Aran Sei

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா மறைவு – அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் இரங்கல்

ரிசல் மண்ணில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களது வேட்கையை வலியை, நம்பிக்கைகளை, ஏமாற்றங்களை விவரித்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாரயணன் மறைவுக்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட்டார இலக்கியத்தின் முகாமையான ஆளுமை. மிகச்சிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கிராவின் மரணம் தமிழ் இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பாகும். சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, வாய்மொழிக் கதை கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இவரது ஆற்றல் வெளிப்பட்டது. மக்கள் வட்டார மரபின் கூறுகளைத் தனது படைப்பின் ஆணிவேராக வளர்த்துவந்து வெளிப்படுத்தினார். வாய்மொழி இலக்கியத்தின், செவ்விலக்கியக் கூறுகளை தமது, நேரடியான எழுத்து நடையில் உருவாக்கிப் படிப்போரை சுவைக்க வைத்தார் கி.ரா” என்று கூறியுள்ளது.

‘பாலஸ்தீனர்களின் கண்ணியத்தையும் எதிர்ப்பதற்கான உரிமையையும் பறிக்கக்கூடாது’ – அருந்ததிராய் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கருத்து

மேலும், ”ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனின் தேவை அவசியம். பேச்சுத் தான் மனிதனின் பலமாக இருக்கிறது. பேச்சுத் துணை என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் கொரோனாவால் மனிதர்களைச் சந்திக்காமல் இருப்பது பெருந்துயரம். இது போன்ற பெரும் நோய்களை உலகம் கண்டிருக்கிறது. இதை மனிதன் முறியடித்து விடுவான்” என நம்பிக்கையுடன் சில நாட்களுக்கு முன்னே ஒரு செவ்வியில் கி.ரா. குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதே போன்று, கி.ரா வின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் – வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

‘பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து’ – விடுப்பு வழங்க முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை

எழுத்தாளர் அழகிய பெரியவன் கி.ராவின் மறைவுக்கு முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,”எளிய மக்களின் வாழ்க்கை, மொழி, பண்பாடு ஆகியவற்றின் திசை பக்கமாக தமிழ் நவீன எழுத்தைக் கழுத்தை பிடித்துத் திருப்பியவர் கி.ரா” என்று குறிப்பிட்டுள்ளார்.

கி.ரா மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,”கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு! கி.ரா. பெயரில் நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மையம் ஒன்றை அவர் பிறந்த இடைச்செவலில் அமைத்திட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்க முடிவு செய்த அமெரிக்க அரசு – ஆம்னெஸ்டி அமைப்பு கண்டனம்

இதே போன்று கி.ராவின் மறைவு குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இடைசெவலில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கியவர் கி.ரா. ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். இவருடைய நெருக்கமான நண்பரும் எழுத்தாளருமான கு.அழகிரிசாமியுடன் இணைந்து இடது சாரி இயக்கத்தைக் கட்டமைத்தவர். சமகாலத்தில், பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி, பூமணி, ச.தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ.தர்மன், சூரங்குடி முத்தானந்தம், கழனியூரன், கோணங்கி, உதயசங்கர், கௌரிஷங்கர், அப்பாஸ், நாறும்பூநாதன், அப்பணசாமி, சாரதி, திடவை பொன்னுசாமி என எழுத்தாளர்கள் பலரும் உருவாகக் காரணமாக இருந்தவர் கி.ரா, மேலும், எண்பதுகளின் துவக்கத்தில் உதயசங்கர், மாரிஸ், முருகன்  ஆகியோர் துணையுடன் “கரிசல் சொல்லகராதி”யைத் தயாரித்து வெளியிட்டார். தமிழில் முதல் முயற்சி இது. ஒரு பல்கலைக்கழகம் செய்திருக்கவேண்டிய பணி இது.

தனது படைப்புகளின் உரிமையை வாசகர் ஒருவருக்கு எழுதிவைத்த முதல் எழுத்தாளர் கி.ரா” என்று தனது புகழாரம் சூட்டியுள்ளது.

பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றிய 1600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு – உத்திரபிரதேச ஆசிரியர் சங்கம் தகவல்

கரிசல் மண்ணின் ரத்தமும் சதையுமான சொல்லாடல்களை, நவீனம் என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட வன்மமிலா பாலியல் கதையாடல்களை இடைசெவலில் இருந்து சுமந்து வந்த கி.ரா என்னும்  தமிழ் நவீனத்தின் மேய்ப்பர்,  கரிசல் கதைகளோடு தனது 99 வயதில் நீள்துயில் கொண்டுள்ளார் !

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்