Aran Sei

கலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

Image credit : thewire.in

டெல்லி கலவரம் நடந்து முடிந்து ஓராண்டாகி விட்ட பின்னரும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும், உரிய இழப்பீட்டையும் தருவதற்கு தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் ஊடகவியலாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் பலி வேட்டையாடும் நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.

அக்கறையுடைய குடிமக்கள் கூட்டு (Concerned Citizens Collective) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் இவற்றை தெரிவித்தனர்.

இந்தக் கூட்டமைப்பு (சிசிசி-CCC) சிவில் உரிமைகள் சங்கங்களின் பரந்துபட்ட குழு. டெல்லி கலவரம் தொடர்பாகவும் அதற்கு பிறகு எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்தக் குழுவினர் கடந்த பிப்ரவரி 26 அன்று விரிவாக பேசினர்.

இந்த கருத்தரங்கில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், மூத்த ஊடகவியலாளர் ஹர்தோஷ் சிங் பால், நவ்தீப் கவுரின் சகோதரி ராஜீவ் கவுர், காலித் சைஃபியின் மனைவி நர்கீஸ் சைஃபி, உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள அக்தர் கானின் தாயார் நூர்ஜஹான் ஆகியோரும் மற்றவர்களும் கலந்து கொண்டனர். காலந்தாழ்த்தப்பட்ட நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, இளம் செயற்பாட்டாளர்களை உபா சட்டத்தில் சிக்க வைப்பது, கலவரத்திற்குப் பிந்தைய கால கட்டத்தில் ஊடகங்கள். சிவில் சமூகங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பேச்சாளர்கள் பேசினர்.

கருத்தரங்கை தொடக்கி வைத்து, விவாதங்களை நெறிப்படுத்திய சிசிசி யைப் சேர்ந்த பனோஜோத்ஸ்னா லஹிரி, காலித் சைஃபியும், இஷ்ரத் ஜஹானும் கைது செய்யப்பட்டு ஓராண்டாகி விட்டது என்று றினார்.

“டெல்லி கலவரம் பேரழிவை ஏற்படுத்தியது, ஆனால் அதைவிட பேரழிவு கலவரத்திற்குப் பின் நடந்த பலி வேட்டை. மற்ற எல்லா சட்டங்களின் கீழ் போடப்பட்ட வழக்குகள் குப்புற கவிழ்ந்து விட்டதை உணர்ந்த டெல்லி காவல்துறை, சைஃபி, இஷ்ரத் ஆகியோர் மீது உபா சட்டத்தை ஏவி உள்ளது. தற்போது சிறையில் இருக்கும் அவர்கள் இருவரும்தான் இந்த பலி வேட்டையில் பாதிக்கப்பட்ட முதல் இரண்டு நபர்கள்,” என்று கூறிய அவர், ஒரு சமூக மேம்பாட்டுக்காக வீதியில் இறங்கி போராட வந்த இளைய சமுதாயத்தினர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

சைஃபியின் மனைவி நர்கீஸ் சைஃபி, கைது செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக அவரை சந்தித்த நாளை நினைவு கூர்ந்தார். “நான் அவரை சந்தித்த போது அவர் சக்கர நாற்காலியில் இருந்தார். அவரது கைகளிலும், கால்களிலும் கட்டுப் போடப்பட்டிருந்தது. அவருடைய தாடி பிடித்து இழுக்கப்பட்டிருந்ததற்கான குறிகள் அவரது முகத்தில் இருந்தன. காவலர்கள் அவரை இப்படி நடத்தும் அளவுக்கு அவர் என்ன செய்தார்?”

தான் அவருடன் சிறிது காலமாகவே தொடர்பில் இருப்பதாகவும், கணிசமான காலத்தக்குப் பிறகு, அவரிடம் அந்த நாளைப் பற்றிக் கேட்டபோது, தன்னை எட்டு, ஒன்பது காவலர்கள் லத்தியால் அடித்ததாகவும், காலால் எட்டி உதைத்தாகவும் அவர் கூறியதாகத் தெரிவித்தார்.

“நமாஸ் செய்வதற்கு சுத்தமான துணிகளை அவர்களிடம் கேட்டபோது, ‘நில்லு. இப்போது நாங்க உனக்கு நமாஸ் செய்கிறோம்” என்று கூறி அவர் நினைவிழக்கும் வரை அடித்ததாகவும் கூறினார். ஒரு காவலர் அவருடைய தாடியை பிடுங்கி இழுத்து, அந்த முடியை அவர் கையில் கொடுத்ததாகவும், இன்னொரு காவலர் அவர் மீது சிறுநீர் கழிக்கலாம் என்று கூறியதாகவும் அவர் கூறினார். அவரை என்கவுன்டரில் கொலை செய்து விடுவதாக அவரிடம் மீண்டும் மீண்டும் கூறியதாகவும் தெரிவித்தார்.

“நீதிமன்றம் தலையிட்டு அவரை மண்டோலி சிறைக்கு மாற்ற உத்தரவிட்டதற்கு நன்றி கூற வேண்டும்.” சிறையிலிருப்பவர்கள் குற்றவாளிகள், மதவாதிகள் இல்லை என்று கூறியதாக கூறிய அவர், சைஃபி போன்ற செயற்பாட்டாளர்களை உபா சட்டத்தின் கீழ் சிறை வைத்திருப்பதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

ஊடகங்களின் சந்தேகத்துக்குரிய பாத்திரம்

“ஒரு சமூகமாக சிறைச்சாலைகள் வெளியிலிருப்பதை விட ஆரோக்கியமானவையாக உள்ளன,” என்று கூறிய கேரவன் இதழின் ஆசிரியர் ஹர்தோஷ் சிங் பால், “ஒரு குற்றவாளி ஒரு குறிப்பிட்ட வகையான நடத்தையை கொண்டிருப்பார். இன்று, இந்த அரசாங்கம் பொதுமக்களின் ஒப்புதல் இல்லாத சட்டங்களைக் கொண்டு வருவது, அதனை ஏற்றுக்கொள்ளும்படி மக்களை கட்டாயப்படுத்துதல், அதை எதிர்த்து போராடும் மக்களை குற்றவாளிகளாகக் காட்டுவது ஆகிய அதே நடத்தைகளை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்,” என்று கூறினார்.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் போது இத்தகைய நடவடிக்கைகளை நாம் கண்ணுற்றோம், மேலும் இப்போது விவசாயிகள் போராட்டத்திலும் காண்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா இது வரை பார்க்காத அளவு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையில் பாஜக ஏராளமான பணத்தை தனது தேர்தல் பிரச்சாரங்களில் செலவிடுகிறது.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களையும், விவசாயச் சட்டங்களை எதிர்த்த போராட்டங்களையும் பற்றி செய்தி வெளியிடுவதில் ஊடகங்களின் பங்கு பற்றி அவர் பேசும் போது, ஊடகங்களில் அதே அளவு மதவாதம் பரவி விட்டது என்றும், போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், எதிர்ப்புகளை முடக்குவதற்கும் அவை உடந்தையாக இருக்கின்றன என்று கூறினார்.

“இதில் பெரும் தனியார் நிறுவனங்களின் மறைமுக உடைமையும் ஒரு பங்காற்றுகிறது. ஊடகங்கள் போராட்டக்காரர்களை பாகிஸ்தானியர்கள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்துகின்றன. இதே முத்திரைகளைத்தான் பாஜக தலைவர்களும் பயன்படுத்துகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

காவல்துறை வெறும் பார்வையாளர்களாக மட்டுமின்றி, அதே அளவுக்கு கலவரத்தில் ஈடுபட்டது என்று அவர் கூறினார். கேரவனின் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். பாலியல் ரீதியாக தாக்கப்பட்டனர், அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

“ஒரு எதிர் விளக்கத்தை, ஒரு மறுப்பை, ஒரு எதிர்ப்பை உருவாக்குவதே ஊடகங்களின் பாத்திரம்,” என அவர் குறிப்பிட்டார்.

ஹரியானாவில் நடத்திய ஒரு போராட்டம் தொடர்பாக நவ்தீப் கவுர் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (26/2) அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிணை கிடைத்தாலும் போராட்டம் இன்னும் நீண்டாகாலம் தொடரும் என்று அவரது சகோதரி ராஜீவ் கவுர் கூறினார்.

“ஷிவ்குமார் இன்னும் சிறையில் இருக்கிறார்,” என்று கூறிய அவர் தொழிலாளர்களின் கூலியை கோரியதற்காக செயற்பாட்டாளர்கள் சிறையில் தள்ளப்பட முடியாது” என்று அவர் கூறினார்.

“எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான விளக்கம் பயன்படுத்தப்படுகிறது. மொழியில்தான் சிறு வித்தியாசம் உள்ள்து. அரசை மேம்படுத்துவதற்காக உழைப்பவர்கள்தான் சிக்க வைக்கப்படுகின்றனர். இன்று நான் நவ்தீப் கவுரின் அக்கா என்ற முறையில் பேசவில்லை. ஆனால் நவ்தீப் உள்ளிட்ட எண்ணற்ற இளம் செயற்பாட்டாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக இந்த நாட்டின் விழிப்புணர்வுடைய குடிமகள் என்ற முறையில் பேசுகிறேன்,” என்று கூறினார்.

பிணையில் வெளிவந்த உடன் தனது தங்கை இயக்கத்தை தொடர்ந்து நடத்துவார் என அவர் தெரிவித்தார்.

Image credit : thewire.in
Image credit : thewire.in

‘நீதித்துறை தனது பொறுப்பை கைவிட்டு விட்டது’

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “மற்றவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுகிறார்கள் என்று கூறினார். 2020 ஜேஎன்யூ தாக்குதலின் போதும், 2019, டிசம்பர் ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலின் போதும் காவல்துறையின் செயலற்றத் தன்மையை சுட்டிக்காட்டிய அவர், “உத்தர பிரதேச காவல்துறை தான் நாட்டின் மிகப் பெரிய அமைப்பாக்கப்பட்ட கும்பல். அவர்கள் சட்டத்தின் ஆட்சி குறித்து கவலைப்படுவதில்லை,” என்றார்.

நீதித்துறையின் பாத்திரம் பற்றி கூறும்போது அவர், “இது போன்ற சமயங்களில் நீதிமன்றங்களுக்கு ஒரு அத்தியாவசிய பாத்திரம் உள்ளது. எந்த வகையான அநீதி நடந்தாலும் அதைக் கண்டவுடன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டிய கடமை அதற்கு உள்ளது. இரண்டாவதாக இது போன்றவற்றை விசாரிக்க சுயேச்சையா சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க வேண்டும்,” என்றார்.

சாட்சிகள் இன்றி செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

“நாடு ஒரு தீவிர பாசிச தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இருந்தாலும், ஏராளமான அடக்குமுறைகளுக்குப் பின்னரும், மிக அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும், மாணவர்களும் எதிர்த்து நிற்கிறார்கள். இந்த பாசிச காலம் விரைவில் முடிவுக்கு வரும்,” என்று கூறினார். கலவரத்திற்கு முன்பு வன்முறையைத் தூண்டியதற்காக கபில் மிஸ்ரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும், என்றும் அவர் பேசினார்.

அக்தர் கான் உபா வின் கீழ் கடந்த எட்டு மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது தாயார் நூர்ஜஹான், “சிஏஏவுக்கு எதிராக போராட்டம் ‘நடத்தியதற்காக’ அவர் சிறையில் இருக்கிறார். முதலில் குற்றப் பிரிவு காவல்துறை அவரை பேச அழைத்தனர். அவரும் சென்றார். ஒரு வேளை அவர் தவறு செய்திருந்தால் தானாகவே அவர் அங்கு சென்றிருக்க மாட்டார். போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே அவரை கைது செய்து விடுவார்களோ என நான் கவலைப்பட்டது எனக்கு நினைவில் உள்ளது,” என்று கூறினார்.

“நாம் சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும் போராடுகிறோம். நாம் கவலைப்படக் கூடாது,” என்று அவர் வழக்கமாக எனக்கு பதில் கூறுவார். “அரசியலமைப்பு அனுமதிக்காத எதையும் நாங்கள் எப்போதும் செய்ய மாட்டோம் என்றும் அடிக்கடி என்னிடம் கூறுவார்,” என்ற அவர் சிஏஏ பற்றிக் கூறும் போது, “1947-ல் நாங்கள் இந்தியாவிலேயே இருப்பதாக முடிவு செய்தோம். எங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த போராட்டத்துக்காக எனது மகனும் பிறரும் செய்த தியாகங்களை புறக்கணித்து விடாதீர்கள். நான் ஒரு பெருமை மிக்க இந்திய முஸ்லீம். மேலும் அக்தரின் தாய் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்,” என்று நூர்ஜஹான் உரையாற்றினார்.

‘ஷாஹீன்பாக் பெண்கள் மவுனமாக்கப்பட்டனர்’

மீண்டும் போராட வெளியே வர முடியாத அளவு ஷாஹீன்பாக் பெண்களை அரசின் செயல்கள் அச்சுறுத்தி உள்ளதாக வழக்கறிஞர் ஸ்ரேயா கபூர் முன்வைத்த அறிக்கை கூறியது.

“மாபெரும் அமைதிப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய அதே பெண்கள், தங்கள் கூட்டிலிருந்து வெளியே வந்து தங்கள் மத அடையாளத்துடன் இணைக்கப்பட்ட தவறான எண்ணங்களை உடைத்தெறிந்த அதே பெண்கள், இப்போது அச்சத்தில் உள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“கலவரத்திற்கு பின்பும், காவல்துறையினரால் நடத்தப்படும் கைதுகளால் முஸ்லீம்களிடையே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. டெல்லி காவல்துறை வெட்கமின்றி செயல்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மீது போலி முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது. ஊடகங்கள் ஒருபக்க சார்பாகவே செய்திகளை வெளியிட்டன. தொலைகாட்சியில் அவர்கள் காட்டியதிலிருந்து கள நிலவரம் வேறுபட்டதாக இருந்தது. அண்டை வீட்டுக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக திரும்பி விட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகக் குறைந்த அளவு இழப்பீடுகளே தரப்பட்டுள்ளன. இழப்பீடு என்பது நீதிக்கான ஒரு வழி அல்ல என்பது மிக முக்கியமானது. மோடி அரசு, குண்டர்கள், ஊடகம், டெல்லி காவல்துறை ஆகியவற்றின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கியுள்ளது…” என்று ஸ்ரேயா கபூர் கூறினார்.

www.thewire.in இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்