Aran Sei

“ஜோ.. நாம் சாதித்து விட்டோம்” – வெற்றிக் கொண்டாட்டத்தில் ஜோவும், ஹாரிசும்

வம்பர் 7 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டிசன் ரிசர்ச் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் முக்கியத் தொலைக்காட்சிகள், அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில் முடிவைக் கணித்துள்ளன.

ஜோ பைடன் தனது வெற்றி குறித்து ட்விட்டரில், `நான் எல்லா அமெரிக்கர்களுக்குமானஅதிபராக இருப்பேன்’ என்று கருத்துப் பகிர்ந்துள்ளார். அதில், `அமெரிக்கா என்ற பெரிய நாட்டை வழிநடத்த நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். எங்களுக்கான வேலை கடினமாக இருக்கும். ஆனால் இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் எல்லா அமெரிக்கர்களுக்கும் அதிபராக இருப்பேன். நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் பாதுகாப்பேன்.” என்று கூறியுள்ளார்.

துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், ஜோ பிடனுடன் தொலைபேசியில் பேசிய ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.அதில் “நாம் சாதித்துவிட்டோம் ஜோ. நீங்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபராக இருக்கப் போகிறீர்கள்.” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன் தனது ட்விட்டரில், “நம் குடும்பங்கள் அனைத்துக்குமான அதிபராக இருப்பார்.” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, தனது கணவருடன் இருக்கும் படத்தையும் அதில் இணைத்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது ட்விட்டர் பக்கத்தில், ஜோ பைடனுக்கும் கமலா ஹாரிஸிற்கும் வாழ்த்துத் தெரிவித்து, வாழ்த்து அறிக்கையை இணைத்துள்ளார். ஒபாமா அதிபராக இருந்த இரண்டு முறையும், ஜோ பைடன் துணை அதிபராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

ராகுல் காந்தி, இருவருக்கும் ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், “அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். அமெரிக்காவை ஒன்றிணைத்து வலுவான திசையை நோக்கிப் பயணிக்க வைப்பார் என்று நான் நம்புகிறேன். ”என்று ட்வீட் செய்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “வாழ்த்துகள், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  கமலா ஹாரிஸ்! அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண்ணின் வேர் இந்தியாவில் உள்ளது என்பது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது.”என்று  கூறியுள்ளார்.

ஒன்றுபட்ட ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அதிபர் ஜோ பைடனுக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள். உலகின் பிற பகுதிகளில் உள்ள வலதுசாரி தீவிரவாதத்தையும், பிளவு மற்றும் வெறுப்பையும் விதைப்பவர்கள், விரைவில் அல்லது காலம் தாழ்த்தி, டொனால்டு ட்ரம்ப்பை போன்றே வரலாற்றின் பக்கங்களுக்குத் தள்ளப்படுவார்கள் என்ற நம்பிக்கையை இவர்களின் வெற்றி அளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், ”உங்கள் வெற்றி ஒரு வரலாற்றுச் சாதனை. இது உங்கள் சித்திகளுக்கு மட்டுமல்ல; அனைத்து இந்திய-அமெரிக்கர்களுக்கும் மகத்தான பெருமை. உங்கள் ஆதரவு மற்றும் தலைமையுடன், இந்தியா-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

மெக்சிக நாட்டு அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லூபஸ், “இவ்வளவு விரைவாக வாழ்த்த வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் சில சட்டப் பிரச்சனைகளைச் சந்தித்து வென்றாக வேண்டும்.” என்று கூறியுள்ளதாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதைச் சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் டொனால்டு ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்