Aran Sei

ஒரு இமாலய துயரம் கற்பிக்கும் ஆறு பாடங்கள் – ராமச்சந்திர குஹா

Image credit : ndtv.com

டந்த ஞாயிறு (8/1/20) அன்று சமோலி மாவட்ட வெள்ளம் பற்றிய செய்திகள் தொலைகாட்சியில் வந்த போது நான் ஒருவரை தொலை பேசியில் அழைத்தேன். அவரது பெயர் வீட்டுக்கு வீடு அனைவரும் அறிந்த பெயராக இருக்க வேண்டும். ஆனால் வருத்தத்திற்குரிய வகையில் அவ்வாறு இல்லை.

அவர் சிப்கோ இயக்கத்தின் தலைவரும், நுண்ணறிவும், உள்நோக்கியப் பார்வையும் கொண்ட சிந்தனையாளரும் துணிவும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.. அவர் நமது நாட்டின் தலைசிறந்த சுற்றுப்புற சூழலியலாளர் மட்டுமின்றி, பெருமைமிகு உத்தராகண்ட்வாசியும் ஆவார்.

1983-ல், இமயத்தில் நீர்மின் திட்டங்கள் கொண்டு வருவதை எதிர்த்து எச்சரிக்கை விடுக்கும் நீண்ட கட்டுரை ஒன்றை இந்தி மொழியில் அவர் எழுதி இருந்தார். இதே எச்சரிக்கையை அவர் 1990-களில் மீண்டும் விடுத்தார். 2000-ம் ஆண்டுகளிலும் அவர் எச்சரிக்கை செய்தார். இம்முறை அவை இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளி வந்தன. உத்தராகண்ட் அரசியல்வாதிகளும் இந்திய அரசியல்வாதிகளும் அவற்றுக்கு செவி மடுத்திருந்தால் மேல் அலகாநந்தா பள்ளத்தாக்கில் நிகழ்ந்த இந்தத் துயரம் நடக்காமலே போயிருக்கலாம்.

தற்போது 80 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் சாண்டி பிரசாத் பட் (நமது கதாநாயகரின் பெயரை குறிப்பிடுவோம்) தனது வாழ்நாள் முழுவதும், பேரழிவு நிகழ்ந்த இந்தப் பகுதியில் கழித்தவர்.. இந்த கார்வால் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் அவருக்குத் தெரியும்.. இந்தப் பகுதியில் ஓடும் அத்துணை ஆற்றங்கரைகளிலும், ஓடைக் கரைகளிலும் நடந்தவர், அவர்.

இந்தப் பேரழிவு ஏற்பட்ட சாலைகளுக்கும், ஆறுகளுக்கும் அருகில் உள்ள கோபேஸ்வர் நகரில் 1981-ல் முதல்முதலில் அவரைச் சந்தித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை சுற்றுச் சூழலியல், சமூகவியல் தொடர்பான அவரது கருத்துக்களுக்காக அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். தற்போது அவரது பகுதியில் நடந்துள்ள நிகழ்வுகள் குறித்து பல தகவல்களைப் பெற அவரைத் தொடர்பு வேண்டியது தவிர்க்க இயலாதது.

Image credit : ndtv.com
Image credit : ndtv.com

கோபேஸ்வர் நகரில் உள்ள அவருடன் தொலைபேசியில் பேசிய பிறகு, நான் நைனிடால் நகரைச் சேர்ந்த அறிஞர் சேகர் பதக்குடனும் பேசினேன். அவர் மற்ற செயல்பாடுகளுடன், புஹார் (Puhar) என்ற இதழின் ஆசிரியரும், சிப்கோ இயக்க வரலாற்றைப் பற்றிய சமீபத்திய மகத்தான நூலை எழுதியவரும் ஆவார்.

அந்த நூலின் முக்கிய பகுதிகள் ரேணி கிராமத்தில் நடந்த சிப்கோ எதிர்ப்பு இயக்கத்தைச் பற்றி பேசுகிறது. ஆண்கள் அனைவரும் வெளியே இருந்த நிலையில் கவ்ரா தேவி என்ற பெண்ணின் தலைமையில் ஒரு பெண் விவசாயிகள் குழு மரங்களை வெட்ட வந்தவர்களை தடுத்து நிறுத்திய வரலாற்றைக் கூறுகிறது. இந்தப் போராட்டம் 1974-ல் நடந்தது.

இன்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரேணி கிராமம், உற்சாகமூட்டாத காரணங்களுக்காக,  மீண்டும் செய்திகளில் இடம் பெற்றுள்ளது.

சேகர் பதக்கை விட உத்தராகண்ட்டின் நிலப்பரப்பையும் வரலாற்றையும் பற்றி அறிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. எனவே, அங்கு நடந்ததை குறித்த தெளிவான புரிதலைப் பெற அவருடனும் பேச வேண்டியது அவசியமாக இருந்தது.

பல ஆண்டுகளாக சேகர் பதக், சாண்டி பிரசாத் பட் ஆகியோரிடமிருந்து கற்றுக் கொண்டவற்றிலிருந்தும், எனது சொந்த ஆய்வுகளிலிருந்தும் தற்போதைய உத்தரகண்ட் துயர நிகழ்வுகள் தரும் ஆறு முக்கிய பாடங்களை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாவதாக,

இத்தகைய பிரம்மாண்டமான, பேரழிவை ஏற்படுத்தும் நிகழ்வுகளைக் கொண்ட பகுதியாக உத்தராகண்ட் இருக்கிறது என்பது இப்பகுதியின் அண்மைக்கால வரலாற்றை நன்கு அறிந்த எவருக்கும் ஆச்சரியமாக இருக்காது.

2013-ம் ஆண்டின் கேதார்நாத் வெள்ளம் பற்றிய செய்திகளைத் தொலைக்காட்சித் திரைகளில் பார்த்த அனைவரது நினைவிலும் இன்னும் அது பசுமையாக இருக்கிறது.

1978-ல் பாகீரதியிலும் 1970-ல் அலகானந்தாவிலும் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி காலத்திற்கு முன்பே நிகழ்ந்தவை. ஆனால் ஒவ்வொரு உத்தரகண்ட்வாசிக்கும் அவற்றைப் பற்றித் தெரியும்.

1991-ல் உத்தரகாசியிலும் 1999-ல் சாமோலியிலும் ஏற்பட்டதைப் போன்ற கடுமையான நில நடுக்கங்களுக்கும் பலியாகும் அபாயத்தில் இப்பகுதி உள்ளது.

Image credit : ndtv.com
Image credit : ndtv.com

இரண்டாவதாக,

இது போன்ற பேரழிவுகள் எந்த அளவுக்கு இயற்கையின் செயல்களோ அந்த அளவுக்கு மனிதர்களால் உருவாக்கப்பட்டவையும் ஆகும். இயற்கைக் காடுகளைக் அழிக்காமல் வைத்திருந்தால், சாலைகள் அமைப்பதில் கவனமாக செயல்பட்டிருந்தால். அணைகளை வடிவமைக்கவோ, கட்டாமலோ இருந்திருந்தால், இமயமலையின் தனித்துவமான சூழலியலைப் மனதில் கொண்டு வீடுகளும், ஓட்டல்களும் கட்டப்பட்டிருந்தால், வழக்கத்திற்கு மாறான ஒரு கனமழை அல்லது முன்னறிய இயலாத பனிப்பாறை மாற்றங்கள் அல்லது ஒரு நில நடுக்கம் கூட இதை விட பல மடங்கு குறைவான பாதிப்பையே ஏற்படுத்தி இருக்கும்..

ஏனெனில் கவனக் குறைவாகக் கட்டப்பட்ட சாலைகளும் அணைகளும் பெருமளவு குப்பைகளை குவிக்க வழி வகுத்தன. இதனால் மலை ஆறுகள் மேலும் வன்முறையாகவும் கொந்தளிப்பாகவும் மாறின. உள்ளூர் தேவைகளையும் தடைகளையும் பொருட்படுத்தாமல் தங்கும் விடுதிகளையும் கட்டிடங்களையும் கட்ட அனுமதி வழங்குவதால் மலைப்பகுதிகள் வலுவிழந்து போகின்றன. புயலாலும் வெள்ளத்தாலும் தாக்கப்படும் போது சரிந்து விழ வாய்ப்பு அதிகமாகிறது. உயிரிழப்புக்கும் வாழ்வாதார இழப்புக்கும் “இயற்கையின் சீற்றத்துக்கு” நிகராக தவறான கொள்கை வகுத்தலும் ஊழலும் மனிதப் பேராசையும் காரணமாக உள்ளன.

மூன்றாவதாக,

இந்தியர்களாகிய நமக்கு இருப்பது ஒரே ஒரு இமயமலைதான். அதை பாதுகாப்பதும், அழிப்பதும் நம் கையில்தான் உள்ளது. அதன் கலாச்சார தொடர்புகளையும் போர்தந்திர முக்கியத்துவத்தையும் தாண்டி அது மகத்தான பல்லுயிர் பெருக்கத்தின் சேமிப்பகமாகவும், பல முக்கிய பெரிய ஆறுகளின் மூலமாகவும் இருக்கிறது.

மேலும், சுற்றுச்சூழலியல் கண்ணோட்டத்தில் அது மிகவும் பலவீனமானது, நிலச்சரிவு, வெள்ளம், நில அதிர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புடைய பகுதியும் கூட. இந்த எல்லா காரணங்களுக்காகவும் இமயமலையில் அணை கட்டும் திட்டங்களுக்கு முழு தடை விதிக்கப்பட வேண்டும். அழிவைத் தரக்கூடிய சார்தாம் நெடுஞ்சாலை திட்டமும் கைவிடப்பட வேண்டும்.

Image credit : ndtv.com
Image credit : ndtv.com

நான்காவதாக,

இமயமலைக்கு வெளியிலும் கூட நாம் ஒரு அறிவுபூர்வமான மேலும் அதிக சுற்றுச் சூழல் பொறுப்புடைய வளர்ச்சி முறையை பின்பற்ற வேண்டும். இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியும் வெப்ப மண்டல சுற்றுச் சூழலின் பலவீனமும், நாம் மேற்கத்திய நாடுகளைப் போல, ஆற்றல் தீவிரமான, மூலதனம் தீவிரமான தொழில்மயமாக்கல் முறையை பின்பற்ற முடியாது என்பதற்கான காரணமாக உள்ளன. குறைந்த இயற்கை வளங்களை பயன்படுத்தும், நீடித்த தன்மையிலான முறையின் மூலம் வளர்ச்சி அடைய நாம் முயலவேண்டும்.

கார்ப்பரேட் ஆதரவு கட்டுரையாளர்கள் சுற்றுச்சூழல்வாதம் என்பது பணக்கார நாடுகளுக்கானது என அப்பாவித்தனமாக அல்லது முட்டாள்தனமானமா வாதிடுகின்றனர். ‘இந்தியா பசுமையாக இருக்க முடியாத அளவுக்கு ஏழ்மையானது’ என்கின்றனர். இதே போலத்தான், தவறாக வழிநடத்தப்படும் அரசு அதிகாரிகளும் கருதுகின்றனர்.

நிதி ஆயோக்கின் அண்மைக்கால ஆவணம், சுற்றுச்சூழல் விதிமுறைகளின் சுமை குறித்து புகார் கூறுகிறது. “பொருளாதாரரீதியில் பொறுப்புள்ள நீதித்துறை” தேவை என அழைப்பு விடுக்கிறது.

இந்த இடக்கரடக்கல் எதைக் குறிக்கிறது? பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழியும் திட்டங்கள் அவசரமாகவும், ஆய்வு செய்யப்படாமலும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையா?.

நிதிஆயோக்கின் அறிக்கை பற்றி 2020, பிப்ரவரி 7-ம் தேதி, தி ஹிந்து காலை பதிப்பில் நான் படித்தேன். அதே நாளில் பிற்பகுதியில் நாம் அனைவரும் உத்தராகண்ட் வெள்ளம் குறித்த செய்திகளை வரப் பெற்றோம். இந்தச் செய்திகளில், ரேணி கிராம மக்கள் எதிர்த்து மனு கொடுத்திருந்த போதும், “பொருளாதார பொறுப்புள்ள” நிர்வாகம் அனுமதி அளித்திருந்த நீர்மின் திட்டமும் அதில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.

உண்மையில், பணக்கார நாடுகளைவிட மிக அதிகமாக இந்தியா சுற்றுப்புறச் சூழல் ரீதியில் பொறுப்புள்ள வழியில்தான் வளர்ச்சி அடைய வேண்டும். என்பது உறுதி. நமது சமூக, பொருளாதார, தேசிய, கலாச்சார எதிர்காலம் அவ்வாறு செய்வதையே சார்ந்துள்ளது.

இந்த சமீபத்திய இமாலய துயரம் நமக்குத் தரும் ஐந்தாவது பாடம்,

நீடித்த பாதையை பின்பற்ற வேண்டுமானால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் அறிவியல் வல்லுநர்களின் அறிவுரை பெற தயாராக இருக்க வேண்டும். ஒப்பந்தங்கள் போடுபவர்களிடம் லஞ்சம் வாங்குவதை தவிர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.

தற்போது, ஒரு துறைமுகத்தை அல்லது ஒரு நெடுஞ்சாலையை அல்லது ஒரு விமான நிலையத்தை, எங்கு, எப்படி கட்டுவது என்ற முடிவுகளை அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் ஆகிய மூன்று பிரிவினர் மட்டுமே எடுக்கின்றனர். நீரியல் அல்லது போக்குவரத்து அல்லது மேலாண்மை அல்லது ஆற்றல் திட்டமிடல் அல்லது மலை சுற்றுச்சூழல் பற்றிய நிபுணர்கள் மிக அரிதாகவே ஆலோசிக்கப்படுகின்றனர். அவர்களிடம் கருத்து பெறுவது எளிதாக இருந்தாலும் இது நடப்பதே இல்லை.

அரசியல்வாதி – அதிகாரி – ஒப்பந்தக்காரர் இணைப்பு ஊழலை பெருக்குகிறது செய்கிறது என்பது அனைவரும் அறிந்ததே; அது திறன் குறைவையும், திறமையின்மையையும், ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பேரழிவுகள் பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது.

டேராடூனில் உள்ள வாடியா இமயமலை நிலவியல் கழகத்தின் அறிவியல் அறிஞர்களை உத்தரகான்ட் அரசு தீவிரமாக கலந்தாசித்திருந்தால், இந்த அணைக்கட்டுத் திட்டங்கள் இமயமலை பகுதிகளில் இவ்வளவு கவனக் குறைவாக அமைக்கப்பட்டிருக்காது. அல்லது அங்கு அமைக்கப்படாமலே போயிருக்கும்.

மகாராஷ்டிரா அரசு மும்பை ஐஐடியில் உள்ள பேராசிரியர்களை ஈடுபடுத்தி இருந்தால், மும்பை கடற்கரை நெடுஞ்சாலை மேலும் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டிருக்கும் (அல்லது உருவாக்கப்படாமலே இருந்திருக்கும் ).

ஆறாவதாக,

அரசியல் முடிவுகளை எடுப்பதில் முழுமையான ஆழமான, அதிகாரப்பரவல் இருந்தால் மேலும் நீடித்த (மேலும் சமத்துவமான) பொருளாதார கொள்கைளுக்கு அது உதவியாக இருக்கும்.

மகாராஷ்டிராவில் கத்சிரோலி மாவட்டத்தில் இயற்கை வளங்களின் மீது உள்ளூர் கட்டுப்பாடு இருப்பதால் உண்டாகும் பயன்களை அங்கு சமுதாய காடுகள் மேலாண்மையின் வெற்றி நிரூபிக்கிறது. முன்பு அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கலப்புக் காடுகள் கிராம மக்கள் கட்டுப்பாட்டிற்கு விடப்பட்டதால் முன்பைவிட காடுகள் அடர்த்தியானதுடன், நிலையான வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் கொடுத்து வருகின்றன.

கட்சிரோலி மாவட்ட மாதிரியை மத்திய இந்தியாவின் பிற வனப்பகுதிகளிலும் பின்பற்ற வேண்டும். அங்கு இவ்வளவு கவனக் குறைவாக யைப் போலவே இயற்கையை புதுப்பிக்கவும், பொருளாதாரத்தை மீட்கவும் பழங்குடி மக்களின் அதிருப்தியை குறைக்கவும் முடியலாம்.

இதன் படிப்பினைகள் இன்னும் விரிவாக கவனிக்கப்பட வேண்டும். விரிவான கருத்துக் கேட்பு, பஞ்சாயத்துகளுக்கும், நகரசபைகளுக்கும் நிதியையும் முடிவெடுக்கும் அதிகாரங்களையும் அதிக அளவில் பகிர்ந்தளிப்பது ஆகியவை பிற துறைகளிலும் அறிவுபூர்வமான, மேம்பட்ட கொள்கைகளுக்கு வழிகாட்டும்.

ஆகவே, சமீபத்திய இமயமலை வெள்ளத்திலிருந்து பெறும் ஆறு பாடங்கள் :

முதலாவது, இந்தப் பகுதியில் இது போன்ற நிகழ்வுகள் தொந்தரவூட்டுன் வளமையுடன் நிகழ்கின்றன.

இரண்டாவது, இந்தப் பேரழிவுகளுக்கு இயற்கைஒரு காரணமாக இருப்பது போலவே மனிதச் செயலும் ஒரு காரணமாகும்.

மூன்றாவது, சுற்றுச்சூழல் ரீதியாக பார்க்கும் போது இமயமலை பலவீனமானதும் எளிதில் மாற்றீடு செய்ய முடியாததும் ஆகும். எனவே, அங்கு மேலும் பெரிய திட்டங்களை அங்கு தவிர்க்க வேண்டும்.

நான்காவது, இந்தியாவின் பிற பகுதிகளிலும் சுற்றுப்புற சூழல் ரீதியில் அறிவு பூர்வமான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.

ஐந்தாவது, இது போன்ற திட்டங்களை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் நாட்டின் சிறந்த அறிவியலாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.

ஆறாவது, இந்தக் கொள்கைகள் அரசியல் அதிகார பரவலாக்கலுடன் இணைக்கப்படும் போது மேலும் மகிழ்ச்சியான, மேலும் தீங்கற்ற விளைவுகளைக் கொண்டிருக்கும்.

ndtv.com இணையதளத்தில் இராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்