26/11 மும்பைத் தாக்குதலை இப்போது பார்க்கும் போது, அது நடக்காமலிருந்திருக்க என்ன செய்திருக்க வேண்டும் அல்லது அதனுடைய பாதிப்பை எப்படிக் குறைத்திருக்கலாம் என்பன தெளிவாகவே தெரிகின்றன. மும்பைத் தாக்குதலுக்கான காரணங்கள், அதை எப்படி தவிர்த்திருக்கலாம் என தி வயர் இணையதளம் வெளியிட்டிருக்கும் பட்டியல்.
1.உளவுத்துறைத் தகவல்களைக் கண்டுகொள்ளாதது
தாக்குதல்கள் நடந்ததற்கு இரண்டு வருடங்களுக்கு முன், தாக்குதலுக்கான இலக்குகள் எவை என அடையாளம் காண அமெரிக்காவில் பிறந்த பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் ரிச்சர்ட்டு ஹெட்லி ஐந்து முறை இந்தியாவிற்குப் பயணித்திருக்கிறார். அவருடைய மூன்று மனைவிகளில் இரண்டு பேர் அமெரிக்க அதிகாரிகளிடம் டேவிட்டின் பயங்கரவாதத் தொடர்புகள் குறித்துச் சொல்லியிருக்கின்றனர். அவரைத் திருமணம் செய்திருந்த அமெரிக்கப் பெண் ஒருவர், 2005-ல், டேவிட், லக்ஷர்-எ-தொய்பாவின் உறுப்பினராக இருக்கலாம் என அமெரிக்கப் புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகளிடம் டேவிட்டின் மொரோக்காவைச் சேர்ந்த மனைவி. பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிடப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
மும்பையில் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க உளவுத்துறை இந்தியாவை எச்சரித்தது. மொத்தமாக 26 முறைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடல் பாதை வழியே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படலாம், மும்பையின் ஐந்து நட்சத்திர விடுதிகள் தாக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. இருந்தும், இந்திய உளவுத்துறையாலும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவாலும் (ரா) தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை.
2. உளவாளியைக் கண்டுபிடிக்காமல் போனது
ஏட்ரியன் லீவை மற்றும் கேத்தி ஸ்காட்-க்ளார்க் எழுதிய ‘தி சீஜ்’ எனும் புத்தகத்தில், தன்னுடைய உதவியாளரான பாகிஸ்தான் உளவுத்துறையின் மேஜர் இக்பால், தனக்கு ‘ஹனி பீ’ என்றொரு சூப்பர் ஏஜண்ட் புது தில்லியில் இருப்பது பற்றிப் பெருமையாகப் பேசியதாக டேவிட் தெரிவித்திருக்கிறார்.
தெற்கு மும்பையில் பத்வர் பார்க் எனும் ஒரு மீனவக் குடியிருப்பைக் கண்டுபிடித்து, அந்த இடத்தில் பயங்கரவாதிகள் வந்து இறங்க முடியும் என்று சொன்னது இந்த ‘ஹனி பீ’ எனும் உளவாளியே. இவர் யார் என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
3. இரண்டு முறை மும்பைக்குள் வர முயற்சித்து தோற்றதைக் கண்டுபிடிக்கவில்லை
2016 ஆம் ஆண்டு, காணொலி மூலம் மும்பை நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிய போது, அதே பத்துத் தீவிரவாதிகள் 26/11 முன்பே இரண்டு முறை மும்பையில் தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள் என ஹெட்லி சொன்னார். முதல் முயற்சி செப்டம்பர் 8 அன்று நடந்திருக்கிறது. அன்று, படகுகள் கடலில் இருந்த பாறையில் மோதி மூழ்கிவிட்டன. படகுகளில் இருந்த ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் இழக்கப்பட்டன – படகுகளில் இருந்தவர்கள் மட்டும் தப்பித்தார்கள். அக்டோபர் மாதம் மறுபடியும் முயற்சி செய்யப்பட்டது, தோல்வியில் முடிந்திருக்கிறது.
4. மீனவர்கள் தகவல் சொன்ன பிறகு, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை!
நவம்பர் 26, 2008 அன்று கொலாபாவில் வந்திறங்கிய புதிய ஆட்களைப் பார்த்ததும், அங்கிருந்த கடைக்காரர்களும் மீனவர்களும் அவர்களிடம் விசாரித்திருக்கின்றனர். அவர்கள் இதைக் காவல்துறைக்கும் தெரிவித்திருக்கின்றனர். காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு முன்னரும், மீனவர் ஒருவர் பயங்கரவாதிகள் கடல்வழியே வெடிகுண்டுகளைக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது என்று கடிதம் எழுதியிருக்கிறார். அதையும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
5. பயங்கரவாதிகளின் ஆயுதங்கள்
பயங்கரவாதிகள் ஒரு காவல் நிலையத்தைக் கடந்து போனபோது, அவர்களிடம் அதிக துப்பாக்கிகள் இருந்ததால், காவல்துறையினர் அவர்களைத் தடுக்கவில்லை. காவல்துறையினர் விளக்குகளை அணைத்துவிட்டுக் கதவுகளை அடைத்தனர்.
ஆர்கெஸ் கையெறி குண்டுகள், தானியங்கித் தாக்குதல் துப்பாக்கிகள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை வைத்திருந்த தீவிரவாதிகளோடு, அதிர்ச்சியில் உறைந்திருந்த உள்ளூர் காவல்துறையினரால் போராட முடியவில்லை.
6. தீவிரவாதத் தாக்குதல் என அனுமானிப்பதில் தாமதம்
பல பொது இடங்கள் தாக்கப்பட்டிருந்தாலும், பலர் கொல்லப்பட்டிருந்தாலும், ஊடக நிறுவனங்கள் நேரடியாக இவற்றை ஒளிபரப்பிக்கொண்டிருந்தாலும் கூட, காவல்துறை நிர்வாகங்களால் உடனேயே இது ஒரு தீவிரவாதத் தாக்குதல்தான் எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை. நிழலுலகத் தாதாக்களுக்கு மத்தியில் நடந்த சண்டை என்றே நினைத்தனர்.
தீவிரவாதத் தாக்குதல் நடக்கத் தொடங்கி மூன்று மணி நேரங்களான பிறகுதான், ஆராய்ந்து பார்த்து, மஹாராஷ்டிராவின் முதலமைச்சர் தேசியப் பாதுகாப்பு படையை அனுப்புமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.
7. தேசியப் பாதுகாப்புப் படையும், கடற்படைத் தளபதிகளும் வந்து சேர எடுத்துக் கொண்ட நேரம்
இதற்கு முன்னரும் சில பயங்கரவாதத் தாக்குதல்களை மும்பைச் சந்தித்திருந்தாலும், நகருக்கு அருகில் தேசியப் பாதுகாப்புப் படை என எதுவும் அமைந்திருக்கவில்லை. ஹரியானாவின் மானேசரில் இருந்து கமாண்டோக்கள் வான்வழியே அழைத்து வரப்பட்டார்கள். பாதுகாப்புப் படையின் தலைவர் ஜே.கே.தத் விமானம் கேட்ட போது, விமானம் சண்டிகரில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இறுதியாக, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு தலையிட்டு, பாலம் விமான ஓடுதளத்தில் இருந்து இல்யூஷின் 76 விமானத்தைப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் மும்பைக்கு வர வாங்கிக் கொடுத்தது.
ஆனால், அளவில் சிறிதாக இருந்த இந்த விமானத்தால் வெறும் 120 வீரர்களை மட்டுமே சுமக்க முடிந்தது. அத்தனை வீரர்களையும் மும்பைக்குக் கொண்டு சேர்க்க மூன்று முறை பயணிக்க வேண்டும். விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கும், படையின் உறுப்பினர்களைக் கண்டுபிடிப்பதற்கும் நிறைய நேரம் செலவழிக்கப்பட்டது. மேலும், கோரிக்கை வைக்கப்பட்டதற்கு இரண்டு மணி நேரங்கள் கழித்துதான் விமானம் புறப்பட்டது. மும்பையை வந்தடைய மூன்று மணி நேரம் ஆனது.
தாஜ்மஹால் விடுதியில் இருந்த நான்கு பயங்கரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட கடற்படை கமாண்டோக்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களும் மூன்று மணி நேரம் கழித்துதான் வந்தார்கள். உள்ளூர்க் காவல்துறையினரும் துரிதமாக அழைக்கப்படாததால், பயங்கரவாதிகளை ஓர் இடத்தில் அடக்க முடியாமல் போனது.
8. ஊடகங்களின் நேரலை பயங்கரவாதிகளுக்கு உதவியது.
தாக்குதல்களை ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்ததால், மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பயங்கரவாதிகளின் பாகிஸ்தானிய உதவியாளர்கள், விடுதியில் முக்கியஸ்தர்கள் இருப்பதையும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதையும் பயங்கரவாதிகளுக்குத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
நவம்பர் 28 அன்றுதான், நேரடி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது. அதற்கு முன்னர், அவசரச் சூழ்நிலைகளில் ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என விதிமுறைகள் நடைமுறையில் இல்லை.
9. பாதுகாப்புப் படையை விட பயங்கரவாதிகளுக்குக் கட்டடத்தைக் குறித்து நிறைய தெரிந்திருந்தது.
நவம்பர் 27 காலை மும்பையை வந்தடைந்த பாதுகாப்புப் படையினருக்குக் கட்டடத்தின் வரைபடமோ, அமைப்புப் படமோ கிடைக்கப்பெறவில்லை. மறுபக்கம், ஹெட்லியின் ஆய்வினால், பயங்கரவாதிகளிடம் அனைத்துத் தகவல்களும் இருந்தன. தாஜ், ஓபராய் மற்றும் நரிமன் ஹவுஸில் பெரிய பலவீனங்களோடு கமாண்டோக்கள் போராடினர்.
10. பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் பாதுகாப்புப் படையினருக்குக் கொடுக்கப்படவில்லை
பயங்கரவாதிகளுக்கும், அவர்களுடைய உதவியாளர்களுக்குமான பேச்சுகளை மும்பையின் தீவிரவாத தடுப்பு அமைப்பு பதிவு செய்தது. இது உடனடியாகப் பாதுகாப்புப் படைக்குக் கொடுக்கப்படவில்லை. நரிமன் ஹவுவில் இருந்த பிணைக்கைதிகளைக் கொல்லும் பயங்கரவாதிகள் திட்டத்தைக் குறித்துப் படை வீரர்களுக்குச் சொல்லப்படவில்லை.
(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.