Aran Sei

மனுதர்மத்தை அம்பேத்கரும் கொளுத்தினார் – ஆனந்த் டெல்டும்டே

“எல்லாப் பெண்களுமே விபச்சாரிகள்தான் கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள் இது பிராமணப் பெண்களுக்கும் பொருந்தும் அடிநிலையில் கிடக்கிற இதரப் பெண்களுக்கும் பொருந்தும்“ என்று மனுதர்மம் கூறுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய காணோலி சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பல்வேறு எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உண்டாக்கி இருக்கிறது.

“புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மதைக் கொளுத்துவோம் என்று கொளுத்தியிருக்கிறார். அதேபோன்று பெரியாரும் கொளுத்தியிருக்கிறார்” என்றும் அவர் கூறியிருந்தார்.

அம்பேத்கர் மனுதர்மத்தைக் கொளுத்தியது பற்றி டெல்டும்டே தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. சாதி தொடங்கிய காலம் தொட்டு தலித்துகளின் எழுச்சி வரை  சமகால தலித்துகள் வாழ்வியலை அழுத்தமாக விவரிக்கும் ஆனந்த் டெல்டும்டேவின் `தலித்துகள்: நேற்று இன்று நாளை’ என்கிற நூல் பாலு மணிவண்ணன் மொழியாக்கத்தில் சமீபத்தில் தமிழில் வெளியாகியுள்ளது.

“பொதுக்கிணற்றில் நீர் எடுக்க பம்பாய் சட்ட மேலவையும் மஹத் நகராட்சி மன்றமும் அனுமதித்திருந்த நிலையில் இந்துமத அடிப்படைவாதிகள் அம்பேத்கர் தலைமையிலான ஊர்வலத்தைத் தடுத்தனர்” என்றும் “அவர்கள் நடத்திய வன்முறையில் நிறைய பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு எதிர்வினையாக அன்று தலித்துகளால் மனுதர்மம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது” என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

“அம்பேத்கர் முதன்முதலாகத் தலைமையேற்ற போராட்டக் களம் கொங்கன் மாகாணத்தில் உள்ள மஹத்! பம்பாயிலிருந்து 170 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஊரில் ஆர்.பி.மோரே என்னும் இளைஞரின் முயற்சியால் கொங்கன் இலாக்கா மகர் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கு நிறைவுற்ற பின் பிரதிநிதிகள் அனைவரும், அம்பேத்கர் தலைமையில், அங்குள்ள ‘சௌதார்’ பொதுக் கிணற்றில் நீர் அருந்த ஊர்வலமாகச் சென்றனர். மகர்கள் இங்கு நீர் அருந்த ஏற்கெனவே பம்பாய் சட்ட மேலவையும், மஹத் நகராட்சி மன்றமும் அனுமதித்திருந்த நிலையில் இந்துமத அடிப்படைவாதிகள் அம்பேத்கர் தலைமையிலான ஊர்வலத்தைத் தடுத்தனர். அவர்கள் நடத்திய வன்முறையில் நிறைய பேர் படுகாயம் அடைந்தனர்.

ஊர்வலத்தில் வந்த மகர்கள் நிறையப் பேர், முதல் உலகப் போரில் ஈடுபட்ட வீரர்கள். அவர்கள் எல்லாம், தாங்கள் திருப்பித்தாக்க அனுமதிக்க வேண்டுமென அம்பேத்கரிடம் கேட்க, அவர் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் பின் டிசம்பர் 25-27 தேதிகளில் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தார் அம்பேத்கர். சௌதார் கிணற்றை மீட்கும் போராட்டத்தில் மகர்கள் உள்ளிட்ட தலித்துகள் ஈடுபடுவர் என்று அம்பேத்கர் அறிவித்ததும், மராத்தி பேசும் பகுதிகளின் தலித்துகள் 10,000க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். ஆனால் அன்றும் மகர்கள் அந்தக் கிணற்றுத் தண்ணீரை அருந்த முடியாமல் போனது. காரணம்? அந்தக் கிணறு பொதுக்கிணறு இல்லை; தனியாருக்குச் சொந்தமானது என்று உயர் சாதி இந்து மத அடிப்படைவாதிகள், ஆதாரம்காட்டி கோர்ட்டில் இடைக்கால உத்தரவைப் பெற்றுவிட்டனர். கோர்ட்டின் தடை உத்தரவை மீறுவதற்கும், சத்தியாகிரக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் மக்கள் முன்வந்தபோதும், அம்பேத்கர் அவர்களைத் தடுத்துவிட்டார்.

இந்துமத அடிப்படைவாதிகளின் வன்முறையை வன்முறையால் தடுப்பதில்லை; அரசோடு முரண்படுவதில்லை; சாதிப் பிரச்னையை எதிர்த்து சமூகக் கலாச்சார அடிப்படையில் போராடுவது என்னும் மூன்று வழிகளைக் கடைப்பிடிக்குமாறு அம்பேத்கர் வலியுறுத்தினார். எதிர்கால தலித் இயக்கங்களின் மூன்று அடிப்படைகளாக இம்மூன்று நெறிகளை மட்டுமே கடைப்பிடிப்பதென உறுதி ஏற்கப்பட்டது. இந்த மாநாட்டில்தான் சாதிக்கு அடிப்படை வகுத்த ‘மனுஸ்மிருதி’ தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இந்து மதத்தின் நீதியற்ற சட்டதிட்டங்கள் அன்று எரிந்ததன் சாம்பலில்தான், அடுத்த 10 ஆண்டுகளுக்குப்பின் தலித்துகளின் உரிமை சட்டவடிவம் பெற்றது.

அம்பேத்கர் மனுதர்மத்தை எரித்த இடம்

மஹத் சம்பவத்திற்கு முன், தலித்துகளின் போராட்டங்கள் இந்து சமூகத்தில் உள்ள முற்போக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று அம்பேத்கர் நம்பினார். அந்த நம்பிக்கையை மஹத்தில் கிடைத்த கசப்பான அனுபவங்கள் முடிவுக்குக் கொண்டுவந்தன!. எனவே, அம்பேத்கர் அரசியலின் பக்கம் கவனத்தைத் திருப்பினார்! மகர்கள் இந்து மதத்தைப் புறக்கணித்து, இஸ்லாம் மதத்தில்கூடச் சேரலாம் என்று வலியுறுத்தினார். அதற்குச் செவிமடுத்து அப்போதே 20 குடும்பங்கள் இஸ்லாத்துக்கு மாறின.” என்று அந்த புத்தகத்தில் ஆனந்த டெல்டுடே எழுதியுள்ளார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தபடி மனுஸ்மிரிதியைத் தடை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்