Aran Sei

இந்தியப் பெண்கள் ‘தரைமட்டம்’ – அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்

சமீபத்தில் வெள்ளை மாளிகையின் ரகசிய ஒலிநாடாக்கள் சில பொதுப் பார்வைக்காக வெளியிடப்பட்டன. அவற்றில், அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவராயிருந்த நிக்சனிடமும், அவரது பாதுகாப்பு ஆலோசகராயிருந்த ஹென்றி கிஸ்ஸிங்கரிடமும் நிலவிய இனவெறியையும், ஆணாதிக்கத் தையும் காட்டும் ஒலிநாடாக்களும் அடங்கும்.

குறிப்பாக, இந்தியாவுக்கான அமெரிக்காவின் கொள்கை முடிவுகள் மீது, இந்திய வெறுப்பும், இந்திய பெண்கள் குறித்த தரக்குறைவான பாலியல் பார்வைகளும் ஏற்படுத்திய தாக்கத்தை அந்த ஒலி நாடாக்கள் காட்டுகின்றன.

1971, பனிப் போர்காலத்து அமெரிக்கா, சோவியத் ரஷ்யா மோதல் சூழலில், தெற்காசியப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்து செல்ல இருந்த காலகட்டம் அது. ராணுவ ஆட்சியின் கீழிருந்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆதரவு. இந்தியாவோ சோவியத் ரஷ்ய சார்பு கொண்ட மதில் மேல் பூனை நாடு.

கிழக்கு பாகிஸ்தான் என அன்று அறியப்பட்ட இன்றைய வங்கதேசத்தில் 1971, மார்ச் மாதம் நடந்த தேர்தலில், பெரும்பான்மை வங்காள தேசிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, மேற்கு பாகிஸ்தான் என அன்று அறியப்பட்ட இன்றைய பாகிஸ்தான் தனது சொந்த மக்களான வங்காளிகள் மீது மிகக் கொடூரமான தாக்குதலை அரங்கேற்றியது. இந்த இனப்படுகொலைகளை நிக்சன் தலைமையிலான அமெரிக்க அரசும் ஆதரித்தது.

இந்த பின்னணியில், அகதிகளாய் வந்த வங்காளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து, போரில் வென்று வங்கதேசம் பிறக்க இந்தியா உதவியது வரலாறு. இந்த மொத்த நிகழ்வுகளிலும் வெள்ளை மாளிகையின் பங்கை, ரத்த நினைவுகளாய் பதிவு செய்தது ‘The Blood Telegram’ என்ற புத்தகம். 2013ல், Gary J. Boss என்ற அமெரிக்க பேராசியரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட பல்வேறு ஒலிக் கோப்புகளிலிருந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. முற்றிலும் திரைமறைவில் நிகழ்ந்த நிக்சன், கிஸ்ஸிங்கர் இடையேயான உரையாடல்கள்தான் அவ்வொலி நாடாக்கள்.

இன்னும் வெளிவந்திராத பல்வேறு ரகசிய ஒலிக் கோப்புகளையும் கூட வெளிக் கொணர வேண்டுமென, Gary J. Boss 2012லிருந்து மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவால், கடந்த 2020 மே மாதம் வரை நிக்சன் உரையாடல்கள் அடங்கிய மேலும் பல ரகசிய ஒலி நாடாக்கள் வெளியிடப்பட்டன. அவற்றிலிருந்த உரையாடல்கள்தான், உலகின் சக்திவாய்ந்த ஒரு அரசின் முதல் குடிமகனும், அவரது உயரிய ஆலோசகரும், அதிகாரிகளும் எத்தகைய இனவெறி கண்ணோட்டம் கொண்டவர்கள், ஆணாதிக்க பாலியல் வக்கிரம் கொண்டவர்கள் என்பதைக் காட்டுகின்றன..

1971ல் தனது ஓவல் அலுவலகத்தில் வைத்து திருவாளர் நிக்சன், கிஸ்ஸிங்கர் மற்றும் வெள்ளை மாளிகை உயரதிகாரி எச்.ஆர். ஹால்டிமெனிடம், ‘உலகிலேயே கவர்ந்திழுக்கும் எந்த அழகுமற்ற பெண்கள் இந்தியப் பெண்கள்தான்’ என்ற குறிப்பிட்டதுடன், ‘அதில் சந்தேகமேயில்லை’ என வெறுப்பு மேலிடத் தொடர்கிறார், ‘இவர்கள் பாலியல் உந்துதல் அறவேயில்லாதவர்கள், சிலர் குறிப்பிடுவர் கறுப்பினத்தவர் எப்படியாம் என்று, கறுப்பினத்தவரிடம் குறைந்த பட்சம் விலங்கிற்குரிய ஒரு வேட்கையும், ஈர்ப்புமாவது உண்டு. ஆனால், இந்தியர்கள்? சை.. தரைமட்டம்’ என்கிறார்.

நவம்பர் 4, 1971ல், அப்போதைய இந்தியப் பிரதமரும், உலகின் சக்தி வாய்ந்த பெண் ஆளுமையுமான இந்திரா காந்தியுடன், நிக்சன் கிடுக்குப்பிடி சந்திப்பு ஒன்று நடத்தினார். அச்சந்திப்பின் இடையே இளைப்பாறும் நேரத்தில் கிஸ்ஸிங்கரிடம் தனது பாலியல் ரீதியான இன வெறுப்பை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார் நிக்சன் .

‘அவர்களைப் (இந்தியப் பெண்கள்) பார்த்தாலே காமம் காணமல் போய்விடுகிறது, எப்படித்தான் பிறர் அவர்களைக் காமுறுகிறார்களோ, ஹென்றி’ என கிஸ்ஸிங்கரை கேட்கிறார் அதிபர் நிக்சன். கிஸ்ஸிங்கரோ சரியாக கேட்காத ஏதோவொன்றை சொல்லி ஆமோதிக்கிறார்.

பாகிஸ்தானுடனான யுத்ததின் அபாயங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் சண்டமாருதம் செய்த பல கட்ட பேச்சுக்களின் இடையே, தனது பாலியல் இனவெறுப்பு மேற்படி பேச்சுவார்த்தையில் எவ்வகையில் உதவுகிறது என்பதை கிஸ்ஸிங்கரிடம் குறிப்பிடுகிறார் நிக்சன் – ‘அவர்களைக் கண்டு காமுற இயலாது, அருவெறுப்புதான் மேலிடுகிறது, இதுவே அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள உதவுகிறது’ என.

பிறகு நவம்பர் 12, 1971ல் அரசு செயலாளர் பி. ரோஜர், இந்திரா காந்தியை கடிந்து கொள்வது பற்றி குறிப்பிட்டவுடன், நிக்சன் ‘எப்படித்தான் அவர்களெல்லாம் கருவுற்று குந்தை பெறுகிறார்களோ’ என்று சலித்துக்கொள்கிறார்.

ஜூன் 1971 மத்தியில், இந்தியா வங்கதேசத்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது. இந்தியாவுக்கான அன்றைய அமெரிக்கத் தூதுவர் கென்னித் கிட்டிங், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என அமெரிக்க அதிபரிடம் கடுமையாக முன் வைத்திருந்தார். இதனை மனதிற் கொண்டு இருநாட்கள் கழித்து கிஸ்ஸிங்கருடனான வேறொரு உரையாடலில், நிக்சன் இவ்வாறு கிட்டிங் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘அடக் கடவுளே, 60 வயசுக் கிட்டிங்கை வளைக்கிற அளவுக்கு இந்தியர்களிடம் என்ன இருக்கிறது?’. அதற்கு கிஸ்ஸிங் சொல்கிறார், ‘அவர்கள் வெற்றுப் புகழ்ச்சியில் ஆளை மயக்குவதில் எமகாதகர்கள், இப்படித்தான் 600 வருடமாய் அதிகாரமையங்களை மயக்கி காரியம் சாதிக்கிறார்கள்’.

கிஸ்ஸிங்கர், பாகிஸ்தான்காரர்களையும் விட்டு வைக்கவில்லை, ஆகஸ்டு 10, 1971ல் ‘பாகிஸ்தானியர்கள் நமக்கு இணங்கியவர்கள்தான், ஆனால் மனதளவில் காட்டுமிராண்டிகள், இந்தியர்களிடம் இருக்கும் நுணுக்கம் (நேர்த்தி/கூர்மதி) அவர்களிடம் கிடையாது’ என கிஸ்ஸிங்கர் கூறுகிறார்.

சீனாவை ஊடுருவும் அமெரிக்க போர்த்தந்திர உத்தியின் முக்கிய அங்கம் என்ற வகையில் பாகிஸ்தானுடனான அன்றைய அமெரிக்க உறவு புரிந்து கொள்ளக் கூடியதே, ஆனால் அதிபர் நிக்சன் மற்றும் கூட்டாளிகளின் இனவெறியும், பாலியல் இனவெறுப்பு சீரழிவுக் கலாச்சாரமும் வங்கதேசத்தில், பாகிஸ்தான் நிகழ்த்திய இனப் படுகொலைக்கு ஆதாரவாய் அமெரிக்காவை நிற்க வைத்தது. இதனை இந்தியா தனக்கு சாதகமான ஒரு வெளிநாட்டு ஆட்சிக் கவிழ்ப்பையும், அதனைத் தொடர்ந்து ஒரு வெற்றிகரமான யுத்தத்தையும் சாதிக்க பயன்படுத்திக் கொண்டது.

பல பத்து வருடங்களாக, நிக்சன் மற்றும் கூட்டாளிகள் தங்களை ஏதோ பெரிய ராஜதந்திரிகள் போன்ற பிம்பத்தை கட்டியெழுப்பி காத்து வந்தனர். தற்போது வெளிவந்துள்ள ஒலிநாடாக்கள், தேசப் பாதுகாப்பு என்ற முகமூடிக்குப் பின் ஒளிந்திருந்த அவர்களின் உண்மையான உணர்வுநிலையான உச்சகட்ட இனவெறியையும், பாலியல் சீரழிவையும் அம்பலப்படுத்தியுள்ளன. இது ஏதோ அன்று நடந்த வரலாறு மட்டுமல்ல, இன்றும், டிரம்புகளாகவும், மோடிக்களாகவும் இதுதான் நடந்து வருகிறது. பாலியல் பலாத்கார கட்சிகளின் தேசபக்தி முழக்கங்களே இதற்கு சாட்சி.

-நியூயார்க் டைம்சில் வெளியான கட்டுரையின் சுருக்கம்

https://www.nytimes.com/2020/09/03/opinion/nixon-racism-india.html

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்