Aran Sei

கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – உலகின் முதல் நாடு பிரிட்டன்

Image Credits: CNBC

ஃபைசர் மற்றும் பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. இதைப் பரவலாகப் பயன்படுத்தப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பிரிட்டன், ஃபைசர் மற்றும் பயோன்டெக் தயாரித்த தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாகியுள்ளது.

“ஃபைசர்-பயோன்டெகின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த, ஒப்புதல் வழங்கக்கோரி ‘சுயாதீன மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை அமைப்பு’ (எம்எச்ஆர்ஏ) முன்வைத்த பரிந்துரையை அரசு இன்று ஏற்றுக்கொண்டது” என்று ஒரு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளதாக ‘தி இந்து‘ செய்தி வெளியிட்டுள்ளது.

“அடுத்த வாரம் முதல் தடுப்பூசி பிரிட்டன் முழுவதும் கிடைக்கும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த வாரத் தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்று லண்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு நல்ல செய்தி” என்றும் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பிரிட்டன் அவசரகால அடிப்படையில் இந்தத் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியிருப்பது ஒரு வரலாற்றுத் தருணத்தைக் குறிக்கிறது என்று ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளது.

“தற்போது தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குறிக்கோளுடன் தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து செயல்பட்டு வந்தோம். விஞ்ஞானம் வெல்லும் என்று கூறி நாங்கள் எங்கள் பணியைத் தொடங்கினோம். கவனமாகச் சோதனை நடத்தியதற்கும், பிரிட்டன் மக்களைப் பாதுகாக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததற்காகவும் எம்எச்ஆர்ஏ-வை பாராட்டுகிறோம்” என்று ஃபைசரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பௌர்லா கூறியுள்ளார்.

“மேலும் பல நாடுகளில் எங்கள் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே, உயர்தர தடுப்பூசியைப் பாதுகாப்பாக வழங்குவதற்காக அதே அளவிலான அவசரத்துடனும் கவனத்துடனும் நாங்கள் செயல்படுகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்