கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார் . அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு மாநிலவாரியான தேர்வாளர் பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்டு, அந்தப் பட்டியல்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 6-ம் தேதி உறுதி செய்யப்பட வேண்டியிருந்தது.
ஜனவரி 6-ஆம் தேதியன்று, தலைநகர் வாஷிங்டனில் கூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தனது மாபெரும் வெற்றி திருடப்பட்டு விட்டதாகவும் பேசினார். அதன் அடிப்படையில் மாநிலங்களின் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருக்கும் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது ஆதரவாளர்கள் பக்கபலமாக நிற்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தைச் சுற்றியிருந்த காவல்துறையின் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் கலைந்து போக நேரிட்டது. இந்த வன்முறை நிகழ்வு அமெரிக்காவிலும் உலகமெங்கும் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்குகள் முடக்கம் – டிவிட்டர், பேஸ்புக் நடவடிக்கை
வன்முறையைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவில், வன்முறையாளர்களை பாராட்டி, அவர்களை வீடு திரும்புமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் அந்த வீடியோவை நீக்கின.
ட்ரம்ப்பினுடைய ட்விட்டர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. அவர் வன்முறையை மேலும் தூண்டக்கூடும் என்பதால் அமைதியாக பதவி மாற்றம் நிகழும் வரை அவருடைய சமூக வலைதள பக்கங்களுக்கு கால வரையின்றி தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்
நாடாளுமன்றத்தில் வன்முறையைத் தூண்டி விட்ட அதிபர் ட்ரம்ப், அவரது பதவிக்காலம் முடியும் ஜனவரி 20 வரை அதிபராக நீடிக்கக் கூடாது என்று ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கூறியிருந்தனனர்.
அமெரிக்கா – வன்முறையைத் தூண்டிய அதிபர் டிரம்பை உடனடியாக பதவி நீக்கக் கோரும் எதிர்க்கட்சியினர்
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25-திருத்தத்தின், பிரிவு 4-ன் கீழ், ஒரு அதிபர் பதவி வகிக்க தகுதி இழந்து விட்டதாக கருதும் நிலையில் அவரது அமைச்சரவை அவரை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கலாம்.
This morning, @SenSchumer and I placed a call to Vice President Pence to urge him to invoke the 25th Amendment which would allow the Vice President and a majority of the Cabinet to remove the President. We have not yet heard back from the Vice President.
— Nancy Pelosi (@SpeakerPelosi) January 8, 2021
அந்தப் பிரிவை பயன்படுத்தி அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்குமாறு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்சை கேட்டுக் கொண்டிருந்தார். அமைச்சரவை டிரம்பை நீக்கவில்லை என்றால் பிரதிநிதிகள் சபை அவரை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றும் என்றும் பெலோசி கூறியிருந்தார்.
அவரது பதவிக் காலம் சிறிது காலமே இருந்தாலும், ட்ரம்பை பதவியிலிருந்து நீக்குவது “மிகவும் அவசரமானது. இது உயர் அவசரநிலை” என்று பெலோசி கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை
இந்நிலையில், நேற்றைய தினம் அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவத் தலைவர் மார்க் மில்லியுடன் பேசிய பிரதிநிதிகள் சபை தலைவர் பெலோசி, ”நிலையற்ற” மனநிலையில் இருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியில் இருந்த இறுதி நாட்களில் அணுசக்தி தாக்குதலை நடத்தாமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு – டிரம்ப் தரப்பு எதிர்ப்பு தொடர்கிறது
இதையடுத்து ஜனநாயக கட்சியின் பிரதிநிகளுக்கு பெலோசி எழுதிய கடிதத்தில், ட்ரம்ப் தானாக முன்வந்து ராஜினாமா செய்யாவிட்டால் அல்லது துணை அதிபர் மைக் பென்சும் அமைச்சரவையும் ட்ரம்பை நீக்கும் செயல்முறையைத் தொடங்கவிட்டால் ட்ரம்ப்புக்கு எதிராக பதவி நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.