Aran Sei

அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலைக்கிடம்? முரணான தகவல்களால் குழப்பம்.

மெரிக்க அதிபர் டிரம்பின் உடல் நலம் குறித்தும், அவருக்கு எப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறித்தும் சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகை அளித்த முரண்பட்ட தகவல்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்த அதிபரின் மருத்துவக் குழுவினர், டிரம்பிற்கு காய்ச்சல் இல்லை என்றும் அது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். ஆனால், வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மீடோஸ், டிரம்பின் உடல் நிலை கவலையளிப்பதாக இருந்ததாகவும், அடுத்த இரண்டு நாள் அது மேலும் மோசமாக இருக்கும் என்றும் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

டிரம்பிற்கு கொரோனா தொற்றை உறுதிசெய்வதற்கு 72 மணிநேரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதாக டிரம்பின் மருத்துவக் குழுவினர் கூறியதை சுட்டிக்காட்டும் வாஷிங்டன் போஸ்ட், ஆகவே கடந்த புதன்கிழமையன்றே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.

டிரம்பிற்கு எப்போது முதன் முதலில் அறிகுறி ஏற்பட்டது, எப்போது சோதனை செய்யப்பட்டது ஆகிய கேள்விகளுக்கு மருத்துவக் குழுவினர் பதில் அளிக்காதது குறித்தும் அந்த செய்தித்தாள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

டிரம்பிற்கு உள்ள அறிகுறிகள் மிகுந்த கவலையளிப்பதாக மீடோஸ் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று டிரம்பிற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதுடன், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் குறைந்ததாகவும், ஆகவேதான், அவருக்கு செயற்கையாக ஆக்சிஜன் வழங்கப்பட்டதுடன் வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ மருத்துவர் ஷான் கால்னி அதிபர் டிரம்பிற்கு தற்போது ஆக்சிஜன் வழங்கபடவில்லை என்று கூறினார். ஆனால், அதற்கு முன்னர் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்ததா என்ற கேள்விக்கு அவர் மழுப்பலாகவே பதிலளித்ததை சுட்டிக் காட்டும் நியூயார்க் டைம்ஸ், ஆகவே, டிரம்பிற்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.

டிரம்பிற்கு புதன்கிழமையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அவர் முகக்கவசம் கூட அணியாமல், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறும் நியூயார்க் டைம்ஸ் அந்தக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள், அவரைப்போலவே எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கலந்துகொண்டதை சுட்டிக்காட்டியுள்ளது.

டிரம்பின் எடையின் அடிப்படையில் பார்க்கும்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட 74% வாய்ப்பிருப்பதாக ‘தி கார்டியன்’ இதழ் தெரிவித்துள்ளது. அதேபோல், எடையின் அடிப்படையில் பார்க்கப்போனால் அவர் மரணமடைய 48 விழுக்காடு வாய்ப்பிருப்பதாக கார்டியன் கூறுகிறது.

டிரம்பின் வயதை வைத்து பார்க்கும்போது, (அவருக்கு வயது 74) அவர் உயிர்பிழைப்பதற்கு 10% மட்டுமே வாய்ப்புள்ளதாக கூறும் கார்டியன், ஆண் என்ற அடிப்படையில் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று அந்த இதழில் வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்பின் உடல் நிலை குறித்து இதுபோன்ற முரணான தகவல்கள் வெளியாகியுள்ள சூழ்நிலையில், ஒருவேளை டிரம்ப் மரணமடைந்தாலோ அல்லது உடல்நிலை காரணமாக அதிபராக தொடர முடியா விட்டாலோ அடுத்த என்ன நடக்கும் என்பதை விளக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

அந்தக் கட்டுரையில், அதிபர் மரணமடைந்தாலோ அல்லது அதிபர் பதவியை தொடர முடியாவிட்டாலோ, அமெரிக்காவின் அரசியல் சாசனம் பிரிவு 25-ன் படி, துணை அதிபர், அதிபர் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, டிரம்பிற்கு எதுவும் நேரும்பட்சத்தில், 61 வயதான துணை அதிபர் மைக் பென்ஸ் அதிபராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

இதற்கிடையில், வால்டர் ரீட் மருத்துவமனையில், மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பாக செயல்படுவதாகவும், அவர்களின் உதவியினால் தான் நலமக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அவருடைய மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப்பிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்