Aran Sei

கோசாலைகளுக்கு நிதி கொடுக்காத யோகி ஆதித்தியநாத் – பசியால் மடியும் நிலையில் பசுக்கள்

“பசுத்தாயை” காப்பதற்காக உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்த பசு பாதுகாப்பு தொழுவங்களுக்கு (கோசாலைகள்) அவருடைய அரசு நிதியை நிறுத்தியதால், அவை பசியால் மடியும் சூழல் உருவாகியுள்ளதாக டெலிகிராஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உரிமையாளர் இல்லாத மாடுகள், நெடுஞ்சாலைகளிலும், சாலைகளிலும்  சுற்றி திரிவதால், விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. மேலும், பசுக்கள், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து கொண்டும் இருக்கின்றன. இது அம்மாநில மக்களின் தினசரி வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது.  இதற்கு தீர்வு காணும் விதமாக, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், கோசாலைகள் திட்டத்தை அறிமுகபடுத்தினார்.

இதன்மூலம், உரிமையாளர் இல்லாத மாடுகள் இந்த தொழுவங்களுக்கு கொண்டு வரப்பட்டப்பட்டன. தொழுவங்களை நிர்வகித்தவர்கள் மாடுகளுக்கு உணவளித்து பரமாரித்துக் வந்தனர்.

இந்நிலையில், யோகி ஆதித்தியநாத், கோசாலைகளுக்கு நிதியை நிறுத்தியதால், மாடுகளின் நிலை மோசமாக உள்ளதாக கோசாலைகளை நிர்வகிக்கும் பஞ்சாயத்து தலைவர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உத்திர பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் இருக்கும் பண்டா மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், யோகி ஆதித்தியநாத்திற்கு எழுதிய கடிதத்தில், டிசம்பர் 25 ஆம் தேதிக்கு முன் நிதியுதவி அளிக்காவிட்டால், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கோசாலைகளில் இருந்து பசுக்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

“2020 ஏப்ரலில் இருந்து கோசாலைகளை நடத்துவதற்கு எங்களுக்கு எந்த பணமும் வரவில்லை. எங்கள் சொந்த செலவில் மாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய பஞ்சாயத்து தலைவர் பதவிக்காலம் டிசம்பர் 25 அன்று முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு நாங்கள் கால்நடைகளை இங்கிருந்து விடுவித்துவிடுவோம், இல்லையென்றால் அவை பசியில் செத்துவிடும்” என அம்மாவட்டத்தின் கிராம பிரதன் சங்கத்தின் தலைவரான கியான் சிங் டெலிகிராஃப்  இடம் கூறியுள்ளார். அம்மாவட்டத்தில் 43 கோசாலைகளில் 15,000 மாடுகள் உள்ளன.

“பஞ்சாயத்து தலைவர்கள் புகார்களை அளித்தது மட்டுமல்லாமல், நாங்களும் எங்கள் தரப்பில் இருந்து பல முறை அரசை தொடர்பு கொள்ள முயற்சி செய்து விட்டோம்” என பண்டல்கண்டை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த கால்நடை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக டெலிகிராஃப் கூறுகிறது.

2019-20 நிதியாண்டில் பசுக்களை பராமரிப்பிற்கென 613 கோடி ரூபாயை ஆதித்தியநாத் அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் பசு பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மாநில அரசு, ஒவ்வொரு மாட்டிற்கும் முப்பது ரூபாய் கணக்கில் ஒரு தொகையை கிராம பஞ்சாயத்துகளுக்கு கொடுக்க வேண்டும் எனும் நிலையில், ஃபெப்ரவரி மாதத்தில் இருந்தே சில மாவட்டங்களுக்கு, கோசாலைகளுக்கான நிதி நிறுத்தப்பட்டது; மற்ற மாவட்டங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து நிதி அனுப்பப்படவில்லை என்கிறது டெலிகிராஃப்.

டிசம்பர் 17 ஆம் தேதி, உத்திர பிரதேசத்தின் அஸம்கரை சேர்ந்த சுன்னு லால் எனும் முன்னாள் ராணுவ வீரர், தன்னுடைய வயலில் இருந்த பயிரை மாடு ஒன்று சேதம் செய்ததால் அதை சுட்டுக் கொன்றார். இதற்காக, கைது செய்யப்பட்ட அவர் மீது, ஆயுதச் சட்டத்தின் கீழும், யோகி ஆதித்தியநாத் அரசு பசுக்களை பாதுகாக்க கொண்டு வந்த கோவன்ஷ் நிவாரண் அதியம் எனும் சட்டத்தின் கீழும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிப்பார் என்கிறது டெலிகிராஃப்.

யோகி ஆதித்தியநாத்தின் ஆட்சியில், பசுக்காவல் குழுக்களின் வன்முறையும் அதிகரித்தது என்பதும், பசுக்காவலை மையமாக வைத்து மனித உயிர்களும் பறிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்