Aran Sei

அமெரிக்க அதிபர் தேர்தல் – நீடிக்கும் இழுபறி – அடுத்து நடக்கப்போவது என்ன?

மெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணி முக்கியமான மாநிலங்களில் இன்னும் முடிவடையாத நிலை உள்ளது. இந்நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் இருவரில் யாருக்குமே தெளிவான வெற்றிக்கான முன்னணி கிடைக்காமல் இழுபறியாக உள்ளது.

ஆனால், புதன் கிழமை காலையிலேயே டொனால்டு ட்ரம்ப் தான் வெற்றி பெற்று விட்டதாக உரிமை கோரினார். மேலும், போட்டி நெருக்கமாக உள்ள மாநிலங்களில் தபால் வாக்குகளை எண்ணுவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். வாக்குப் பதிவு தொடர்பான தரவுகளின்படி குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பவர்களை விட அதிக எண்ணிக்கையிலான ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களித்திருப்பது தெரியவந்திருக்கிறது என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பொதுச் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 2.3 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர். புதன் கிழமை இன்னும் 1,048 அமெரிக்கக் குடிமக்கள் கொரோனாவுக்குப் பலியாகியிருக்கின்றனர் என்கிறது சிஎன்என் செய்தி.

பல மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் நிலையில், இறுதி முடிவு தெரிவதற்குப் பல மணி நேரம் அல்லது பல நாட்கள் கூட பிடிக்கலாம் என்று சிஎன்என் தெரிவிக்கிறது. மாநிலங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மேல் முறையீட்டின் மூலம் உச்சநீதி மன்றம் வரை போகலாம் என்கிறது தி ஹிந்து.

இதுவரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரங்களின் அடிப்படையில், முன்னாள் துணை அதிபரான ஜோ பிடன் 253 தேர்தல் குழு வாக்காளர்களை வெல்வார் என்றும் டொனால்டு ட்ரம்புக்கு 213 தேர்தல் குழு வாக்காளர்கள் கிடைப்பார்கள் என்றும் சிஎன்என் மதிப்பிட்டுள்ளது.

அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்தின் கணிப்பின் படி ஜோ பிடன் விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய இரண்டு மாநிலத் தேர்தல் குழு வாக்குகளையும் வென்று 264 எண்ணிக்கையை எட்டி விட்டார் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது. ஜார்ஜியாவில் டிரம்பின் முன்னணி எண்ணிக்கை 37,322 ஆகக் குறைந்து விட்டது எனவும் இன்னும் 1.07 லட்சம் வாக்குகள் எண்ணப்படவுள்ளன என்று கார்டியன் தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் தேர்தல் குழு வாக்குகள் வழங்கப்படும். நெப்ராஸ்கா, மையின் என்ற இரு மாநிலங்கள், மாநில அளவில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு 2 தேர்தல் குழு வாக்காளர்களையும், எஞ்சிய தேர்தல் குழு வாக்குகளைப் பிரதிநிதிகள் சபை (மக்களவை) தொகுதி வாரியாகவும் வழங்குகின்றன.

ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் குழு வாக்குகளின் எண்ணிக்கை வேறுபடுகின்றன. மொத்தம் உள்ள 538 தேர்தல் குழு வாக்குகளில் 270 வாக்குகளைப் பெறும் வேட்பாளர் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

எனவே, நாடு தழுவிய அளவில் மொத்த வாக்குகளில் பெரும்பான்மை பெற்ற வேட்பாளர், மாநில வாரியாக வழங்கப்படும் தேர்தல் குழு வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெறாமல் போகலாம். உதாரணமாக, 2016-ம் ஆண்டுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஹில்லாரி கிளின்டன் நாடு முழுவதற்குமான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 227 தேர்தல் குழு வாக்குகளை மட்டுமே பெற்று, 304 தேர்தல் குழு வாக்குகளைப் பெற்ற டொனால்டு ட்ரம்பிடம் தோற்றுப் போனார்.

இந்த ஆண்டு தேர்தல் குழு வாக்கு முறையின் படி, ஜோ பிடன் மையின் மாநிலத்திலிருந்து குறைந்தது 4 தேர்தல் குழு வாக்காளர்களையும், விஸ்கான்சின், மிச்சிகன், ஹவாய், ரோட் தீவு, மின்னசோட்டா, விர்ஜினியா, கலிஃபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், இல்லினாய், நியூ ஹாம்ப்ஷெயர், நியூ மெக்சிகோ, கொலராடோ, கன்னடிகட், நியூ ஜெர்சி, நியூ யார்க், வெர்மான்ட், டெலாவேர், வாஷிங்டன், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா, மேரிலாந்து, மசாச்சுசெட்ஸ் மற்றும் நெப்ராஸ்காவின் 5 தேர்தல் குழு வாக்குகளில் குறைந்தது 2 வாக்குகளையும் சேர்த்து மொத்தம் 253 தேர்தல் குழு வாக்காளர் இடங்களை வெல்வார் என்று சிஎன்என் கணித்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப் மோன்டானா, டெக்சாஸ், அயோவா, இடாஹோ, ஒஹையோ, மிசிசிப்பி, வயோமிங், மிசௌரி, கன்சாஸ், உடா, லூசியானா, அலபாமா, சவுத் கரலினா, நார்த் டகோடா, சவுத் டகோடா, அர்கன்சாஸ், இந்தியானா, ஓக்லஹாமா, கென்டக்கி, வெஸ்ட் விர்ஜினியா, டென்னசி மாநிலங்களிலும் நெப்ராஸ்காவின் 5 தேர்தல் குழு வாக்குகளில் நான்கையும் பெறுவார் என்று சிஎன்என் கணிப்பு தெரிவிக்கிறது.

போட்டி மிகவும் நெருக்கமாக இருக்கும், போர்க்கள மாநிலங்கள் என்று அழைக்கப்படுபவற்றில், மிச்சிகனை வென்றதன் மூலமாக இன்னும் 17 தேர்தல் குழு வாக்குகள் கிடைத்தால் அதிபர் பதவியை வெல்லும் நிலையை ஜோ பிடன் எட்டியிருப்பதாக சிஎன்என் தெரிவிக்கிறது.

அரிசோனா, ஜார்ஜியா, நெவாடா, வடக்கு கரலினா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களின் இறுதி முடிவைக் கணிக்க முடியாத அளவுக்குப் போட்டி நெருக்கமாக உள்ளது என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், டொனால்டு ட்ரம்ப் தரப்பு பல மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. அதன் மூலம் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதற்குத் தடை ஏற்படுத்த முயற்சிக்கிறது. குறிப்பாக, பென்சில்வேனியாவில் தேர்தல் நாளான நவம்பர் 3-க்குப் பிறகு தபால் வாக்குகளை எண்ணுவது என்ற முடிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் டிரம்ப் தரப்பு முறையீடு செய்துள்ளது. தேர்தலுக்கு முன்பே இந்த முறையீட்டை எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்ட உச்சநீதி மன்றம், இந்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று இனிமேல் முடிவு செய்யும்.

டிரம்ப் வெற்றி பெற்றே தீர வேண்டிய ஜார்ஜியாவிலும் பென்சில்வேனியாவிலும் வாக்குகளின் வித்தியாசம் மிகக் குறைவாகவே உள்ளது. நெவாடா, அரிசோனா மாநிலங்களில் ஜோ பிடனின் முன்னணி இறுதி வரை தொடர்ந்தால் அவர் 270 எண்ணிக்கையை எட்டி விடுவார் என்று சிஎன்என் தெரிவிக்கிறது. பென்சில்வேனியாவிலும் டிரம்புடனான வாக்கு வேறுபாட்டை முந்தி அந்த மாநிலத்தை வென்று விட முடியும் என்று ஜோ பிடன் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2000 ஆண்டுத் தேர்தலில் ஃபுளோரிடா மாநில வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. உச்ச நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி உத்தரவிட்ட நிலையில், குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜனநாயகக் கட்சியின் அல் கோர்-ஐ விட வெறும் 537 வாக்கு வித்தியாசத்தில் அந்த மாநில தேர்தல் குழு வாக்குகளை வென்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில ஆளுநர் தமது மாநில முடிவுகளை இறுதி செய்து அந்தத் தகவலை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

இந்த ஆண்டுத் தேர்தல் குழு உறுப்பினர்கள் டிசம்பர் 14-ம் தேதி கூடி புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜனவரி 6-ம் தேதி கூடி, இந்த வாக்குகளை எண்ணி, வெற்றி பெற்றவரை அறிவிக்க உள்ளன என்கிறது தி ஹிந்து செய்தி.

ஆனால், பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின், வட கரலினா போன்ற போர்க்கள மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி ஆளுநரும், குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டப் பேரவையும் உள்ள நிலையில், ஆளுநரும், சட்டப் பேரவையும் வெவ்வேறு எதிரெதிரான தேர்தல் குழு வாக்காளர்களை அனுப்பி வைக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கருதுவதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் பிரதிநிதிகள் சபையும், செனட்டும் தனித்தனியாகக் கூடி எந்தத் தேர்தல் குழு வாக்காளர் பட்டியலை ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யும். செனட்டில் குடியரசுக் கட்சி பெரும்பான்மையும், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையும்  பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இரண்டு அவைகளும் முரண்பட்டால் என்ன நடக்கும் என்பதில் தெளிவில்லை என்று தி ஹிந்து குறிப்பிடுகிறது.

ஆனால், நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தல் தொடர்பான எந்த ஒரு சச்சரவும் ஜனவரி 20ம் தேதிக்குள் தீர்க்கப்பட வேண்டும். அந்த நாளில் இப்போதைய அதிபரின் (டொனால்டு ட்ரம்ப்) பதவிக் காலம் முடிவுக்கு வர வேண்டும் என்று அமெரிக்க அரசியல் சட்டம் வரையறுக்கிறது.

அதற்குள் அதிபரையும், துணை அதிபரையும் நாடாளுமன்றம் முடிவு செய்யவில்லை என்றால், பிரதிநிதிகள் சபையின் அவைத் தலைவர் தற்காலிக அதிபராகச் செயல்படுவார் என்று தி ஹிந்து கூறுகிறது. இப்போது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் நான்சி பெலோசி பிரதிநிதிகள் சபையின் நாயகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்