Aran Sei

அமெரிக்க அதிபர் தேர்தல் – முழுமையடையாத வெற்றி அறிவிப்பு

அமெரிக்க அதிபரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் உள்ளது. முழுத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்றும் சில நாட்கள் தேவைப்படுகிறது.

அதிபர் வேட்பாளர் குறைந்தது 270 தேர்வுக் குழு வாக்குகளைப் பெறவில்லை என்றால், அரசியலமைப்பின் 12 ஆவது விதியின் அடிப்படையில், தேர்தலை செனட் சபை தீர்மானித்து அதிபரைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு மாநில பிரதிநிதிக்கும் ஒரு வாக்கு உள்ளது. செனட் தீர்மானிக்கும் வாக்கெடுப்பில் வெல்ல 26 வாக்குகள் போதுமானவை.

கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மீட்பு, இன சமத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை பைடன் நிர்வாகத்தின் முன் இருக்கும் சவால்கள் என்று அமெரிக்க அதிபரின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தபோதும், பைடனின் ஆதரவாளர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகப் போய்க் கொண்டாடினார்கள். இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகத் தேர்ந்தேடுக்கப்பட்டு வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவில், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட ஒருவர் குணமடைந்தாலும், வேறு புதிய நோய்களுக்கு ஆட்படுகிறார். கொரோனா குணமடைந்த பிறகும் மூச்சுத்திணறல் அறிகுறிகளைக் காட்டுகிறது. பத்து மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். தொடர்ச்சியான வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

அமெரிக்கர்களின் நிதி நிலைமைகள் குறித்துப் பல்வேறு மாறுபட்ட கருத்துகளை ஜோ பைடன் எதிர் கொள்ள நேரிடும். பெரும் வருமானம் ஈட்டிய குடும்பங்கள் கொரோனா பேரிடரால் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன.

ஏபி வோட் காஸ்ட் (vote cast) எனும் நிறுவனம் 1,10,000 வாக்காளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், பொருளாதார மந்தநிலை பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைத் தாக்கியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. அதனால் 50,000 டாலருக்குக் குறைவாகச் சம்பாதிக்கும் வீடுகளிலிருந்து ட்ரம்பை விடப் பிடனுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தனது பிரச்சாரத்தில் வலியுறுத்தினார். அதனை, டொனால்டு ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

முன்னாள் அதிபர் டிரம்ப்பால் 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட பொது சேவை நிர்வாக அதிகாரி எமிலி முர்பி “வெற்றியாளர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார். இதனால் பைடன் குழு கூட்டாட்சி நிதியில் மில்லியன் கணக்கான டாலர்களை அணுகுவதையும், புலனாய்வு அமைப்புகள் மற்றும் பிற துறைகளில் உள்ள அதிகாரிகளைச் சந்திப்பதையும் தாமதப்படுத்துகிறது.

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதவி ஏற்பு விழா ஜனவரி 20 அன்று நிகழும். பொருளாதாரப் பின்னடைவு, கொரோனா நோய்த்தொற்று போன்றவை அமெரிக்காவை அச்சுறுத்திவரும் சூழலில் புதிய அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்