Aran Sei

அமெரிக்க அதிபர் யார் என்பதை ”காலம்தான் முடிவு செய்யும்” – ட்ரம்ப்

credits : ny times

ஜார்ஜியாவில் வெற்றிபெற்றதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியாகியுள்ளது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தும் நிறுவனமான ‘எடிசன் ரிசர்ச்’ இதனை கணித்துள்ளது. பெரும் போட்டி நிலவும் வட கரோலினா மாநிலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம், ட்ரம்புக்கு 232 தேர்வுக் குழு (Electoral college) வாக்குகளும் பைடனுக்கு 306 தேர்வுக் குழு வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப், 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், இதே போன்ற வாக்கு வித்தியாசத்தில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார். அப்போது, ஹிலாரியின் தோல்வியை ‘இமாலய சரிவு’ என்று ட்ரம்ப் வரையறுத்தார்.

குடியரசு கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப் அவரது தோல்வியை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பைடனின் ஆதரவாளர்கள் ஆட்சி மாற்றத்திற்கான பணியில் ஈடுபட போவதாக கூறிள்ளனர்.

பொது மக்களின் வாக்குகள் நேரடியாகத் தேர்தல் முடிவைத் தீர்மானிக்காது என்றாலும், பைடன் 53 லட்ச வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் அடைந்த தோல்வியை ஒப்புக் கொள்ளாத டொனால்டு  ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதிபர் தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்திருக்கிறது என்று பல வழக்குகளை ட்ரம்ப் தொடுத்துள்ளார்.

மாநில தேர்தல் அதிகாரிகள் எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று ட்ரம்ப் தொடுத்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் தோல்வியடைந்து வருகின்றன.

இரண்டாவது முறையாக வெற்றிபெறுவதற்கு ட்ரம்ப் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களிலாவது  முன்னிலை வகிக்க  வேண்டும். ஆனால்,  ட்ரம்பால் அதை நிரூபிக்க முடியவில்லை.

டிசம்பர் 8-ம் தேதி, தேர்வுக் குழுவின் (electoral college) உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். டிசம்பர் 14-ம் தேதி தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் மூலம் அமெரிக்க அதிபர் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தற்போது, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ”அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டே உறுதி செய்யப்படும் என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப் “ஜனவரி மாதத்தில் மற்றொரு நிர்வாகம் பதவியேற்குமாஎன்பதை ‘காலம் தான் சொல்லும்’ ” என்று கூறியுள்ளார். ஜோ பைடனின் வெற்றி வாய்ப்பை ட்ரம்ப் அங்கீகரித்தது இதுவே முதல் முறை என்று தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்