இதழியலைத் தன் தொழிலாகக் தேர்ந்தெடுத்த போதே சஜிதா யூசுப் காஷ்மீரில் பத்திரிகையாளராக இருப்பது எளிதானதல்ல என அறிந்திருந்தார். ஸ்ரீநகரில் வாழும், 23 வயதான இவர், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை 2019 ல் முடித்தார். பின்னர் ‘காஷ்மீர் நியூஸ் அப்சர்வர்’ என்ற உள்ளூர் செய்தி நிறுவனத்தில் நிருபராக பணியில் சேர்ந்தார்.
ஸ்ரீநகரின் மையப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள உணவகத்தில் காபி பருகிக் கொண்டே பேசிய யூசுப் “நான் என் ஆர்வத்தை தொழிலாக மாற்றிக் கொண்டேன்,” என்கிறார்
முன்னர் பணிபுரிந்த ஆங்கில நாளிதழான ‘ரைசிங் காஷ்மீரில்’ இதழியலாளராக தனது பணியைத் துவங்கிய போது, சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள, மனித உரிமைகள் மறுக்கப்படும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிறரின் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் 2020 ஏப்ரலில் மஸ்ரத் ஜாஹ்ரா மற்றும் கவுஹர் கிலானி ஆகிய இரு ஊடகவியலாளர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரது விருப்பம் மாறத் துவங்கியது. ஒரு புகைப்பட ஊடகவியலாளரான ஜாஹ்ரா, தான் முன்னர் செய்த சில வேலைகளை சமூக ஊடகத்தில் பதிவேற்றினார். அதன் மீது அவரது மூத்த பத்திரிகையாளர் கிலானி தனது கருத்துக்களை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டார்.
காவல்துறை இருவரையும் ” பயங்கரவாதத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும்”, “தேச விரோத செயல்களில்” ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியது. “இதழியலை மேற்கொள்வது இவ்வளவு கடினமாக இருக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் மிக உணர்வுபூர்வமான செய்திக் கட்டுரைகளைத் தயாரிக்கும் போதெல்லாம் உபா தான் என் மனதில் தோன்றுகிறது. இந்த கொடூரமான சட்டத்தின் பட்டியலில் அடுத்து யார் இடம் பெற போகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை,” என்று கூறும் யூசுப், அவர் எழுதும் கட்டுரைகளுக்கான கருத்துருக்களை மிகவும் தேர்ந்தெடுத்து எழுதுவது மட்டுமின்றி, தன்னை சிக்கலில் மாட்டி விடக் கூடிய எத்தகைய பதிவையும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதிலிருந்து விலகியே நிற்கிறார். ” உபா நம் வாயின் மீது போடப்பட்டுள்ள பசை ஆகும்” என அவர் கூறுகிறார். உபா யாரையும் கைது செய்து குற்றச்சாட்டு பதியாமலே, அதுவும் ஒருவரை நீதிமன்றத்தில் விசாரிக்காமலே அல்லது தண்டனை தராமலே, 180 நாட்கள் வரை சிறையில் அடைக்கமுடியும்.
1967 ல் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் முதலில் பயங்கரவாதத்தை எதிர் கொள்ளவும், தெரிந்த பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யவும் பயன்படுத்தப்பட்டது. 2019 ஆகஸ்ட் மாதம் தன்னிச்சையாக, காஷ்மீரின் வரையறுக்கப்பட்ட சுயாட்சியை திரும்பப் பெற்ற சில நாட்களுக்குள் இந்து தேசியவாத அரசான பாஜக அரசு இந்தச் சட்டத்தைத் திருத்தியது. அதன்படி ஒரு தனிநபரை பயங்கரவாதி என அறிவிக்க அரசாங்கத்திற்கு தவறான செயல்முறைக்கான தண்டனையிலிருந்து பாதுகாப்பு அளித்தது. திருத்தப்பட்ட சட்டம் மிக கடுமையாகவும், தெளிவற்றதாகவும் இருப்பதால், பல அரசியல் எதிர் கட்சிகளும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளும், முன்னாள் நீதிபதிகளும் இதன் ” கொடுமையான” விதிகள் குறித்தும், தொடர்ந்து இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படலாம் எனவும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
2019 லிருந்து உபா வழக்குகள் அதிகரிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக, குறிப்பாக பாஜக காஷ்மீரின் சிறப்பு நிலையை திரும்பப் பெற்றதிலிருந்து, அரசு இந்த மக்கள் மீது அதிக நயவஞ்சகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அதனால் உண்டாகும் அச்சத்தில் மக்கள் அரசுக்கு ஒத்து செல்பவர்களாக மாறி உள்ளனர்.
இந்த சட்டத்தின் பரவலான பயன்பாடு ஊடகவியலாளர்களைத் தங்களைத் தாங்களே தணிக்கை செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறது.மேலும் அதிருப்தியாளர்களை அச்சுறுத்தி அவர்களை செயலற்ற நிலையில் இருக்கச் செய்கிறது. அத்துடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை வெற்று பார்வையாளர்களாக இருக்கச் செய்கிறது.
காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் அரசியல் விமர்சகரும் அரசியல் மற்றும் நிர்வாகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான நூர் முகம்மது பாபா, காஷ்மீர் நிர்வாகம் அந்த பட்டங்களைப் பயன்படுத்தி, பேசக்கூடிய எல்லோரையும் அடக்கிவிட்டது என எண்ணுகிறார். ” 370 வது பிரிவை நீக்கியதிலிருந்து காஷ்மீரில் ஆளும் கட்சி, மிகவும் அடக்குமுறையான, பழிவாங்கும் தன்மையுடனான, மற்றவர்களுக்கு இடமளிக்காத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இயல்பான நீதித்துறை இல்லாததால் எளிய மக்கள் உபாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்டத்தை நாடவும் முடியாது,” என்கிறார் அவர்.
ஜம்மு காஷ்மீரின் பகுதி சுயாட்சியை ரத்து செய்வதற்கு சற்று முன் ஆளும் பாஜக அரசு காஷ்மீரில் தங்களையும், தங்கள் கொள்கைகளையும் விமரிசிப்பவர்களை அடக்குவதற்கான கருவியாக அதனை பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தைத் திருத்தியது என்றும் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில், 2019 விருந்து உபா வழக்குகள் அதிகரித்து வருவது, அதன் மேலதிக பயன்பாடு மற்றும் அதனால் மக்கள் மீது ஏற்படும் தாக்கம் குறித்த கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.
தி இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கையின்படி, 2019 முதல் காவல்துறை 2,364 பேரை உபாவின் கீழ் கைது செய்துள்ளது. அவர்களில் பாதிப்பேர் பள்ளத்தாக்கின் உள்ளேயும் வெளியேயும் சிறையில் உள்ளனர். மேலும், 2010 முதல் 2018 வரை தேசிய குற்ற ஆவணப் பதிப்பகம் (NCRB) தொகுத்துள்ள தரவு மணிப்பூர் மற்றும் அசாம் ஆகியவற்றுடன் காஷ்மீர் அதிக அளவிலான உபா வழக்குகளை பதிவு செய்துள்ளது. 2014 ல் 45 ஆக இருந்தது 2019 ல் 245 ஆக உயர்ந்துள்ளது. 2010 முதல் 2014 வரை காஷ்மீரில் உபா வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. உபாவின் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டாலும், தண்டனை விகிதம் குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கிய தரவு 2016 மற்றும் 2019 க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட உபா வழக்குகளில் 2.2% மட்டுமே நீதிமன்றங்களால் தண்டணை தரப்பட்டுள்ளது.
உபா வழக்குகளில் வாதாடும் தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹபீல் இக்பால், காஷ்மீர் மக்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், அடிபணியச் செய்யவும் புதுதில்லி பயன்படுத்திய தந்திரங்களில் ஒன்று உபா,” என்று கூறுகிறார். “காஷ்மீரில் மக்களை அமைதியாக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் கூறினால் அது குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும். ஏனெனில், காஷ்மீரில் அதன் பரவலான பயன்பாடு மக்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும்,” என்று கூறுகிறார் இக்பால்.
உபா வால் இலக்கு வைக்கப்பட்ட பெண்கள்
செய்தி அறிக்கை தருவதில் மூன்றாண்டுகளுக்கு மேலான அனுபவமுள்ள இளம் பத்திரிகையாளர் குராத்துலைன் ரெஹ்பார், அவரது செயலால் கவலையுற்றிருந்த நண்பர்களும், உறவினர்களும் இத்தகைய உணர்வுபூர்வமான செய்திகள் தொடர்பாக பணியாற்ற வேண்டாம் என்றும், இது போன்ற செய்திகள் அவரைச் சிக்கலில் ஆழ்த்தக் கூடும் எனவும் பல அறிவுரைகளைக்கூறி வந்தனர். “உபா குறித்த பயம் எங்கள் மனதில் பதிந்து விட்டது,” இது (உபா) எங்கள் விவாதங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது,” என்கிறார் ரெஹ்பார்.
மற்றொரு பெண் புகைப்பட செய்தியாளர், பழிவாங்குதல் நடந்து விடுமோ என அஞ்சி, தனது பெயரை வெளியிட விரும்பாமல், ”கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீரில் சோதனைகள் அதிகரித்து விட்டன. நிர்வாகம் உபா போன்ற சட்டங்களை உண்மை நிலவரங்களை மறைக்கவும், மக்களின் உறுதியை உடைக்கவும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது” என்கிறார். “இத்தகைய கடுமையான சட்டங்கள் உங்களை மனரீதியாக பாதிக்கச்செய்து அதனால் உங்கள் வேலையை மாற்றி விடச் செய்கிறது. நான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும் மண்டியிட மாட்டேன்,” என்கிறார் அவர்.
ஜாஹ்ராவைத் தவிர, முன்னாள் காவலர், ஒரு இறந்து விட்ட தீவிரவாதியின் தாய் ஆகிய இருவரும் கூட உபா வில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மே 11 அன்று நசீமா பானோ மருத்துவ காரணங்களுக்காக 11 மாத சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். கொந்தளிப்பு மனநிலையுடன், உடல் நலிவுற்றுள்ள, சில தருணங்களில் அமைதியற்ற மனநிலையில் காணப்படும் அந்த 57 வயதான பானோ, 2020, ஜூன் 20 ல் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது உபாவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு இளைஞர்களை போராளிக் குழுக்களுக்காக தேர்வு செய்ததாகவும், காஷ்மீரில் போராளி அமைப்புகள் போக்குவரத்திற்கு வசதி செய்து கொடுத்ததாகவும் காவல்துறை அவர் மீது குற்றம் சாட்டியது. ஆனால் இவற்றை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். பானோவின் 24 வயதான மகன் தவுசீஃப் அகமது 2014 ல் போராளிக் குழுவில் சேர்ந்தார். 2018 ல் ஒரு மோதலில் கொல்லப்பட்டார். 2017 ம் ஆண்டு நானோ தனது போராளி மகனுடன் துப்பாக்கியை ஏந்தியபடி இருக்கும் புகைப்படங்கள் காஷ்மீரில் சமூக ஊடகங்களில் அதிவிரைவாக பரவியது. இந்தப் புகைப்படம் தான் பானோ கைது செய்யப்படிருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர்.
“நான் எதற்காக இத்தனை நீண்ட காலம் சிறையில் அடைக்கப் பட்டேன் என இன்று வரை எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் பானோ. “அவ்வாறு போராளி மகன்களுடன் இருக்கும் புகைப்படத்துக்காக அரசு கைது செய்வதாக இருந்தால் ஆயிரக்கணக்கான தாய்மார்களை கைது செய்ய வேண்டி இருக்கும். ஏனெனில் காஷ்மீரில் அப்படி புகைப்படம் எடுத்துக் கொள்வது பொதுவாக நடக்கும் ஒன்றுதான்,” என்கிறார் அவர்.
2018 ல் இந்த செய்தியாளர் பானோவைச் சந்தித்த போது அவர் சுறுசுறுப்பாகவும், நன்கு துணிச்சலாகப் பேசுபவராகவும், நெகிழ்வுடையவராகவும் இருந்தார். அப்போது வீட்டு வேலைகளை மட்டுமல்ல விவசாயப்பணிகளிலும் உற்சாகமாக பங்கேற்று வந்தார். தற்போது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பானோ,” சிறை என்னை இயலாமைக்குள்ளாக்கி விட்டது. சிறையிலிருந்து வந்த நாள் முதல் எனது தோட்டத்தை ஒருமுறை கூடச் சென்று பார்க்க இயலவில்லை,” என்கிறார் சிறையில் இருந்த போது பானோவின் உடல்நிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. அவரது கண்பார்வை குறைந்தது. அவரது உயர் இரத்த அழுத்தம் காரணமாக பற்கள் விழுந்து விட்டன. “சிறையில் இருந்ததால் நான் மட்டும் பாதிக்கப்படவில்லை. எனது ஒட்டு மொத்த குடும்பமும் சிரமத்திற்குள்ளாகியது,” என பானோ கூறுகிறார்.
உபா ஒரு கூட்டு தண்டனை
பானோவுடன் ஒத்துப் போகும் வழக்கறிஞர் இக்பால்,” உபா ஒரு கூட்டுத் தண்டனை,” என்கிறார். “இந்தச் சட்டத்தால் கைது செய்யப்படுபவர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவரது மொத்த குடும்பமும் பாதிப்பிற்குள்ளாகிறது. இது உள்ளுணர்வுகளைக் கட்டுப்படுத்த தரப்ப்படும் உளவியல் ரீதியான தண்டனை ஆகும்,” என்கிறார் அவர்.
இதே மாவட்டத்தில் தனது இருபது வயது துவக்கத்தில் இருந்த ஒரு காவல்துறை பெண் காவலரான சைமா ஜான் 2021, ஏப்ரல் 14 அன்று, அவரது பகுதியில் எதிர் கலவரப் படையால் தேடுதல் வேட்டை நடந்த போது அவர்களை எதிர்த்ததாக, காவல்துறையால் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டார். ஜானின் எதிர்ப்பு பற்றிய காணொளி காஷ்மீரில் அதிவிரைவாக சமூக ஊடகங்களில் பரவியது. வயதான நோயுற்ற பெற்றோர்களைப் பாதுகாக்கும் தங்கள் ஒரே மகளான ஜான் மீது, “எதிர்ப்பு போராட்டத்தின் புகழ் பாடியதுடன், பணியிலிருக்கும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டினர்.”
அவரது கைதுக்குப் பின்னர், சிறப்பு காவல்துறை அதிகாரி பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ஜான், தேடுதல் படையைத் தடுத்ததாகவும், அது வன்முறையாக மாறியதாகவும், தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வன்முறைச் செயல்களை பெருமைப் படுத்தி முழக்கம் செய்ததாகவும் காவல்துறை அறிக்கையில் கூறி உள்ளது. ஜூலை 16 அன்று ஜான் பிணையில் விடுதலைப் பெற்றார்.
இதற்கிடையில், காஷ்மீர் தலைமை காவல்துறை ஆணையாளர் விஜயகுமாரை உபா வழக்குகள் அதிகரிப்பு குறித்த அவரது கருத்துக்களை அறிய முயற்சித்த போது அது நடக்கவில்லை. மின்னஞ்சல் மூலம் அவருக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
ஒரு ஆராய்ச்சி அறிஞரும், தன்னை அடையாளங்காட்ட விரும்பாத தனி ஊடகவியலாளருமான ஒருவர், உபா போன்ற சட்டங்கள் ஏற்கனவே இருக்கும் நெருக்கடி நிலையை மேலும் அதிகரித்து வருவதுடன், அதன்மூலம் இந்திய அரசு காஷ்மீரைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், இந்த பகுதிக்குள் அரசியல் சமநிலையை அடக்குமுறையால் மறுசீரமைப்புச் செய்யவும் முயற்சிக்கிறது. அத்துடன் அனைத்து வடிவிலான எதிர்ப்பையும் நசுக்க முயற்சிக்கிறது என்று கூறினார்.
“ஜனநாயகத்தின் வேடத்தைப் பூண்டதாக இருந்தாலும், நாஜிக்களின் நியூரம்பர்க் சட்டங்களைப் போன்றது இந்த உபா சட்டம்,” என்கிறார் அவர். ” காஷ்மீரில் இந்தச் சட்டங்களின் கீழ் ஒருவர் தொடர்ந்த உளவியல் ரீதியாக முற்றுகைச் செய்யப்பட்ட நிலையில் இருக்கிறார். அரசின் கட்டாய பழிவாங்கலின்றி சுதந்திரமான பேச்சு என்பது கற்பனைகூட செய்ய இயலாதது. எனவே எல்லா விமர்சனங்களும் சுய தணிக்கை மூலமோ அல்லது திணிக்கப்பட்டத் தணிக்கை மூலமோ தான் வெளிப்படுத்தப்படுகிறது.” என்கிறார் அந்த செய்தியாளர்.
அரசியல் விமர்சகரும், சட்டத்துறையின் முன்னாள் தலைவரும், காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் சட்ட ஆய்வுகள் பிரிவின் தலைவரும், காஷ்மீர் பிரச்சினை குறித்து ஏராளமான நூல்களை எழுதியவருமான ஷேக் சவுகத் உசைன், உபா போன்ற சட்டங்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்ப்பு கருத்து தெரிவிப்பவர்களை அமைதி படுத்தவே பயன்படுத்துகின்றனர். காஷ்மீர் இதற்கு விதிவிலக்கல்ல என்று கூறுகிறார். ” இத்தகைய சட்டங்களால் என்ன நடக்கிறது என்றால், ஜனநாயகத்தில் அது செயலற்ற நிலையில் நீடிக்கும் வரை கருத்து வேறுபாடு வெளிச்சத்திற்கு வாரா. பிறகு அது மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் போது அவர்களை வியப்படைய சர் செய்கிறது,” என்கிறார் அவர்.
www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்
எழுதியவர்: ஆமீர் அலி பட், பத்திரிகையாளர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.