Aran Sei

ஆன்லைன் வகுப்புகளால் பெண்குழந்தைகள் படிப்பை இழக்கும் அபாயம்

பாடத்திட்டங்களைத் திருத்த அவகாசம் இல்லாமல் கொரோன தொற்றின் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேருக்குநேர் வகுப்புகளை நடத்த முடியாமல் கல்வியாளர்கள் சிக்கலைச் சந்தித்துவந்த நிலையில் இணையதள வசதியின்மை காரணத்தினால் இவர்கள் ஒரு புதுவகை சிக்கலை சந்திக்க நேரிட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு இணையதள வசதி, கணினி, கைப்பேசி போன்ற உபகரணங்கள் இல்லாதது டிஜிட்டல் பிளவையும் படிப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. கிராமப்புறங்களிலும் நகரத்துச் சேரிகளிலும் ஆண்பிள்ளைகளுக்கு இருக்கும் அளவுக்கான டிஜிட்டல் வசதி பெண்பிள்ளைகளுக்கு இல்லை என்பது ஒரு புதிய ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது.

“இந்தியாவில் பெரும்பாலும் பெண்பிள்ளைகளைத் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதிலிருந்து தடுக்கிறார்கள்” என்று மூத்த கல்வி ஆராய்ச்சியாளரான லிடியா மார்ஷல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் யங் லைவ்ஸின் கல்வி ஆராய்ச்சி அதிகாரி ரியானன் மூர் ஆகியோர் கூறுகிறார்கள்.

“தொழில்நுட்ப உபயோகம் வீட்டை சார்ந்தது, உடமையை சார்ந்து மற்றும் வசிக்கும் இடத்தை சார்ந்து மாறுபடும் என்றாலும் இந்த ஏற்றத்தாழ்வுக்கு ஒரு பாலின காரணமும் இருக்கிறது. இந்தியாவில் சிறுமிகளைவிடச் சிறார்கள் அதிகமாகக் கணினியையும், இணையத்தையும் உபயோகிக்கிறார்கள் (திறன்பேசியைப் போன்ற மற்ற தொழில்நுட்பங்களையும் அவர்களே அதிகம் உபயோகிக்கிறார்கள்). ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடத்திய ஆய்வில் 5ல் 4 சிறுமிகள் (80%) இதுவரை இணையதளத்தை உபயோகித்ததில்லை. 5ல் 3க்கும் அதிகமான சிறுமிகள் (62%) கணினியை உபயோகித்ததில்லை என்பது தெரியவந்துள்ளது. பாலின ஏற்றத்தாழ்வும் மற்ற ஏற்றத்தாழ்வுகளைப்போல் தான். இந்த புள்ளிவிவரத்தின் மூலம் கிராமப்புறத்து மாணவிகள், மாணவர்களைப்போலவோ, உடமை படைத்த மாணவிகளைப் போலவோ, நகர்ப்புறத்து மாணவிகளைப்போலவோ தொழில்நுட்பங்களை உபயோகிக்க முடியவில்லை என்பது தெரியவருகின்றது” என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு இருக்கும் இந்தியாவில் மட்டுமல்லாமல் வளர்ந்த அமெரிக்கா, சுவீடன் போன்ற நாடுகளிலும் டிஜிட்டல் வகுப்பறைகள் சவாலாகத்தான் இருக்கிறது.

“நீண்ட காலமாக மூடப்பட்டதால் ஏற்பட்ட கல்வி இழப்பின் காரணமாக இந்த நெருக்கடியின் முடிவிற்குப் பிறகு பள்ளிப்படிப்பு மாறப்போகிறது. டிஜிட்டல் தலையீட்டின் காரணமாக எதிர்காலத்தில் கிராமப்புறங்களில் மனித இடைமுகங்களை நாம் குறைக்கவேண்டியிருக்கும். தொழில்நுட்பம் உயர்வர்க்கத்திற்கும், நடுத்தரவர்கத்திற்குமானது. வகுப்பறைகளில் ஆசிரியர் பாடம் நடத்துவதை இந்த தொழில்நுட்பங்கள் மாற்றியமைக்க முடியாது. நீண்ட நெருக்கடி காலகட்டத்தில் நாம் எவ்வாறு பள்ளிகளை நடத்தப்போகிறோம் என்பது விவாதிக்கவேண்டிய கேள்வி. ஆனால் நாம் கையில் தொலை பேசியைக்கொண்டு வகுப்புகளை நடத்தப்போகிறோமா?” என்று தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் (NIEPA) முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர் கோவிந்தா கேள்வியெழுப்புகிறார்.

இந்தியா, பெரியஅளவில் பள்ளி செல்லும் சிறுவர்களைக்கொண்ட நாடு. ஜனத்தொகையில் 41% 18 வயதிற்கும் கீழே உள்ள சிறுவர்கள். இதில் சரிபாதி பெண்கள்.

இன்ட்ராக்ட்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ், சமூக வானொலி, தொலைக்காட்சி, வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு இணைய தளங்களின் மூலம் வகுப்புகள் நடைப்பெறுவதாலும், பள்ளிகள் பூட்டப்பட்டிருப்பதாலும் பெரும்பாலும் மாணவர்கள் வீட்டிற்குள் அடைந்திருக்கிறார்கள். மாநில அரசுகள் பொதுப்பள்ளிகளில் பல செயலிகளைப் பயன்படுத்திவருகிறார்கள். அரசாங்கம் செயலிகளின் மூலம் கல்வியைக் கொண்டுசேர்க்க முயற்சிக்கும்போதும் கல்வி தடைப்படுகிறது (குறிப்பாகப் பெண்களுக்கு).

“ஊரடங்கு விலக்குக்குப் பின்னர் சுமார் 20 சதவீத பெண்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லப்போவதில்லை என்று யூகிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலான பெண்பிள்ளைகள் திருமணம் செய்துகொள்ளும் அபாயமுள்ளது” என்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அமிதா ராம்பால் கூறுகிறார்.

கொரோனா நெருக்கடியின் காரணமாக மாத்யூ எஃபக்ட் (செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாவது ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவது) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பங்களில் முன்னுரிமை அளிக்காததின் விளைவாக அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். இதே நிலை நீண்டகாலத்திற்கு நீடித்தால் அவர்கள் பள்ளியிலிருந்து இடையில் நீங்கக்கூடும்.

இப்பொழுது கல்விகற்க அடிப்படையாக இருக்கும் தொழில்நுட்ப உபயோகிப்பிலும் பாலின பேதம் இருப்பதால் இந்த பிரிவுகளை ஈடுகட்டும் வகையில் கல்வி ஆலோசகர்கள் தீர்வுகளைக் கொண்டுவரவேண்டும்.

UNCTD (வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாடு) ஏப்ரல் 6 ம் தேதி வெளியிட்ட ‘The COVID -19 Crisis: Accentuating the Need to Bridge Digital Divides,’ எனும் அறிக்கையில் “தொழில்நுட்பத்தால் இணைந்தோருக்கும் இணையாதோருக்கும் இடையுள்ள தூரத்தை இந்த கொரோனா நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது என்றும் இன்னும் பலருக்கு டிஜிட்டல் வசதி சரியாக போய்ச்சேரவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தால் தொலைதூரத்திலிருந்தும் கல்வி பயில முடிகின்றது. இருப்பினும் இது எத்தனைப்பேருக்குச் சாத்தியப்படும் என்பது ஒரு கேள்விக் குறி. இணையதள வசதி, பெற்றோர்களின் வசதி, பள்ளிகளின் தயாரிப்பின்மை ஆகிய காரணங்களினால் இது நடைபெறக் கூடும்.

பெரும் நகரங்களிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மாணவர்களுக்கு இவ்வகை ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுப்பதில் சிக்கல் உள்ளது. பொதுவாக இந்த சமயத்தில் இணையதள வசதி முக்கியமாக இருக்கின்றது. நாட்டின் சில மாநிலங்களில் இந்த இடைவெளி அப்பட்டமாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த மாணவர்களைக் கொண்ட பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 7 முதல் 8 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே இணைய வசதி இருக்கின்றது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளின் சிக்கலை நாம் உணர முடியும்.

உள்ளூர் பஞ்சாயத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவர்கள் வகுப்பில் இணையலாம். “வறுமையால் பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களே மீண்டும் கீழே தள்ளப்படுவார்கள். 20% பள்ளிகளிலிருந்து இடைநீங்குவார்கள், இதில் பெரும்பாலும் மாணவிகளாக இருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். தீர்வை கீழிருந்து கொண்டுவரவேண்டும், மாணவர்களை பள்ளிக்குக்கொண்டுவர கிராமப்பஞ்சாயத்துகள் வழிவகை செய்யவேண்டும்” என்று பேராசிரியர் கோவிந்தா கூறுகிறார்.

ரூம் டு ரீட் (RtR) எனும் உலக நிறுவனம் கல்வி மற்றும் பாலின சமத்துவத்தை முன்வைத்துப் பல ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திவருகிறார்கள். உலக மாற்றம் மாணவர்களின் படிப்பிலிருந்து துவங்குகிறது என்ற அடிப்படை நம்பிக்கையில் 2000ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், கல்வியறிவு பெறுவதற்கான ஆரம்ப வகுப்பு, மற்றும் பெண்கள் கல்விக்கான மேல்நிலை வகுப்புகளின் மூலம் கல்வியைப் பயிற்றுவிக்க முயல்கிறார்கள்.

“இந்த நெருக்கடி காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே பெற்றோர்கள் தொழில்நுட்ப உதவியுடன் மாணவர்களுக்குக் கல்வியைப் பயிற்றுவிக்க முடியும். எனவே கல்வி பயிற்றுவிக்கும் முயற்சியில் பெற்றோர்கள்தான் முக்கிய பங்காற்றுவார்கள். இந்த “புதிய வழக்கை” நிறைவுசெய்ய எங்கள் செயல்பாடுகளை விரைவாக முன்னிலைப்படுத்தவேண்டும். இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்ட ரூம் டு ரீட் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கைப்பேசி நெட்வொர்க்குகள் மூலம் விநியோகிக்கக்கூடிய டிஜிட்டல் கல்விப் புத்தகங்களை உருவாக்கியுள்ளது. எவ்வாராயினும் பெண் பிள்ளைகளுக்கு இது சென்று சேர்வதை நாம் உறுதி செய்தால்தான் பாலின பாகுபாட்டைத் தவிர்க்க முடியும்” என்று ரூம் டு ரீட் இந்திய இயக்குநர் சவுரவ் பானர்ஜி கூறுகிறார்.

#eSkills4Girls என்பது 2018 ஆம் ஆண்டில் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இது, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்து டிஜிட்டல் பாலின பேதத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.

வாரணாசி மற்றும் லல்லபுராவில் கைவினை தொழில் பகுதிகளிலுள்ள கிராமப்புற பெண்களின் பாரம்பரிய மற்றும் தொழில் திறனை அதிகரித்ததின் மூலம் அவர்களால் இணையதள வசதியோடு அதிக சந்தைகளை அணுக முடிகின்றது.

இதேபோல், ஈக்வல் குளோபல் பார்ட்னர்ஷிப் பெண்களின் டிஜிட்டல் பாலின சமத்துவத்தை மேம்படுத்த தொழில்நுட்பத் தொடர்புகளை வழங்குவது, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித திறன்களை வளர்ப்பது, பெண்களின் தலைமைத்துவ பண்பை வளர்ப்பது போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

கிராமப்புறத்துப் பெண்களும் அரசாங்க முயற்சியின் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றம் பெறுகிறார்கள். ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திலும் ஒரு உறுப்பினர் டிஜிட்டல் கல்வியறிவு பெறுவதை நோக்கமாகக் கொண்ட பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஷார்த்த அபியன் திட்டம் குறிப்பிடத்தக்கது. ஈ-பாடசாலாவின் மூலம் அனைவரும் கல்வி பயிலலாம் மற்றும் உடானின் மூலம் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் இலவச பாடங்களைப் பயின்றுகொள்ளலாம்.

கூகுள் மற்றும் டாடா டிரஸ்ட்களுக்கு இடையிலான ஒரு கூட்டுத் திட்டமான “சாத்தி”, இந்தியாவில் சுமார் 2.4 மில்லியன் கிராமங்களில் 25 மில்லியன் பெண்களுக்குத் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கூகுள் அளிக்கும் இணையதள சேவையின் வழியே பயனளித்துள்ளது. சாத்தி (நண்பர்கள்) எனும் அமைப்பைச் சார்ந்த கிராமத்துப் பெண்கள் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் சேர்ந்து மற்ற பெண்களுக்கு இணையதள உபயோகத்தைப் பயிற்றுவித்திருக்கிறார்கள். ஒருவர் 6 மாதத்தில் 600 பேரைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கணக்கில் இதுவரை 2 முதல் 3 கிராமங்களில் இந்த பயிற்சி நடைபெற்றிருக்கிறது.

உலகளாவிய முயற்சிகளும் உள்ளூர் முயற்சிகளும் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும். #Eskills4Girls, EQUAL, Saathi Projects, Udaan போன்ற முயற்சிகள் டிஜிட்டல் பாலினப் பிரிவைக் குறைப்பதற்கான பாராட்டத்தக்க முயற்சிகளாகும். இணையதள சேவைகளும் மலிவான தொழில்நுட்பங்களும் கிராமப்புறங்களில் கிடைப்பது சிக்கலாக இருப்பதால், இந்த கிராமப்புறத்துப் பெண்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

(www.thebetterindia.com இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்