Aran Sei

ட்ரம்பின் புளுகு மூட்டைகளை வெட்கமின்றி ஆதரிக்கும் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ – சிஎன்என் குற்றச்சாட்டு

Image Credits: The Statesman

டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி நிச்சயமாகி விட்டதை ஏற்க மறுத்துள்ளார். இந்தனை அடுத்த வாஷிங்டனில் திரண்ட தனது ஆதரவாளர்களையும் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் முழக்ங்களையும் விசில் சத்தத்தையும் கேட்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்துள்ளார். ‘பெஸ்ட் ப்ரஸிடண்ட் எவர்’ (இதுவரை கண்டத்திலேயே சிறந்த அதிபர்) போன்ற பதாகைகளை ஏந்திய அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.

தீவிர வலதுசாரிகளான இவர்கள் ‘டிரம்ப் 2020: அமெரிக்காவை சிறப்பாக வைத்திருங்கள்’ (Trump 2020: Keep America great) என்று எழுதப்பட்டிருந்த கொடிகளை உயர்த்தி பிடித்தனர். ‘இன்னும் 4 ஆண்டுகள்! எங்களுக்கு ட்ரம்பின் ஆட்சி வேண்டும்!’ (We want Trump! Four more years!) என்றும் அவர்கள் முழங்கியுள்ளனர்.

இன்ஃபோவர்ஸ் நிறுவனரும் சதி கோட்பாட்டாளருமான அலெக்ஸ் ஜோன்ஸ், தீவிர வலதுசாரிய குழுவான ப்ரவுட் பாய்ஸ்-ன் தலைவரான என்ரிக் டாரியோ மற்றும் 2016-ம் ஆண்டு, வாஷிங்டன் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான சதித்திட்டத்தை திட்டிய ஜாக் போசோபிக் ஆகியோர் இந்த பேரணிக்கு தலைமை தங்கி உள்ளனர். இந்த பேரணியை கண்டு ‘மனம் மகிழ்ந்ததாக’ ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் எதிர்ப்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மணி நேரம் கழித்து, பேரணியில் கலந்துகொண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் அவரது எதிர்பாளர்களுடன் மோதிக்கொண்டனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதை அடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதற்காகவும் ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி ட்ரம்புக்கு ஆதரவாக ஒரு விளம்பர காணொளியை வெளியிட்டுள்ளது. ஜோ பைடன் ஏற்க மறுக்கும் ட்ரம்பின் கருத்துக்கு ஏற்ப அந்த காணொளி அமைத்துள்ளது. இந்த காணொளிக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தாராளவாத ஊடக கண்காணிப்புக் குழுவான ‘மீடியா மேட்டர்ஸ் ஃபார் அமெரிக்கா’ (Media Matters for America) என்ற அமைப்பைச் சேர்ந்த ஆண்ட்ரூ லாரன்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். “கடவுளே! ஃபாக்ஸ் நிறுவனத்தின் தொகுப்பாளர்கள் இந்த காணொளியில் தேர்தல் முடிவுகள் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்த முற்படுகிறார்கள். இது அவர்களின் வெறித்தனமான பார்வையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சி என்று தான் நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய சிஎன்என் தொலைகாட்சியின் செய்தியாளர் ஆலிவர் டார்சி, “இந்த தொகுப்பாளர்களுக்கு ‘உண்மையிலேயே வெட்கமில்லை’ என்பது இந்த காணொளியின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

(தி கார்டியனில் வெளியான கட்டுரைகளின் சுருக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்