Aran Sei

‘தேர்தல் முடிவுகளை மறுப்பது ஆபத்தானது’ – சக் ஷுமர்

Image Credits: BBC

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிக வாக்குகள் பெற்ற ஜோ பைடனின் குழுவுடனான, அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பைத் தடுக்க முயற்சித்துள்ளார் என்று ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அரசு வழக்கறிஞர் வில்லியம் பார் ஒப்புதல் அளித்துள்ளார். ஆகையால், பதவி மாற்றத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

செனட்டில் பெரும்பான்மை உள்ள தலைவர் மிட்ச் மெக்கானெல் உள்ளிட்ட சில குடியரசு கட்சியினர், தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான டிரம்ப்பின் முயற்சிகளுக்கு உடன் நிற்கின்றனர்.

குடியரசு கட்சியில் சிலர் ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் ட்ரம்பின் சில நடவடிக்கைகளைக் கண்டித்தும் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 3-ம் தேதி நடந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 14.6 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

ஜனநாயக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக 7.5 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பெரும்பான்மைக்கு 270 எலெக்டோரல் வோட்ஸ் எனப்படும் பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை என்ற நிலையில், அவர் 290 வாக்குகள் பெற்றுள்ளார். அதேநேரம், தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப், 70 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். 214 பிரதிநிதிகளின் வாக்குகளுடன் அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பெரும்பான்மை அடிப்படையில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. ஆனால், தொடக்கம் முதலே தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

2021-ம் ஆண்டு, ஜனவரி 20-ம் தேதி, புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் வரை, ட்ரம்ப் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம் செய்துள்ளார். இந்த அறிவிப்பை, அதிபர் ட்ரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளை, அதிபர் ட்ரம்பின் குடிஅரசு கட்சியைச் சேர்ந்த சிலரும் எதிர்த்துள்ளனர். டிசம்பர் மாதம் 14-ம் தேதி, பைடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்நிலையில், இந்தப் பதவி மாற்றம் சுமுகமாக ஏற்படுமா எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் பெரும் பிரச்சனை எதுவும் இல்லை என்ற போதிலும், வாக்காளர் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடி பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வில்லியம் பார் அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.

இரு அரசியல் கட்சிகளும் வாக்களிப்புச் சிறப்பாக நடந்தது என்று பகிரங்கமாகக் கூறியுள்ளனர். சர்வதேச தேர்தல் பார்வையாளர்களும் கடுமையான முறைகேடுகள்  எதுவும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குடியரசு கட்சியை விமர்சித்துள்ள, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனட் தலைவர் சக் ஷுமர், “தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது மிகவும் ஆபத்தானது, அது நமது ஜனநாயகத்திற்குத் தீங்கை விளைவிக்கும்” எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்