Aran Sei

ஹரியானாவில் நடைபெற்ற தடியடிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தொடர்பில்லை – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

ரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அயுஷ் சின்ஹா உத்தரவின் பேரில் தான் விவசாயிகள்மீது தடியடி நடத்தப்பட்டது எனக் கூறுவது தவறானது என உயர்நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி கர்னல் பகுதியைச் சேர்ந்த 5 குடியிருப்பு வாசிகள் இந்தத் தாக்கல் செய்த  மனுவிற்கு பதிலளிக்கும்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பதில் மனுவை ஹரியானா காவல்துறை தலைமை இயக்குனர் சார்பாக கர்னல் மாவட்ட காவல்துறை தலைவர் மம்தா சிங் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

விவசாயிகளைத் தாக்கி அவர்கள் மண்டையை உடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்ஹா பேசிய காணொளியை அடிப்படையாக கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணொளியின் நகல் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

“காணொளியில் மாவட்ட ஆட்சியருடன் இருந்த காவல்துறையினர் பஸ்டோரா பகுதியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் சம்பவம் நடைபெற்ற பஸ்டோரா சுங்கச்சாவடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அல்லது பஸ்டோரா சுங்கச்சாவடியில் பணியில் இருந்தவர்களுக்கும் ஆட்சியருக்கும் தொடர்பில்லை” என காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ஆட்சியர் உத்தரவின் பெயரில் தான், காவல்துறையினர் விவசாயிகளை தாக்கினர் என்பதை நிறுவுவதற்கு மனுதாரர்கள் அவர்களால் ஆன அனைத்து முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால், உண்மையில் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி கூடி, அந்த வழியாக சென்ற மக்களின் உடமைகளை சேதப்படுத்தி, அவர்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டதை மறைக்க, நீதிமன்றத்தைத் திசை திருப்பவே இந்தக் குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர்களில் ஒருவர் உட்பட காயப்பட்ட நான்கு விவசாயிகளை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அழைத்துச் சென்றதை சுட்டிக்காட்டிய காவல்துறையினர், காயமடைந்த விவசாயிகளுக்குக் காவல்துறையினர் மருத்துவ உதவி அளிக்கவில்லை என்று கூறுவது தவறானது என கூறியுள்ளனர்.

”சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவர்கள் எந்த இழப்பீடும் பெற் தகுதியற்றவர்கள். மாறாக, தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து மனிதர்களின் நேரம் மற்றும் உழைப்பு வீணாவதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள ஹரியானா காவல்துறை, “மனுதார்கள் மற்றும் அவருடன் சேர்ந்த விவசாயிகள், குடிமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதை பொருட்படுத்தாமல், போராடும் உரிமை என்ற பெயரில் தேசிய நெடுஞ்சாலையை மறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்… அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கைவிட நீதிமன்றம் அறிவுரை வழங்க வேண்டும்” என அவர்கள் கூறியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரீது பாரி மற்றும் அர்ச்சனா பூரி அடங்கிய அமர்வு, விசாரணையைச் செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Source : The Indian Express 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்