Aran Sei

உச்சநீதிமன்றத்தில் புத்துயிர்ப்பு – நீதிபதி என்.வி ரமணா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர்

image credit : thehindu.com

நீதிபதி என்.வி ரமணா, 48-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஒரு வாரத்துக்குள் எடுக்கப்பட்ட முடிவுகளின் வரிசை, சாமான்ய மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனம் என்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புத்துயிர்ப்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.

ஊடகவியலாளர் சித்திக் காப்பானை மருத்துவ சிகிச்சைக்காக டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று, அதை விடாப்பிடியாக மறுத்த உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிடுவதற்கு நீதிமன்றம் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. விலைமதிக்க முடியாத உயிர்களை, குறிப்பாக தலைநகர் டெல்லியில், பலி கொண்ட கொரோனா இரண்டாவது அலையை கையாள்வதில் ஏற்பட்ட தவறுதல்கள் குறித்து நீதிமன்றம் மத்திய அரசிடம் வெளிப்படையாகவும் உண்மையாகவும் தனது கருத்துக்களை கூறியுள்ளது.

தேசத்துரோக வழக்கின் சட்டத்தன்மையை மறுபடியும் பரிசீலிக்கவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தலையீடு, அரசுக்கு எதிராக எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிடும் செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை சிறையிலிடுவதற்கு தேசத்துரோக பிரிவு பயன்படுத்தப்படுவதன் மீது கவனத்தைக் குவிக்கும். சில வழக்கறிஞர்கள் பதிவு செய்த இதே போன்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்த மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே இந்தப் பிரிவை பரிசீலிப்பது என்ற நீதிமன்றத்தின் முடிவு வந்துள்ளது.

திரு காப்பானின் வழக்கில், தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, காப்பானுக்கு எந்தச் சிறப்பு சலுகையும் தேவையில்லை என்ற உத்தர பிரதேச அரசின் வாதத்தை ஒதுக்கித் தள்ளி விட்டது. “மிகவும் உயர்நிலை அடிப்படையான உயிர்வாழும் உரிமை, விசாரணை கைதிக்குக் கூட உள்ளது” என்று அந்த அமர்வு அறிவித்தது. திரு காப்பானுக்கு, “போதுமான, திறன்மிகு மருத்துவ உதவியை” அரசு மறுக்கக் கூடாது என்றும், “அவரது உடல்நிலை தொடர்பான எல்லா கவலைகளையும்” அரசு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அது நினைவூட்டியது.

இதைத் தொடர்ந்து, அந்த அமர்வு ஒரு விபரமான ஆணையை பிறப்பித்தது. அதில், உத்தர பிரதேச அரசு சமர்ப்பித்த முந்தைய பதிவேடுகள், சித்திக் காப்பானுக்கு “சர்க்கரை வியாதி, இருதய நோய், இரத்த அழுத்தம், உடல் ரீதியாக காயம் போன்ற பல்வேறு உடல்நிலை பிரச்சினைகள்” இருந்தன என்பதை வெளிப்படுத்தின என்பதை பதிவு செய்தது. “இருப்பினும் அடுத்த கட்ட மருத்துவ பதிவேடுகளும், மாநில அரசு இன்று காலை சுற்றுக்கு விட்ட கூடுதல் வாக்குறுதி பத்திரமும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று காட்டுவதாக”த் தெரிவிக்கின்றன. இவ்வாறாக, தலைமை நீதிபதியின் அமர்வு உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்தது.

பலவீனமான பிரிவினரை பாதுகாப்பது

ஏப்ரல் 24 அன்று பதவி ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தலைமை நீதிபதி ரமணா, ஒரு பொது உரையில், அரசு அல்லது ஏதாவது சமூக விரோத சக்திகள் நடத்தும் மனித உரிமை கொடுமைகளில் இருந்து சமூகத்தின் பலவீனமான பிரிவுகளை பாதுகாக்க வேண்டிய கடமை சட்டத் துறைக்கு உள்ளது என்ற தெளிவான கருத்தை வெளிப்படுத்தினார்.

“கொரோனா தொற்றின் போது அத்தியாவசிய வழங்கல்களையும் சேவைகளையும் வினியோகித்தல்” தொடர்பாக நீதிபதி ஷரத் ஏ பாப்டே முன்பு, நீதிமன்றம் தானே ஏற்று நடத்திய விசாரணை, விமர்சனங்களை எதிர்கொண்டது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தலையீடு, மருந்துகள், ஆக்சிஜன் வழங்கல், மருத்துவ சிகிச்சை போன்றவற்றை வினியோகிப்பதில், கொரோனா தொற்று தொடர்பான நிர்வாக தவறுதல்களை கண்காணிக்கும் பல்வேறு உயர்நீதிமன்றங்களின் முயற்சிகளில் குறுக்கீடாக அமையும் என்று பல மூத்த வழக்கறிஞர்கள் பொதுவில் கருத்து தெரிவித்தார்கள்.

ஆக்சிஜன் வழங்கல், அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி போடும் முறையும் அடிப்படையும், முழு அடைப்பு அறிவிப்பு ஆகியவை குறித்து உச்சநீதிமன்றம் திடீரென்று “ஒரே மாதிரியான உத்தரவுகளை” பிறப்பிக்க விரும்புவது ஏன் என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதி பாப்டே ஓய்வு பெற்ற பிறகு, இந்தத் தானாக எடுத்துக் கொண்ட வழக்கு, நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்குச் சென்றது. உயர்நீதிமன்றங்களின் செயல்பாட்டில் தான் தலையிட விரும்பவில்லை என்றும், அவற்றுக்குக் கூடுதலாகவே செயல்பட விரும்புவதாகவும் அந்த அமர்வு உடனடியாக நிலைமையை தெளிவுபடுத்தியது. ஒரு தேசிய பேரழிவுக்கு மத்தியில் உச்சநீதிமன்றம், “அமைதியான பார்வையாளராக” இருக்க முடியாது என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.

அடுத்து வந்த நாட்களில் நீதிமன்றம் மத்திய அரசுக்கு காலக்கெடுக்களை விதித்தது. மருத்துவமனைகளில் சேர்ப்பது குறித்த தேசிய கொள்கையை, இரண்டு வாரங்களுக்குள்  உருவாக்கும்படி அது மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. நான்கு நாட்களுக்குள், மாநிலங்களுடன் “இணைந்து செயல்பட்டு, அவசரநிலை தேவைகளுக்காக ஆக்சிஜனின் சேம இருப்பு ஒன்றை உருவாக்குமாறும், அவசரநிலை கையிருப்புகளை பரவலாக்கும்படியும்” அது மத்திய அரசை பணித்தது.

அதை விட முக்கியமாக, கொரோனா தொற்றை கையாள்வதில் அரசின் தவறுதல்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துபவர்களை மாநில அரசுகள் தண்டித்தால் நீதிமன்ற அவமதிப்பை எதிர் கொள்ள நேரிடும் என்று மாநில அரசுகளை அந்த அமர்வு எச்சரித்தது. அதாவது, தகவல் சுதந்திரமாக பரவுவதை தடுக்கக் கூடாது.

அதன் மிகச் சமீபத்திய வழக்கில், ஊடகங்கள் நீதிபதிகளின் வாய்மொழி கருத்துக்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது என்று, அத்தகைய செய்திகளால் “காயம்பட்ட” தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி விட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு எதிராக, “கொலைக் குற்றச்சாட்டு” என்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வாய்மொழி கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது.

கடந்த சில நாட்களில், வழக்கறிஞர்கள் கழகத்திலிருந்து வரும் ஆலோசனைகளையும் உச்சநீதிமன்ற நிர்வாகம் நேர்மறையாக எதிர்கொண்டதை பார்க்க முடிகிறது. மே 1-ம் தேதி, தலைமை நீதிபதி ரமணா, வழக்கறிஞர்கள் கழகத்துடன் விவாதித்த பிறகு, நோய்த்தொற்றுகள் அபாயகரமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையை முன்கூட்டியே தொடங்குவதற்கு முடிவு செய்தார்.

புதிய சேம்பர் கட்டிடத்தில் வழக்கறிஞர்களுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஒரு தற்காலிக உள்நோயாளி கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கழகத்தின் முன் வைப்பை உச்சநீதிமன்ற நிர்வாகம் “கொள்கையளவில்” ஏற்றுக் கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு ஒரு புதிய நியமனத்தைக் கூடச் செய்யாமல் தலைமை நீதிபதி பாப்டே ஓய்வு பெற்று விட்ட நிலையில், இப்போது, தலைமை நீதிபதி ரமணாவின் தலைமையிலான நியமனக் குழு (அதில் நீதிபதி சந்திரசூட் புதிய உறுப்பினராக இணைந்துள்ளார்), உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப வேண்டும். கடைசியாக நீதிபதி மோகன் எம் சந்தானகவுடர் எதிர்பாராத முறையில் இறந்ததால் ஏற்பட்ட காலியிடமும் இதில் உள்ளது. இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி வருவதற்கு ரமணா தலைமையிலான நீதிபதிகள் நியமனக் குழு வழி வகுக்குமா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தி ஹிந்து நாளிதழில் கிருஷ்ணதாஸ் ராஜகோபால் எழுதிய செய்திக் கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்