Aran Sei

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை – அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி சாத்தியமா?

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி என்ற ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2.06 கோடி குடும்ப அட்டைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசு பணியாளர்கள் எண்ணிக்கை தோராயமாக 15 லட்சம் வரை இருக்கலாம். இந்த 15 லட்சம் பணியாளர்களும்  அமைப்புசார் (organized sector) பணிகளில் உள்ளவர்கள் என்று அரசு அறிக்கை கூறுகிறது. இதில் இரு வகையான பணியாளர்கள் உள்ளனர். ஒன்று அரசாங்க பணியாளர்களுக்கான அனைத்து சலுகைக்குகளையும் பெரும் நிரந்தர அரசு பணியாளர்கள். இரண்டு, அரசு ஊழியர் என்ற அங்கீகாரம் இல்லாமல் தற்காலிக அல்லது ஒப்பந்த முறையில் செய்து வரும் லட்சக்கணக்கானவர்கள். இவர்களுக்கு வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, விடுமுறை படிகள், போக்குவரத்து, மருத்துவ பாதுகாப்பு போன்றவை கொடுக்கப்படுவதில்லை. இந்த விவரங்களை வைத்து பார்க்கும் போது 1.91 கோடிஅரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் – வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை

இது சாத்தியமா என்று ஒரு கேள்வி எழுவது இயல்பே. இது அனைவருக்கும் எழக்கூடிய கேள்வியே. 1.91 கோடி அரசு வேலைகளை உருவாக்க பல பத்தாண்டுகளுக்கு மேலாகும். சாத்தியமா என்ற கேள்வி ஒரு வகையில் அபத்தம்தான். உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதுவும் சாத்தியமே. ஆனால் அதிமுக அரசுக்கு அப்படி ஒரு எண்ணம் உண்டா என்பதை முதலில் கேள்வி எழுப்ப வேண்டும்.

கடந்த ஆட்சியில் நடந்த சில நிகழ்வுகளை நாம் இங்கே நினைவு கூர்வது, மேலே உள்ள கேள்விக்கு பதிலை அறிய  உதவும். கடந்த பத்தாண்டுகளில் அரசு தரப்பிலிருந்து புதிதாக பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதுதான் எதார்த்தம். அது மட்டுமல்லாது, ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்பப் போதுமான நடவடிக்கைகள் இல்லை. அது மட்டுமா, கடந்த இரண்டு ஆண்டுகளில் காலி பணியிடங்கள் புதிதாக உருவாகாத வண்ணமும் இந்த அரசு பார்த்துக்கொண்டது. அது எப்படி புதிதாக காலியிடங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது? ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் இறக்கும்போது, வேலைநீக்கம் செய்யப்படும்போது, பதவி உயர்வு பெரும்போது, ஓய்வு பெறும்போது ஆகிய வேளைகளில் புதிய காலியிடங்கள் உருவாகும். இதில் ஏற்கனவே உள்ள பணியாளர்கள் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறுவது தான் அதிக அளவில் காலியிடங்களை ஆண்டுதோறும் உருவாக்கும். சென்ற ஆண்டு எடப்பாடி அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தியது. இந்த ஆண்டு அது மீண்டும்  60 ஆக உயர்த்தபட்டது. நம் மொழியில் சொல்ல வேண்டுமானால், இந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பணிகளில் புதிதாக காலியிடங்கள் உருவாகாமல் அதிமுக அரசு பார்த்துக்கொண்டது. (இதற்கான முக்கிய காரணம் ஓய்வுதிய தொகையைச் செலுத்த இயலாத நிலையில் தமிழக நிதிநிலை)

கோவில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க கோரும் சதி – சூர்யா சேவியர்

சென்ற ஆண்டு கணக்கின்படி, தோராயமாக 30000 அரசு பணியாளர்கள் ஓய்வு பெரும் நிலையில் இருந்தனர். இந்த ஆண்டும் அதே போல் 30000 என்று வைத்துக் கொண்டால், மொத்தமாக இந்த இரண்டு ஆண்டுகளில் 60000 அரசு பணி காலியிடங்கள் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளன. புதிதாக அரசு வேலைகளில் அமர்த்தப்பட்டு இருக்கவேண்டிய 60000 இளைஞர்களின் வாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. 70000 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதத் தயார் நிலையில் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இது ஒருபுறம் இருக்க, அரசு பணிகளில் ஈடுபடும் ஆனால், அரசுப் பணியாளர்கள் பெறும் எந்தப் பெரிய சலுகையும் இல்லாமல் உள்ளவர்களின் நிலை மிகவும் மோசம். உதாரணம் அங்கன்வாடி பணியாளர்கள். பால்வாடி, சத்துணவு பள்ளி என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த மையங்களில் வேலை செய்யும் பணியாளர்கள், சுகாதாரம் தொடர்பான பெரும்பாலான அரசின் திட்டங்களை அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு, போலியோ தடுப்பு, ஊட்டசத்து குறைபாடு தடுப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், வளர் இளம் மகளிர் சுகாதாரம், கர்ப்பிணி பெண்கள் சுகாதாரம், மழலையர் கல்வி என இவர்களின் பங்களிப்பை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் இந்தப் பணியாளர்கள் மற்ற அரசு ஊழியர்கள் பெறுவதை போலச் சலுகைகள் பெறுவதில்லை. ஊதிய உயர்வும் சரியாக கிடைப்பதில்லை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக பணிபுரியும் ஒருவரின் மாத ஊதியம் 15000 க்கும் குறைவு. இதில் இருந்தே அவர்களின் நிலையைத் தெளிவாக அறியலாம். மிகச் சமீபத்தில் தான் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இவர்கள் இணைக்கப்பட்டார்கள். அதுவும் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு. அங்கன்வாடி ஊழியர்களைப் பொறுத்த வரை தங்களை அரசு ஊழியராக அங்கீகரிக்கச் சொல்லிப் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர் [2]. அவற்றை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத எடப்பாடி அரசு உண்மையில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமா.

தனியார்மயமாக்கப்படும் அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ரத்து – முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு உறுதி

கடந்த ஆண்டு அரசு மருத்துவமனை மற்றும் முதன்மை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் பணிநிரந்தரம் வேண்டி போராடினர். மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்த போராட்டத்தை உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை உதவியுடன் பல மிரட்டல்கள் விடுத்து அரசு கலைத்தது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் 2000 அம்மா கிளினிக் உருவாக்கப்படும் என்று கூறி கடந்த மாதம் இறுதியில் 900 வரை மினி கிளினிக் அமைக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மினி கிளினிக்களுக்கான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே முதன்மை சுகாதார நிலையங்களில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தற்காலிக மற்றும் சுழற்சி முறையில் மினி கிளினிக்களை கவனித்து வருகிறார்கள். மினி கிளினிக்களுக்கான புதிய பணியாளர்கள், ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தல் ஆகியவற்றில் எந்த முயற்சியும் செய்யாத எடப்பாடிக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க எப்படி மனம் வரும்!!

இது போக, அரசு பள்ளிகளில் உள்ள ஒப்பந்த ஆசிரியர்களுக்குப் பணிநிரந்தரம் கோரி ஒரு வாரத்திற்கு மேலாக போராடினர் இறுதியில் அந்தப் போராட்டமும் எடப்பாடி அரசால் ஒடுக்கப்பட்டது. 1500 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டு 400 க்கும் மேற்பட்டோர் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பணியிடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் 7500 ஊதியத்தில் நியமிக்கப்பட்டனர். இந்த 422 பணியிடங்களுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்தது என்பது கூடுதல் தகவல் . கடந்த மாதம் பணி நிரந்தரம் வேண்டி சிறப்பு ஆசிரியர்கள் (கலை,இசை ,ஓவியம் மற்றும் விளையாட்டு) போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பணியமர்த்தப்பட்டது  2012 ம் ஆண்டு. அந்த  ஆண்டு பணியமர்த்தப்பட்ட 16549 பேர்களில் 12917 பேர் பகுதி நேர ஒப்பந்த ஆசிரியர்கள் . இப்படி ஏற்கனவே இருக்கும் அரசு பணியிடங்களை எல்லாம் பகுதி நேர அடிப்படையிலும் ஒப்பந்த முறையிலும் நிரப்பும் அதிமுக அரசுதான் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்போகிறதா?

விசாரணை கைதி சிறையில் மரணம் – சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

சில மாதங்களுக்கு முன்பு, மின் இணைப்பு பராமரிப்பு பணிகளைத் தனியாருக்கு வழங்கப் போவதாக எடப்பாடி அரசு அரசாணை வெளியிட்டது. கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை குறித்து பேசும் எடப்பாடி, ஏற்கனவே உள்ள அரசு பணிகளைத் தனியாருக்கும் வழங்க முன்வந்தது எவ்வளவு முரண்!!

தமிழக அரசு வேலைகளுக்குத் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை மாற்றி இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று மாற்றியது அதிமுக அரசு தான். இவர்கள் தான் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க போகிறார்களா?

சரி,இது வரையில் எடப்பாடி அரசுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி வழங்கும் எண்ணம் இருக்கிறதா என்பதை பார்த்தோம். ஒரு வேளை எடப்பாடிக்கு இந்த எண்ணம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாகின், இது உண்மையில் சாத்தியமா!! ஏற்கனவே கூறியபடி 2.06 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போதைய நிலையில் 15 லட்சம் அரசு பணியாளர்கள் உள்ளனர். மீதம் 1.91 கோடி அரசு பணிகளை உருவாக்க வேண்டும். இவ்வளவு பணியிடங்களை உருவாக்கும் அளவுக்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பெரிய அளவில் எந்தத் தொழித்துறையோ சேவை துறையோ இல்லை. அதே வேளையில் ஒன்றிய அரசு பொது துறை நிறுவனங்கள், சாலைகள், சேமிப்பு கூடங்கள், வங்கிகள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனப் பட்டியலிட்டு தனியாருக்கு தாரை வார்த்து கொண்டிருக்கிறது. மிஞ்சியிருக்கும் தபால் துறை போன்ற துறைகளுக்கும் தமிழ் தெரியதவர்களை ஒன்றிய அரசு பணியில் அமர்த்தி வருகிறது. இந்த நிலையில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

கட்டுரையாளர் : சக்திவேல்,

கான்பூர் ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றவர்,

விமான ஆராய்ச்சி துறையில் பணியாற்றுகிறார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்