Aran Sei

அமெரிக்கத் தேர்தல் – ஜனநாயகக் கட்சி பெரும் வெற்றி பெற முடியாதது ஏன்?

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், வெற்றி பெற்றாலும் கூட, கொரோனா நோய்த்தொற்றில் 2.35 லட்சம் அமெரிக்கக் குடிமக்களின் உயிரிழப்புக்கும், 1930-களின் பொருளாதாரப் பெருமந்தத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கும் பொறுப்பானவரும், பாசிச சக்திகளை அணி திரட்டுவதற்கும் வாஷிங்டனில் ஒரு சர்வாதிகார அரசை நிறுவுவதற்கும் வெளிப்படையாக முயற்சி செய்த அதிபர் டிரம்புக்கு எதிராகப் பெற்றிருக்க வேண்டிய மகத்தான வெற்றியாக அது இருக்கப் போவதில்லை.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கான தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சி எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியவில்லை. செனட் எனப்படும் மாநிலங்களவையில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாடு தொடரும் என்றும், பிரதிநிதிகள் சபை எனப்படும் மக்களவையில் ஜனநாயகக் கட்சி குறைந்த பெரும்பான்மை மட்டுமே பெறப் போகிறது என்றும் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

2016-ல் ட்ரம்புக்கு வாக்களித்த கிராமப்புற மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்கப் பகுதியினரை தம் பக்கம் வெல்வதில் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்துள்ளது. நோய்த்தொற்றால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு பொருளாதாரத் திட்டத்தை அக்கட்சி முன்வைக்கவே இல்லை.

2016-ல் அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன், நாட்டின் பெரும்பகுதிகளில் உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் சமூக நெருக்கடியை எதிர்கொள்வதற்கான எந்த ஒரு திட்டத்தையும் முன்வைக்கத் தவறியது போலவே, 2020-லும் ஜனநாயகக் கட்சி அதைச் செய்யத் தவறியது. குறிப்பாகத் தொழில்கள் வெளியேறியதால் பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்தித்துள்ள மேற்கு மத்திய நகரங்களில் ஆதரவைத் திரட்ட அவர்கள் தவறினர்.

உதாரணமாக, ஒஹையோ மாநிலத்தில் யங்ஸ்டவுன், வாரன் போன்ற நகரங்கள் உட்பட டிரம்புல், மகோனிங் என்ற இரண்டு மாவட்டங்களிலும் டிரம்ப் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இந்தப் பகுதிகள், 1970-களிலிருந்து மூடப்பட்டு வரும் உருக்கு ஆலைகளின் வெளியேற்றத்தாலும், சமீபத்தில் ஜெனரல் மோட்டார்சின் மிகப்பெரிய லார்ட்ஸ்டவுன் வாகனத் தொழிற்சாலை மூடப்பட்டதாலும், பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் யுனைட்டட் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஆலை மூடலை நடத்தியது.

மிச்சிகன் மாநிலத்தில், கொடூரமான காரீய நச்சுப்படுதலால் பாதிக்கப்பட்ட ஃபிளின்ட் நகர் அமைந்திருக்கும் ஜெனிசீ மாவட்டத்தில் ட்ரம்ப் முன்னணியில் உள்ளார். இத்துடன் சாகினா மாவட்டம், பே மாவட்டம் என்ற ஜெனரல் மோட்டார்ஸ் ஆலைகள் செயல்பட்ட மூன்று மாவட்டங்களிலும் இப்போது அவை மூடப்பட்டு விட்டன. டெட்ராய்ட் புறநகர்ப் பகுதிகளில் வாகன உற்பத்திக்கான மையமான மாகோம்ப் மாவட்டத்திலும் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

1932-ல் வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் தலைமையிலான ஜனநாயகக் கட்சி, அமெரிக்க உழைக்கும் மக்களுக்கு ஒரு “புதிய ஒப்பந்தம்” வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்து தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றது.

இப்போதோ, ஜனநாயகக் கட்சி நிதித்துறைச் சந்தைகளின் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்ட மேல் நடுத்தர வர்க்க சமூகப் பிரிவினரைக் குறி வைத்து மட்டுமே பிரச்சாரம் செய்தது. இனம், பாலினம் அடிப்படையில் சலுகைகளைப் பகிர்வதை மட்டுமே முன் வைத்தது. சமூகச் சீர்திருத்தம் அல்லது தொழிலாளர்களின் வர்க்க நலன்களை இலக்காகக் கொண்ட எந்த ஒரு கொள்கையையும் நிராகரித்து விட்டது.

2016 முதல் 2020 வரையிலான ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் ஜனநாயகக் கட்சியினர் வெளியுறவுக் கொள்கை மீதே கவனம் செலுத்தினர். ரஷியா தொடர்பாக மேலும் தீவிரமான கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று வாதிட்ட அவர்கள், இராணுவ-உளவுத் துறை பொறியமைவின் ஆதரவைத் திரட்ட முயற்சித்தனர். ட்ரம்பின் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக எழும் பரந்துபட்ட சமூக எதிர்ப்பு எதையும் திசைதிருப்பவும், அடக்கவும் அவர்கள் வேண்டுமென்றே முயற்சித்தனர்.

தேர்தல் தொடர்பான ட்ரம்பின் சதித் திட்டங்களையும் பாசிச வன்முறையை அவர் தூண்டியதையும் எதிர்த்து வெகுமக்கள் அணிதிரட்டலை மட்டுப்படுத்துவதற்கு ஜனநாயகக் கட்சியினர் எல்லா முயற்சிகளையும் செய்தனர். வன்முறை தொடர்பான ட்ரம்பின் மிரட்டல்களை அவர்கள் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டனர். மிச்சிகனின் கிரெட்சன் விட்மர், விர்ஜினியாவின் ரால்ப் நார்தம் போன்ற ஜனநாயகக் கட்சி ஆளுநர்களுக்கு எதிரான வன்முறை மிரட்டல்களைக் கூட அவர்கள் உறுதியாக எதிர்க்கவில்லை.

2020 முழுவதிலும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள், நோய்த்தொற்று நெருக்கடிகள், அரசியல் குழப்பங்கள் இவை அனைத்தையும் தாண்டி அதிபராக ட்ரம்பும், செனட் பெரும்பான்மைத் தலைவராகக் குடியரசுக் கட்சியின் மிட்ச் மெக்கானலும், பிரதிநிதிகள் சபை சபாநாயகராக ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசியும் தொடரும்படியான முடிவு கூட வருவதற்கு வாய்ப்பு இன்னும் உள்ளது. ஜோ பிடன் வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்தாலும், செனட் பெரும்பான்மை மூலம் குடியரசுக் கட்சி பொருளாதாரச் சீர்த்திருத்தங்களுக்கான அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து விடும்.

அமெரிக்காவின் அரசியல் அமைப்புகள் பொதுமக்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கு ஈடு கொடுக்கப் போயிருப்பது தெளிவாகியுள்ளது. 1930-களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு சமாளிப்பதற்கும் அமெரிக்க அரசியல் அமைப்பு முறை திறனற்று உள்ளது என்பதும் தெளிவாகியுள்ளது.

நன்றி : wsws.org

(சுருக்கமான மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்