Aran Sei

அமெரிக்க-சீன வர்த்தகப் போர்: யாருக்கு அடி பலம்?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் சீன எதிர்ப்பு முழக்கம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டது.

We chat, tiktok போன்ற செயலிகளையும் Huawei போன்ற நிறுவனங்களையும் தடை செய்வதில் துவங்கி, அமெரிக்க பங்குச் சந்தையில் இணைக்கப்பட்டிருந்த சீன நிறுவனங்களை நீக்குவது, சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வது என்பவை தொடர்ந்து தென் சீனக் கடலில் ராணுவப் பயிற்சி நடத்துவது மற்றும் ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை முன் வைத்து ஹாங்காங் அரசு அதிகாரிகளுக்கு தடை விதிப்பது வரை, தான் இரண்டாவது முறை அதிபராகும் கனவுக்காக ட்ரம்ப் தன் வரம்புகளை மீறி எடுத்த நடவடிக்கைகள் ஏராளம்.

இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னும் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் அமெரிக்க மக்களில் 60% பேர் சீனாவுடனான உறவை ட்ரம்ப் கையாளும் முறையை அங்கீகரிக்கவில்லை‌ என்று தெரிவிப்பது டிரம்புக்கு ஏமாற்றமாகவே இருக்கும். இது சென்ற ஆண்டு 48% ஆக இருந்தது. குற்றத்தடுப்பு, வெளியுறவு, பொருளாதாரம் ஆகியவற்றை கையாள்வதை விட சீனப் பிரச்சனையை கையாள்வதில் ட்ரம்ப் மோசமாக செயல்படுகிறார் என்று அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கர்கள் சீனாவை டிரம்ப் தவறாக கையாள்வதை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்குப் பொருள் அமெரிக்கர்கள் சீனாவை உயர்வான இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, அமெரிக்க ஊடகங்களின் அச்சுறுத்தும் செய்திகளாலும், அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் சீனா பற்றிய அமெரிக்கர்களின் கருத்து மோசமாகியுள்ளது என்பதே உண்மையாகும்.

எனினும் மக்கள் இந்த வர்த்தகப் பனிப்போரால் அமெரிக்காவுக்கு என்ன பயன் எனக் கேள்வி எழுப்புகின்றனர். உள்நாட்டில் சரிசெய்யப்பட வேண்டியவற்றை கவனிக்காமல் சீனாவிற்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் மிக அதிக நேரத்தையும்,முயற்சியையும் ட்ரம்ப் எடுத்து வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.

ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கையின் மையமான சீன வர்த்தகப் போரை எடுத்துக் கொண்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பழிக்கு பழி என்ற வகையில் இரு தரப்பும் மேற்கொண்ட இறக்குமதி வரி உயர்வுகள் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை பெருமளவு குறைத்துள்ளது.

ஆனால் இந்தக் குறைவு அமெரிக்காவுக்கு அது எதிர்பார்த்தபடி அதிக பயனைக் கொடுத்துள்ளதா எனில் இல்லை என்கிறது நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கி. உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகளின் சுமை ஏறத்தாழ முழுமையாக அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் தலையிலேயே விழுந்திருப்பதாக அது கூறுகிறது.

ஆனால் இதன்மூலம் அமெரிக்க உள்நாட்டு சந்தையிலிருந்து சீனா விரட்டப்பட்டிருப்பது உண்மைதான். ஆய்வுகள் படி 2017-2019 காலகட்டத்தில்  சீனா, அமெரிக்காவின் மொத்த  இறக்குமதியில் தனது பங்கில் 2% ஐ இழந்துள்ளது. எனவே, இந்த வர்த்தகப் போர் அமெரிக்கா சீனப் பொருட்களை நம்பி இருக்க வேண்டிய நிலையை குறைப்பதில் ஓரளவு  (2 சதவீதப் புள்ளி அளவுக்கு) வெற்றி கண்டுள்ளது.

ஆனால் இது மட்டுமே ட்ரம்ப்பின் முக்கிய குறிக்கோள் அல்ல. அவரே வலியுறுத்துவது போல இந்தப் போர் சீன-அமெரிக்க வர்த்தக ஏற்றத்தாழ்வை குறைப்பதோடு மட்டுமில்லாமல், வேலை வாய்ப்புகளையும், வர்த்தகத் தொடர்புகளையும் மீண்டும் அமெரிக்காவிற்குள் கொண்டுவரவும் வேண்டும். ஆனால் இந்த இரண்டிலும் தோற்றுவிட்டது என்பதுதான் வருத்தத்திற்குரியது.

அதிகாரபூர்வ அரசு தகவல் படி அமெரிக்காவுடனான சீனாவின் மாதாந்திர வர்த்தக மிகுதி  (இறக்குமதியை விட அதிக ஏற்றுமதி) கடந்த ஜூன் 2018 முதல் சுமார் $2700 கோடி ஆகவே உள்ளது.  இது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் $2100 கோடியாக இருந்தது. இதே காலத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை  $4,100 கோடியிலிருந்து $4840 கோடியாக உயர்ந்துள்ளது.

மெக்சிகோ, வியட்நாம் போன்ற நாடுகளிடம்தான் அமெரிக்க சந்தையில் சீனா தனது பங்கை  இழந்துள்ளது, அமெரிக்க நிறுவனங்களிடம் இல்லை. அங்கு இந்த நாடுகள் ஈட்டிய  ஆதாயம் சீனாவின் இழப்பிற்கு சமமாக உள்ளது. அதாவது அமெரிக்க வர்த்தகப் போரினால் சீனாவுக்கு  ஏற்பட்ட இழப்பு அமெரிக்காவுக்கு அல்ல பிற நாடுகளுக்குத்தான் ஆதாயமாக போனது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ட்ரம்ப்பின் வர்த்தக போரினால் அமெரிக்க நுகர்வோர் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. சீனாவின் இழப்பு பிற அந்நிய ஏற்றுமதியாளருக்கே லாபமாக முடிந்தேள்ளதே தவிர அமெரிக்க நிறுவனங்களுக்கு சாதகமாக மாறவில்லை.

இந்த வர்த்தகப் போரின் மறுபுறத்தில் அமெரிக்கச் சந்தையில் இருந்து சீன ஏற்றுமதியாளர்கள் வெளியேற்றப்பட்டாலும் அவர்கள் தங்கள் ஏற்றுமதியை பிற நாடுகளுக்கு திருப்பி விட்டனர். உலக வர்த்தக அமைப்பு (WTO) வெளியிட்ட அறிக்கையின் படி உலகச் சந்தையில் சீனாவின் பங்கு அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட இழப்பைத் தாண்டி அரை சதவீதப் புள்ளி வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த வளர்ச்சியில் ஒரு பகுதி ஏற்றுமதி திருப்பி விடப்படுதல் மூலம் நடக்கிறது. சீனா மூன்றாம் நாடுகளுக்குத் தன் பகுதி உற்பத்திப் பொருட்களை விற்கிறது. அவை அங்கே முழுப் பொருளாக மாற்றப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன.  இதன் மூலம் சீனா அமெரிக்கா விதித்த அதிக இறக்குமதி வரியை தந்திரமாக தவிர்த்துவிட்டது. இந்த வர்த்தகப் போருக்குப் பின் சீனாவின் வர்த்தக உறவு நாடுகள் பலவற்றின் ஏற்றுமதி அதிகரித்திருப்பது சீனாவின் பங்களிப்பு அதிகரித்திருப்பதையே காட்டுகின்றன.

எதிர் உலகமயமாக்கல் ‘(deglobalisation) [அல்லது உலகமய நீக்கம்] விளைவாக சீனா தனது உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு வெளியேதான் தயாரிக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தது. இதனால் உற்பத்தி சங்கிலிகள் மீது தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் வழிகளையும் அது கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டாண்டு கால அனுபவத்திலிருந்து திறந்த மற்றும் கூட்டுறவு அணுகுமுறையின் மூலம் தனது வர்த்தகக் கூட்டாளிகளை தொடர்ந்து வர்த்தகத் தொடர்பில் இணைத்து வைத்து அவர்கள் தங்கள் உற்பத்திக்கு சீனாவை நம்பி இருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.

தற்போது பெரும் எண்ணிக்கையிலான சீன நிறுவனங்கள். ‘China-plus-One’ என்ற நடைமுறையை பயன்படுத்துகின்றனர் இதன் மூலம் உற்பத்தி வலைப்பின்னலை சீனாவை மையமாகக் கொண்டு ஆசியப் பகுதி முழுவதிலும் வலுப்படுத்துவதையும், விரிவாக்குவதையும் செய்கின்றனர்.

இது சரியாக நடந்தால் ‘Made in China’ என்பதிலிருந்து ‘Made around China’ என்பதை நோக்கிச் செல்லும் மாற்றம் ஆசியப் பகுதிகளை பொருளாதார ரீதியாக ஒன்றிணைத்து வலுவான  பிராந்திய உற்பத்தி கட்டமைப்பை உருவாக்கும்.  அது ‘எதிர் உலகமயமாக்கலின்’ தொய்வினை ஓரளவு சரி செய்யும் பிராந்திய மயமாக்கலாக இருக்கும்.

-அய்டன் யோ

நன்றி : சவுத் சீனா மார்னிங் போஸ்ட் (ஹாங்காங் நாளிதழ்)

https://www.scmp.com/comment/opinion/article/3098746/us-china-trade-war-who-really-bleeding-more-donald-trumps-tariffs

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்