Aran Sei

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை – அதிபர் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது

Image Credit : thehindu.com

னவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்த வன்முறை கும்பலை தூண்டி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ பதவி நீக்குவதற்கான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 232 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 197 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். அதிபர் டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினரான லிஸ் செனியும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவர். லிஸ் செனியின் அப்பா டிக் செனி குடியரசுக் கட்சி சார்பில் ஜார்ஜ் டபிள்யூ புஷ்-ன் துணை அதிபராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் ஆயுதம் தாங்கிய தேசிய காவல் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கட்டிடத்தைச் சுற்றி உயரமான வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுதான் அமெரிக்க வரலாற்றிலேயே எதிர்த்தரப்பினரின் அதிக ஆதரவு பெற்ற பதவி நீக்கத் தீர்மானம் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது. இரண்டு முறை பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் டிரம்ப் பெறுகிறார்.

டிரம்ப் மீது 2019-ம் ஆண்டில் உக்ரைனுடனான அவரது உறவாடல்கள் தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மேலவை அவரை குற்றமற்றவர் என்று விடுவித்திருந்தது.

ஆனால், இந்த முறை டிரம்ப் பலவீனமான தலைவராக பதவி நீக்கத்தை எதிர்கொள்கிறார் என்கிறது தி ஹிந்து. அதிபருக்கான தேர்தலில் தோற்றதோடு மட்டுமின்றி, மேலவையின் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையையும் அவர் இழந்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற மேலவையான செனட்டில், அதிபர் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும். அந்த அவையில் வாக்களிக்கும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கினர் குற்றத்தை உறுதி செய்தால் அதிபர் பதவி பறிக்கப்படும்.

மேலவையில் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் தலா 50 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 17 பேர் டிரம்புக்கு எதிராக வாக்களித்தால்தான் அல்லது பலர் வாக்களிப்பில் கலந்து கொள்ளா விட்டால்தான் பதவி நீக்கம் உறுதி செய்யப்பட முடியும் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

ஆனால், அதிபர் டிரம்பின் பதவிக்காலத்தின் கடைசி நாளான டிசம்பர் 20-க்கு ஒரு நாள் முன்புதான் இந்த பதவி நீக்க விசாரணையை எடுத்துக் கொள்ள முடியும் என்று மேலவை பெரும்பான்மை தலைவரான, குடியரசுக் கட்சியின் மிட்ச் மெக்கானல் கூறியிருக்கிறார்.

ஆனால், நவம்பர் 3-ம் தேதி தேர்தலில் டிரம்பை தோற்கடித்த ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்ற பிறகும், மேலவையில் பதவி நீக்க விசாரணையை நடத்தி அது நிறைவேற்றப்பட்டால், டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதியை இழக்கும் தீர்மானத்தையும் மேலவை நிறைவேற்ற முடியும்.

அது அமெரிக்க அரசியல் மீதும் குடியரசுக் கட்சியின் மீதும் டிரம்பின் பிடியை தளர்த்தும் என்று தி கார்டியன் தெரிவிக்கிறது.

நவம்பர் 3-ம் தேதி நடந்த தேர்தலில் மோசடிகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி அதிபர் டிரம்ப் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். அவரது கட்சி சார்பில் பல வழக்குகள் தொடரப்பட்டன. மாநில அரசுகள் மூலம் வாக்குப் பதிவு முடிவுகளை மாற்றுவதற்கு டிரம்ப் முயற்சித்து வந்தார்.

அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், தேர்தல் முடிவுகளை இறுதி செய்யும் நாடாளுமன்ற கூட்டத் தொடர், ஜனவரி 6-ம் தேதி கூடியது. டிரம்ப் ஆதரவு வன்முறை கும்பல் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் புகுந்து அந்தக் கூட்டத்தை கலைத்தது.

அதிபர் டிரம்ப் இந்தக் கும்பலை ஊக்குவித்து தூண்டி விட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் மீது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர் வன்முறையை தூண்டுவதாக்க் கூறி அவரது சமூக வலைத்தள கணக்குகளை டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் முடக்கின.

அவரது பதவிக்காலம் முடியும் முன்பே அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையின் முதல் கட்டமாக பிரதிநிதிகள் சபை பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஆனால், நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதலுக்கு முன்பு அந்த கும்பல் முன் தான் ஆற்றிய உரை “முழுக்க முழுக்க சரியானது” என்று டிரம்ப் செவ்வாய்க் கிழமை கூறியுள்ளதாக தி கார்டியன் தெரிவிக்கிறது.

அந்தத் தாக்குதலுக்கு தன்னைப் பொறுப்பாக்குவதற்கான முயற்சிகள், “அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய பழிவாங்கல் நடவடிக்கையின் தொடர்ச்சி” என்று அவர் கூறியுள்ளார்.

“வன்முறையை எப்போதுமே நியாயப்படுத்த முடியாது. அதற்கு எந்த விதி விலக்கும் இல்லை, எந்தக் காரணங்களும் இல்லை.” என்று கூறியுள்ள அவர், தனது ஆதரவாளர்கள், “பதற்றத்தைக் குறைத்து உணர்ச்சிகளை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்