Aran Sei

4 பேரைக் கொன்ற வியன்னா பயங்கரம் – கொலையாளியின் பின்னணி விபரங்கள்

வியன்னா

ஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் 4 பேரைக் கொன்ற துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டவர் “இஸ்லாமிக் ஸ்டேட்” (ஐஎஸ்) அமைப்பின் ஆதரவாளர் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

இதுவரையில் இந்தத் தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

ஆனால், தொடக்கத்தில் ‘இது ஒருங்கிணைத்து நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்’ என்றும் ‘இது இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்றும் ஆஸ்திரிய அமைச்சரும், அமெரிக்க அதிபர் டிரம்பும் அவதூறு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியன்னா பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி, 15 பேர் படுகாயம்

ஆஸ்திரிய அதிபர் (சான்சலர்) செபாஸ்டியன் குர்ட்ஸ், “நமது எதிரிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, நமது எதிரிகள் பயங்கரவாதிகள். இது கிருத்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான போர் இல்லை, இது ஆஸ்திரியர்களுக்கும் புலம் புயர்ந்தவர்களுக்கும் இடையேயான போர் இல்லை, இது நாகரீகத்துக்கும் அநாகரித்துக்கும் இடையேயான போர்” என்று கூறியிருக்கிறார்.

இந்த வன்முறை தாக்குதலை நிகழ்த்திய குஜ்டிம் ஃபெஜ்சுலாய், திங்கள் கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் வியன்னாவின் மையப்பகுதியில், துப்பாக்கியால் சரமாரியாக  சுட ஆரம்பித்தான்.

இந்த வன்முறை தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஒரு வயதான ஆண், ஒரு வயதான பெண், அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் மற்றும் ஒரு உணவக பெண் ஊழியர் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 22 பேர் துப்பாக்கிச் சூட்டாலும், கத்தி குத்தாலும் காயமடைந்தனர், அவர்களில் 3 பேர் மோசமான நிலையில் உள்ளனர்.

ஆஸ்திரியா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய இரு நாடுகளின் குடிமகனான 20 வயதான குஜ்டிம் ஃபெஜ்சுலாய், தானியங்கி துப்பாக்கி ஒன்றையும், ஒரு கைத்துப்பாக்கியையும், ஒரு அரிவாளையும் வைத்திருந்தான். ஒரு போலி தற்கொலை மேல்சட்டையை அணிந்திருந்தான். இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் இந்த ஆயுதங்களுடன் தனது நிழல்படத்தை இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டிருந்தான் என்று ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் தெரிவித்திருக்கிறார்.

தாக்குதல் தொடங்கிய 8 நிமிடங்களில், குஜ்டிம் ஃபெஜ்சுலாய், போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டான். வியன்னாவிலும் சுற்றுப் புறங்களிலும் உள்ள 18 இடங்களில் நடத்திய தேடுதல்களில் தாக்குதல் நடத்தியவனோடு தொடர்புடைய 14 பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க் கிழமை இரவு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் செய்தியை அதன் அமாஸ் செய்தி நிறுவனத்தின் மூலம் டெலிகிராம் செயலியில் வெளியிட்டதாக தி கார்டியன் தெரிவிக்கிறது.

“ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு” என்ற பெயரிலான ஐஎஸ் என்று அறியப்படும் அமைப்பு ஒரு அடிப்படைவாத, தீவிரவாத இசுலாமிய அமைப்பு ஆகும். அது 2014-ம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க ஆதரவு அரசுப் படைகளை துரத்தி விட்டு மேற்கு ஈராக்கில் மொசுல் நகரம் உட்பட முக்கிய பகுதிகளை கைப்பற்றி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. வன்முறை செயல்களையும், படுகொலை காட்சிகளையும் சித்தரிக்கும் வீடியோக்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டியது. இந்தக் குழு ஒரு ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அரசுப் படைகள் மீதும், எதிர்த் தரப்பு படைகள் மீதும் தாக்குதல் நடத்திய ஐஎஸ் அமைப்பு டிசம்பர் 2015 வாக்கில் மேற்கு ஈராக்கிலிருந்து கிழக்கு சிரியா வரையிலான பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் சிரிய அரசுக்கு ரசியா உதவியது. சிரிய அதிபர் ஆசாதை பதவி விலகச் செய்ய முயற்சித்து வந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பும் இறுதியில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டது.

2017-ல் ஐஎஸ் ஈராக்கிலிருந்து விரட்டப்பட்டு விட்டது என்று ஈராக் பிரதமர் அறிவித்திருந்தார். 2019-ல் சிரியாவிலும் அதன் கடைசி தளத்தை இழந்து ஐஎஸ் அமைப்பு.

ஆல்ப்ஸ் மலையை ஒட்டிய ஆஸ்திரியா, 1990-களின் தொடக்கத்திலிருந்தே தீவிரவாத இசுலாமிய குழுக்களின் செயல்பாட்டின் மையமாக இருந்தது. அண்டை நாடான போஸ்னியாவில் நடந்த போரில் விடுதலை போராளிகளை ஆதரிப்பதற்காக சவுதி அரேபியாவும், பிற வளைகுடா நிறுவனங்களும் தமது தளமாக ஆஸ்திரியாவை பயன்படுத்தின என்று தி கார்டியன் தெரிவிக்கிறது. ஆஸ்திரியாவின் இந்தப் பாத்திரம் பால்கன் பகுதியில் அடுத்தடுத்து நடந்த போர்களின் போது மேலும் உறுதிப்பட்டது என்றும் சிரிய உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

2012-க்கும் 2014-க்கும் இடையே நூற்றுக்கணக்கான ஆஸ்திரிய இளைஞர்கள் சிரியாவுக்கு போராளிகளாகச் சென்றனர். அவர்களது பயணமும், போரில் அவர்கள் சேர்வதும் வியன்னா, கிராட்ஸ் போன்ற நகரங்களில் “சலாஃபி பகுதிகள்” என்று அழைக்கப்பட்டவற்றின் வலைப்பின்னலால் ஒருங்கிணைக்கப்பட்டன. ஐரோப்பாவில், பெல்ஜியத்தை தவிர்த்து, வேறு எந்த நாட்டையும் விட மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் சிரியாவுக்கு அதிக போராளிகளை அனுப்பியது ஆஸ்திரியா என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

வியன்னாவில், திங்கள் இரவு துப்பாக்கி சூடு நடத்தி 4 பேரை படுகொலை செய்த குஜ்டிம் ஃபெஜ்சுலாய, வியன்னாவின் தென்பகுதியில் பிறந்த தாக்குதல் நடத்தியவர் பதின் பருவத்திலேயே அரசியல் இஸ்லாம் மீது ஆர்வம் கொண்டதாகவும், சிரியாவுக்குச் சென்று ஐஎஸ்ஐஸ்-ல் சேர திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. 2018 செப்டம்பரில் துருக்கியில் எல்லையைக் கடந்து சிரியாவுக்குள் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டு ஆஸ்திரியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறான்.

ஏப்ரல் 2019-ல் ஃபெஜ்லுலாய்க்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 18 முதல் 20 வயதுடைய குற்றவாளிகளின் உரிமைகள் தொடர்பான ஆஸ்திரிய சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. தண்டனை கடந்த டிசம்பர் 5-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டு, குஜ்டிம் ஃபெஜ்சுலாய் தொடர்ந்து சீர்திருத்த துறையின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தீவிரவாத போக்குகளை நீக்கும் திட்டத்தில் இணைவார் என்றும் ஆஸ்திரிய நீதித்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது.

ஃபெஜ்சுலாயின் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால், அவரது ஆஸ்திரிய குடியுரிமையை ரத்து செய்யும் முயற்சி முடக்கப்பட்டிருந்தது என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்