Aran Sei

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

முதலில் முக்கியமானது. விவசாயிகள் விவசாயப் பொருட்களை விற்பதற்கான இப்போதைய மண்டி முறையில் பாலாறும் தேனாறும் ஓடவில்லைதான்.

இப்போதைய முறையில், போதுமான சந்தைகள் இல்லை, வியாபாரிகள் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள், சந்தை குழுக்களில் அரசியல் சக்திகள் உள்ளன என்பன உட்பட பல விஷயங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன.

மத்திய அரசு இந்த விவசாய மசோதாக்களைக் கொண்டு வருவதற்கான சொல்லப்படாத காரணமாக, பரிந்துரைக்கப்படும் சீர்திருத்தங்களை மாநில அரசுகள் அமல்படுத்துவதில்லை என்று சொல்லப்பட்டாலும், 2003-க்குப் பிறகு இந்திய அரசின் மாதிரி சட்டத்தைப் பயன்படுத்தி பல மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன என்பதைக் குறிப்பிட வேண்டும்.

மேஹ்சானா மாவட்டத்தில் ஜீரக மண்டி ஒன்று
மேஹ்சானா மாவட்டத்தில் ஜீரக மண்டி ஒன்று

அதே நேரம், ஒழுங்குமுறைகளை நீக்கி விட்ட பீகார் போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் நிலைமை குறிப்பிடும்படி மேம்பட்டு விடவில்லை.

கொரோனா நோய்த் தொற்று, இந்தப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.

தெலங்கானா என்ற ஒரே ஒரு மாநில அரசு மட்டும் கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மிகவும் வித்தியாசமான நடவடிக்கையை எடுத்தது. பொது முடக்க காலத்தில் விவசாய விளைபொருட்களை கிராமங்களிலேயே குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதை பெருமளவு உறுதி செய்தது. இதன் மூலம் மாநிலத்தின் முக்கியமான விவசாய பொருட்களுக்கு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்தது.

தெலங்கானா அரசின் இந்த செயல்பாடு இந்த விவசாய அவசர சட்டங்கள் மூலமாகவும் மசோதாக்கள் மூலமாகவும் மத்திய அரசு செய்ய முயற்சிப்பதற்கு நேர்மாறானது என்பதில் சந்தேகமில்லை.

இந்த புதிய சட்டங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு மாதிரி APMC சட்டம் 2003-ன் கீழ் மாநிலங்கள் செய்து முடித்துள்ள சீர்திருத்தங்கள் இப்போது எப்படி உள்ளன என்பதைப் பார்த்து விடுவது முக்கியமானது. கீழே தரப்பட்டுள்ள அட்டவணை மாநில விவசாய அமைச்சர்களுக்கு ஜூலை 8, 2019 தேதியிட்ட மத்திய அரசு கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலானது. அவசரமான இந்த சட்ட மாற்றங்களுக்கான எந்த நியாயமும் இல்லை என்பதை அட்டவணை காட்டுகிறது.விவசாயிகளின் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (வளர்த்தல் மற்றும் வசதிசெய்தல்) மசோதா 2020-ஐ எடுத்துக் கொள்வோம். இதனால் பாதிக்கப்படும் பிரிவினருக்கு புரியும்படி இதனை “APMC புறக்கணிப்பு மசோதா 2020” என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இந்த மசோதாவின் நோக்கம் அதுதான்.

மாநில அளவிலான APMC-கள் சட்டத்தின் கீழ் விவசாயிகளின் உரிமைகள் ஒருபோதும் வரம்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு APMC சட்டங்கள் கொண்டு வரப்பட்டதற்கு அடிப்படையான விவசாயிகள் சந்தை பரிவர்த்தனைகளில் சுரண்டப்படுவது என்ற காரணம் இன்னும் தொடர்கிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சிறு, குறு விவசாயிகள் நிலைமை இன்னும் எந்த வகையிலும் மாறி விடவில்லை. உண்மையில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களில் 36% மட்டுமே ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இருப்பினும் சந்தைகளுக்கு வெளியில் செயல்படுவதில் வர்த்தகர்கள் மீதும் வாங்குபவர்கள் மீதும் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தகம் குற்ற நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றாலும் அதை ஒழுங்குபடுத்தல் நீக்கம் தேவை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

விவசாயிகள் விலை தொடர்பாகவும், தரம் பிரித்தல், எடை போடுதல், ஈரப்பதம் அளவிடுதல் போன்ற விலை அல்லாத பிற விஷயங்கள் தொடர்பாகவும் கூட்டு பேரம் நடத்துவதற்கான இடமாக APMC-க்கள் உள்ளன. அரசுக்கு விலை தொடர்பான புள்ளிவிபரங்கள் மண்டிகளில் இருந்து வருகின்றன. உணவு திட்டங்களுக்காக கொள்முதல் செய்வதைத் தாண்டி சந்தைகளில் அரசின் தலையீடு இந்தத் தகவல்களைப் பொறுத்தே உள்ளது. இப்போது செய்ய முயற்சிக்கப்படும் சீர்திருத்தங்களுக்கு அப்பால் இந்த மசோதாக்கள் APMC-க்கள் மீது செலுத்தவிருக்கும் தாக்கம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

போராடும் விவசாயிகள்
போராடும் விவசாயிகள்

‘APMC புறக்கணிப்பு மசோதா’வின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று அது இணையான மிகவும் வேறுபட்ட, வெவ்வேறு விதிமுறைகளைக் கொண்ட இரண்டு சந்தைகளுக்கு வழிவகுக்கிறது என்பது. APMC அமைப்பு உருக்குலைந்து சிதைந்து போகும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

APMC மண்டிகளில் வர்த்தகர்கள் உரிமம் எடுத்துக் கொள்ளவும், கண்காணிப்புக்கு உட்படவும், கட்டணம் செலுத்தவும் வேண்டியிருக்கிறது. புதிய அமைப்பு முறையில் ஏற்கனவே செயல்படும் வர்த்தகர்கள் தமது கமிஷன் ஏஜென்டுகளுடன் வர்த்தகம் செய்வதற்கு மிகவும் தயாராக உள்ளனர். அவர்கள்தான் முதன் முதலில் மண்டி ஏற்பாட்டிலிருந்து வெளியேறி வெளியில் செயல்பட ஆரம்பிப்பார்கள். இது மண்டிகள் சீர்குலைவதற்கு இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், e-NAM (மின்னணு வர்த்தகம்) நாட்டின் மண்டி கட்டமைப்பின் மீதுதான் செயல்படுகிறது, அதற்கு இணையாக செயல்படவில்லை. பெரிய அளவு வர்த்தகம் இல்லாமல் மண்டிகள் அழிக்கப்பட்டு விட்டால், e-NAM விவசாயிகள் பங்கேற்புடன் நடக்குமா என்பது பதில் தெரியாத கேள்வி.

இதற்கிடையே, ‘வர்த்தகப் பகுதி’ என்று அழைக்கப்படும் புதிய ஒழுங்குபடுத்தப்படாத சந்தைவெளி மீது எந்தக் கண்காணிப்பும் இருக்காது. அதில் பங்கேற்பவர்கள் யார் யார், யார் யாருடன் பரிவர்த்தனை செய்கிறார்கள், என்ன அளவுகளில் பரிவர்த்தனைகள் நடக்கின்றன, என்ன விலைகளில் வர்த்தகம் நடக்கிறது என்பது பற்றி அரசுக்கு தகவல்களோ, நுண்ணறிவோ இல்லாமல் போய் விடும். நுண்ணறிவு இல்லை என்பது அரசு சந்தையில் தலையிடாமல் இருப்பதற்கான மிகப்பெரிய சாக்காக போய் விடும்.

இன்றைய முறையில், மண்டிகளிலிருந்து கிடைக்கும் சந்தை தகவல்களின் அடிப்படையில் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைவதாகத் தோன்றும் போது நடவடிக்கை எடுப்பதற்கு அரசு கட்டாயப்படுத்தப்படுகிறது.

விளைபொருட்களுக்கு விலை உடனடியாகக் கிடைப்பதில்லை என்பது மட்டுமில்லாமல், சரியான விலைகளைக் கண்டறிவது தொடங்கி இன்னும் பல்வேறு வழிகளிலும் விவசாயிகள் சுரண்டப்படுகின்றனர். ஆனால், இந்த மசோதாவானது விளைபொருட்களுக்கு விலையை பெறுவது என்ற அம்சத்திலிருந்து மட்டுமே தகராறு அல்லது குறைகளை பார்க்கிறது. இதிலும் விவசாயிகள் வாங்குபவர்களிடமிருந்து அடிப்படை ஆவண சான்றுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அதன் மூலம் நியாயம் பெற முடியும் என்றும் அனுமானித்துக் கொள்கிறது.

முக்கியமாக, இந்த மசோதா விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறது. இவை உறுப்பினர்கள் முடிவுகளை எடுக்கும் நடைமுறை கொண்ட சுயேச்சையான அமைப்புகள். நாட்டில் விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் அமைப்புகள் தொடக்க நிலையிலேயே இருக்கும் போது இம்மசோதா அளவுக்கு அதிகமான ஒழுங்குபடுத்தும் முயற்சியாக உள்ளது. அவற்றை ஒழுங்குபடுத்துவது முற்றிலும் அவசியமில்லாத ஒன்று.

தொகுத்துப் பார்க்கும் போது, இந்த மசோதா விவசாயிகளுக்கு எது தேவையோ அவர்கள் எதை கேட்கிறார்களோ அதைக் கொடுக்கவில்லை. லாபகரமான விலைகளை உத்தரவாதப்படுத்துவது, சந்தையில் பங்கேற்பவர்கள், பரிவர்த்தனைகள், விலைகள் மீதான கண்காணிப்பு, எல்லா சந்தைகளையும் சமநிலையில் பராமரிக்கும் வகையில் நெறிப்படுத்தும் வகையில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளன.

பிற மசோதாக்கள்

மேலும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தமும் APMC புறக்கணிப்பு மசோதாவும் இரண்டும் சேர்ந்து விவசாயிகள், நுகர்வோர் இரண்டு தரப்பினருக்கும் எதிராக செயல்படவிருக்கின்றன. இந்த இரண்டு மசோதாக்களையும் நாம் இணைத்து பார்க்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா 2020-ஐ நாம் உணவு பதுக்கல் (கார்ப்பரேட்டுகளுக்கு சுதந்திரம்) மசோதா 2020 என்று அழைக்கலாம். பதுக்கல் என்று வழக்கமாக அழைக்கப்படுவதை இந்த மசோதா சட்ட சம்மதமாக்குகிறது. யாரிடம், எவ்வளவு சரக்கு, எங்கு இருக்கிறது என்பதைப் பற்றி அறிவதற்குக் கூட அரசுக்கு திறன் இல்லாமல் செய்கிறது. அறுவடைக்குப் பிந்தைய கட்டமைவுகளில் தனியார் முதலீட்டை ஈர்ப்பது என்ற பெயரில் இது செய்யப்படுகிறது.

இங்கு, ஒழுங்குபடுத்துவதற்கான தனது அதிகாரத்தை அரசு விட்டுக் கொடுக்காமலே தனியார் முதலீட்டாளர்களுக்கு நம்பகமான முதலீட்டுச் சூழலை உருவாக்குவது உண்மையில் சாத்தியம்தான். ஏழை நுகர்வோரின் நலன்களையும் ஏழை விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பதற்கு அத்தகைய ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்குத் தேவைப்படுகிறது. உதாரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 கொண்டுள்ள, “வட்டாரம்” என்ற கருத்தாக்கத்தின்படி அறுவடைக்குப் பிந்தைய கட்டமைவின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளை வகைப்படுத்துவதன் மூலம் ஒட்டு மொத்தமாக ஒழுங்குபடுத்தலை ரத்து செய்வதற்குப் பதிலாக நுணுக்கமான, நெளிவுசுளிவான ஒழுங்குமுறையை சாத்தியமாக்குகிறது.

உணவுப் பொருட்கள் வழங்கல் சுமுகமாக இருக்க வேண்டும் என்றால் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை அரசு எடுத்துக் கொள்வதற்கான “அசாதாரண சூழல்கள்” மசோதாவில் பட்டியலிடப்பட்ட போர், பஞ்சம் உள்ளிட்ட நான்கை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பது மிகத் தெளிவானது. இதில் பதுக்கலும் சேர்ந்தது என்பது வெளிப்படையானது. அதே போல, உணவுச் சங்கிலியில் குறிப்பிட்ட நிறுவனத்தின் போட்டிக்கு விரோதமான நடத்தைகளையும் நடப்பில் உள்ள பிற சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியாது. உணவு போன்ற அத்தியாவசிய பொருள் கிடைப்பது பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஒழுங்குபடுத்தல் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படும்.

மேலும், ஒழுங்குபடுத்தல் அமலுக்கு வரும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கும் போது விதிவிலக்கு நிபந்தனைகள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. சரக்கு கையிருப்பு வரம்பிலிருந்து விலக்கு பெறுவதற்காக ஒரு பன்னாட்டு நிறுவனம் காட்டும் ஏற்றுமதி ஆர்டர் உண்மையானதா, போலியானதா என்பதை அரசு எப்படி உறுதி செய்யும்? சரக்கு கையிருப்பு வரம்புகளை அமல்படுத்துவதற்கான விலை உயர்வு வரம்புகள் மிகவும் விரிவானவையாக இருப்பதால் அவை ஏழை நுகர்வோரை பாதுகாக்கப் போவதில்லை.

சரக்குக் கையிருப்புகளை மறைப்பதற்கு இந்த மசோதா ஏற்படுத்திக் கொடுக்கும் வழிகள் அபாயகரமான நிலைமைகளுக்கு இட்டுச் செல்லும். அசாதாரணமான சூழல்களில் உணவு கிடைப்பதில் மோசமான பிரச்சனைகளை உருவாக்கும். இதில் ஈடுபடும் நிறுவனங்கள் யார் யார், எவ்வளவு சரக்குகள் கைவசம் இருக்கின்றன போன்றவற்றை பற்றி அரசுக்கு எந்தத் தகவலும் இல்லாத நிலையில் சரக்கு வரம்புகளை அரசு எப்படி கண்காணிக்க முடியும் என்பதில் தெளிவில்லை. ஏற்கனவே இருக்கும் சட்டத்தை மாற்றுவதற்கு பதிலாக முன் அனுமானிக்கக் கூடிய வகையிலான ஒரு கொள்கையின் மூலம் முன் அனுமானிக்கக் கூடிய வகையில் ஒழுங்குபடுத்துவது ஏன் சாத்தியமில்லை என்று தெளிவில்லை.

மூன்றாவது மசோதாவான விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் & பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் மீதான ஒப்பந்த மசோதா 2020 -ஐ எளிமையாக “ஒப்பந்த விவசாய மசோதா 2020” என்று அழைக்கலாம். ‘முன்னெடுப்பவர்களும்’ விவசாயிகளும் விருப்ப ஆர்வத்தின் பேரில் செய்து கொள்ளும் ஒப்பந்தம் என்ற அளவில் அது விடப்பட்டுள்ளது. விசித்திரம் என்னவென்றால், சிவில் நீதிமன்றத்தின் சட்ட அதிகாரத்துக்கு சட்டவாத மொழியில் உறுதியாக0 தடை போடப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தி ஒப்பந்தங்கள் பற்றியும் விவசாய சேவைகள் தொடர்பாகவும் தரப்பட்டுள்ள கருத்துக்களும் வரையறைகளும் கார்ப்பரேட் விவசாயத்துக்கான பினாமி அணுகுமுறைகளாகவே முடிந்து போகும். இன்னொரு மசோதா மூலம் மண்டிகளை இல்லாமல் செய்யும் போது இந்த மசோதாவில் விலையை மண்டி விலைகளோடு இணைப்பது அர்த்தமற்று போகிறது.

தொகுத்துப் பார்க்கும் போது புதிய மசோதாக்கள் உள்ளூர் வணிகர்களுக்கு பதிலாக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருகின்றன. கூட்டு சேர்ந்து பொருட்களை வாங்கும் உள்ளூர் ஏகபோகங்களுக்கு மாறாக பெரிய ஏகபோகங்களை எதிர்பார்க்கலாம். அதே நேரம் அரசு தனது ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை தானே விட்டுக் கொடுக்கிறது. புதிய அமைப்பில் வெவ்வேறு விதிமுறைகளைக் கொண்ட தனித்தனியான சந்தைகள் மட்டுமின்றி, தனித்தனியான ஒழுங்குமுறை அமைப்புகளும் உருவாகி அது விவசாயிகளுக்கு மேலும் சமனற்ற சந்தைகளையே உருவாக்கும். இறுதியாக, மண்டிகளுக்கு வெளியே பழைய கட்டமைப்புகளை புதிதாக உருவாக்குவதில் போய் முடியும்.

விவசாயிகளுக்கு தேவைப்படுவதும் அவர்கள் கோருவதும் என்ன?

  • சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட லாபகரமான விலைகள் வேண்டும்;
  • உள்ளூர் உணவு திட்டங்களுடன் இணைக்கப்பட்ட பல்வேறு பொருட்களை அதிகபட்சம் கொள்முதல் செய்வதற்கான உறுதிமொழியை அரசு அளிக்க வேண்டும்.
  • அரசு சந்தையில் தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும்.
  • சிறு, குறு விவசாயிகளுக்கும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கும் பலனளிக்கும் வகையில் விவசாயக் கடன் அமைப்பை சீர்திருத்த வேண்டும்.
  • பயிர் காப்பீட்டிலும் பேரழிவு நிவாரணம் வழங்குவதிலும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.
  • சந்தையில் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்து அவற்றை அளவுக்கு அதிகமான ஒழுங்குபடுத்தலில் இருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த மசோதாக்கள் அவ்வளவு சிறப்பானவை என்று அரசுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த மசோதாக்கள் தொடர்பான எல்லா விபரங்கள் மீதும் நாடாளுமன்றத்தின் முறையான பரிசீலனையை அது தவிர்க்கக் கூடாது. மசோதாக்களை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் தமது கட்சி அரசியலை முன் நிறுத்தாமல் விவசாயிகளின் நலன்களை முன்நிறுத்தி மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.

– கவிதா குருகான்டி
(கட்டுரையாளர் ஆஷா-கிசான் ஸ்வராஜ்-ஐ சேர்ந்தவர்)
கட்டுரை, படங்கள் நன்றி : thewire.in

(மொழியாக்கம் செய்யப்பட்டது)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்