் கேட்ட மிக நச்சுத்தன்மை மிக்க விவாதம் இதுதான். இன்னும் நிறைய வரும். … பீகிங்கில் இருந்து இதை பார்ப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அங்கு எல்லா சீன தொலைக்காட்சியிலும் நேரலையாக ஒளிபரப்பலாம்.  மென்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது மக்களாட்சி பற்றிய விளம்பரம் அல்ல.”

இதை உறுதி செய்வது போலவே , சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை, “நாட்டில் எல்லோரும் பேசுகிறார்கள். ஒருவரும் கேட்பதில்லை.எதையும் கற்றுக் கொள்ளவதும்  இல்லை.” என கூறியது. அதன் ஆசிரியர், ” அமெரிக்க அரசியலின் உயர்மட்டத்தில் உள்ள இத்தகைய குழப்பங்கள்,  பிளவையும், அமெரிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும், அமெரிக்க  அரசியல் அமைப்பின் நன்மைகளை     வேகமாக இழந்து வருவதை பிரதிபலிக்கிறது.” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வலுவிழந்து தள்ளாடுகிறது

மேற்கூறியதை ஒதுக்கிவிடுவது எளிதல்ல. ஏனெனில் ட்ரம்பின் திட்டமிட்ட ஜனநாயக படுகொலை ஒரு காலத்தில் எண்ணிப்பார்க்க முடியாதவைகளை விரிவாக விளக்குகிறது‌. அமெரிக்க ஜனநாயகம் தள்ளாடிக்  கொண்டும் எளிதில் வீழ்ந்து விடக் கூடிய நிலையிலும்தான் உள்ளது. மிக அபாயகரமான செங்குத்து பாறையின் நுனியில் தொங்கிக் கொண்டு உள்ளது. எந்த நேரத்திலும் விழுந்து விடலாம். அது ஏற்கனவே தவிர்க்க முடியாததாக உள்ளது. இன்னும் என்ன நடக்க வேண்டும். அது  உலக நாடுகளின் முரண்பாட்டினால்வல்லரசுகள் நிலை குலைந்த போதே அதாவது, சோவியத் யூனியனும் , கிழக்கத்திய முகாமும் பிரிந்த போதே கொடுக்கப்பட்ட பல எச்சரிக்கைகளையும்  கவனத்தில் கொள்ளவில்லை.

“இதுவரை எல்லாம் நன்றாகப் போய் கொண்டுள்ளதால் இவை எல்லாம் இதே போல் தொடரும் என்ற அதீத நம்பிக்கை என்ற பொதுவான உண்மையின் உந்துதலுக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள் என்றே நான் அறிகிறேன்.” என 2016  ல் ,  ட்ரம்ப்  விரும்பத்தகாத, வேட்பாளராக இருக்கும் போதே ‘ரோலிங் ஸ்டோன்’ – ல் அலெக்சாண்டர் ஹெமோன் எழுதினார்.

அவர், ” நியூயார்க்கின் தொழில் அதிபர் ட்ரம்பை  செர்பிய போர் கைதி வஜிஸ்லாவ் செசெல் (vajislav seselj) உடன் ஒப்பிட்டார். “அவர்கள் பரப்புரை, பொருத்தமற்ற, எனினும் வன்முறைக்கு அடையாளமான இந்த பொருத்தமற்ற, வன்முறைக்கான ஏக்கம் வெற்று கூச்சல் அல்ல. அது நமக்கு ஒரு செய்தியை வலியுறுத்துகிறது “ என்று எச்சரிக்கிறார்.

ஹெமோன் வரலாற்று சிறப்புமிக்க, அழகுக்கு புகழ்பெற்ற, பல்வேறு  கலாச்சாரங்களை கொண்ட,’ பால்கன் பகுதி மக்களின் ஜெருசலேம்’ என்றழைக்கப்பட்ட யூகோஸ்லாவிய நாட்டில் உள்ள செரஜூவோ நகரில் பிறந்து வளர்ந்தவர். 1992 ல், அமெரிக்கா வந்த போது போஸ்னிய  போர் துவங்கிவிட்டதால் எதிர்பாரா விதமாக அங்கேயே தவித்து நிற்க வேண்டியதாயிற்று. அவரது சொந்த நகரம் நவீன போர் வரலாற்றிலேயே எந்த ஒரு நாட்டின் தலைநகருக்கும் ஏற்பட்டிராத மிக நீண்டகால முற்றுகையால் அவதிக்குள்ளானது. . இறுதியில் அவரது நாடும் இரண்டாக பிரிந்துவிட்டது‌‌  மிகுந்த மனக் கவலையுடன், ஆனால் மிக அழுத்தமாக, அனைவரும் ஏற்கத்தக்க சிறந்த ஆங்கில எழுத்தாளராக தன்னை உருவாக்கிக் கொண்டார் ஹெமோன்.   கலாச்சார இடம்பெயர்வு குறித்த அவரது திறமைக்கும் , நகைச்சுவைக்கும்  சான்றாக விளங்கிய மிகச் சிறந்த நாடகத்திற்காக , 2004 ல் மெக் ஆர்த்தர் அமைப்பின்  ‘அறிவுஜீவிகளுக்கான நிதியை’ வென்றார். அவர் தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆக்கபூர்வமாக எழுதும் கலை பற்றி கற்பித்துக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் மிக ஆழமான உட்பார்வையுடன் ஹெமோன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில், “ தொடர்ந்து உருக்குலைந்த பண்பட்ட ஒரு கச்சிதமான ஒன்றியத்தின் இறந்த அரசியல் உடலை,   ஆடாமல் அசங்காமல் ஒரு வினோதமான துணியில் சுற்றி  கொண்டு வருகிறார்கள்.  அமெரிக்கர்களோ அதனை அளவுக்கு மீறிய அசாதாரணமான ஒன்றாகவே கருதுகிறார்கள். எனவே, அவர்களிடம் இன்று அதிர்வை உண்டாக்குவது கடினம்.  இவர்கள் இருக்கும் இந்த  மன மற்றும் ஆன்ம நிலை ,  யூகோஸ்லோவிய பிரிவினையை அனுபவித்து வரும்  எங்களுக்கு  புதிதல்ல.  நாங்கள் அறிந்தது போல்,  மக்களுக்கிடையேயான  நல்லுறவிற்கும், சமூக யதார்த்தத்திற்கும் அல்லது  மக்கள் பகிர்ந்து கொண்டுள்ள  சமூக அனுபவத்திற்கும்  அரசு மிகப்பெரிய விலையை நிர்ணயித்துள்ளது.”

மேலும் அவர்,” இந்த விசித்திரமான அமெரிக்க தேசியவாதம் புதிய ஒன்றல்ல. அமெரிக்க மக்கள் பலமுறை இப்படி பொய் கூறி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த திட்டமிடப்பட்ட, வெட்கக்கேடான பிரிவினை வேலை , அரசியல் நிகழ்வின்  ஒரு பகுதியாகவே  நடந்து வருகிறது.  அமெரிக்க பத்திரிகைகள் மற்றும் பிற செய்தி ஊடகங்களில் உள்ள ‘’அறிவாளிகள்’ உள்ளிட்ட அமெரிக்க மக்கள் , இதனை அரசியலில் நுழைவதற்கு மட்டுமல்ல உயரிய இடத்திற்கு வருவதற்கும் தேவையான மன உறுதியின்  வகையாகவே  பார்க்கின்றனர். ஒரு அரசியல்வாதி பொய்களை அள்ளி வீசி , சூழ்ச்சிகளை கையாள்வதை பார்த்து  அதிர்ச்சி அடைவது, கால்பந்தாட்த்தில் எதிரணி  வீரனை, நடுவர் பார்க்காதபோது வேண்டுமென்றே தவறாக தாக்குவதைப்  (foul)  பார்த்து அதிர்ச்சி அடைவது    போன்றதுதான். ஆட்டத்தில்  இது போல்  நடப்பது வழக்கம்தான் என நினைப்பது  போன்றதுதான். எனினும் நம்மில் சிலருக்கு இந்த ஆட்டம் எப்படி முடியும் என தெரிந்ததுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.” என்று சுட்டிக் காட்டுகிறார்.

ஆமாம், இது 21ம் நூற்றாண்டில் உலகில் உள்ள  ஒட்டு மொத்த மக்களாட்சிகளையும் இறுக்கி கட்டிய மெய்நிகர் காட்சிதான். ஏனெனில்  ஹெமோனின் பகுப்பாய்வு, இங்கிலாந்தின் போரிஸ் ஜான்சன், பிரேசிலின் ஜயர் போல்ஸோனரோ , ரஷ்யாவின் புடின், மற்றும் இந்தியாவின் நரேந்திர மோடி இன்னும் இது போன்ற பல ஆட்சியாளர்களுக்கும் சமமாகப் பொருந்தும் ஒன்றாகும். இங்கே கொங்கன் கடற்கரையில் அமர்ந்து கொண்டு, அவரது கூர்நோக்கு பார்வையை கண்டு நானும் அதிர்வை உணர்ந்தேன்.  அதாவது , கூறப்படும் பொய்களுக்கு  போதுமான எதிர் விளைவுகள் இல்லாத நிலையில்,  தொடர்ந்து பொய்களை அள்ளி தெளிப்பது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வழியாகும்.  அது எவ்வளவு மிகையாக இருந்தாலும் அதுவே அதிகாரத்தை  அளக்கும் அளவுகோல் ஆகும். அறிவற்ற நெருக்கம் கொள்வது , வெற்று வாய் வார்த்தைகளால் நிரம்பி வழியும்  விவாதங்களை  நடத்தி, அனைவரையும் தனது தாளத்திற்கேற்ப  நடனமாட செய்து,  கொலை செய்வதாகும்.  இவ்வகையில் அடக்கு முறையை இணக்கமாக நடத்த குண்டாந்தடிகளை பயன்படுத்துவது அர்த்தமற்றதாகும்.”

 வாழ்நாள் சலுகையும் அதிகார வன்முறையும்

நான் ஹெமோனின் டிவிட்டர் பதிவுகளை வியப்புடனும் அதே சமயம் பயத்துடனும்  தொடர்ந்து வருகிறேன். அவர் அமெரிக்காவில் நடப்பனவற்றை கூர்ந்து கவனித்து தவறாமல் இலக்கை  தாக்குகிறார்.  பிடேன்- ட்ரம்ப் விவாதம் முடிந்த உடன் நான் அவரைத் தொடர்பு கொண்டு, நீங்கள் மேற்கத்திய ஜனநாயகத்தின்  முன் மாதிரி  மீது  கொட்டப்பட்ட சமீபத்திய குப்பைகளை  கொண்டு என்ன  செய்வீர்கள் என கேட்டதற்கு அவர், “ ட்ரம்ப் தனது அரசியல் தந்திரங்கள் மூலம் – அவை உள்ளுணர்வால் வந்தவை, வாழ்நாள் சலுகையைத் தரும் பொருளாக நினைத்திருக்க மாட்டார் எனவும், மேலும் அவர் கொடுமைப்படுத்துவதற்கும், வார்த்தைகளால் அவமதிப்பதற்கும் இன்னும் இது போன்ற பிறவற்றிற்கும் நாள் தோறும் பயிற்சி செய்கிறார் எனவும் நான் எண்ணுகிறேன். “ என்று செய்தி அனுப்பி உள்ளார்.

ஹெமோன் எனக்கு  ட்ரம்ப் வருகையை  அடையாளம் காட்டிய  குடியரசு கட்சியின் ஆரம்பகால விவாதங்களை நினைவு படுத்தினார். என்னை வியப்பிலாழ்த்தியது என்னவென்றால், 17 தேர்வாளர்களில்  ட்ரம்ப் மட்டுமே எந்த ஒரு திட்டவட்டமான கருத்தியல் வடிவமைப்பையும் கொடுக்க வேண்டிய  தேவைப் பற்றி கவலைப் படாதவர். மற்றவர்கள் எல்லோரும், ரீகனின் பெருமை பற்றியும் அல்லது சிரியா அரசாங்கம் பற்றியும் அல்லது பைபிள் பற்றியும்- தங்களது உளவியல் ஆர்வத்தை ஏதோ ஒரு வகையில் சமூகம் மற்றும் அரசியலுடன் இணைத்து  பேசினர். ட்ரம்ப் முன் வைத்தது ஒன்றே ஒன்றுதான். அது தடையற்ற ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறைக்கு உறுதிமொழி, மற்றும்  இனவெறிக் கொள்கையுடன் ஆணாதிக்க வெறி அல்லது பெண்கள் மீதான வெறுப்புணர்வை இணைத்து பழிவாங்குதல் ஆகியவையே.

இது தவிர, “ பழம்பெரும் கட்சி’ (குடியரசு கட்சி) யின் முதல் தலைமுறை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் நாசவேலை செய்வதற்கும், பழிவாங்கவுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட அந்த வேலையை முழுமையாகச் செய்து வருகிறார். பிடேனுடனான அவரது விவாதத்தில் இந்த ஒட்டு மொத்த நடன பாடத்தையும் மீண்டும் ஆடிக் காண்பித்துள்ளார். இதிலிருந்து ட்ரம்பும் குடியரசு கட்சியும் அறிந்து கொண்டது என்னவென்றால், தங்களுக்கு மக்களிடம்  தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றிபெற வேண்டும். அதற்காக அவர்களுக்கு உறுதியான, முட்டாள்தனமாக ஆதரிக்கக் கூடிய, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ,வன்முறை உட்பட எதையும் செய்யத் தயாராக உள்ள ஒரு மைய குழு வேண்டும். அதற்காக அவர்களை முதலில் ஊக்கப்படுத்த வேண்டும். இதனால்தான் அவர்கள் முழுக்க முழுக்க வெள்ளை இன மேலாதிக்கத்தில் உறுதியானவர்களாக உள்ளனர். கோவிட்-19 நெருக்கடியையும் இதற்கான வாய்ப்பாகவே பார்க்கிறார்கள். குழப்பமான சூழல் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும் .”

அடிமட்டம் மிகவும் கவலைக்குறியதாக உள்ளது என்று கூறும் ஹெமோன், “முரண்பாடுகளை உருவாக்கி அதை வளர்க்கும் ஒரு தரமான தேசியவாத மாதிரியை நான் காண்கிறேன். ஏனெனில் அதன் மூலம் எதிரியை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கின்றார்கள். அவர்கள் அழித்தொழித்து பின்வாங்கும் போர்தந்திர முறையில் இருக்கிறார்கள். குடியரசு  கட்சி புரட்சிகரமான கட்சி, அது ட்ரம்ப் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லா வகையிலும் முயற்சி செய்யும். இந்த போக்கை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ட்ரம்ப்வாதிகள் ஒருநாளும் பின்வாங்க மாட்டார்கள்.  சச்சரவுகளை உருவாக்கி வளர்த்து, அது பெரும் வன்முறையாக மாறும் வரை ஓய மாட்டார்கள்.  இதனை அமெரிக்க அரசியல் அமைப்பின் வரம்புக்குள் தீர்க்க இயலாது. ஏனெனில் அது வழக்கொழிந்ததாகவும் மிகவும் பலவீனமாகவும் உள்ளது. கண்டிப்பாக எப்போது வேண்டுமானாலும் உடையலாம். அதன் சாம்பலிலிருந்து மேலான , வித்தியாசமான ஏதாவது ஒன்று எழும் என நம்புகிறேன்.”

அதன் வீண் தற்பெருமைமிக்க நிறுவனமயமான வலிமையாலும், அரசியல் சூழலில் உள்ளும் புறமும் இருக்கும் மாபெரும் எதிர்ப்பு சக்திகளாலும், மற்றும் பிற உலக நாடுகளுக்கு இன்னும் முன்மாதிரியாக உள்ள செயற்பாட்டாளர்கள் மிகுந்த ஊடகங்களாலும் அமெரிக்காவில் அவ்வாறு நடந்தால், இத்தகைய வாய்ப்புகள் எதுவுமே இல்லாத இந்தியா போன்ற  நாடுகளைப் பற்றி எப்படி நம்பிக்கையோடு இருக்க முடியும்?

இதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் கடந்த ஆண்டு ஸ்குரோல் இணையதளத்தில், வரலாற்றாசிரியர்  க்யான் பிரகாஷ் எழுதியதை நான் இங்கு நினைவு கூர்கிறேன். “ என்னால் இந்தியாவின் மோடியையோ, அமெரிக்காவின் ட்ரம்பையோ, துருக்கியின் எர்டோகனையோ, ஹங்கேரி யின் ஆர்பன்னையோ இருட்டடிப்புச் செய்ய முடியாது. இந்த எல்லா வளர்ச்சியிலும் நான் ஜனநாயகத்தின் சாதாரணமான நிலையிலிருந்து ஏதோ ஒரு மாறுபட்ட ஏற்ற இறக்கங்களைக் காண்கிறேன்‌. ஏனெனில் இவர்கள் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். ஜனநாயகத்தின்  முக்கிய நிறுவனங்களான, சட்டத்தின் ஆட்சி, சமத்துவ கோட்பாடு, சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினர் கருத்து போன்றவை தேச நலன் என்ற பெயரில் அழிக்கப்படுகின்றன என்பது கண்கூடு…. தற்கால ஜனநாயக சவால்களுக்கு நெருக்கடி கால வரலாற்றுப் புத்தகத்தைப்பற்றியும் பேச வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது.

“ பிரகாஷ் நாற்பது ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தவர் . முப்பதாண்டு காலம் பிரின்ஸ்டன் கல்லூரியில் பணியாற்றியவர். தற்போது டேய்டன்- ஸ்டாக்டனில் வரலாற்று பேராசிரியராக உள்ளார்.  நியூஜெர்சியிலிருந்து மின்னஞ்சலில் அவர், “ விவாதங்களின் பங்கு மிகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. அரசியல்,  ஊடகமயமானதால் அவர்கள் அதை ஒருவர் வெல்வதும் மற்றொருவர் தோற்பதுமான ஏதோ ஒரு விளையாட்டு நிகழ்ச்சியைப் போல் திசை திருப்பி விட்டனர். தவறுகளை மூடிமறைக்கும் செயல்,  பிரச்சினைகள் பற்றிய  பெரும் அளவிலான விவாதங்களை  ஒதுக்கித் தள்ளிவிட்டது. சரியாகச் சொல்வதெனில் இந்த’  விவாதம்’ இதுவரை நடைபெற்ற தீய  செயல்களின் உச்சமாக இருந்தது.”என்று எழுதி உள்ளார்.

பிரகாஷை பொறுத்தவரை, “ Undoing the Demos”  என்ற புத்தகத்தில் வென்டி ப்ரௌன் விவாதிப்பதைப் போல, நவீன தாராளமயத்தின் சந்தை கொள்கையை உயர்த்திப் பிடிப்பது ஜனநாயகத்தை வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சாதாரண விளையாட்டு போட்டியாக மாற்றி விட்டது. பொதுமக்கள் நலனுக்காக போராடுவது என்பதற்கு பதில், சந்தை தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் வேறொரு அரங்கமாக மாற்றி விட்டது.  இதுதான் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்திற்கான மூலத்தை  அவமானப்படுத்தி, வீழ்த்தி விட வேண்டும் என்ற, கருணை அரசியலின்  பொருளடக்கத்தின் பொருளடக்கமாகும். ட்ரம்ப் இதில் மோடியைப் போலவே  மிகவும் கைதேர்ந்தவர். இந்த உண்மையை கருத்தில் கொண்டால், ட்ரம்ப் தன் எதிரிகளான பிடேன், இடதுசாரிகள், கருப்பினத்தவர், பாசிச எதிர்ப்பு போராளிகள் (Antifa) ஆகிய அனைவரையும் கடுமையாகத் தாக்கவும் அவமானப்படுத்தவும் தீர்மானித்து இந்த மேடையை பயன்படுத்தி உள்ளார். பாவம் நெறியாளர் கிறிஸ் வேலஸூம் இதிலிருந்து தப்பவில்லை!”

ஒரு புதிய உலகம்

ஹெமோனின் முடிவுகளின் படி, நமது யூகங்கள் சற்றும் மறுக்க முடியாதவை”  என்கிறார் பிரகாஷ். “ நாம் வெறும் ஜனநாயகத்தின் அழிவை மட்டும் அனுபவிக்கவில்லை, ஆனால் புதிய ஏதோ ஒன்று உருவாவதையும் காண்கிறோம். நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் தாராளமயவாதிகள், இந்த அழிவு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், பழைய தாராளவாத ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்றும்  எதிர்பார்க்கிறார்கள்.  இது சமூகத்திலும் அரசியலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை  தவற விட்டு விடுகிறது. இந்த மாற்றத்தை , மேலோட்டமாக  கவர்ச்சி அரசியல் என்பதிலிருந்து கூறுகிறோம். ஆனால் இது முழு மாற்றத்தின் அடியாழத்தை உள்ளடக்கிய ஒன்றல்ல.  நவீன தாராளமயமாக்கல் பொருளாதாரத்தினால் வேரறுக்கப்பட்ட, மாற்றப்பட்ட மக்களைக் கணக்கில் கொண்டால்; அனைத்தையும்  ஊடகமயமாக்குவது; இனவெறிக்கும், வெறுப்புக்குமான மேடையாக இருக்கும் சமூக வலைதளங்களில் விரிவான பங்கு; ஆகியவற்றின் மூலம் ,  தாமஸ் ஆன்லைன் கூறுவது போல  ‘ஜனநாயகத்தை உள்ளூர்மயமாக்கல்’ (vernacularisation) , புதிய மாறுபட்ட உலகம் உருவாவதன் முழு வரைபடத்தைக் காணமுடியும்.”

“ உலக அளவில் இது உண்மைதான். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடப்பவற்றை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுஷாந்த் சிங் விவகாரத்தில் ஊடகங்களும் அரசும் நடந்து கொண்ட விதம், அத்ராஸ்  அட்டூழியம், அரசு நீதித்துறையை கையாளும் விதம் ஆகியவை அந்த போக்கின் வெளிப்பாடுகளே‌. இதற்கும்,  ஃபாக்ஸ் நியூஸ் பரப்புரை, மீண்டும் அமெரிக்காவை உயர்வு ஆக்குவோம் (MAGA) அடாவடி செயல்கள், நீதித்துறையில், அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞரை வழக்கறிஞர் சங்கம்  பழிவாங்கிய  விதம் ஆகியவற்றிற்கும்  ஏதோ சில  ஒற்றுமைகள்  இருப்பதை  நாம் பார்க்க முடியும். இரு வேறு வரலாறுகளால், முக்கிய சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சிலசமயம் எது அதிக அச்சுறுத்தலை தருவது என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.”

கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி- அமித்ஷா கூட்டணி, இந்திய ஜனநாயகத்தை நாசமாக்கிக் கொண்டிருப்பதை,  பொதுவாக, “ அமைதியான நெருக்கடி நிலை அறிவிப்பு “ என கூறலாம். ஆனால், பிரகாஷ் , “ அந்த எண்ணம் நடப்பதை முழுமையாக புரிந்து கொண்ட ஒன்றாக நான் நினைக்கவில்லை. நான் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை அறிவிப்பை சட்டப்படியான சட்ட முடக்கம் என்று கூறுவேன். ஆனால் இப்போது இங்கே சட்டப்படி நடப்பதாக நடிப்பது கூட இல்லை! அரசு காஷ்மீரில் என்ன செய்தது , தலைமை நீதிமன்றம் என்ன செய்தது என்ன செய்யத் தவறியது, சட்டத்தின் வலிமையை உறையிட்டு மறைக்கும் முயற்சியைக் கூட செய்யவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.  இரண்டாவதாக, அத்ராஸ், மற்றும் அதற்கு முன்பும் கூட, கொலை செய்வது, வன்முறை கும்பல்களால் தாக்கப்பட்டு,  கொடூரமாக படு கொலை செய்யப்படுவது, இந்துத்துவா மற்றும்  உயர்சாதி கும்பல்களால் அச்சுறுத்தப் படுவது,  ஆகியவை தெருக்களில் நிகழும் வன்முறைகளுக்கும், அரசின் செயல்பாடுகளுக்கும் ஒருங்கினைப்பு  இருப்பதைக் காட்டுகிறது.

“ நெருக்கடி நிலை காலத்திலும் சித்திரவதை நடத்தியதாக பல வழக்குகள் வந்தன. அதோடு வியப்பூட்டும் தூய்மைப் படுத்துதல் பற்றிய பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டதுதான். ஆனால் தற்போது இருப்பது  போல வீதிகளில் நடக்கும் வன்முறைக்கும் அரசுக்கும்  கூட்டு இருக்கவில்லை. அதோடு இந்திரா காந்தியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை , இந்துத்துவா மதவெறி கும்பலின் வலிமையுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. மேலும், அப்போது முன் நிறுத்தப்பட்ட ,”பேச்சை குறை உழைப்பை பெருக்கு” போன்ற முழக்கங்களை யாரும் ஒரு பொருட்டாக பெரிதும் மதிக்கவில்லை. மறுபுறம்  பஜக ஆட்சியில், ஆர்எஸ்எஸ் மிகப் நீண்ட விளையாட்டை ஆடுகிறது. அது திட்டமிட்ட வகையில் அனைத்து அரசுத் துறைகளையும் ஆக்கிரமித்து வருகிறது.  இதன் விளைவுகளை இந்தியா பல ஆண்டுகள் அனுபவிக்க நேரிடும். இதனால்தான் நான் ,” அமைதியான நெருக்கடி நிலை அறிவிப்பு” என்பதை இந்த அரசின் ஜனநாயக விரோத போக்கையும் , நடவடிக்கைகளையும் முழுமையாக புரிந்து கொண்ட ஒன்றாக என்னால் நினைக்க முடியவில்லை என கூறுகிறேன் “ என்று முடிக்கிறார் பிரகாஷ்.

(www.scroll.in இணையதளத்திற்கு ‘விவேக் மெனேசஸ்’ எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்