Aran Sei

அமெரிக்க அதிபர் தேர்தல் இழுபறி – 2000 ஆண்டு தேர்தல் போன்றதா?

மெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு வித்தியாசம் மாற்ற முடியாத அளவுக்கு அதிகமாக உள்ள மாநிலங்களில், எந்தத் தரப்பு வெற்றி பெற்றுள்ளது என்பதை கணித்து அறிவிக்கின்றன, ஊடக நிறுவனங்கள். இதன்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 253 தேர்தல் குழு வாக்குகளையும், இப்போதைய அதிபர் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 213 தேர்தல் குழு வாக்குகளையும் இதுவரை வென்றுள்ளனர் என்று சிஎன்என் கணித்துள்ளது.

இந்தத் தேர்தல் இழுபறியை 2000 ஆண்டில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அப்போதைய துணை அதிபர் அல் கோர்-ம், குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜார்ஜ் புஷ்ஷூம் போட்டியிட்ட தேர்தலுடன் ஒப்பிட முடியாது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2000-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வாக்குகள் அனைத்து எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், வாக்குகளை மறு எண்ணிக்கை செய்வது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன, ஒரு மாத காலத்துக்கும் மேலாக முடிவு அறிவிப்பதற்கு தாமதமானது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – நீடிக்கும் இழுபறி – அடுத்து நடக்கப்போவது என்ன?

இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையாத நிலையில், முடிவை கணிக்க முடியாத மாநிலங்களில், நெவாடாவிலும் அரிசோனாவிலும் ஜோ பிடனும், பென்சில்வேனியாவிலும் ஜார்ஜியாவிலும் வட கரலினாவிலும் டொனால்ட் டிரம்பும் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளனர்.

ஜோ பிடன், தான் முன்னிலையில் இருக்கும் அரிசோனா (11), நெவாடா (16) இரு மாநிலங்களிலும் முன்னிலையை தக்க வைத்து வெற்றி அடைந்தால் அதிபர் தேர்வுக்கு தேவையான 270 தேர்தல் குழு வாக்குகளை பெற்று விடுவார். அல்லது பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெற்று 20 தேர்தல் குழு வாக்குகளை பெற்றாலும் 270 வாக்குகளுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்.

பென்சில்வேனியாவிலும், ஜார்ஜியாவிலும், வட கரலினாவிலும் தபால் வாக்குகளில் அதிக வாக்குகளைப் பெற்றதன் மூலம் ஜோ பிடனுக்கு டிரம்புடன் உள்ள வாக்கு வித்தியாசம் குறைந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

1. ஜார்ஜியா (16 தேர்தல் குழு வாக்குகள்)

புதன்கிழமை காலையிலேயே ஜார்ஜியாவில் தான் வெற்றி பெற்று விட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், வியாழன் மாலை நிலவரப்படி இரு தரப்புக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3,500 ஆகக் குறைந்துள்ளது என்று AP செய்தி தெரிவிக்கிறது. ஆனால், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று இப்போது கூட கணிக்க முடியாமலேயே உள்ளது.

2. நெவாடா (6 தேர்தல் குழு வாக்குகள்)

இங்கு 84% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஜோ பிடன் 6 லட்சம் வாக்குகள், டொனால்ட் டிரம்ப் 5.92 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளனர். இரு தரப்புக்கும் இடையேயான வேறுபாடு 10,000 வாக்குகளுக்கும் குறைவாக இருப்பதால், ஜோ பிடன் முன்னணியில் இருந்தாலும், யார் இந்த மாநிலத்தின் தேர்தல் குழு வாக்குகளை வெல்வார்கள் என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது.

நெவாடா மாநிலத்தின் தேர்தல் விதிகளின்படி, தேர்தல் நாள் (நவம்பர் 3) அன்று தபால் முத்திரை குத்தப்பட்ட வாக்குகள் அடுத்த செவ்வாய்க் கிழமை (நவம்பர் 10)-க்குள் வரப் பெறுமானால் அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, வாக்கு வித்தியாசம் எதிர்பார்க்கப்படும் தபால் வாக்குகளை விடக் குறைவாக இருக்குமானால், எந்த ஒரு வேட்பாளரையும் வெற்றி பெற்றதாக கணிக்க முடியாது என்று AP தெரிவிக்கிறது.

3. வட கரலினா (15 தேர்தல் குழு வாக்குகள்)

இங்கும் புதன் கிழமை காலையிலேயே தான் வெற்றி பெற்று விட்டதாக டிரம்ப் அறிவித்திருந்தது அவசரக் குடுக்கைத்தனமானது என்று ஏபி கூறியுள்ளது. அப்போது அவர் 77,000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தாலும், 1.16 லட்சம் தபால் வாக்குகளும், சுமார் 41,000 முதல்நிலை வாக்குகளும் எண்ணப்பட வேண்டிய நிலையில் முடிவை கணிக்க முடியாது என்று AP தெரிவிக்கிறது.

நவம்பர் 3-ம் தேதி தபால் முத்திரையிடப்பட்டிருக்கும் வாக்குகளை 12-ம் தேதி வரை எண்ணுவதற்கு அவகாசம் உள்ளது. தபால் வாக்குகளில் ஜோ பிடனுக்கு டிரம்பை விட அதிக வாக்குகள் கிடைப்பது பொதுவான போக்காக உள்ளது.

4. பென்சில்வேனியா (20 தேர்தல் குழு வாக்குகள்)

இன்னும் பல லட்சம் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னரே, புதன் கிழமை காலையில் டிரம்ப் 6.75 லட்சம் வாக்கு முன்னணியின் அடிப்படையில் தான் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்திருந்தார். வியாழக் கிழமை மாலை வாக்கில் அவரது முன்னணி நிலவரம் 53,000 வாக்குகளாக சுருங்கி விட்டது என்று AP தெரிவிக்கிறது.

தபால் வாக்குகளை தேர்தல் நாளுக்கு முன்னர் எண்ணக் கூடாது என்ற மாநில சட்டத்தின் காரணமாக இந்த கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தபால் மூலம் வாக்களிப்பதில் அதிகம் பங்கேற்கின்றனர்.

5. அரிசோனா (11 தேர்தல் குழு வாக்குகள்)

இங்கு 90% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜோ பிடனுக்கு 15.28 லட்சம் வாக்குகளும், டொனால்ட் டிரம்புக்கு 14.82 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த மாநிலத்தில் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என்று AP கணித்திருந்தாலும், சிஎன்என் இந்த மாநில முடிவு இன்னும் இழுபறியாக இருப்பதாகவே கூறுகிறது.

ஜோ பிடன் வெற்றி பெற்றாலும் அதை எதிர்த்து சட்டப் போராட்டத்தை தொடரும் வகையில் டிரம்ப் தரப்பு முக்கியமான மாநிலங்களில் நீதிமன்ற வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள் மீதான மேல்முறையீடு உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்கு முன்பு 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் 29 தேர்தல் குழு வாக்குகளை முடிவு செய்யும் ஃபுளோரிடா மாநில வாக்கு எண்ணிக்கையில், தேர்தல் அன்று இரவு நிலவரப்படி ஜார்ஜ் புஷ் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அந்த மாநில தேர்தல் விதிகளின்படி, அவ்வளவு குறுகிய வித்தியாசம் இருக்கும் போது வாக்குகள் மறுபடியும் எண்ணப்பட வேண்டும்.

ஆனால், வாக்குகளை எண்ணும் முறை தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு, இறுதியில் ஒரு மாதத்துக்குப் பிறகு உச்சநீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை தொடர்வதற்கு 5-4 என்ற அடிப்படையில் தடை விதித்தது. குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் வெறும் 534 வாக்கு வித்தியாசத்தில் (0.009%) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அல் கோர் நாடு தழுவிய அளவில் 5.4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றாலும், ஃபுளோரிடா உள்ளிட்ட மாநில வாரியான வெற்றிகள் மூலம் 271 தேர்தல் குழு வாக்குகளை வென்ற ஜார்ஜ் புஷ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்