Aran Sei

அமெரிக்கா – வன்முறையைத் தூண்டிய அதிபர் டிரம்பை உடனடியாக பதவி நீக்கக் கோரும் எதிர்க்கட்சியினர்

மெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் நேற்று நடந்த வன்முறையை தூண்டி விட்டவர் என்ற முறையில் அதிபர் டிரம்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தலைவர்கள்கோரி வருகின்றனர் என்ற தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று காலை அவரது டிவிட்டர் கணக்கின் இடைக்காலத் தடை நீங்கியதும், அதிபர் டிரம்ப் நேற்று நடந்த வன்முறையை கண்டித்தும், அமைதியாக அதிகாரத்தை கைமாற்றிக் கொடுப்பதாக உறுதியளித்தும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திலும் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியிலும் உள்ள டிரம்ப் ஆதரவாளர்கள், இடதுசாரி ஆன்டிபா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வேடமிட்டுக் கொண்டு இந்தக் கலவரத்தை நடத்தியதாக ஆதாரமற்ற சதிக் கோட்பாடுகளை பரப்பி வருவதாக தி கார்டியன் தெரிவிக்கிறது.

நாடாளுமன்றத்தில் வன்முறையைத் தூண்டி விட்ட அதிபர் டிரம்ப், அவரது பதவிக்காலம் முடியும் ஜனவரி 20 வரை அதிபராக நீடிக்கக் கூடாது என்று ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கூறியிருந்தனனர்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25-திருத்தத்தின், பிரிவு 4-ன் கீழ், ஒரு அதிபர் பதவி வகிக்க தகுதி இழந்து விட்டதாக கருதும் நிலையில் அவரது அமைச்சரவை அவரை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கலாம்.

அந்தப் பிரிவை பயன்படுத்தி அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்குமாறு பிரதிநிதிகள் சபை தலைவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்சை கேட்டுக் கொண்டிருந்தார். அமைச்சரவை டிரம்பை நீக்கவில்லை என்றால் பிரதிநிதிகள் சபை அவரை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றும் என்றும் அவர் கூறியிருந்தார்.

டிரம்ப் “மிக அபாயகரமான நபர் என்றும் அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது” என்றும் பெலோசி கூறியிருந்தார்.

கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், இப்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனிடம் தோற்றுப் போனார். அந்த் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு மாநிலவாரியான தேர்வாளர் பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்டு, அந்தப் பட்டியல்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 6-ம் தேதி உறுதி செய்யப்பட வேண்டியிருந்தது.

அன்று, தலைநகர் வாஷிங்டனில் கூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தனது மாபெரும் வெற்றி திருடப்பட்டு விட்டதாகவும் பேசினார். அதன் அடிப்படையில் மாநிலங்களின் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருக்கும் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது ஆதரவாளர்கள் பக்கபலமாக நிற்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தைச் சுற்றிய போலீஸ் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் கலைந்து போக நேரிட்டது. இந்த வன்முறை நிகழ்வு அமெரிக்காவிலும் உலகமெங்கும் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது.

அதிபர் டிரம்ப், வன்முறையைத் தொடர்ந்து வெளியிட்ட வீடியோவில், வன்முறையாளர்களை பாராட்டி, அவர்களை வீடு திரும்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் அந்த வீடியோவை நீக்கின. டிவிட்டரும் பேஸ்புக்கும் அவரது பக்கங்களை தற்காலிகமாக முடக்கின.

அவரது பதவிக் காலம் இன்னும் 13 நாட்களுக்கே இருந்தாலும், டிரம்பை பதவியிலிருந்து நீக்குவது “மிகவும் அவசரமானது. இது உயர் அவசரநிலை” என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி மேலும் கூறியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையின் பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானங்களை தயாரித்துள்ளனர் என்கிறது தி கார்டியன்.

“நேற்று அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் நடைபெற்றது, அதிபர் டிரம்ப் தூண்டி விட்ட அமெரிக்க அரசுக்கு எதிரான கிளர்ச்சி. இந்த அதிபர் இன்னும் ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கக் கூடாது.” என்று அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சக் ஷூமர் ட்வீட் செய்துள்ளார்.

“இதைச் செய்வதற்கான மிக துரிதமான மிக திறன் மிக்க வழி, துணை அதிபர் 25-வது திருத்தத்தை பயன்படுத்தி அதிபரை பதவியிலிருந்து இறக்குவதுதான். அதை இன்று கூட செய்து விட முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

25-வது திருத்தத்தின் கீழ் டிரம்பை பதவியிலிருந்து இறக்குவதற்கு துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட குடியரசுக் கட்சி அமைச்சர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். நேற்று அது நடப்பதற்கு சாத்தியமில்லை என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்