Aran Sei

தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு உச்சநீதி மன்ற நீதிபதி நியமனம் – அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்க அதிபர் டிரம்பும், புதிய நீதிபதி எமி பேரட்டும் - Image credit : www.aljazeera.com

மெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த நீதிபதி எமி கோனி பேரட் அமெரிக்க உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

முற்போக்கு ஜனநாயக கருத்துக்களை தூக்கிப் பிடித்த நீதிபதி ருத் பாடர் ஜின்ஸ்பெர்க் இறந்ததைத் தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் ஏற்பட்ட காலி இடத்தை நிரப்ப வேண்டியது ஏற்பட்டது.

ரூத் ஜின்ஸ்பர்க் : அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் பெண்ணுரிமை போராளி

இந்த நீதிபதி நியமனத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட, அமெரிக்க நாடாளுமன்ற மேலவை வாக்கெடுப்பில், எமி கோனி பேரட்டுக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 48 வாக்குகளும் பதிவாயின. குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாகவும், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிராகவும் வாக்களித்தனர்.

பழமைவாதிகளான குடியரசுக் கட்சியினருக்கும் தாராளவாத கொள்கையை கடைப்பிடிக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே பெரும் வேறுபாடுகளை வெளிப்படுத்தும் கருக்கலைப்பு உரிமை, மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான உரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன. நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் தொடர்பான வழக்குகளும் உச்சநீதி மன்றத்தில் தீர்மானிக்கப்படும் நிலை உள்ளது.

மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் டிரம்பின் வரி ஆவணங்களை கையகப்படுத்துவதை தடை செய்யக் கோரும் டிரம்பின் மனுவும் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் முன்பு விசாரிக்கப்பட உள்ளது. நவம்பர் 10-ம் தேதி, ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட “கட்டுப்படியாகும் மருத்துவ சிகிச்சை” சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உள்ளது.

இந்நிலையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப் முன்மொழிந்த நீதிபதி எமி கோனி பேரட் உச்சநீதி மன்ற நீதிபதியாக உறுதி செய்யப்பட்டிருப்பது பழமைவாதிகளின் பிடியை வலுப்படுத்துகிறது என்கிறது அல் ஜசீரா செய்தி. தனது 4 ஆண்டு பதவிக் காலத்தில் டிரம்ப் நியமிக்கும் மூன்றாவது உச்சநீதி மன்ற நீதிபதி எமி கோனி பேரட்.

திங்கள் கிழமை நடந்த, நீதிபதி நியமனத்தை உறுதி செய்வதற்கான மேலவை வாக்கெடுப்பு அதிபர் தேர்தலுக்கு இவ்வளவு நெருக்கமாக நடக்கும் முதல் வாக்கெடுப்பு என்று கூறுகிறது அல் ஜசீரா செய்தி. நவீன காலங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒருவரின் ஆதரவு கூட இல்லாமல் நடந்த வாக்கெடுப்பு இதுவே.

அமெரிக்க உச்சநீதி மன்ற நீதிபதிகள் தமது வாழ்நாள் முழுவதும் பதவியில் நீடிப்பார்கள். 48 வயதான எமி கோனி பேரட் நீதிபதியாக பதவியேற்பது, வரும் பல ஆண்டுகளுக்கு உச்சநீதி மன்றத்தின் வலதுசாரி சாய்வை உறுதிப்படுத்தும் என்று அல் ஜசீரா கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பு நடத்துவதைத் தள்ளிப் போட வேண்டும் என்றும் புதிய நீதிபதியை நியமிக்கும் பொறுப்பை நவம்பர் 3 அன்று நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரிடம் விட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினரான ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வந்தது.

மேலும், கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் கூட்டத்தை நடத்துவது தொடர்பாகவும் சர்ச்சை ஏற்பட்டது. அவைத் தலைவரான துணை அதிபர் மைக் பென்ஸ், கூட்டத்தை நடத்துவதற்காக வந்து கலந்து கொள்வது அபாயத்தை அதிகப்படுத்தும் என்று கூறப்பட்டது. மேலும், எமி பேரட்டை நீதிபதியாக நியமிக்கும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சில குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அக்டோபர் முதல் வாரத்தில் அதிபர் டிரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தல், சிகிச்சையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலைக்கிடம்? முரணான தகவல்களால் குழப்பம்.

’உங்களை நான் முத்தமிட விரும்புகிறேன்’ – தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப்

ஜனநாயகக் கட்சி மேலவை உறுப்பினர் எலிசபெத் வாரன், இந்த வாக்களிப்பை “சட்ட விரோதமானது” என்றும், “முழுகிக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் [குடியரசுக் கட்சி] இறுதி முயற்சி” என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்