Aran Sei

தவறான வரைபடம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ள ட்விட்டர்

Image Credits: Scroll

டாக்கை சீனாவின் ஒரு பகுதியாகத் தவறாகக் காட்டியதற்காகச் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. மாத இறுதிக்குள் பிழையைச் சரிசெய்வதாகவும் ட்விட்டர் உறுதியளித்துள்ளது என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் மீனாட்சி லேக்கி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வரைபடத்தைத் தவறாக ஜியோ-டேக்கிங் செய்ததற்காக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கரியன், வாக்குமூலத்தைச் சமர்ப்பித்துள்ளார் என்று மீனாட்சி பிடிஐ இடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், ‘தரவு பாதுகாப்பு மசோதா’ தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு, இச்சம்பவத்திற்காக ட்விட்டரை வன்மையாகக் கண்டித்தது. அப்போது, இதை தேசத்துரோகம் என்று கூறி, ட்விட்டர் தலைமையிடமிருந்து ஒரு எழுத்துப்பூர்வ விளக்கத்தையும் கோரியது.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவினர், மீனாட்சி லேக்கி தலைமையிலான குழுவுக்கு முன் ஆஜராகி மன்னிப்பு கோரினர். ஆனால், குழுவினர் இது நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்திய ஒரு குற்றம் என்று கூறினர். இதற்கு விளக்கமளித்து ட்விட்டர் (Twitter Inc) ஒரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கூறியுள்ளது.

இதை அடுத்து, “ட்விட்டர், இப்போது எங்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது” என்று மீனாட்சி தெரிவித்துள்ளார்.

“இந்திய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர் மற்றும் இந்த ஆண்டு நவம்பர் 30 க்குள் பிழையைச் சரிசெய்வதாகவும் உறுதியளித்துள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் ட்விட்டர் நிறுவனம் : மத்திய அரசு கண்டனம்

‘மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு’

“மென்பொருள் கோளாறு மற்றும் தவறான தரவுகளின் காரணமாக இந்தப் பிழை ஏற்பட்டுள்ளது” என்று டேமியன் கரியன் கூறியதாக தி இந்து இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“கடந்த சில வாரங்களாக, ஜியோ-டேக்கை சரி செய்ய நாங்கள் பணிபுரிந்துவருகிறோம். ஆகையால், லே மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பிற நகரங்களும் அதன் மாநிலத்தின் பெயர்களும் துல்லியமாகக் காண்பிக்கப்படும்” என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சந்தைக்கு முன்னுரிமை அளிப்பதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. தொடர்ச்சியாக, இந்திய அரசுடனும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடனும் இணைந்து பணிபுரிவதில் உறுதியாக உள்ளோம் என்று அது கூறியுள்ளது.

அக்டோபர் 28 அன்று, இந்தப் பிரச்சனை தொடர்பாக, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ட்விட்டரின் இந்திய பிரதிநிதிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, அவர்களின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று மீனாட்சி கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்