ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில், நேற்று நடைபெறவிருந்த, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐநா அதிகாரிகள் நேர திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக “இலங்கையில் சமரச பொறுப்பையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பது” என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தள்ளி வைத்துள்ளனர் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தீர்மானம், “மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீது இலங்கை அரசு உடனடியான, முழுமையான, பாரபட்சமற்ற விசாரணையையும் தேவைப்பட்டால் வழக்குகளையும் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அழைப்பு விடுக்கிறது.
சென்ற மாதம், மனித உரிமைகளுக்கான ஐநா ஆணையர் மிஷல் பாஹலெட், இலங்கை பற்றிய தனது அறிக்கையில், உள்நாட்டுப் போர் நடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகும் “இலங்கையின் உள்நாட்டு நடைமுறைகள் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும், சமரசத்தை வளர்ப்பதையும் செய்யத் தவறியுள்ளன” என்றும், “2015-ல் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளுக்கு மாறாக இப்போதைய அரசாங்கம் முந்தைய அரசுகளைப் போலவே நேர்மையான பொறுப்பு நிகழ்முறையை பின்பற்றத் தவறியுள்ளது” என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா வாக்கெடுப்பு: இந்தியா ஆதரவளிக்க ஸ்டாலின் கோரிக்கை
இலங்கை அரசு சர்வதேச நாடுகள் மத்தியில் ஆதரவு திரட்டுவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது என்றும் இந்த வாக்கெடுப்பு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கான ஒரு அக்னி பரீட்சை என்றும் தி ஹிந்து கூறுகிறது.
இலங்கைக்கு சீனா, ரசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லீம் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக இலங்கை அதிபர் கோத்தபயவும், பிரதமர் மகிந்தவும் உலக முஸ்லீம் நாட்டு தலைவர்களுடன் பேசியுள்ளனர்.
அதிபர் கோத்தபய, 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் பொதுச் செயலாளர் யூசுப் அ அல்-ஒத்தைமீன் உடனும், பிரதமர் மகிந்த, பஹ்ரைனின் துணை அரசர் சல்மான் பின் ஹமத் அல் கலிஃபாவுடனுன் ஞாயிறன்று பேசியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“எங்களுக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுகளை நாங்கள் தோற்கடிக்க முயற்சிக்கிறோம். பல நட்பு நாடுகள் எங்களுடன் கை கோர்த்துள்ளன, இந்தியாவும் இந்த முறை எங்களை ஆதரிக்கும் என்று நம்புகிறோம்” என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா கூறியுள்ளார்.
கோத்தபய ராஜபக்சவின் அண்ணனும் இப்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச இலங்கை அதிபராக இருந்த போது, 2012-க்கும் 2014-க்கும் இடையே ஐநா மனித உரிமைகள் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மூன்று முறை நிறைவேற்றப்பட்டன என்பதை தி ஹிந்து சுட்டிக் காட்டியுள்ளது.
“மே 2009-ல் முடிவடைந்த 30 ஆண்டுகள் உள்நாட்டுப் போரின் கடைசிக் கட்டத்தில், அரச படைகளும், விடுதலைப் புலிகளும் இழைத்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்” என்று முந்தைய அரசு முன்மொழிந்திருந்த தீர்மானத்தை கோத்தபய ராஜபக்ச அரசாங்கம் திரும்பப் பெற்றிருக்கிறது என்றும் தி ஹிந்து தெரிவிக்கிறது.
இந்தியா, இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்று இலங்கை தரப்பு எதிர்பார்ப்பதாக தி ஹிந்து கூறுகிறது. மார்ச் 13-ம் தேதி இந்திய பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும் தொலைபேசியில் பேசிய போது இரு நாடுகளும் இரு தரப்பு ரீதியாகவும் பன்னாட்டு அமைப்புகளிலும் ஒத்துழைப்பது குறித்தும் பேசியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.
திமுக தலைவர் மு க ஸ்டாலின், மதிமுக, பாமக ஆகியோர் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு – இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கை அதிபர்
சென்ற மாதம் நடந்த மனித உரிமைகள் குழுவின் 46-வது அமர்வில் இந்தியாவின் தூதுவர் இந்தியா மனீஷ் பாண்டே, “இலங்கையின் நலன்களை உறுதி செய்ய, தமிழ் சமுதாயத்தின் நியாயமான விருப்பங்களை உறுதி செய்வதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று பேசியுள்ளார் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.