“அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்” (AIBEA), பாலஸ்தீனிய சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற “உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு” (WFTU) நடத்தும் பிரச்சார இயக்கத்தில் இணைந்துள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின்” தலைமைக் குழு எடுத்த முடிவின்படி, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய சிறைக் கைதிகளை, குறிப்பாக குழந்தைகளை, விடுவிப்பதற்கான, கூட்டமைப்பின் சர்வதேச இயக்கம் ஜனவரி 2021-ல் தொடங்குகிறது.
“அனைத்து குழந்தை கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்” என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு, எல்லா நாடுகளின் தொழிலாளர்களின் நலன்களை ஆதரிக்கும்படியும், ஒவ்வொரு வகையான அநீதியையும், தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் எதிராகவும் போராடும்படியும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) தனது உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
39 பெண்கள், 155 குழந்தைகள் உட்பட 4,400 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 350 பேர் இஸ்ரேலிய நிர்வாக சிறைவைத்தல் கொள்கையின் கீழ், குற்றம் சாட்டப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறைக் கைதிகள் தனிமைச் சிறையில், மனிதாபிமான நிலைமைகள் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் கடுமையான நிலைமைகளை சுமத்துவதற்கான சட்டத்தை இஸ்ரேல் இயற்றியுள்ளது என்று WFTU அறிக்கை தெரிவிக்கிறது.
தமது சொந்த நாட்டை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதையும், இஸ்ரேலின் கிரிமினல் கொள்கையையும் எதிர்ப்பதால் பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்படுகின்றனர். தனது கிரிமனல் கொள்கைகள் மூலம் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை தினந்தோறும் சிரமங்களுக்கும், அபாயங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தி வருகிறது.
2000 ஆண்டுக்குப் பிறகு சுமார் 12,000 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் 12 வயது குழந்தைகள், சில நேரங்களில் 6, 7 வயதுடைய குழந்தைகளைக் கூட இஸ்ரேல் இராணுவம் சிறையில் அடைத்துள்ளது.
இஸ்ரேல் ஒவ்வொரு மாதமும் 500 முதல் 700 பாலஸ்தீனிய குழந்தைகளை இராணுவ நீதிமன்றங்களின் முன் கொண்டு வருகின்றது என்றும் சராசரியாக 200-300 குழந்தைகள் ஒவ்வொரு மாதமும் இஸ்ரேலிய சிறைகளில் வைக்கப்படுகின்றனர் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைகள் பலப் பிரயோகம் மூலம் கைது செய்யப்படுகின்றனர்; துன்புறுத்தப்படுகின்றனர்; பல வாரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்; தனிமைச் சிறையில் அடைக்கப்படுகின்றனர்; அவர்கள் புரிந்து கொள்ள முடியாத ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பெற்றோரை காண அனுமதிக்கப்படுவதில்லை. குழந்தைகள் ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பதால், தமது குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலே பெற்றோருக்கு இல்லாமல் போய் விடுகிறது.
போர்க்காலத்தில் சிவிலியன்களை பாதுகாப்பது பற்றிய 4-வது ஜெனீவா ஒப்பந்தத்திலும், குழந்தை உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிருந்தாலும், அவற்றுக்கு விரோதமாக இஸ்ரேல் தொடர்ந்து இராணுவ நீதிமன்றங்களில் குழந்தைகளை விசாரித்து வருகிறது.
சர்வதேச, வர்க்கப் பார்வையுடைய தொழிற்சங்க இயக்கம், கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன அரசுக்கான அங்கீகாரத்தை கோரும் போராட்டத்துடன் கூடவே, இஸ்ரேலின் கிரிமினல் நடத்தைக்கு எதிராக போராடி, அனைத்து பாலஸ்தீனிய கைதிகளையும், குறிப்பாக குழந்தைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோர வேண்டும் என்ற WFTU கேட்டுக் கொண்டுள்ளது.
உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிற்சங்க உறுப்பினர்களும் நண்பர்களும் பாலஸ்தீனிய கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும்படியும், உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று தமது குரலையும் சக்தியையும் இணைக்கும்படியும் WFTU கேட்டுக் கொண்டுள்ளது.
- WFTU பிரச்சார இயக்கத்தின் தகவல்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்து போராட்டங்களை நடத்துதல்
- இணையத்தில் பரப்புரை நிகழ்வுகளையும், ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வுகளையும் நடத்துதல்
- ஐக்கிய நாடுகள் சபைக்கும், பிற சர்வதேச அமைப்புகளுக்கும் பாலஸ்தீனிய குழந்தைகளின் உரிமை தொடர்பாக WFTU அனுப்பும் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்தல்
- தத்தமது நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரங்களில் மனுக்கள் அளித்தல்
- தத்தமது பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இந்தத் தகவலை கொண்டு செல்லுதல்
ஆகியவற்றை செய்யும்படி, தொழிற்சங்க உறுப்பினர்களை WFTU கேட்டுக் கொண்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.